கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஆரண்யாவிற்கு நடந்து எல்லாம் கனவு மாதிரி தோன்றியது. கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே கிடந்து அல்லாடிக் கொண்டிருந்தது அவள் மனம். அவ்வளவு எளிதில் இந்த வாழ்க்கையுடன் பொருந்திப் போக முடியும் என்று தோன்றவில்லை அவளுக்கு. நெருஞ்சி முள்ளாய் ஜெய்யின் நினைவு அவளைக் குத்திக் கொண்டிருந்தது.
“என்னடா ஆரா ஒரு மாதிரி உட்கார்ந்திருக்க?” என்றபடி வந்த காயத்ரி கூட, கலங்கிய அவள் கண்களைப் பார்த்து அதிர்ந்து விட்டார்.
“ஆரா என்னம்மா ஆச்சு?” என்றார் பதறியபடி.
“அம்மா என்னால முடியலை..! பிளீஸ்ம்மா! நாம இங்க இருந்து கிளம்பிடலாம். நான் உங்க கூடவே வர்றேன்” என்று கண்ணீர் சிந்தியவளைப் பார்த்து காயத்ரிக்கும் கண் கலங்கியது. ஆனால் அதை அவர் காட்டினால் ஆரா அதையே பிடித்துக் கொள்வாள் என்று தெரியும் அவருக்கு.
“நாங்க உன்னை ரொம்ப நம்பினோம் ஆரா. ஆனா அப்போ எங்க பேச்சை நீ கேட்கலை. அந்த வாழ்க்கையையும் இழந்து நின்ன. இப்போ உனக்காக இந்த வாழ்க்கையை அமைச்சு குடுத்திருக்கோம். அதுவும் உன்கூட போராடி. இதுக்கு மேல எங்களுக்கு தெம்பில்லை ஆரா. நம்ம தகுதிக்கு மீறின இடத்துல உன்னைக் குடுத்துட்டோமோன்னு நானே பயந்துகிட்டு இருக்கேன். இப்போ நீயும் இப்படி பேசினா என்ன தான் பண்றது?” என்றார்.
“அப்படி இல்லடா..! நடந்து முடிஞ்சதை நம்மால மாத்த முடியாது. ஆனா, நடக்கப் போறதை நம்மால மாத்த முடியும் தான. அதைத்தான் சொல்றேன். எது எப்படி இருந்தாலும் நீ இந்த வீட்டோட மருமகள் ஆகிட்ட. இங்க நடக்குற நல்லது கெட்டதுல உனக்கும் பங்கிருக்கு. இன்னைக்கு பேசின மாதிரி வெடுக்கு துடுக்குன்னு பேசி வைக்காத ஆரா. என் பொண்ணு ஆராக்கு அதிர்ந்து கூட பேசத் தெரியாது. ஆனா, இப்பல்லாம் நீ ரொம்ப மாறிட்டடா” என்றார் காயத்ரி.
“என்னை நீங்க எல்லாரும் சேர்ந்து அப்படி மாத்திட்டிங்கம்மா. அப்படி சொன்னாத்தான் சரியா இருக்கும். என்னோட கண்ணீர் தடத்து மேல தான் உங்க கௌரவம் தலை தூக்கி நிற்குதுங்கிறதை நீங்க மறந்துடாதிங்க.” என்றாள் விரக்தி புன்னகையுடன்.
“ஆரா” என்றார் கலங்கிய கண்களுடன் காயத்ரி.
“இப்ப என்ன? கல்யாணம் பண்ணி வச்சுட்டிங்க. உங்க கௌரவத்தையும் பேரையும் காப்பாத்த நான் சந்தோஷமா வாழனும். சாரி சாரி வாழ்ற மாதிரி நடிக்கவாவது செய்யணும் இல்லையா? கண்டிப்பா செய்றேன். இனி என் வாழ்க்கையில நீங்க யாரும் தலையிடக் கூடாது. முக்கியமா பாட்டி” என்றாள் தீர்மானமாய்.
“ஆரண்யா” என்றபடி வந்த சிவகாமி அப்போது தான் ஆராவைப் பார்த்தார்.
மஞ்சள் நிற லினன் காட்டன் புடவையில், கழுத்தில் எப்போதும் அணியும் சிறிய செயின் அதோடு சேர்த்து காலையில் தேவ் கட்டிய மஞ்சள் கயிறு, காதில் ஒரு ஜிமிக்கி இது மட்டுமே அவளின் ஒப்பனையாக இருந்தது. அந்த ஒப்பனைக்கே அழகியாய் இருந்தாள்.
“என்னம்மா இது? எல்லா நகையும் கழட்டி வச்சிருக்க? இப்படி ஒன்னுமே போடாம இருக்க? இப்போ கட்ட பட்டு சேலை தான எடுத்தோம். இப்படி சாதாரண புடவையை கட்டியிருக்க” என்றார் அதிருப்தி கலந்த குரலில்.
“உங்க பையனுக்குத் தான் இது முதல் கல்யாணம், எனக்கில்லை” என்றாள் பட்டென்று.
“ஆரா” என்று காயத்ரி அதட்ட,
“சாரிங்க” என்றாள் வேகமாய்.
ஏற்கனவே அவள் பதிலில் அரண்டவர், அவள் மரியாதையுடன் அழைத்ததில் மீண்டும் அதிர்ந்தார்.
“என்னம்மா யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற? அத்தைன்னு கூப்பிடுமா” என்றார் சற்று கோபம் கலந்த குரலில்.
“சரிங்க ஆன்ட்டி” என்றாள். அப்போதும் அத்தை என்று அவள் வாயில் வரவில்லை. சிவகாமிக்கு அதுவே பெரிய மனக்குறைதான்.
“அவ போகப் போக பழகிக்குவா அண்ணி” என்று காயத்ரி தான் அவரை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.
“இருக்கட்டும் காயத்ரி. அவ எப்படி பேசுனாலும் என் மருமகன்றது மாறாது” என்றவர்,
“சாப்பிட வாம்மா” என்ற அழைத்துவிட்டு சென்றார். அவர் சென்றவுடன் காயத்ரி மகளை முறைக்க, அவரை சட்டை செய்யாதவளைப் போல் சென்றாள் ஆரண்யா.
டைனிங் டேபிளிள் அனைவரும் அமர்ந்திருக்க, சத்யாவிற்கு அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளுக்கு நேரெதிரில் அமர்ந்திருந்த யாதவனுக்கோ அவள் மீதிருந்த கண்ணை எடுக்க முடியவில்லை. அவளை முழுங்குவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த சத்ய தேவ் தலையை நிமிராமலே,
“சாப்பிடுற நேரத்துல என்ன மொபைல் பார்த்துட்டு இருக்க தேவ். அதை சொல்லத்தான் பார்த்தேன்” என்று யாதவன் உளறிக் கொட்டி முடித்திருந்தான்.
சாரு அவனை முறைக்க, அந்த முறைப்பில் அடங்கிப் போனான் யாதவன்.
ஆரண்யாவோ இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவள் தனி உலகத்தில், தனி யோசனையில் இருந்தாள். சுவாதீனமாக சத்ய தேவ்வின் அருகில் அமர்ந்திருந்ததையே அவள் உணரவில்லை.
“எந்த உலகத்துல இருக்க ஆரண்யா?” என்ற தேவ்வின் குரலில் அவனைப் பார்த்தாள். அவன் மொபைலை பார்த்துக் கொண்டிருக்க, அவள் பார்ப்பதை உணர்ந்தவன்,
“தட்டைப் பார்த்து சாப்பிடு” என்றான்.
‘ஊருக்கு தான் உபதேசம் போல’ என்று நினைத்துக் கொண்டவள், பிகுப் பண்ணாமல் சாப்பிட ஆரம்பித்தாள். நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவுக்கு எதுவோ சரியில்லாததைப் போன்று தோன்றியது.