அத்யாயம் 6:

நினைவு:

“மழை வர்ற மாதிரி இருக்கு மித்ரா” என்று ஆரா சொல்லி முடித்த நிமிடம் தூறல் போடத் தொடங்கியிருந்தது.

“என்னடி இன்னைக்கு திடீர்ன்னு மழை வருது? அவசரத்துக்கு குடை கூட கொண்டு வரலை?” என்றாள் மித்ரா.

“குடை இல்லாட்டி என்ன மித்ரா? ஜாலியா நனைஞ்சுட்டே போவோம்” என்றாள் ஆரா குதூகலத்துடன்.

“இப்படி ஓரமா வந்து நில்லு ஆரா. பஸ் வர்றதுக்குள்ள நனைஞ்சுடாத” என்று மித்ரா அவளின் கையைப் பிடித்து இழுக்க, பாதி நனைந்திருந்தாள் ஆரா.

“மேடம் இன்னைக்கு ஓவர் சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுது. நானும் காலையில இருந்து பார்த்துட்டே தான் இருக்கேன். ஒரே புன்னகை முகமா இருக்கியே? காரணம் என்னவோ?” என்றாள் மித்ரா.

“நான் எப்பவும் போல தான் இருக்கேன். உனக்குத்தான் மித்ரா வித்யாசமா தெரியுது.” என்றாள் சிரிப்புடன்.

“இல்லையே? இன்னைக்கு காலையில ஜெய் அண்ணா கையில என்ன குடுத்த?” என்றாள்.

“சில்க்கை தான் குடுத்தேன்” என்றாள் சிரிப்புடன்.

“அடிப்பாவி..! உனக்கு தைரியம் ஜாஸ்திதான். எனக்குத்தான் பக்கு பக்குன்னு இருக்கு ஆரா” என்றாள் மித்ரா.

“எனக்கே நான் இப்படி மாறியிருக்கிறதை நம்ப முடியலை மித்ரா.” என்றாள்.

“இப்பவும் நல்லா யோசிச்சுக்க ஆரா. இதெல்லாம் இந்த வயசுல வர்ற இன்பாக்ஷுவேஷன். அதை காதல்னு நீயே முடிவு பண்ணிக்கிறயோன்னு எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

“மித்ரா பிளீஸ்! வயசுக் கோளாறுல எடுத்த முடிவெல்லாம் கிடையாது.நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். நாம எத்தனையோ பேரை கடந்து போறோம். ஆனா ஒருத்தவங்ககிட்ட தான் நமக்கு நிறைவா தோணும். இதுக்குமேல எதுவுமே இல்லைன்னு தோணும். ஏதோ வாழ்க்கையே முழுமை அடைஞ்ச மாதிரி தோணும். அது தான் காதல்னு நான் நினைக்கிறேன். நீ சொன்ன மாதிரி வீட்ல பிரச்சனை வரத்தான் செய்யும். அது எனக்கும் தெரியும். என்னால அப்பா-அம்மாவை கன்வைன்ஸ் பண்ண முடியும்னு தோணுது. என்னோட விருப்பத்துக்கு மதிப்புக் குடுப்பாங்கன்னு நம்புறேன்.” என்றாள் ஆரா.

“நீ சொல்றது எல்லாம் சரித்தான் ஆரா. உங்க பாட்டி ப்ரண்ட்ஷிப் கூட ஸ்டேட்டஸ் பார்த்து வைக்கனும்னு உனக்கு சொல்ற ஆளு. அவங்க இதை எப்படி ஏத்துப்பாங்க. ஜெய் அண்ணா ஒரு சாதாரண கண்டக்டர். எங்க வீட்லயே அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. உங்க வீட்ல சொல்லவே வேண்டாம். எதுக்கு வீணா அவர் மனசுலயும் ஆசையை வளர்த்து, அவர் வாழ்க்கையையும் கேள்விக் குறி ஆக்கணும்?” என்றாள்.

“இது எனக்கு கேட்குறியா? இல்ல, உனக்கு நீயே கேட்டுக்கிறியா மித்ரா?” என்றாள் ஆரா தீர்க்கமாய்.

“ஆரா” என்று அதிர்ந்தாள் மித்ரா.

“கணேஷ் விஷயத்துல என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியாம நீ குழப்பத்துல இருக்கேன்னு எனக்கு நல்லாத் தெரியும்” என்றாள்.

“யாரு அவன் சொன்னானா?” என்று பல்லைக் கடித்தாள் மித்ரா.

“அவன் சொல்லலை..! ஆனா,எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது. இந்த ரெண்டு நாளும் உங்க ரெண்டு பேர் சண்டையும் அதை கன்பார்ம் பண்ணிடுச்சு” என்று மித்ராவை தீர்க்கமாய் பார்த்தவள்,

“உண்மையை சொல்லு..! நிஜமா உனக்கு கணேஷைப் பிடிக்காது” என்றாள் ஆரா.

“பிடிக்கும்” என்ற மித்ரா, அவளை தீர்க்கமாய் பார்த்தபடி

“ஒரு நண்பனா” என்றாள்.

“நம்பிட்டேன் மித்ரா” என்ற ஆராவின் குரலில் இருந்த கேலியை உணர்ந்து கொண்ட மித்ரா கண்களில் வலியுடன் அவளைப் பார்த்தாள்.

“பஸ் வந்திடுச்சு” என்று பேச்சை மாற்றினாள் ஆரா.

“மழை நிக்கிற மாதிரி தெரியலைடி” என்றபடி இருவரும் ஏற, இருவருமே நனைந்து விட்டிருந்தனர்.

“ரெண்டு பேருக்கும் சின்ன பிள்ளைங்கன்னு நினைப்பா? இப்படி நனைஞ்சுட்டு வந்திருக்கிங்க?” என்று கணேஷ் அதட்ட,

“ம்ம்! வேண்டுதல். நனைஞ்சுகிட்டே பஸ்ல போகணும்னு.” என்றாள் மித்ரா.

“வேண்டுதல் வச்சது தான் வச்ச.. அப்படியே என்கூட சேர்ந்து நனையனும்னு வச்சிருக்கலாம்ல” என்றான் சிரிப்புடன்.

“இப்ப நீ அமைதியா வரலை, வண்டை வண்டையா கேட்பேன்” என்றவளைப் பார்த்து அப்போதும் அவன் சிரிக்க,

“உனக்கு நிஜமாவே மான ரோஷமே இல்லையாடா?” என்றாள் ஆரா இப்போது.

“அட ஏன் ஆரா நீ வேற? அதையெல்லாம் பார்த்தா வேலைக்கு ஆகுமா? காதல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்றவன்,

“அப்பறம் ஆரா.. ஒரு சில்க்கோடா பர்த்டே ட்ரீட்டை முடிச்சு விட்டுட்ட. ஸ்பெஷல் எதுவும் இல்லையா?” என்றான்.

“ஈவ்னிங் கேக் கட் பண்ணுவேன்டா. வீட்டுக்கு வந்துடு” என்றாள்.

“ஆமா நீ குழந்தை பிள்ளை, காலையில சாக்லேட், ஈவ்னிங் கேக் கட்டிங். அப்பறம்?” என்றான் கணேஷ்.

“அப்பறம் என்ன? சாப்பிட்டு தூங்க வேண்டியது தான்” என்றாள் சிரிக்காமல்.

“சரித்தான் இவ கூட சேர்ந்தா வேற எப்படி இருப்ப?” என்று மித்ராவை வம்பிற்கு இழுக்க, அவள் முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டான்.

“இங்க பார் ஆரா.. நாளையில இருந்து இந்த பஸ் வேண்டாம் நமக்கு. எப்பப் பார்த்தாலும் இப்பல்லாம் கூட்டமாவே வருது. இதுல கொசுத் தொல்லை வேற தாங்க முடியலை” என்று மித்ரா கணேஷை முறைத்துக் கொண்டே கூற, ஆரா பாவமாய் பார்த்து வைத்தாள்.

நடுவில் நின்றிருந்தவர்கள், கூட்டம் ஏற ஏற பின்னால் சென்றிருந்தனர். அவர்களாக சென்றனர் என்று சொல்ல முடியாது. கணேஷ் அவர்களை நகர்த்திக் கொண்டு போயிருந்தான்.

ஆராவின் கையை கணேஷ் சுரண்ட, “என்னடா?” என்றாள்.

“அப்படியே அந்த பக்கம் பாரு” என்றான் மெதுவான குரலில்.

“அந்த பக்கம் என்ன?” என்று அவள் பார்க்க அவளை நெருங்கி நின்றிருந்தான் ஜெய். அவனைப் பார்த்தவுடன் குப்பென்று சிவந்தது அவளின் முகம். ஏற்கனவே மழையில் நனைந்ததில் முகம் பளிச்சென்று இருக்க, லேசாக கலந்திருந்த கண் மை கூட அவளுக்கு அழகு சேர்த்திருக்க, அவளுக்கு அருகில் நின்ற ஜெய் திண்டாடித்தான் போனான்.

“ஹேய் ஆரா..! இப்ப ஏன் உன் முகம் இப்படி ரெட்டிஷா ஆகுது” என்றான் கணேஷ்.

“பேசாம இருடா” என்றாள் வாய்க்குள் முனுமுனுத்தபடி.

கணேஷ் அவர்களை மறைத்தபடி நின்றிருக்க, கூட்டத்தில் யாரும் அறியாமல் அவள் கைகளைப் பற்றியவன், அவள் சுதாரிக்கும் முன்பே விரலில் அந்த மோதிரத்தை  அணிவித்திருந்தான். திகைப்பில் அவள் முட்டைக் கண்ணை விரிக்க, தலையில் இருந்து நீர் வடிந்து கொண்டிருக்க, கலைந்த ஓவியமாய் இருந்தவளை மனதிற்குள் பதித்துக் கொண்டான் ஜெய். அவளோ அவனை இமை மூடாமல் பார்த்திருந்தாள்.

“ஆரா..!” என்று மித்ரா அவள் காலை மிதிக்க,

“ஸ் ஆஆ..” என்ற வலியுடன், நினைவிற்கு வந்தாள் ஆரா.

“என்னடி?” என்றாள் வலியில் முகத்தை சுருக்கி.

மித்ரா ‘அங்க பாரு’ என்று ஜாடை காட்டினாள். ஆரா நிமிர்ந்து பார்க்க, ஒருவர் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆராவிற்கு பயத்தில் உடல் வெடவெடக்க, அது அவளுக்கு அருகில் இருந்த ஜெய்க்கும் புரிந்தது.

“நீ நம்ம ஆடிட்டர் அய்யாவோட பெரிய பொண்ணு தானம்மா?” என்றார் கேள்வியாய்.

அவரின் கேள்வியில் பயந்தவள்,

“ஆ..ஆமா அங்கிள்” என்றாள் பிசிறிய குரலுடன். ஜெய் மோதிரம் அணிவித்ததை பார்த்துவிட்டாரோ என்ற பயம் அவளுக்கு.

“அப்பா சௌக்கியமாம்மா” என்றார்.

“ங்கான்..! நல்லா இருக்காங்க அங்கிள் “ என்றாள்.

“என்னம்மா நீ? இப்படி நனைஞ்சு வந்திருக்க? இப்படி பஸ்ல கூட்டத்துல வரணும்னு உனக்கென்ன தலையெழுத்தாமா?” என்றார் அக்கறையாய். பதட்டத்தில் இருந்தவளை ஜெய் யோசனையுடன் பார்த்தான்.

‘நல்ல வேளை அவர் எதுவும் பார்க்கலை’ என்று மனதிற்குள் நினைத்தவளை முறைத்தாள் மித்ரா. ‘இதுக்குத்தான் சொன்னேன்’ என்பதைப் போல் இருந்தது அவள் பார்வை.