அத்யாயம் 16:

“என்ன சொன்ன? திருப்பி சொல்லு?” என்றான் தேவ் ஆர்வமுடன்.

“ஹஹா..ஏமாந்தியா? இப்படித்தான நீ என்கிட்டே சொன்ன, அதான் நானும் சொல்லிப் பார்த்தேன்” என்று உளற,

“இப்ப கூட எப்படி தெளிவா இருக்கா பாரு” என்று முணுமுணுத்தவன் காரை ஸ்டார்ட் செய்ய, அவளோ புலம்பிக் கொண்டே வந்தாள்.

“ஹேய் நான் பறக்குறேன். நாம பிளைட்ல போறோமா?” என்று கத்த,

“கத்தாதடி” என்றவன் அவளைத் திரும்பி முறைக்க,

“இப்ப எதுக்கு முறைக்கிற? நான் என் அப்பாகிட்ட உன்னை சொல்லித் தரவா?” என்றாள்.

“இது வேறையா? அப்ப கூட உங்கப்பா கிட்ட தான் கம்ப்ளைன்ட் பண்ணனுமா?” என்ற புலம்பியவன்,

“இந்த அரைவேக்காட்டுக்காரியை வச்சு எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ?” என்று எண்ணியவனுக்கு சற்று முன் நடந்த நிகழ்வுகள் கண் முன் வர, கோபத்தில் மீண்டும் முகம் இறுகியவன், போனை எடுத்து யுவனுக்கு அழைத்தான்.

“யுவன், இப்போ பார்ட்டி நடந்த இடத்தோட புல் சிசிடிவி புட்டேஜும் எனக்கு வேணும். அதுவும் உடனே” என்றவன், யோசனையில் நெரிந்த புருவத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருக்க,

“ஹேய் ஸ்டாப் பண்ணு, ஸ்டாப் பண்ணு” என்று ஆரா அவன் தோள்களில் அடிக்க,

“என்னடி ஆச்சு?” என்றான் பதட்டத்துடன்.

“நீ என்னை எங்க கடத்திட்டு போற? சொல்லுடா எங்க கடத்திட்டு போற?” என்று மப்பில் உளற,

“நாம நம்ம வீட்டுக்கு தான் போறோம். கொஞ்ச நேரம் சைலண்ட்டா வாடி. வீட்ல போய் பேசிக்கலாம். நான் டிரைவ் பண்ண வேண்டாமா?” என்றான் தேவ்.

“பார்த்தியா நீ கோபப்படுற? எனக்கு பயமா இருக்கு” என்றவள் அழ ஆரம்பிக்க,

“மை காட்!” என்று தலையைக் கோதியவன்,

“இங்க பார் ஆரா, வீடு போற வரைக்கும் வாயைத் திறக்கக் கூடாது. அதையும் மீறி திறந்த,  அப்பறம் என் ஸ்டைல்ல உன் வாயை அடைக்க வேண்டி இருக்கும். ஓகேன்னா சொல்லு” என்றான் சிரிப்புடன்.

“நான்” என்று ஆரா மீண்டும் பேச வர,

“மூச், பேசக் கூடாதுன்னு சொன்னேன்” என்றவன், விரைவில் வீட்டை நெருங்கியிருந்தான். அவன் அன்று என்னவெல்லாமோ நினைத்து வைத்திருக்க, அனைத்தும் தலைகீழாய் நடந்து கொண்டிருந்தது.

‘மாம் வேற தூங்கியிருக்க மாட்டாங்களே?இப்போ ஆராவை இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றவனுக்கு டென்ஷன் கூட,

‘அவங்க கண்ல படாம இவளை ரூம்க்கு கடத்தியாகனும்” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

“நிஜமாவே என்னை கடத்திட்டு தான் போறியா?” என்றவள் அவனை முறைக்க,

“உன்னைய கடத்திட்டு போனா, கடத்திட்டு போறவன் தான்டி பாவம்” என்று நினைத்தவன்,

“நீ எவ்வளவு பெரிய ஆள், உன்னைக் கடத்திட்டு போக முடியுமா ஆரண்யா” என்றான்.

“எஸ்..! நான் பெரிய ஆள். அந்த பயம் இருக்கணும் உனக்கு” என்றவளின் பாவனையில் சிரிப்பு வர அடக்கிக் கொண்டான்.

வீட்டினுள் காரை நிறுத்தியவன்,

“இங்க பார் ஆரா, இப்போ நான் உன்னைத் தூக்குவேன். நீ  கண்ணை மூடிக்கனும். நான் சொல்ற வரைக்கும் கண்ணைத் திறக்கக் கூடாது ஓகே வா” என்றான் பொறுமையாய்.

“நாம கண்ணாமூச்சி விளையாட போறோமா?” என்றாள் சிரிப்புடன்.

“அது ஒன்னுதான்டி குறைச்சல்” என்று நினைத்தவன்,

“ஆமாடி என் அறிவுக் கொழுந்தே” என்றவன்,

“ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொள்ள,

“ஹேய் நான் மிதக்குறேன்” என்றபடி அவள் கையை ஆட்ட,

“கையை ஆட்டாம அமைதியா கண்ணை மூடிட்டு வரணும். இல்லைன்னா நீ அவுட்” என்றான்.

“அப்ப சரி” என்றவள் இறுகக் கண்ணை மூடிக் கொள்ள,

அவன் நினைத்ததைப் போல் ஹாலில் தான் இருந்தார் சிவகாமி. அது அவர்களை கண்காணிக்க அல்ல என்பதும், அவர் யாருக்காக அப்படி காத்திருக்கிறார் என்பதும் அவனுக்குத் தெரியும்.

“என்னாச்சுப்பா?” என்று அவர் பதறியபடி வர,

“நத்திங் மாம், டயர்டா இருக்குன்னு தூங்கிட்டா, அதான் எழுப்ப வேண்டாமேன்னு தூக்கிட்டு வந்துட்டேன். நான் ரூம்க்கு போறேன் மாம்” என்றான்.

“வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே? முகம் என்னவோ போல இருக்கு தேவ் உனக்கு” என்றார் சிவகாமி.

“டயர்டா இருக்கு மாம். வேற ஒண்ணுமில்லை” என்றவனை,

“நீ போய் ரெஸ்ட் எடு தேவ்.” என்று அவர் சொல்லவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

ஆரா ஒரு கண்ணைத் திறந்து அவனைப் பார்க்க, அவனோ அவள் இடுப்பில் கொடுத்த அழுத்தத்தில் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.

லிப்டில் ஏறி அறைக்குள் செல்லும் வரை அமைதியாக இருந்தவள்,

“கண்ணைத் திறக்கவா?” என்றாள் மீண்டும்.

“திறக்கலாம்” என்றான் சிரிப்புடன்.

“நான் தான் வின்னர்” என்றாள்.

“கண்டிப்பா நீ தான் வின்னர். எவ்ளோ பெரிய விளையாட்டு விளையாடியிருக்கோம்” என்று நக்கலாய் சிரித்தான். அவளை கட்டிலில் தூக்கிப் போட்டவன்,

“நான் என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணி வச்சிருக்க ஆரா? என்னைய விட்டு நகரக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?” என்றான் அவளை அதட்டியபடி.

“பார்த்தியா இவ்வளவு நேரம் நல்லா தான் பேசுன? இப்போ அதட்டுற? அப்போ என்னை நீ கடத்திட்டு தான் வந்திருக்க? நீ வில்லன்” என்றாள் போதையில்.

“ஆமாடி உனக்கு எப்பவுமே நான் மட்டும் தான் வில்லனா தெரிவேன்” என்று பல்லைக் கடித்தவனை கடிந்து கொண்டது அவன் மனம்.

“அவளே நிதானத்துல இல்லை. அவகிட்ட இப்போ நீ என்ன பேசுனாலும் எடுபடாது” என்று ஞாபகப் படுத்த, நிதானித்தான்.

“வா” என்றான்.