அத்யாயம் 20:

தன் அணைப்பில் கலைந்த ஓவியமாய்  உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்கத் தெவிட்டவில்லை தேவ்விற்கு. மனதில் இருந்த வெறுமை எல்லாம் நீங்கியிருந்தது அவளால். அத்தனை குழப்பங்களுக்கும், சஞ்சலங்களுக்கும் அவளையே தீர்வாகக் கொடுத்திருந்தாள் அவனுக்கு. அவனின் ஆறு வருட தவிர்ப்பிற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருந்தாள். இருந்தாலும் போதவே இல்லை அவனுக்கு. அவனுக்கு எப்போதும் தெளியாத போதையே அவள் தான் என்பதை நீக்கமற உணர்ந்திருந்தான்.அவளுடனான கூடலும் போதவில்லை, அந்த இரவும் நீளவில்லை. விடியலை வெறுத்தான். கண்மூடினால் மறைந்து விடுவாளோ என்று என்னும் அளவிற்கு அவளை ரசித்திருந்தான்.

ஆராவோ ஆழ்கடலின் அமைதியுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். இருப்பிடம் சேர்ந்த நிம்மதி அவள் முகத்தில் நிலைத்திருந்தது. உறங்கிக் கொண்டிருக்கும்  அவளின் விழிகள் அவனிடம் வாங்கிய முத்தங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

‘என்னடி பண்ணித் தொலைச்ச என்னை?’ என்று ஆயிரம் முறை இன்பமாய் சலித்துக் கொண்டான் தேவ்.

ஆராவோ விட்டால் இனி அவன் கிடைக்கவே மாட்டான் என்பதைப் போல் அவனுள் புதைந்திருக்க, அதை அவன் ஆசையுடன் பார்த்திருந்தாலும், அவளின் திடீர் செய்கைகளையும், மனமாற்றத்தையும் ஏன் என்று யோசிக்கவும் தவறவில்லை அவன்.

சத்ய தேவ்வாக அவளை கவர்ந்துவிட்டான் என்று எண்ணியவன், ஜெய்யாக அவன் தோற்றுவிட்டான் என்று எண்ணிக் கொண்டவனுக்கு அவன் மீது அவனுக்கே பொறாமை வந்தது.

யோசனைகளின் பிடியில் சிக்கியிருந்தவனின் விழிகள் அவனறியாமல் உறக்கத்தை தழுவ, விடியலில் கண் விழித்தது என்னவோ ஆராவின் தரிசனத்தில் தான்.

புடவை மாற்றிக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தவன்,

“என்னடி இயர்லி மார்னிங் இப்படி ஒரு தரிசனம் தர்ற?” என்று காதோடு ரகசியம் பேச,

“குட்மார்னிங்” என்றாள் சிரிப்புடன். அவளின் சிரிப்பைப் பார்த்தவன் நெஞ்சில் கைவைத்துவிட்டான்.

“என்னாச்சு?” என்றாள் புரியாமல்.

“என்னடி சிரிக்கிற?உனக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா?” என்றவன் அவளை  விநோதமாய் பார்க்க, அவளோ முறைத்து வைத்தாள்.

“ஏன் நான் என்ன ஏலியனா?” என்றாள் கடுப்பாக.

“நீயே சொல்லு, இத்தனை நாள்ல நீ என்னைக்கு சிரிச்சன்னு சொல்லு பார்க்கலாம்” என்றான் அவளை கண்ணாடி முன் நிறுத்தி.

“இத்தனை நாள்னு சொல்லக் கூடாது. இத்தனை வருஷத்துலன்னு சொல்லணும்” என்றவள் அவனையே பார்க்க, கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தில் அவள் கண்கள் கடத்த முயன்ற செய்தியை அறிந்து கொள்ள முற்பட்டவனுக்கு, தோல்வியே மிஞ்சியது.

“என்னாச்சு அப்படி பார்க்குறிங்க?” என்றாள்.

“ஆங்..ஒண்ணுமில்லை” என்றவன்,

“இப்படி உட்கார்” என்று அங்கிருந்த இருக்கையில் அவளை அமர்த்தியவன், அவள் கண்களுக்கு மையிட துவங்க,

“என்ன பண்றிங்க? நான் இப்போல்லாம் கண்ணுக்கு மை போடுறதில்லை” என்றாள் வேகமாய்.

“ஏன்? உனக்கு அழகா இருக்கும்” என்றான்.

“அது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் வேண்டுமென்றே.

“ரசிக்கிறவனுக்குத் தானே தெரியும், அவன் ரசனைக்காரி எப்படி இருப்பான்னு” என்றான்.

“நல்லா பேசுறிங்க நடிகரே” என்றாள்.

“என்னை பேச வைக்கிறதே நீதானடி” என்றவன், அவளுக்கு அழகாய் மையிட்டு முடிக்க,

“பெர்பெக்ட்” என்றான்.

“இதுல ரொம்ப அனுபவமோ?” என்றாள் சிரிப்பை அடக்கி.

“அட தேவுடா, கண்ணுக்கு மை போட்டு விட்டது குத்தமாடி” என்று கேட்டவனின் தொனியில் சிரிப்பு வந்தது அவளுக்கு.

“நான் சொல்லியிருக்கேன்ல என் லவ்வர். அவ இப்படித்தான் கண்ணுக்கு மை போட்டு அழகா இருப்பா. அப்படியே அந்த முட்டை கண்ணை விரிச்சு பார்த்தா அங்கயே பிளாட் ஆகிடனும். அப்படி இருக்கும் பார்வை. அவ வாய் திறந்து வார்த்தையா பேசணும்னு இல்லை, அவ கண்ணே பேசும்” என்று அவன் அவளின் நினைவில் லயித்துக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு கண்கள் கலங்கியது.

“என்னாச்சு?” என்றான்.

“மை போட்டதுல கண் கலங்குது” என்றாள்.

“ஞாயமா பார்த்தா,நான் அவளைப் பத்தி பேசுனா உனக்கு கோபம் வரணும். நீ என்னடான்னா ரசிச்சு கேட்டுட்டு இருக்க?” என்றான் சன்ன சிரிப்புடன்.

“நீங்க கூடத்தான், நான் ஜெய் பத்தி பேசுனாலே ரசிச்சு கேட்குறிங்க. உங்களுக்கும் கோபம் தானே வரணும். ஆனா ஏன் வரலை?” என்றாள் திருப்பி.

“அது” என்று திணறியவன்,

“ஜெய் உன்னோட லவ்வர், இறந்த காலம். நான் தானே உன் புருஷன், உன்னோட நிகழ் காலம். அதனால் எனக்கு கோபம் வரலை” என்றான்.

“அதே மாதிரி தான் எனக்கும். உங்க லவ்வர் உங்களுக்கு பாஸ்ட். நான்தானே பிரசன்ட். நான் தானே உங்க வொயிப். எனக்கு எதுக்கு கோபம் வரணும்?” என்றாள்.

“என்னவோ தெரியலடி. நீ ஒரு மார்க்கமாத்தான் இருக்க. ஆனா இது கூட நல்லாத்தான் இருக்கு” என்று அவள் முகத்தோடு முகம் வைத்து உரசியவன்,

“ஆரா”

“ம்ம்”

“என்னவோ தெரியலை, இன்னைக்கு பளபளன்னு பப்பாளிப் பழம் மாதிரி இருக்க? நாம ஏன் இதை செலிபரேட் பண்ணக் கூடாது” என்றான்.

“எது பப்பாளி பழம் மாதிரி இருக்குறதுக்கா?” என்றாள்.

“ஆமா” என்றான் வேகமாய் தலையை ஆட்டி.

“அன்னைக்கு தக்காளிப் பழம், நேத்து ஆப்பிள், இன்னைக்கு பப்பாளி, நாளைக்கு என்ன பலாப்பழமா” என்றாள் முறைத்தபடி.

“அதெல்லாம் இப்பவே எப்படி சொல்ல முடியும். அது நாளைக்கு நீ காட்சி தர்றதை பொறுத்து” என்றான் உல்லாசமாய்.

“உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு”

“அதைத்தான் நானும் கேட்கிறேன்? என்னடி பண்ண என்னை? அக்மார்க் நல்ல பையனா இருந்த என்னை இப்படி அயோக்கியனா மாத்தி வச்சிருக்க? உன்னைய பார்க்குற என் பார்வையே சரியில்லைடி. இதுக்கெல்லாம் காரணம் நீ தான். எனக்குள்ள ஆழமா இறங்கி என்னமோ பண்ற?” என்று அவன் ரசனையுடன் பேசிக் கொண்டிருக்க,

“எவ்வளவு ஆழத்துல இறங்கியிருக்கேன். வேணும்னா ஒரு கடப்பாறையை எடுத்து சொருகி ஆழத்தோட அளவு பார்ப்போமா?” என்றாள் சிரிக்காமல்.

“அடிப்பாவி, உனக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா?” என்றான்.

“ஏன் நானெல்லாம் பேசக் கூடாதா?”

“அப்படி சொல்வேனா என் அழகான அரைவேக்காட்டுக்காரியே” என்றவளை அணைத்துக் கொண்டவனை அவளின் கேள்வி தடுத்து நிறுத்தியது.

“நீங்க ஏன் உங்க லவ்வர் கூட சேரலை சத்யா? இவ்வளவு டீப்பா லவ் பண்ணியிருக்கிங்க? அப்பறம் எதுக்கு என்னை மேரேஜ் பண்ணிங்க?” என்றாள் அவன் கண் நோக்கி.

“இப்போ எதுக்கு அதெல்லாம்?” என்றான் யோசனையுடன்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா உங்களுக்கு அவளை ரொம்ப பிடிக்கும் போல தெரியுது. அப்படி இருக்கும் போது அப்படி ஒரு பொண்ணை மறந்துட்டு எப்படி என்னை உங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வர முடிஞ்சது?” என்றாள் தீர்க்கமாய்.

அவன் ஏதோ சொல்ல வர, அதை உணர்ந்தவள்,

“தயவு செஞ்சு ஜெய்யை இதில் இழுக்காதிங்க. என்னோட விஷயம் எல்லாமே நீங்க தெரிஞ்சுகிட்டிங்க” என்றாள்.

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா? அப்பறம் பீல் பண்ணக் கூடாது” என்றான் தேவ்.

“ம்ம்”

“சூழ்நிலை காரணமா தற்காலிகமா பிரிஞ்சோம். சிலர் சதியால மொத்தமா பிரிஞ்சுட்டோம்”  என்றான் பார்வையை எங்கோ வைத்துக் கொண்டு.

“யார் என்ன சதி பண்ணியிருந்தாலும் நீங்க அவங்களை கை விட்ருக்கக் கூடாது” என்றாள்.

“அதுவும் சரிதான். ஆனா, எவ்வளவு அறிவாளியா இருந்தாலும் சில விஷயத்துல முட்டாளா இருந்திடுறோம் தான? அப்படித்தான் நானும். என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, அந்த சமயத்துல எதிர்காலத்தை நோக்கி ஓடிட்டு இருந்தேன்.” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவள்,

“நேத்து அவ்வளவு சீக்கிரமா எழுந்து எதுக்காக மித்ராவைப் பார்க்க போனிங்க சத்யா?” என்றவளின் கேள்வியில் அவன் கொஞ்சம் அதிர்ச்சியாக, சில நிமிடங்கள் செலவழித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன்,

“உனக்கெப்படி தெரியும்?” என்றான்.

“இப்படித்தான்” என்று அவள் மொபைலை காட்ட, அதில் மித்ரா அப்பார்ட்மென்ட்டின் வாயில் புற சிசிடிவி புட்டேஜ் இருந்தது.

“அந்த பிளாட்க்கு ஓனர் நான் தான்” என்றாள்.

“பார்ட்டில இருந்து உன்னை கூட்டிட்டு வர்ற அவசரத்துல மித்ராவை பத்தி யோசிக்கலை. அதான் சேப் ஆ ரீச் ஆகிட்டாங்களான்னு பார்க்க போனேன்” என்றான்.

“அதை நீங்க கால் பண்ணி கேட்டிருக்கலாம். இல்லைன்னா என்கிட்டே சொல்லி கேட்டிருக்கலாம். நீங்களே நேர்ல போகணும்னு என்ன அவசியம் வந்தது? நீங்க போன உடனேவும் திரும்பி வந்த மாதிரியும் தெரியலை” என்றாள்.

 “சந்தேகப்படுறியா ஆரா” என்றான் ஒரு மாதிரி குரலில்.

“சில சமயம் சந்தேகம் கூட நல்லது தான் சத்யா. அதெல்லாம் எனக்கு வந்ததே இல்லை. வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு இப்போ தோணுது” என்றாள்.

“எனக்கென்னவோ நீ புதிர் போட்டு பேசுற மாதிரி பீல் ஆகுதுடி” என்று அவளை அணைக்க வர, அவனை தடுத்தவள்,

“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை” என்றாள்.

“ஆரா பிளீஸ்” என்றான் மன்றாடும் குரலில்.

“என்னால முடியலை சத்யா. இனி எல்லாத்தையும் என்னால தூக்கி சுமக்க முடியும்னு தோணலை. பிளீஸ் சொல்லுங்க” என்றாள்.

“அப்போ உனக்கு என்மேல நம்பிக்கையில்லை” என்றான் வேதனை நிறைந்த குரலுடன்.

“ஒருத்தர் மேல நம்பிக்கை இல்லைன்னாத்தான் கேள்வி கேட்கணுமா? அவங்களை நம்பிக் கூட கேட்கலாம் இல்லையா?” என்றாள்.

“எங்கடி கத்துகிட்ட இப்படி பேச? என் ஆராவுக்கு அமைதியா இருக்கத்தானடி தெரியும்” என்றான்.