“என்ன?” என்பதைப் போல் அவன் புருவன் உயர்த்தி கேட்க,

“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் தலையை ஆட்டினாள். சில நிமிடங்கள் அவனையே  பார்த்தவள் வெளியே வந்துவிட்டாள்.

“எக்ஸ்க்யூஸ் மி” என்றபடி, வேகமாய் அவள் பின்னேயே வெளியே வந்தவன், அவளை இழுத்து சுவரோடு தள்ளி நிறுத்தியவன்,

“என்னடி பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு? என்ன விஷயம்?” என்றான் ரசனையுடன்.

“ஒன்னுமில்லையே?” என்றாள் அவன் கண்ணை நேராக பார்த்து.

“இல்லையே? ஏதோ வித்யாசம் தெரியுதே?” என்றான்.

“அதெல்லாம் ஒரு வித்யாசமும் இல்லை. நகருங்க” என்றாள்.

“நல்லா கும்பகர்னி  மாதிரி தூங்கிட்டு இருந்த? இப்ப பார்த்தா காஷ்மீர் ஆப்பிள் மாதிரி பிரஷ்ஷா வந்து நிக்கிற? இந்த ஆப்பிளை கொஞ்சம் கடிச்சுக்கவா?” என்றான் அவள் முகத்தை நெருங்கியபடி.

“இப்போ இடமும் சரியில்லை, நேரமும் சரியில்லை. அவங்களை அனுப்பிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்” என்று அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகும் சில நிமிடங்கள் அதே இடத்தில் நின்றிருந்தவள், பசியில் வயிறு கூப்பாடு போடவும் சாப்பிட சென்றாள்.

“அக்கா வேற லெவல் “ என்று அவள் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட, தனாக்காவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

“அட என்னம்மா நீங்க? ஒரு ரசம் பொரியலுக்கு இப்படி பெரிசா சந்தோஷப்படுறிங்க?” என்றார்.

“என்ன இப்படி சொல்லிட்டிங்க? இந்த காம்பினேஷன் சாப்பிட்டு பாருங்க. அப்பத்தான் இதோட டேஸ்ட் தெரியும். எங்க அம்மா மாதிரியே சமைச்சிருக்கிங்க” என்றவள் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தான் எழுந்தாள்.

“அக்கா அவரோட டின்னர் எல்லாம் எடுத்து வச்சுட்டிங்களா?” என்றாள்.

“தேவ் சார்க்கு சப்பாத்தியும் பன்னீர் கிரேவியும் பண்ணியிருக்கேன்மா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தான் யாதவன்.

அவர் அவனுக்கும் பரிமாறப் போக,

“இதென்ன புதுப் பழக்கம்? எப்பவும் அம்மா தான் எடுத்து வைப்பாங்க?” என்றவனின் பேச்சில் சத்தமில்லாமல் உள்ளே சென்று விட்டார் தனம்.

“ஆன்ட்டி இல்லை” என்றாள் ஆரா.

“அவங்க இல்லைன்னா என்ன? ரெண்டு பேர் வீட்ல இருக்கிங்களே, நீங்க பரிமாறக் கூடாதா?” என்றான்.

“சாரு அக்கா ஹால்ல தான் இருந்தாங்க. இருங்க கூப்பிடுறேன்” என்றவள் நகர முற்பட,

“அவ வந்து வச்சு, நான் சாப்பிடுறதுக்குள்ள விடிஞ்சிடும். நீயே எடுத்து வைமா” என்றான்.

அவளும் சரி என்று பரிமாற, அவள் அருகில் நின்று எடுத்து வைக்கும் போதெல்லாம், அவளின் வாசனையில் கிறங்கினான் யாதவன்.

“ஹேய் ஆரா.. போதும்” என்று அவன் அவள் கையைப் பிடித்து தடுக்க, சட்டென்று கைகளை உருவிக் கொண்டாள் ஆரா.

“தேவ் எங்க?” என்றான்.

“ஏதோ டிஸ்கஷன்ல இருக்கார்” என்றாள்.

“ஹோ” என்று நாலா பக்கமும் பார்வையை சுழல விட்டவன்,

“என் படத்துல தான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்ட ஆரா. அட்லீஸ்ட்  என் அடுத்த படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனராவாவது வொர்க் பண்ணலாமே?” என்றான்.

“சாரி, ஐ ஹேவ் நோ ஐடியா” என்றாள் பட்டும் படாமல்.

“இப்படி சொன்னா எப்படிமா ஆரா?உன்னோட வொர்க்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. ஒவ்வொருத்தரும் சான்ஸ் கிடைக்காதான்னு  ஏங்கிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா வர்ற சான்சை வேண்டாம்னு சொல்ற?” என்றவனின் பார்வை அவள் மேய, அவளுக்கு உடலெல்லாம் கூசியது.

“அந்த ஏங்குறவங்க லிஸ்ட்ல நான் இல்லை. எனக்கு அது தேவையும் இல்லை. அப்படியே வொர்க் பண்ணனும்னு நினைச்சாலும் என் புருஷன் படத்துல பண்ணிக்கிறேன்.” என்றவள் சட்டென்று அங்கிருந்து நகர, அவளின் கையைப் பிடித்திருந்தான் யாதவன்.

அதிர்ச்சியில் திரும்பியவள், அவனைப் பார்க்க, அவன் பார்வையோ அவளை லஜ்ஜையின்றி பார்த்தது.

“கையை விடுங்க” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆரண்யா. நான் படத்துல வொர்க் பண்ணத்தான் கூப்பிட்டேன். என்னமோ படுக்கைக்கே கூப்பிட்ட மாதிரி ஓவரா பிகு பண்ற?” என்று அவன் பேசி முடிப்பதற்குள் அவனை ஓங்கி அறைந்திருந்தாள் ஆரா.

“ராஸ்கல் அதுக்கு வேற கூப்பிடுவியா நீ? எங்க கூப்பிட்டுத் தான் பாரேன்” என்றவள் அங்கிருந்த செராமிக் பிளேட்டை எடுத்து அவன் தலையிலேயே உடைத்திருந்தாள். இருந்த எல்லா தட்டையும் எடுத்து ஆத்திரத்தில் அவன் தலையிலேயே உடைத்துக் கொண்டிருக்க, அவனுக்கோ தலையில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது.

“என்ன பண்ற? விடு?” என்று அவன் கைகொண்டு தடுக்க, அவன் கையிலும் கீறி ரத்தம் வந்து கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு சாரு ஓடி வர, ஆராவோ சூடாக இருந்த ரசத்தை எடுத்து அவன் முகத்தில் ஊற்றப் போனாள்.

“ஹேய் வேண்டாம்” என்று அவன் அலற, கிட்சனில் இருந்து தனமும் வந்துவிட்டிருந்தார்.

“ஆரா என்ன பண்ற? உனக்கென்ன பைத்தியமா” என்று சாரு கத்திக் கொண்டே வந்து அவளைத் தடுத்தாள்.

“ஆமா நான் பைத்தியம் தான்” என்று கத்திக் கொண்டே நிமிர்ந்தவள், எதிரே நின்று கொண்டிருந்த தேவ்வைப் பார்த்தவள், ரசப் பாத்திரத்தை நங்கென்று டேபிளில் வைத்தாள்.

“தேவ் உங்க பொண்டாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்” என்று சாரு கத்தினாள்.

அவள் கத்தலில்  ஆராவிற்கு மீண்டும் கோபம் வர, டேபிள் மீதிருந்த பாத்திரங்களை வேண்டுமென்றே தள்ளி விட்டவள், யாதவனை உக்கிரமாய் முறைத்தபடி அங்கிருந்து வேகமாய் சென்று விட்டாள்.

“அய்யோ எவ்வளவு ரத்தம்? நான் டாக்டருக்கு கால் பண்றேன். வாங்க போகலாம்” என்று சாரு அவனை அழைத்துக் கொண்டு செல்ல, புருவம் நெரித்தபடி யோசனையுடன் அவர்களைப் பார்த்திருந்தான் தேவ்.

“என்ன நடந்தது?” என்றான் தனத்திடம்.

“ஆராம்மா நல்லாத்தான் இருந்தாங்க. இன்னைக்கு என்னை சமைச்சு தர சொல்லி, சந்தோஷமா சாப்பிட்டாங்க சார். யாதவ் சார் சாப்பிட வந்தார். ஆராம்மாவை பரிமாற சொல்லவும் அவங்களும் பரிமாறினாங்க. அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு தெரியலை தேவ் சார்” என்றார் தனம்.

“நீங்க இதெல்லாம் கிளீன் பண்ணிடுங்க” என்றவன் யாதவனைத் தேடி செல்ல,

“இங்க பாருங்க தேவ், உங்க அண்ணாவை எப்படி அடிச்சிருக்கான்னு? கொஞ்சம் விட்டிருந்தா அடிச்சே கொன்னிருப்பா போல. நான் இதை சும்மா விடப் போறதில்லை” என்று சாரு ஆங்காரமாய் கத்த,

“என்ன செய்யப் போறதா உத்தேசம்?” என்றான் கேள்வியாய்.

“என்ன தேவ் பேசுறிங்க? அவ உங்க அண்ணனை போட்டு இப்படி அடிச்சிருக்கா. இப்ப கூட இவ்வளவு அமைதியா பேசிட்டு இருக்கீங்க?” என்றாள் கோபமாக.

“நீங்க கொஞ்சம் வெளிய இருங்க” என்றான் சாருவிடம்.

“ஏன்?”

“உங்களை வெளிய இருங்கன்னு சொன்னேன்” என்றான் அதட்டலாய்.

அவள் வேறு வழியின்றி வெளியே செல்லவும் கதவை அடைத்தவன்,

“என்ன பண்ண?” என்றான் யாதவிடம்.

“நான் ஒன்னும் பண்ணலை தேவ்” என்றான் பாவமாய்.

“உன் நடிப்பை நம்ப நான் ஒன்னும் அம்மா கிடையாது. மரியாதையா உண்மையை சொல்லு, ஆராகிட்ட ஏதோ மிஸ் பிகேவ் பண்ணியிருக்க. அதான் அவ இப்படி பிகேவ் பண்ணியிருக்கா. அவ சாப்ட் நேச்சர். அவளுக்கே இந்த அளவுக்கு கோபம் வந்திருக்குன்னா, நீதான்  ஏதோ திகிடுதத்தம் பண்ணியிருக்க” என்றான் தேவ்.

“அப்போ நீ என்னை நம்பலையா தேவ்?” என்றான் யாதவ்.

“நான் நீ என்ன பண்ணேன்னு கேட்டேன்” என்றான் ஓங்கிய குரலில்.

“நான் தான் சொல்றேனே எதுவும் பண்ணலைன்னு” என்று யாதவ் முடிக்கும் முன்பே அவன் கையை முறித்திருந்தான் தேவ்.

“வலிக்குதுடா” என்று யாதவ் கத்திய கத்தல் அறைக்கு வெளியே கேட்க,

“என்ன பண்றிங்க அவரை?” என்று வெளியே இருந்து கத்திக் கொண்டிருந்தாள் சாரு

“சொல்லு என்ன பண்ண?” என்றான் மீண்டும்.

“அது” என்று அவன் கேட்ட விஷயத்தை கதறிக் கொண்டே சொன்னான்.

“வொர்க் பண்ண கேட்டதுக்காக  இப்படி ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லையே. வேற என்ன சொன்ன?” என்று மீண்டும் கையை முறுக்கினான் தேவ். இன்னும் கொஞ்ச நேரம் பிடித்தால் கை ஒடிந்து விடும் என்ற நிலையில் இருந்தான் யாதவ்.

“அது படத்துல வொர்க் பண்ணத்தானே கூப்பிட்டேன். படுக்கைக்காக கூப்பிட்டேன்னு சொன்னேன்டா” என்றான் வலி தாங்க முடியாமல்.

அவன் சொன்னதைக் கேட்ட தேவிற்கு கோபத்தில் முகம் சிவக்க, யாதவை அறைந்த அறையில் அவன் பல்லே உடைந்திருந்தது.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டியை பார்த்து அப்படி பேசியிருப்ப? இனிமேல் ஆரான்னு இல்லை, வேற எந்த பொண்ணுகிட்டையும் இப்படி நீ பேசவே கூடாது” என்றவன் மீண்டும் ஒரு அறை விட, யாதவின் கன்னம் இரண்டும் வீங்கிப் போய்விட்டது.

“டேய் நான் உன் அண்ணன்டா” என்றான் கோபமாய்.

“அதனால தான் உயிரோட விடுறேன். இல்லைன்னா இந்நேரம் நடந்திருக்க கதையே வேற? இன்னொரு முறை இப்படி நடந்தா இந்த பரிதாபமும் பார்க்க மாட்டேன்” என்றான்  தேவ்.

“நான் பேசணும்னு பேசலை தேவ், வாய் தவறி அந்த வார்த்தை வந்திடுச்சு” என்றான் யாதவ்.

“அடுத்து வாய் தவறி வார்த்தை கூட வராது. வாய் இருந்தாத்தானே வரும். சோ உன்னைப் பத்தி கேள்விப் பட்டது எல்லாம் உண்மை, அப்படித்தான? வீட்டுக்குள்ள சொந்த தம்பி வொயிப் கிட்டயே இப்படி பிகேவ் பண்ற நீ, வெளிய மத்த பொண்ணுங்ககிட்ட எப்படி பிகேவ் பண்ணியிருப்ப?” என்றான் கோபமாய்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர் தேவ், நம்ம பீல்டில் இதெல்லாம் சாதாரணம்?” என்றவனை மீண்டும் அடிக்கப் போனான் தேவ்.

“உனக்குத் தான் சாதாரணம், எனக்கில்லை” என்றான்.

“சும்மா யோக்கியன் மாதிரி பேசாத தேவ். நீ மட்டும் என்னப் பெரிய ஒழுங்கா. உன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தினாங்க. யார் மேலயும் கை வைக்காமயா இருந்திருப்ப?” என்றான் யாதவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

“சொன்னாலும் சொல்லாட்டிலும் நான் யோக்கியன் தான். இந்த சில்லறைத் தனமான வேலையெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றான் தேவ்.

“யாரு நீ?” என்று நக்கலாய் சிரித்தவன்,

“ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்திட்டு வந்துட்டு, இங்க நல்லா எல்லா ஹீரோயின் கூடவும் ஆட்டம் போட்டுட்டு, இப்போ குடும்ப குத்து விளக்கா தேடி கட்டிட்டு வந்தவன் தான? நீயெல்லாம் ஒழுக்கத்தைப் பத்தி பேசுற?” என்றான் யாதவன்.

அவன் பேசிய மற்ற விஷயங்கள் தேவ் காதில் விழவே இல்லை.’ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்திட்டு வந்துட்டு’ என்ற வார்த்தை தான் மீண்டும் மீண்டும் கேட்டது.

கொத்தாக அண்ணன் சட்டையை பற்றிய தேவ்,

“நான் லவ் பண்ண விஷயம் உனக்கு எப்படி தெரியும்?” என்றான் ஆத்திரத்தில் சிவந்த முகத்துடன்.

“அ..அது நீதான் சொன்ன ஒரு தடவை” என்று மென்று விழுங்கினான் யாதவ்.

“நோ..! நான் என்னோட லவ்வைப் பத்தி யார்கிட்டயும் பேசுனதே கிடையாது. மரியாதையா உண்மையை சொல்லு, நான் லவ் பண்ண விஷயம் உனக்கு எப்படி தெரியும்? அதுவும் ஏமாத்திட்டு வந்தேன்னு சொல்ற?” என்றவன் மீண்டும் அவனை அடிக்க ஆரம்பிக்க, யாதவோ அலற ஆரம்பித்தான். அவன் சத்தத்தில் வெளியே நின்றிருந்த சாரு கத்த, அவளின் சத்தத்தில் என்னவோ ஏதோவென்று ஆராவும் வந்தாள்.