அத்யாயம் 7:

நினைவு:

பேருந்தில் சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவை உலுக்கினாள் மித்ரா.

“என்னாச்சுடி?” என்றாள்.

“என்ன இவ்வளவு சாதரணமா கேட்குற? என்னடி நடக்குது? ஜெய் அண்ணா அவர் பேசாம வந்தாரு, மோதிரம் போட்டாரு, கூடவே செயினையும் போட்டு விட்டுட்டு போறாரு. நீயும் அமைதியா இருக்க?” என்றாள் இன்னமும் அதிர்ச்சி விலகாத குரலில்.

“இப்ப என்ன பிரச்சனை மித்ரா உனக்கு? அவங்க லவ் பண்றாங்க. அவர் லவ்வர் பர்த்டேக்கு அவர் கிப்ட் பண்ணிட்டு போயிருக்கார். இதுல நீ ஷாக் ஆகுற  அளவுக்கு என்ன இருக்கு?” என்றான் கணேஷ்.

“நீ பேசாதடா எருமை. இதுக்கெல்லாம் நீயும் தான கூட்டு. இப்போ இந்த செயினையும், ரிங்கையும் என்னன்னு வீட்ல சொல்லுவா. வீட்ல கேட்காமையா இருப்பாங்க?” என்றாள் மித்ரா.

“அதெல்லாம் ஆரா பார்த்துப்பா..! நீ ஏன் அந்த அளவுக்கு யோசிக்கிற?” என்றான் கணேஷ்.

“நான் யோசிக்காம வேற யாருடா யோசிப்பாங்க. அவ என்னோட பிரண்ட். அதுமட்டுமில்லாம, ஜெய் அண்ணா ஒரு கண்டக்டர் தானே! ஆனா, இந்த செயின் ரிங் எல்லாம் பார்த்தா ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலத் தெரியுது. இதெல்லாம் எப்படி அவரால வாங்க முடியும்? எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. முகத்தையே பார்க்காம மோதிரம் மாத்துற அளவுக்கு போனதெல்லாம் ரொம்ப ஓவர்டி. இதென்ன சினிமாவா? பார்க்காம காதலிக்க. பார்த்து காதலிக்கிறவங்களே இங்க யாரும் உண்மையா இருக்குறது இல்லை. ஒன்னு அவரை நேர்ல வர சொல்லி மீட் பண்ணி, முகத்தைப் பார்த்து பேசிடு. இல்லைன்னா இதை இதோட விட்டுரு. அவ்வளவு தான் சொல்லுவேன்” என்றாள் மித்ரா உறுதியாக.

“மித்ரா பிளீஸ்! இதுக்கு மேல இந்த பேச்சு வேண்டாம். அப்பவும் அப்படித்தான் சொல்ற? சாதாரண கண்டக்டர்ன்னு. எந்த வேலையும் மோசமில்லை. எப்படியும் படிச்சு நான் பேஷன் டிசைனர் ஆகிடுவேன். எங்க ரெண்டு பேர் சம்பாத்தியமும் எங்க வாழ்க்கைக்கு போதும். அப்பறம் இப்போ நீ சொன்ன இந்த கிப்ட்.. ஏன் ஒரு கண்டக்டரால செயின், ரிங் எல்லாம்  வாங்க முடியாதா? எந்த காலத்துல இருக்க நீ. பார்க்குறேன், பார்க்கலை. ஆனா, என்னோட வாழ்க்கை ஜெய் தான். அதுல நான் உறுதியா இருக்கேன். இந்த முடிவை நான் எப்பவும் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன். இனி ஒரு தடவை நான் எடுத்த முடிவு தப்புன்ற மாதிரி பேசாத மித்ரா. எனக்கு ரொம்ப ஹேர்ட் ஆகுது. என்னோட காதலுக்காக முடிஞ்ச வரைக்கும் நான் போராடுவேன்” என்றாள் ஆரா உறுதியாக.

“எப்படி பஸ்ல ஒரு தெரிஞ்சவரை பார்த்த உடனே உன் முகத்துல அவ்வளவு பயம் தெரிஞ்சதே? நீ போராடுறதைப் பத்தி பேசுற?” என்றாள் மித்ரா இடக்காக.

“நான் இல்லைன்னு சொல்லலை மித்ரா. நான் பயந்தது, என்னோட காதல் விஷயம் நான் சொல்லாம வேற ஒரு ஆள்  மூலமா என்னோட அப்பாவுக்கு போய்டக் கூடாதுன்னு தான். மத்தபடி அவர்கிட்ட நானே சொல்லுவேன்.” என்றாள்.

“உங்கப்பா சம்மதிச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பார்.” என்ற மித்ரா,

“நீ இவ்வளவு உறுதியா இருக்கும் போது, நான் என்ன பேசுனாலும் உனக்கு அது தப்பாத்தான் தெரியும் ஆரா. உன்மேல இருக்குற அக்கறையில தான் சொன்னேன். மத்தபடி உன் மனசுக்கு பிடிச்ச ஜெய் அண்ணா கூட நீ சேர்றதுல எனக்கு எந்த  பிரச்சனையும் இல்லை” என்றாள் மித்ரா.

“இன்னும் மழையில நனைஞ்சுகிட்டே எவ்வளவு நேரம் நிக்கிறதா உத்தேசம்? நீ கிளம்பு ஆரா” என்றான் கணேஷ்.

ஆரா அவள் வீட்டை நோக்கி நடக்க, மித்ராவின் அருகில் வந்தவன்,

“நானும் ஒரு சாதாரண வீட்டுப் பையன்றதால தான் என்னை அவாய்ட் பண்றியா மித்ரா” என்றான் அவள் கண்ணை நேருக்கு நேராய் பார்த்து.

“என்னடா இப்படி எல்லாம் பேசுற?” என்றவளுக்கு குரல் அடைத்தது.

“நீ இவ்வளவு நேரம் ஆராவுக்கு அட்வைஸ் பண்ணதுல இருந்து எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரிஞ்சது மித்ரா. உனக்கு எப்பவுமே லவ் செட்டாகாது. அதுலயும் சாதாரண வீட்டு பையனோட, ஒரு லவ் கண்டிப்பா செட் ஆகாது. ஆனா, ஆரா கிரேட் இல்ல. ஜெய் அண்ணாவைப் பத்தி எதுவுமே தெரியாது. ஆனா, கண்மூடித்தனமா இப்படி ஒரு லவ். நிஜமாவே ஜெய் அண்ணா குடுத்து வச்சவர். சாதாரண அவரையும் இப்படி அவருக்காக மட்டுமே நேசிக்கிற ஒரு பொண்ணு கிடைச்சிருக்கே.” என்றவனின் வார்த்தைகளில் அந்த ‘சாதாரணம்’ மட்டும் சரளமாய் வந்து போனது.

“கணேஷ்” என்றவளுக்கு கண்கள் கலங்க,

“ஐ யாம் சாரி மித்ரா. நாம எப்பவும் போல நல்ல பிரண்ட்ஸாவே இருப்போம். உனக்கு கஷ்ட்டமா இருக்குற லவ்வை சொல்லி இனி உன்னை கஷ்ட்டப்படுத்த மாட்டேன். வரேன்” என்றவன் அவன் வீடு நோக்கி சென்றான். மழையில் நனைந்தபடி இருந்தது என்னவோ மித்ரா தான். அவன் மீதான அவள் காதலும் அந்த மழையில் நனைந்து கொண்டிருந்தது.

தன் வீட்டு ஆட்களின் கோபத்தை அறிந்தவள், அவள் காதலை அவளுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

“என்ன ஆராம்மா இப்படி நனைஞ்சு போய் வந்திருக்க?” என்று சுலோச்சனா பாட்டி துண்டை எடுத்துக் கொண்டு அவளின் தலையை துவட்டப் போக, எங்கே தன்னை கண்டு கொள்வாரோ என்று பயந்தவள்,

“இருக்கட்டும் பாட்டி. நான் போய் குளிச்சுட்டு டிரஸ் மாத்திக்கிறேன்” என்றவள், அவளின் அறைக்குள் சென்று மறைந்து விட்டாள்.

“என்ன இந்த பொண்ணு இன்னைக்கு வித்யாசமா நடந்துக்குறா?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அறைக்குள் சென்று கதவை அடைத்த ஆரண்யாவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது. கண்ணாடி முன் சென்று, அவன் அணிவித்த செயினையே வருடிக் கொண்டிருந்தாள். ஏதோ ஜென்ம ஜென்மாய் அவளைத் தொடர்ந்து வரும் உறவு போல் அவன் நினைவும் இருக்க, உரிமையாய் கை பிடித்து மோதிரம் அணிவித்தவனின் செயலில் இப்போதும் அவள் முகம் சிவந்திருந்தது.

அவன் தோள் உரசிய இடங்கள் அவளுக்குள் தீ மூட்டியிருக்க, பிரவாகமாய் பொங்கி வழிந்த அவன் நினைவுகள் இப்போதே அவனைக் காண வேண்டும் என்று அவளை உந்தித் தள்ள, தன் மனதை அடக்கும் வழி தெரியாமல் விழித்திருந்தாள் ஆரண்யா.

குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவள்,தலையை துவட்டிக் கொண்டே வர, அறைக்குள் வந்த காயத்ரி அவளை விநோதமாகப் பார்த்தார்.

“என்னாச்சும்மா? ஏன் ஒரு மாதிரி பார்க்குறிங்க?” என்றாள் புரியாமல்.

“இதென்ன செயின்? புதுசா இருக்கு? இது மாதிரி உன்கிட்ட இல்லையே?” என்றார் யோசனையுடன்.

‘இதை எப்படி மறந்தேன்’ என்று பயந்தவள்,

“என்னது தான்மா. காலையிலேயே போட்டுட்டு தான் போனேன். என்னோட ஜிவெல்ஸ் கூட தான் இருந்தது” என்றாள் உண்மையை போலவே.

“அப்படியா?” என்றவர்,

“ஆனா இந்த மாதிரி எடுத்த ஞாபகமே எனக்கு இல்லையே?” என்று யோசிக்க, அவளுக்கு உதறல் எடுக்கத் தொடங்கியது.

“ம்மா..! ஒன்னு ரெண்டு எடுத்தா ஞாபகம் இருக்கும். உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் இதே வேலை தான். இந்தாங்க நீங்க எடுத்த செயின். நீங்களே வச்சுக்கங்க” என்று வேகமாய் கழட்ட போக,

“இல்ல இல்ல கழட்ட வேண்டாம் ஆரா. பிறந்த நாள் அதுவுமா கழுத்துல இருக்குற செயினை கழட்துறது நல்லாவா இருக்கு. இந்தா இந்த டீயைக் குடி” என்று கையில் டீ டம்ளரை கொடுத்துவிட்டு செல்ல, அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.

‘நாளைக்கு முதல்ல இதை கழட்டி வச்சிடணும். அப்பறம் பாட்டியில இருந்து ஒவ்வொருத்தரா கேட்க ஆரம்பிப்பாங்க. அதுலயும் ஆதிரா கண்ணுல பட்டா அவ்வளவு தான்’ என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டாள்.

தன் போனில் வாழ்த்து சொல்லியவர்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தவள் அப்போது தான் கவனித்தாள் புது எண்ணில் இருந்து வந்த செய்தியை.

“நான் ஜெய், வீட்டுக்குப் போயாச்சா?” என்று அனுப்பியிருந்தான். அப்போது தான் அவளுக்கு கணேஷிடம் நம்பர் வாங்கித் தர சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

‘இன்னைக்கு நடந்த விஷயத்துல இதை மறந்துட்டோமே’ என்று நினைத்தவள்,

“வந்தாச்சு..! நீங்க” என்று அனுப்பினாள். முதன் முதலில் அனுப்பும் செய்தி, மனதிற்குள் ரயில் வண்டி வேகத்திற்கு தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.

“எஸ், வீட்ல தான் இருக்கேன்” என்று பதில் அனுப்பியிருந்தான்.

அவளுக்கு அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் படபடப்பாய் இருக்க, அவன் என்ன அனுப்புவான் என்று செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.