கதை சொல்வதற்காக ஒரு இயக்குனர் அவர் உதவியாளருடன் வந்திருக்க, அவர்களுடன் அலுவல் அறைக்குள் புகுந்த தேவ் இன்னமும் வெளியே வந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடந்திருந்தது. ஆராவிற்கு தான் பொழுதே போகாமல் எரிச்சலாய் இருந்தது. பகல் முழுவதும் தூங்கி எழுந்தவள், குளித்து முடித்து பிரஷ்ஷாக கீழே வர, அதிசயமாய் சாரு ஹாலில் இருந்தாள்.
‘ஆறுமணிக்கு மேல ஆகிடுச்சு. பூஜை ரூம் லைட்டை கூட போடாம உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்காங்க’ என்று நினைத்தவள், வெளியில் எதுவும் சொல்லாமல், தானே சென்று பூஜை அறை விளக்கை உயிர்ப்பித்தவள், விளக்கையும் ஏற்றிவிட்டு வந்தாள்.
“என்ன ஆரா? நல்ல தூக்கம் போல. முகம் எல்லாம் கும்முன்னு இருக்கு. பார்ட்டில சரக்கு ஓவரோ?” என்றாள் சாரு நக்கலாக.
“உங்க அளவுக்கு இல்லை” என்று சொல்ல வந்தவள்,
வந்த கோபத்தை அடக்கி எதுவும் பேசாமல் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது. சமையல் செய்பவரை அழைத்தவள்,
“நைட் என்ன டிபன்க்கா?” என்றாள் உரிமையுடன்.
‘சமையல்காரி இவளுக்கு அக்காவா? விளங்கிடும்’ என்று நினைத்த சாரு முகத்தை அஷ்ட்ட கோணலாய் வைத்துக் கொண்டாள்.
“உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னிங்கன்னா உடனே செஞ்சு தரேன்மா” என்றார் அவர் மகிழ்ச்சியுடன். அவள் ஈகோ இல்லாமல் அவரை அக்கா என்று அழைத்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.
“உங்க பேருக்கா?” என்றாள் கேள்வியாய்.
“என் பேரு தனலட்சுமிம்மா” என்றார் அவர்.
“ஆங்..! தனாக்கா எனக்கு டிபன் வேண்டாம். சூடா சாதம், ரசம், எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செஞ்சு தர முடியுமா?” என்றாள் ஆசையுடன்.
“ என்னம்மா இப்படி கேட்குறிங்க? சமைச்சு தான்னு சொல்லுங்கம்மா, உடனே சமைச்சு தர்றேன்” என்றவர் வேகமாய் சமைக்க செல்ல முற்பட,
“அக்கா தலை ரொம்ப வலிக்குது. ஸ்ட்ராங்கா ஒரு லெமன் டீ பிளீஸ்” என்றாள்.
“இதோ எடுத்துட்டு வரேன்மா” என்று அவர் நகர, தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தவளை நக்கலாய் பார்த்தாள் சாரு.
“ஆன்ட்டியை காணோம்?” என்றாள் சாருவிடம்.
“அவங்க திருப்பதி போயிருக்காங்க. டுமாரோ தான் வருவாங்க” என்ற சாரு,
“யாராவது நைட் டைம் இப்படி மீல்ஸ் சாப்பிடுவாங்களா? கொஞ்சம் கூட ஹெல்த் கான்சியஸ் இருக்கா உனக்கு?” என்றாள்.
“யார் சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா என்ன? எனக்கு தோணுது நான் சாப்பிடுறேன். எல்லா நேரமும் ஹெல்த் கான்சியசோட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ஓவர் ஹெல்த் கான்சியசோட இருக்க நான் ஒன்னும் ஹீரோயின் இல்லை. நான் ஒரு நார்மல் பெர்சன்” என்றாள் எரிச்சலுடன்.
“மைன்ட் யுவர் வோர்ட்ஸ் ஆரா. பார்ட்டிஸ்ல அப்படி இருக்குறது எல்லாம் சகஜம். உனக்கெங்க இதெல்லாம் புரியப் போகுது. கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத உன்னைக் கட்டிட்டு வந்த தேவ்வை சொல்லணும்” என்றாள் பொருமிக் கொண்டு.
“நான் குடிச்சா அது சரக்கு. நீங்க குடிச்சா அது சகஜமா?” என்றவள்,
“இதோ அவரே வர்றார், உங்க மனக்குறையை அவர்கிட்டயே சொல்லிடுங்களேன்” என்று ஆரா கண் ஜாடை காட்ட, பதட்டத்தில் விதிர்விதித்து திரும்பினாள் சாரு. அங்கு யாரும் வராமல் இருக்க, அப்போது தான் மூச்சே வந்தது அவளுக்கு.
அவளைப் பார்த்து கிண்டலாய் சிரித்த ஆரா,
“அந்த பயம் இருக்குல்ல? அப்பறம் எதுக்கு தேவையில்லாம வாயைக் குடுத்து வாங்கிக் கட்டுறிங்க?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, லெமன் டீ வர, வாங்கிக் கொண்டவள்,
“தேங்க்யு தனாக்கா” என்றாள் முகம் மலர.
“அய்யோ என்னம்மா? இதுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு. இந்த வேலையெல்லாம் செய்யத் தானே நான் இருக்கேன்” என்றவர் சமைக்கச் சென்று விட்டார்.
‘புருஷனுக்கு கொஞ்சமும் குறையாம இவளுக்கும் திமிர் இருக்கும் போலவே?’ என்று எண்ணிய சாரு, ஓடிக் கொண்டிருந்த டிவியில், வீம்பிற்கென்றே தேவ் நடித்ததிலேயே ரொமான்ஸ் தூக்கலாக இருந்த பாடலை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
மொபைலைப் பார்த்தபடி டீயைக் குடித்துக் கொண்டிருத்த ஆரா, ஏதோ உந்துதலில் நிமிர்ந்து பார்க்க, அங்கே திரையில் தேவ் கதாநாயகியுடன் ரொமான்ஸில் உருகிக் கரைந்து கொண்டிருந்தான்.
அதிர்ச்சியில் வாயைப் பிளந்த ஆரா, அதை சாரு அறியாமல் மறைத்துக் கொண்டாள்.
அங்கே தேவ் கட்டிலறை காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்க, ஆராவிற்கோ உள்ளே ஏதோ பற்றி எறிந்ததைப் போல் இருந்தது.
“என்ன இவ்வளவு டீப்பான ரொமான்ஸ் சீன்ஸ்ல எல்லாம் நடிச்சிருக்கான். இந்த சாங் எந்த படத்துலையா இருக்கும்? நான் பார்த்ததே இல்லையே?” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,
“என்ன இருந்தாலும் இப்ப இருக்குற ஹீரோஸ்ல ரொமான்ஸ் மன்னன்னா நம்ம தேவ் தான். அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. மனுஷனை நடிக்க சொன்னா அப்படியே வாழ்வார்” என்று சாரு அவளுக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தாள்.
“இது என்ன படம்? எப்போ வந்தது?” என்றவளின் பார்வை என்னவோ திரையில் மட்டும் தான் இருந்தது.
“அது ஒரு போர், பைவ் இயர்ஸ் இருக்கும். அப்போ நானும் பீல்ட்ல இருந்தேன். இன்பேக்ட் இந்த படத்துல நான் தான் ஹீரோயினா நடிக்க வேண்டியது. கடைசி நேரத்துல மிஸ்ஸாகிடுச்சு” என்றாள் மனக்குறையுடன்.
இப்போது கண்ட காட்சிகளில் எல்லாம், சாரு வைத்து நினைத்து பார்த்தவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
‘நல்லவேளை நீ நடிக்கலை. இதுல உனக்கு சேர்ந்து நடிக்கலைன்னு மனக் குறை வேற’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவளின் கண்கள் திரையில் பார்த்த காட்சியில் விரிந்தது.
அடுத்த பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பாடலில் தேவ் பேருந்து படிக்கட்டில் நின்று நடனம் ஆடிக் கொண்டிருக்க, கதாநாயகியின் துப்பட்டா அவன் முகத்தை வருடிச் செல்வது போன்ற காட்சி தான் ஓடிக் கொண்டிருந்தது.
“ஒரு நிமிஷம் ரிமோட் குடுங்க” என்றவள் வேகமாய் அவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி, ரீவைண்ட் செய்து அதே காட்சியை திரும்பவும் பார்த்தாள். பார்த்தவளுக்கு மனதுக்கு நெருக்கத்தில் ஏதோ ஒன்று உடைவதைப் போல் இருந்தது.
“என்னாச்சு ஆரா? எதுக்கு இப்படி ஸ்டாப் பண்ணி வச்சிருக்க?” என்றவள் ரிமோட்டை பிடுங்கி பிளே செய்ய, எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவளுக்கு கையில் இருந்த லெமன் டீயைக் குடித்தாலும் இருக்கும் தலைவலி விடாது என்றே தோன்றியது.
சரியாக அதே நேரம் கிட்சனில் போன் அடிக்க, எடுத்து பேசிய தனம், அடுத்த பத்தாவது நிமிடத்தில் காபியுடன் சென்றார்.
“அக்கா எங்க போறீங்க?” என்றாள் ஆரா.
“தேவ் சார் காபி எடுத்துட்டு வர சொன்னார்மா” என்று சொல்ல,
“குடுங்க நான் எடுத்துட்டு போறேன்” என்றவளை சாரு விநோதமாய் பார்த்தாள்.
“சார் திட்டுவார்மா. நானே எடுத்துட்டுப் போறேன்” என்று அவர் சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். எனக்கும் போர் அடிக்குது. நான் எடுத்துட்டு போறேன் குடுங்க” என்றவள் வம்பாக வாங்கிக் கொண்டு சென்றாள்.
அவன் அலுவல் அறையின் கதவைத் தட்ட,
“எஸ்” என்றவனின் குரலில் உள்ளே சென்றாள்.
அங்கே அவளைக் கண்டவன்,
“ஹேய் ஆரா? நீ எதுக்கு இதெல்லாம் செய்ற? நான் செர்வன்ட்கிட்ட தானே எடுத்துட்டு வர சொன்னேன்” என்றவன் எழுந்து அவள் கையிலிருந்த தட்டை வாங்க முற்பட,
“இதுல என்ன இருக்கு?” என்றவள் அங்கிருந்த மற்ற இருவருக்கும் கொடுத்துவிட்டு அவனுக்கும் கொடுக்க,
“தேங்க்ஸ்” என்றவன்,
“மீட் மை வொயிப் ஆரண்யா” என்றான் அவர்களிடம்.
“ஹலோ மேம்” என்று அவர்கள் சம்பிரதாயமாக பேச, அவர்களிடம் புன்னகைத்தவள் தேவ்வைத்தான் பார்த்திருந்தாள்.