அத்யாயம் 8:

நினைவு:

தயக்கத்துடன் நின்றிருந்த மகளை யோசனையுடன் பார்த்தார் ரவிக் குமார். அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக இருக்க,

“என்னாச்சு ஆராம்மா? அப்பாகிட்ட எதுவும் கேட்கணுமா?” என்றார் யோசனையுடன்.

“அப்பா அது வந்து” என்று மென்று முழுங்கினாள்.

“என்னன்னு சொல்லுமா ஆரா” என்றார் அவரும்.

“அது வந்துப்பா, என் கூடப் படிக்கிற ஒரு பொண்ணுக்கு ஒரு பையனைப் பிடிச்சிருக்காம். அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. ஆனா, அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு பயப்படுறா?” என்றாள் மென்று முழுங்கியபடி.

“அவங்க வீட்டு ஆட்கள் எப்படின்னு நமக்குத் தெரியாதே ஆராம்மா” என்றார் யோசனையுடன்.

“அவங்க அப்பாவும் உங்களை மாதிரி தான்ப்பா ரொம்ப பிரண்ட்லி” என்றாள் வேகமாய்.

“ஹோ..! பையன் என்ன பண்றான்? எந்த ஊரு?” என்றார்.

“பையன் கண்டக்டர். ஆனா நல்லா படிச்ச பையன்னு சொன்னாப்பா.” என்றாள் வேகமாய்.

“உன்னோட பிரண்ட் பேமிலி” என்றார் கேள்வியாய்.

“அவங்க நம்மளை மாதிரி பேமிலி தான்ப்பா” என்றாள் திணறியபடி. அவளை ஆழ்ந்து நோக்கியவர்,

“இதெல்லாம் வயசுக் கோளாறு ஆராம்மா. முக்கால்வாசி பசங்களுக்கு வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலை. கண்டிப்பா அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. அந்த பொண்ணை காதல் கீதல்ன்னு சுத்துறதை விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பார்க்க சொல்லுமா ஆரா. இப்படிப்பட்ட பிரண்ட்ஷிப் எல்லாம் உனக்குத் தேவையில்லை. புரியுதா ஆராம்மா” என்றார் பொறுமையாய்.

அவரின் வார்த்தைகளில் கலங்கிய கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தவள்,

“சரிப்பா” என்று திரும்பி செல்ல, ஒரு நிமிடம் யோசித்தவர்,

“அந்த பொண்ணு பேமிலி, நம்மை மாதிரியா இல்ல நம்ம பேமிலியே தானா ஆரா?” என்றார் கேள்வியாய்.

அவரின் புத்திக் கூர்மையில் அதிர்ந்தவள்,

“இல்லப்பா, என்னோட பிரண்ட் தான்” என்றாள் வேகமாய்.

“அப்படி இருந்துட்டா ரொம்ப நல்லதும்மா. என் பொண்ணை கொஞ்சம் அறிவோட வளர்த்துருக்கேன்னு நினைக்கிறேன்” என்றார் ரவிக் குமார்.

தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட ஆராவிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. முதன் முறையாக தான் செய்வது சரியா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

‘அதான் நல்லா படிச்சிருக்கானே. வேற நல்ல வேலைக்கு போனா என்ன? நாம சொல்லி பார்ப்போமா?’ என்று யோசித்தாள்.

‘நான் சொல்லி அதை அவன் தப்பா எடுத்துகிட்டா?’ என்று ஒரு மனம் யோசிக்க,

‘ஒரு நல்ல வேலையில இருந்தா அப்பாகிட்ட தைரியமா பேசலாமே’ என்று யோசித்தவள், இதைப்பற்றி ஜெய்யிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள்.இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி படிப்பும் அவளுக்கு முடிந்து விடும். அதற்கு மேல் அவனை தினமும் பார்ப்பது என்பது முடியாத காரியம். அதனால் உடனே பேசிவிட வேண்டும் என்று நினைத்தாள்.

அதற்கடுத்து வந்த நாட்களில் அவள் ஏதோ ஒரு குழப்பத்துடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாக ஜெய்யை அவள் பார்க்கவில்லை. தான் ஊருக்கு சென்றிருப்பதாய் தகவல் அனுப்பியிருந்தான்.

“இவ என்ன ஆளே சரியில்லையே? ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்கா?” என்று நினைத்த ஆதிராவுக்கும் அவள் மேல் சந்தேகம் வர ஆரம்பித்திருந்தது. அவள் செல்போனையே பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதை ஆதிராவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று ஜெய்யை காணும் சந்தோஷத்துடன் விரைவாகவே கிளம்பியிருந்தாள். அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட ஆதிராவுக்கு சரியாக படவில்லை.

என்னமோ விஷயம் இருக்கு. சீக்கிரம் அதை என்னன்னு கண்டு பிடிக்கிறேன்’ என்று எண்ணியவள், பள்ளிக்கு கிளம்பி சென்றாள்.

எப்பொதும் போல் மூவரும் கிளம்பி செல்ல, கணேஷ் அமைதியாக வந்தான். சில நாட்களாக இதே அமைதியுடன் தான் இருக்கிறான். மித்ராவும் பெரிசாக கண்டுகொள்ளவில்லை.

“என்னாச்சு கணேஷ்? ஏன் ரொம்ப டல்லா இருக்க?” என்று ஆரா தான் கேட்டிருந்தாள்.

“எனக்கு திருச்சியில ஒரு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு ஆரா.” என்றான் கணேஷ்.

“ஹேய் சூப்பர். அதையேன்டா இவ்வளவு சோகமா சொல்ற? நல்ல விஷயம் தான?” என்றாள் ஆரா மகிழ்ச்சியுடன்.

“கங்க்ராட்ஸ்டா”என்றாள் மித்ராவும்.

“தேங்க்ஸ்” என்றவனுக்கு குரலில் சுரத்தையில்லை.

“அதுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க? அப்போ கடைசி வரைக்கும் நீ இதே பஸ்ல தான் போயிட்டு வரப் போறன்னு சொல்லு” என்றாள் ஆரா சிரிப்புடன்.

“அதான் இல்ல. கம்பெனிலயே குவார்ட்ரஸ் மாதிரி குடுத்துடுவாங்க. அங்கேயே தங்கிக்கலாம்னு இருக்கேன்” என்றான்.

“ஹோ..! அப்ப இனி நம்ம பார்க்க முடியாதா?” என்றாள் ஆரா சோகமாய்.

“ம்ம் ஆமா” என்றவன் மித்ராவைத் தான் பார்த்திருந்தான். அவன் பார்ப்பது புரிந்தாலும் அவள் பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

“எல்லாரும் ஒரு நாள் அவங்கவங்க கெரியரை நோக்கி ஓடித்தானே ஆகணும் கணேஷ். ரொம்ப பீல் பண்ணாதடா” என்று அவள் ஆறுதல் சொல்ல,

“மேடம் விஷயம் என்னாச்சு? அங்கிள் கிட்ட பேசுனியா?” என்றான். அவன் கேட்டதும் தந்தையிடம் பேசியது ஞாபகத்திற்கு வர,  அவள் முகம்  சோர்ந்தது. பேசியதை அப்படியே அவர்களிடம் கூறினாள் ஆரா.

“நான் தான் சொன்னேன்ல” என்பதைப் போல் பார்த்து வைத்தாள் மித்ரா.

“என்ன பண்ணலாம்னு இருக்க ஆரா?” என்றான் கணேஷ் யோசனையுடன்.

“எனக்கே ஒன்னும் புரியலைடா. இன்னைக்கு ஜெய் கிட்ட பேசிடலாம்னு இருக்கேன். வேற ஜாப்க்கு போக சொல்லணும்” என்றாள் ஆரா.

“அப்பவும் அந்த காதலை விடுற மாதிரி இல்ல” என்றாள் மித்ரா.

“அதை எதுக்கு விடணும்? எங்கப்பா எதிர்பார்க்குற தகுதியை வளர்த்துகிட்டு அவர் கிட்ட வந்து பேச சொல்லுவேன்” என்றாள் ஆரா தீர்மானமாய்.

“இதெல்லாம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை. அதுக்கு மேல உன் இஷ்ட்டம்” என்றாள் மித்ரா.

அதற்குள் பஸ்சும் வந்துவிட, ஏறிவளின் கண்கள் ஏனோ அவனைத் தான் தேடியது. தேடிய விழிகள் அவனில் வந்து நிற்க, அவள் ஏறியது முதல் அவள் செய்கைகளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய். முகத்தில் ஒரு குறுநகை பூக்க, பார்த்திருந்தவனின் விழிகள் சட்டென்று இடுங்கியது. முகத்தில் கோபம் குடியேற, அவளை முறைத்திருந்தான். அவன் முறைக்கிறானா? சிரிக்கிறானா? என்று அவளுக்கு எப்படி தெரியும். பார்வையில் வித்யாசத்தை உணர்ந்தவள்,

“என்னாச்சு” என்று மெசேஜ் அனுப்பினாள்.

“கழுத்துல செயின் எங்கடி?” என்று அனுப்பியிருந்தான்.

அவன் போட்ட ‘டி’யில் அதிர்ந்தவள்,

“அது வீட்ல கேட்பாங்கன்னு கழட்டி வச்சிருக்கேன்” என்று அனுப்பினாள் வேகமாய்.

“நான் செத்தா தான் அதை கழட்டனும்” என்று கோப ஸ்மைலியுடன் அனுப்பியிருந்தான்.

“எதுக்கு இப்படி பேசுறிங்க? என்னோட நிலைமை உங்களுக்கென்ன தெரியும். நானே வீட்ல இருக்கவங்க கிட்ட பொய் சொல்றமேன்னு குற்ற உணர்ச்சியில இருக்கேன்.” என்றாள்.

அவனிடமிருந்து போன் வர, அவள் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.

“எடுடி” என்பதைப் போல் ஜாடை காட்டினான்.

கால் அட்டன் செய்து காதில் வைத்தவள்,

“ம்ம்” என்றாள்.

“என்ன ம்ம்? அதான் நான் வந்து பேசுறேன்னு சொன்னேன்ல” என்றான்.

“நீங்க உங்க மாஸ்க்கை ரிமூவ் பண்ணிட்டு பேசுங்க” என்றாள்.

“நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ என்ன பேசிட்டு இருக்க?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“மாஸ்க்கை ரிமூவ் பண்ணிட்டு பேசுங்க ஜெய்” என்றாள் மீண்டும்.

“என்னால் இப்ப பண்ண முடியாது. ஈவ்னிங் நான் சொல்ற ஹோட்டல்க்கு வந்துடு. மீட் பண்ணலாம்” என்றான்.

“நோ..!எங்க வீட்ல தெரிஞ்சது என்னை கொன்னே போட்ருவாங்க. அதுவும் ஹோட்டல்க்கு எல்லாம் நான் வர மாட்டேன். நீங்க இப்பவே மாஸ்க்கை ரிமூவ் பண்ணுங்க” என்றாள்.

“நீ வரலைன்னா என்ன? நீ ஏதாவது பிளேஸ் சொல்லு. நான் வரேன்” என்றான்.

“நான் வெளிய எங்கயும் வர மாட்டேன்” என்றாள்.

“லூசாடி நீ! கடைசி வரைக்கும் இப்படி பஸ்லயே லவ் பண்ணிட்டு இருப்பியா?” என்றான் கடுப்புடன்.

“நீங்க வேற நல்ல வேலைக்கு போங்க. அப்போதான் அப்பாகிட்ட பேச முடியும். எனக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியலை. நான் என்னன்னு வீட்ல பேசுவேன்?” என்றாள் மெதுவான குரலில்.

“அம்மா தாயே..! நீ பேசவே வேண்டாம். நானே உங்க வீட்ல வந்து பேசுறேன்.” என்றவன்,

“வேற நல்ல வேலைக்குன்னா… என்ன வேலைக்குப் போக?” என்றான் கேள்வியாய்.

“இந்த கண்டக்டர் வேலை வேண்டாம்” என்றாள்.

“சரி, பேசாம சினிமால சான்ஸ் தேடவா?” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

“அய்யோ..! அது மட்டும் வேண்டாம். எனக்கு சினிமாக்காரங்களை கண்டாலே ஆகாது. அந்த லைம் லைட் லைப் எல்லாம் செட்டாகாது. எனக்கு பீஸ்புல்லான லைப் தான் வேணும்.” என்றாள்.

“நான் சான்ஸ் தேடவான்னு தான் கேட்டேன். இப்ப உடனே நான் என்ன பெரிய ஹீரோவா ஆகிட்டேன்” என்றான் சிரிப்புடன்.

“கிண்டல் பண்ணாதிங்க ஜெய்.” என்றவள்,

“நீங்க ஏன் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணக் கூடாது?” என்றாள்.

“அதுக்கு நிறைய பணம் வேணுமே?” என்றான் இதழில் தேங்கிய சிரிப்புடன்.

“ஆமாம்ல..!” என்று போனைக் காதில் வைத்தபடி அவள் யோசிக்க, அவளின் சிறுபிள்ளைத் தனமான பேச்சில் தன்னை மறந்து அவள் பதிலுக்காக காத்திருந்தான்.