தன் வீட்டிற்கு வந்த மகளையும் மருமகனையும் பார்த்த ரவிக் குமாருக்கும், காயத்ரிக்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அதிலும் ஆராவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தவர்களுக்கு மனம் நிறைந்து போனது. சுலோச்சனாவோ தன் பேத்தியை நீவி நீவிப் பார்க்க, அதைப் பார்த்த தேவ்விற்கு கூட சிரிப்பு வந்தது.
“உங்க பாட்டி என்ன உன்னை இந்த தடவு தடவுறாங்க? நான் கூட இப்படி உரசலைடி” என்று மந்தகாசமாய் சொல்லி சிரித்தவனை முறைத்தவள், அவனை ரசிக்கவும் தவறவில்லை.
மாமியார் வீட்டு விருந்து தடபுடலாய் ரெடியாக,
“எதுக்குடி இவ்ளோ குக் பண்றாங்க. ஒரே நாள்ல என் மொத்த டயட்டையும் முடிச்சு விடுற பிளான்ல இருக்கிங்களா?” என்றான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாமியார் வீட்டு விருந்துன்னா சும்மாவா? அதுவும் ஆராவுக்கு புருஷனா வேற போய்ட்டிங்க. இதென்ன பிரம்மாதம், இன்னும் நிறைய நீங்க அனுபவிக்க வேண்டியது இருக்கு” என்றாள் சிரிப்புடன்.
“சரித்தான்டி, எல்லாம் ஒரு நோக்கத்தோட தான் இருக்கிங்க போலத் தெரியுது” என்றவன், அதையும் ரசித்தே ஏற்றுக் கொண்டான்.
“இன்னும் கொஞ்சம் பிரியாணி வைக்கட்டுமா மாப்பிள்ளை” என்ற காயத்ரியின் குரலில் பரிதாபமாய் முழித்தான். ஆராவைப் பார்த்து,
“நீ சாப்பிடலையா? என்றான்.
“எனக்கு பசியில்லை. நீங்க சாப்பிடுங்க. நான் அப்பறம் சாப்பிடுறேன்” என்றவள்,
“ம்மா! அவரும் எவ்ளோ தான் சாப்பிடுவார்? உங்களுக்கே இது ஓவரா தெரியலை?” என்றாள் கிண்டலாய்.
“நீ சும்மா இரு ஆரா. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை கவனிக்க வேண்டாமா?” என்றார் சுலோச்சனா.
“ரொம்ப நல்லா இருக்கு. முதல்ல இவளை கவனிச்சிங்க. இப்ப இவ புருஷனை கவனிக்கிறிங்க. இந்த வீட்லயே பிறந்து, இங்கயே பாவப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்த, இந்த பாவப் பட்ட ஜீவனை எப்பத்தான் கவனிப்பிங்க?” என்றாள் ஆதிரா கோபத்துடன்.
“என்ன பேச்சு ஆதிரா இதெல்லாம். வீட்டு மாப்பிள்ளை முன்னாடி” என்றார் சுலோச்சனா.
“பார்த்திங்களா மாமா? இந்த டிக்கெட்டை எல்லாம் வச்சுகிட்டு கேஷூவலா கூட பேசிட முடியாது. இதுல என்னை வில்லி ரேஞ்சுக்கு பார்ப்பாங்க இந்த வீட்ல எல்லாரும். ஏதோ நீங்க மட்டும் தான் கொஞ்சம் நாலேஜிபிள் பெர்சனா இருக்கப் போய் நான் பேசுறதை புரிஞ்சுக்கிறிங்க” என்றாள் ஆதிரா நக்கலாக.
“தப்பா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை. அவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி” என்று சுலோச்சனா சொல்ல,
“அதான் சிரிப்பு வருதுல்ல, சிரிச்சுடுங்க. என் பொழப்பு இந்த வீட்ல பல வருஷமா இப்படித்தான் சிரிப்பா சிரிக்குது” என்றாள் ஆதிரா கடுப்பாக.
“ஹேய் விடு ஆதிரா, பாட்டி பத்தித்தான் உனக்குத் தெரியுமே?” என்று ஆரா சீரியசாய் சொல்ல, தேவ் இப்போது சிரித்தே விட்டான்.
“இவளை எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களான்னு எனக்கு சத்தியமா தெரியலை மாமா. உங்க பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான். இவ டியுப் லைட்டுன்னு தெரியும். ஆனா, பீஸ் போன டியூப் லைட்டுன்னு எனக்கு இன்னைக்குத் தான் தெரியும்” என்றாள் ஆதிரா.
ஆரண்யா அவளை முறைக்க,
“என்ன முறைப்பெல்லாம் பலமா இருக்கு. என்மேல இருக்க பயம் விட்டுப் போச்சா உனக்கு? என்னைப் பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணவ தானடி நீ” என்று மிரட்டினாள் ஆதிரா.
“ஆதிரா நான் வேணும்னு பண்ணலை” என்று இப்போதும் அவள் சீரியசாய் பதில் சொல்ல, கடுப்பான ஆதிரா,
“அம்மா தாயே! உன்கிட்ட நார்மலா பேசலாம்னு நானே நினைச்சாலும் நீ விட மாட்ட. சோ எப்பவும் சண்டைக்காரி ஆதிரா தான் செட்டாவா” என்று கூறியபடி எழுந்து செல்ல முற்பட்டவள்,
“ஆமா, இந்த ஜூம்கா எப்போ வாங்கின? நான் இது வரைக்கும் உன்கிட்ட பார்த்ததே இல்லையே?” என்றாள் யோசனையாய்.
“அதான் நீ கேட்டா கடையையே வாங்கித் தர உன் புருஷன் இருக்கார்ல. எனக்குத் தான் இப்போதைக்கு ஒருத்தனுமில்லை. அதனால இதை எனக்குக் குடுத்துடு. அதுவும் இப்போவே குடு” என்றாள் அதிகாரமாய்.
“என்ன ஆதிரா பழக்கம் இது? உனக்கு எப்பவும் அவ பொருள் மேல தான் கண்ணு” என்றார் காயத்ரி.
“நான் என்ன பண்றது? அவகிட்ட இருக்குறது தான் அழகா தெரியுது” என்றாள்.
“இந்தா” என்று ஆரா அதை கழற்றி தந்திருக்க,
“அவ்வளவு நல்லவளாடி நீ” என்று பார்த்திருந்தான் தேவ்.
“இந்தா உனக்காகத் தான் வாங்கினேன்” என்று ஒரு புது ஜிமிக்கியை நீட்ட,
“வாவ் சூப்பரா இருக்கு ஆதிரா” என்றார் ஆரா.
“சரி சரி இதுக்காகவெல்லாம் நான் உன்மேல பாசமா இருக்கேன்னு அர்த்தம் கிடையாது. ஏதோ தோணுச்சு வாங்குனேன். இதையும் போய் உன் பிரண்ட் மித்ராகிட்ட சொல்லு. உடனே அவ அவளுக்கு வேணும்னு கேட்பா. குடுத்துட்டு வந்துடு” என்றாள் நக்கலாய்.
மித்ராவைப் பற்றி பேச்செடுத்ததும், ஆராவின் கண்கள் கலங்க, யாரும் அறியாமல் அவள் கைகளை அழுத்தி, ஆறுதல் கூறினான் தேவ். ஆனால் அது ஆதிராவின் கண்களில் பட்டுவிட்டது.
“என்னாச்சு இவளுக்கு? அந்த மித்ராவையும் ஆளைக் காணோம். இல்லைன்னா ஓட்டுப் புல் மாதிரி இவ கூட ஒட்டிகிட்டே வந்திருப்பாளே” என்று எண்ணிய ஆதிரா, ஆரா நகன்றதும் அதை தேவ்விடம் கேட்டு வைத்தாள்.
“எனக்கு தெரியாது ஆதிரா” என்றான் தேவ்.
“பொய் சொல்லாதிங்க மாமா. அது உங்களுக்கு செட்டாகலை. என்னமோ நடந்திருக்கு. என்கிட்ட மறைக்கிறிங்க. இல்லை உங்களுக்கும் நான் வில்லியா தெரியறேனா?” என்றாள்.
“அப்படி இல்லை ஆதிரா. இது ஆரா சம்பந்தப்பட்ட விஷயம். நான் எப்படி சொல்ல முடியும்?” என்றான்.
“அவளை மாதிரியே இந்த ஓவர் நல்லவர் வேஷம் எல்லாம் வேண்டாம். ஒழுங்கா சொல்லுங்க” என்று மிரட்டினாள்.
“தேவைப்பட்டா அதையும் செய்ய வேண்டியது தான்” என்றாள் அவளும் சிரிப்புடன்.
“சரித்தான்” என்றவன், நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்திருந்தான்.
ஆதிரா திகைப்புடன் அமர்ந்திருக்க, அவள் முன் சொடக்கிட்டு அழைத்தான் தேவ்.
“வாட்ட சர்பிரைஸ்..!” என்று மகிழ்ந்தவள்,
“நிஜமாவே ஆராவோட லவ் நீங்க தானா?” என்று திரும்பத் திரும்ப கேட்டவளுக்கு நம்பவே முடியவில்லை.
“வேற வழியில்லை ஆதிரா, நீ நம்பித்தான் ஆகணும்” என்றான் தேவ்.
“எனக்கு அப்பவே அந்த மித்ரா மேல ஒரு டவுட் இருந்தது. ஆனா இந்த அளவுக்கு இருந்திருப்பான்னு நான் நினைக்கவே இல்லை. அந்த சமயம், உங்க லவ் மேட்டர் வீட்ல தெரிஞ்சா ஆராவுக்கு திட்டு விழும். எல்லாரும் ஆராவை வெறுப்பாங்க அப்படின்னு நினைச்சு தான் சந்தோஷப்பட்டேன். ஆனா, அதுக்கப்பறம் அவ படுற வேதனை எல்லாம் பார்த்து நிஜமாவே சந்தோஷப்பட முடியலை.நாங்க இத்தனை பேர் இருந்தும் இந்த மித்ராவை இப்படி கேம் ஆட விட்ருகோம்னு நினைக்கிறப்ப ரொம்ப பீல் ஆகுது. ஆரம்பத்துலையே சொன்னேன். அவளை வீட்டுக்குள்ள விடாதிங்கன்னு. எங்க வீட்டு அறிவாளிங்க எல்லாம் என்னைத்தான் திட்டினாங்க.” என்றவளுக்கு கேட்ட விஷயங்களை இன்னமுமே நம்ப முடியவில்லை.
“ஆனா ஒன்னு மாமா, டெஸ்டினின்னு ஒன்னு இருக்கு மாமா. அது தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சிருக்கு” என்றாள்.