தேவ் கோபமாக செல்லவும் ஆரா என்ன செய்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, சிவகாமிக்கும் அதே நிலைதான்.
“இவன் பண்ண அந்த கேடுகெட்ட வேலைக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆரா. இவனுக்கு வர வர ஏன் தான் புத்தி இப்படி போகுதோன்னு தெரியலை. ஆனா, கண்டிப்பா இன்னொரு முறை இப்படி நடந்துக்க மாட்டான்மா” என்றார் ஆரண்யாவிடம்.
“ம்மா..! நான் இப்பவும் சொல்றேன். நான் அந்த அர்த்ததுல பேசலை.” என்றான் மீண்டும்.
“வாயை மூடு யாதவ். வெளிய நீ என்னென்ன பண்றன்னு எனக்கு தெரியாம ஒண்ணுமில்லை. பெத்த கொடுமைக்கு இன்னும் நான் இன்னும் என்னென்ன பார்க்கணுமோ? கேட்கணுமோ? இவ வந்து உன்னை திருத்துவான்னு பார்த்தா, ரெண்டு பேரும் சேர்ந்து தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டே இருக்கீங்க. இனியும் நீ திருந்தலைன்னா, தேவ் என்ன? நானே கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளிடுவேன்” என்றார் சிவகாமி.
“ஆன்ட்டி நீங்க மன்னிப்பு கேட்கனும்னு அவசியம் இல்லை. தப்புன்னு தெரியாம செய்றவங்க தான் திருந்துவாங்க ஆன்ட்டி. ஆனா, அது தப்புன்னு தெரிஞ்சே செய்றவங்க என்னைக்கும் திருந்துனதா சரித்திரமே இல்லை. உங்க பெரிய பையன் இதுல இரண்டாவது வகை. ஒருத்தரோட பிறவி குணம் எப்பவுமே மாறாது. அந்த வகையில இவருக்கு பிறவி குணமே சரியில்லை. இதுல அவர் பழகுற, புழங்குற துறையும் அவருக்கு தோதான துறையா போய்டுச்சு. அவர் பார்க்குற, பழகுற பெண்கள் மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறார் போல. நாளைக்கு இவருக்கு ஒரு பொண்ணு பிறந்தாலும் குணம் மாறுமான்னு சொல்ல முடியாது” என்றாள் ஆரா பட்டென்று.
யாதவ் அதிர்ந்து எழுந்தவன்,
“ம்மா! என்ன பேசுது இந்த பொண்ணு, நான் என் பொண்ணுகிட்ட போய்..ச்சை” என்றான் அருவருப்புடன்.
“நான் சரியா தானே சொன்னேன். உங்க புத்தி இப்படியே போச்சுன்னா நாளைக்கு நான் சொன்னதும் நடக்கும். உங்க கல்ச்சர் அதையும் சரின்னு சொல்லும்.” என்றாள்.
“ஆரா நீ ரொம்ப பேசுற? பெத்த பொண்ணுகிட்ட யாராவது அப்படி நடந்துப்பாங்களா?” என்றார் சாரு கோபமாய்.
“மத்த பொண்ணுங்களை அந்த கண்ணோட்டத்துல பார்க்குறவங்களுக்கு பெத்த பொண்ணு மட்டும் விதிவிலக்கா என்ன? இன்னும் பெக்கவே இல்லை. அதுக்குள்ள துடிக்குதோ?” என்றாள் கிண்டலாய்.
யாதவ் தலையை குனிந்தபடி உள்ளே செல்ல, ஆராவை முறைத்துக் கொண்டு நின்றாள் சாரு.
“என்னை எதுக்கு முறைக்கிறிங்க?நீ எப்படி வேணும்னாலும் இரு, நான் கேள்வி கேட்க மாட்டேன். நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன், நீ கேள்வி கேட்காத. இது தான உங்க ரெண்டு பேரோட குடும்ப கோட்பாடு. இப்ப என்னமோ திடீர்ன்னு புருஷன் மேல பாசம் பொங்குது உங்களுக்கு. நல்லதா அட்வைஸ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை. அவர் செய்றதுக்கு ஜால்ரா தட்டி பெரிய பிரச்சனையில இழுத்து விட்றாதிங்க. தேவ் கோபத்தை இன்னைக்கு மாதிரி இன்னொரு நாள் என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது. பண்ணவும் மாட்டேன்.” என்றாள் தீர்க்கமாய் ஆரா.
‘வந்த அன்னைக்கு இருந்து அமைதியாவே இருந்த பிள்ளைப் பூச்சியா இவ?’ என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் சாரு.
“ஆரா” என்று சிவகாமி அவள் கையை பிடிக்க,
“சாரி ஆன்ட்டி! நீங்க என்னை கோவிச்சுகிட்டாலும் பரவாயில்லை.ஆனா, உங்க பெரிய பையன் இப்படி இருக்குறதுக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம். அவரால அவ்வளவு கடன் வந்தப்போ, எல்லாமே தேவ் தான் சரி செய்யணும்னு நினைச்சிங்களே தவிர, ஏன் நீங்க உங்க பெரிய பையன்கிட்ட அவரால ஏற்பட்ட நஷ்ட்டத்தை அவரே சரி செய்யணும்னு சொல்லத் தோணலை. தனக்காக தம்பி செய்வான்னு எதிர்பார்த்தவர் இப்போ எல்லாத்துக்குமே அவரை மட்டுமே எதிர்பார்க்குறார்.
ஏன்? உங்க பெரிய பையனும் ஒரு காலத்துல பேமஸ் டேரக்டர் தானே! புத்தியையும் மனசையும் ஒழுங்கா வச்சு வேலை பார்த்தா எல்லாருக்கும் ஏதாவது ஒரு நாள் கிளிக் ஆகும். அதை விட்டுட்டு, பொண்ணுங்களை ஜொள்ளு விடுறது,உழைக்காமையே புகழ் வெளிச்சம் தேடுறது,தன் சுயநலத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையில குழப்பம் பண்றது, சொந்த லாபத்துக்காக சொந்த தம்பியையே செத்துட்டான்னு சொல்றது இப்படி இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்.
இது தான் திருந்துறதுக்கான கடைசி வாய்ப்பு. இல்லை, நான் இப்படித்தான் இருப்பேன்னு மறுபடியும் அதே மாதிரி இருந்தா, சாரி ஆன்ட்டி, உங்க பெரிய பையன் கெட்டு சீரழியறைதைதான் நீங்க பார்க்கணும். மனசை எல்லாத்துக்கும் தயார் படுத்தி வச்சிக்கோங்க” என்றவள், சாருவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
“பாருங்க ஆன்ட்டி எப்படி பேசிட்டு போறான்னு? நானே உங்ககிட்ட பேச பயப்படுவேன். அவ எவ்வளவு தைரியமா பேசிட்டு போறா பாருங்க” என்ற சாருவை ஓங்கி அறைந்திருந்தார் சிவகாமி.
“அவ சரியாத்தான் பேசிட்டு போறா? உங்க புள்ளைய ஒழுங்கா வளர்க்கலைன்னு, இதுக்குமேல யாராலையும் செருப்பால அடிச்ச மாதிரி சொல்ல முடியாது.” என்ற சிவகாமி ஆராவின் வார்த்தைகளில் அப்படியே அமர்ந்துவிட்டார். உள்ளே சென்றாலும் யாதவின் காதிலும் அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் விழுந்திருந்தது.
அறையில் லேப்டாப்பில் ஏதோ தீவிரமாய் வேலை செய்து கொண்டிருந்தான் தேவ்.
மெல்ல அவன் அருகில் சென்று அமர்ந்தவள்,
“என்னாச்சு ஜெய்? ஏன் கோபமா வந்திங்க?” என்றாள் மெதுவாய்.
“ஏன்னு உனக்குத் தெரியாதா ஆரா?” என்றான். வார்த்தைகள் மட்டும் தான் வந்தது. பார்வை என்னவோ திரையில் இருந்தது.
“ஜெய், இப்போ வீட்டை விட்டு கிளம்புனா என்னால தான் அப்படின்ற பேச்சு வரும்” என்றாள் தயக்கமாய்.
“உனக்கு நல்ல பேர், தியாகி பட்டம் வேணுமா? இல்லை நிம்மதியான வாழ்க்கை வேணுமா?” என்றான் பட்டென்று.
“ஜெய்” என்றாள் பாவமாய்.
“ஆமா ஆரா. நீ நினைக்கிற மாதிரி கிடையாது இங்க யாரும். அர்ஜஸ்ட் பண்ணிட்டு போன்னு சொல்ற டைப்பும் நான் இல்லை. நான் கிளம்புன்னு சொன்ன உடனே நீ கிளம்பி இருக்கணும். இந்த எமோஷ்னல் ட்ராமாவால நான் நிறைய இழந்திருக்கேன். சோ, பிளீஸ் இனி ஒரு தடவை இப்படி பண்ணாத” என்றான்.
“அதான் நான் இருக்கேனே” என்றாள் அவன் மேல் சாய்ந்து கொண்டு.
அவளைத் திரும்பி ஆழமாய் பார்த்தவன்,” நீ மட்டும் தான் இருக்க. அந்த நம்பிக்கையில தான் நானும் இருக்கேன்” என்றான் கண்ணெடுக்காமல்.
“இப்ப எதுக்கு இப்படி பார்க்குறிங்க?” என்றாள் சிறு புன்னகையுடன்.
“தெரியலை, நீ சொன்ன மாதிரி பார்க்கத் தோணுது. பார்த்துகிட்டே இருக்கணும்னு தோணுது. என்னைப் பார்த்த உடனே உருகிக் கரையற உன்னோட இந்த கண்ணை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு” என்றான் கண்களில் காதலைத் தேக்கி.
“உருகிக் கரைய நான் என்ன ஐஸ்கீரீமா?” என்றாள் சிரிப்புடன்.
“என் ஐஸ்கிரீம் சிலையே நீதான்டி. அப்படியே ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும் போல இருக்கு” என்றான் உல்லாசமாய்.
“உனக்கு சமாதானப் படுத்துற வழி முறையே தெரியலைடி. நான் வேணும்னா சொல்லித் தரட்டுமா? சம்சாரமாய் சமாதானப் படுத்துவது எப்படின்னு?” என்றான் மார்க்கமான குரலுடன்.
“சம்சாரம் சமாச்சாரம்னு பேசியே ஆளைக் கவுத்திடுவிங்க” என்றவள் அவனை மேலும் ஒட்டிக் கொள்ள,
“இதெல்லாம் அநியாம்டி. இப்படி உரசி உரசி மனுஷனை டெம்ப்ட் ஏத்த வேண்டியது. அப்பறம் நான் ஏதாவது பேசினா ஏடாகூடமா பேசுறேன்னு சொல்ல வேண்டியது.” என்றவனை லேப்டாப்பை அணைத்து விட்டு அவளை அணைக்க முற்பட,
“நோ மேட்னி, இது ஈவ்னிங் ஷோடி என் அருமை காதல் கள்ளியே” என்றவன் அதற்கடுத்து அவளை பேசவே விடவில்லை. இத்தனை வருட இடைவெளியையும் நிரப்பி இதழ்களில் கவி பாடி, அவளை முழுவதும் துதி பாடிக் கொண்டிருந்தான் ஆராவின் கணவன். இரவுக்கும் பகலுக்கும் இடைவெளியின்றி போனது.