“அப்பத்தான் ஒரு நாள், அந்த பையன் இறந்துட்டதா இவளுக்கு தகவல் தெரிஞ்சிருக்கு. ரெண்டு நாள் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்தா. நாங்களும் என்ன ஏதுன்னு கேட்டுக்கலை.

அன்னைக்கு ரொம்ப நேரமா அவளைக் காணாம ஆராவைத் தேடி  போனா காயத்ரி. அங்க அவ இருந்த கோலம் இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது மாப்பிள்ளை.” என்றவர் ஒரு நிமிடம் நிறுத்த,

“என்னாச்சு?” என்றான் தேவ், பதட்டத்துடன்.

“என்னத்தை குடிச்சான்னு தெரியலை. பத்து நிமிஷம் லேட்டா பார்த்திருந்தா, ஆரா இன்னைக்கு உயிரோட இருந்திருக்க மாட்டா. எங்களையெல்லாம் தவிக்க வச்சு, ஏமாத்திட்டு போன ஒருத்தன் உயிரோட இல்லைன்னு தெரிஞ்சதும் இப்படி உயிரையும் விடப் போவாளா ஒரு பொண்ணுன்னு எனக்கு வெறுத்துப் போச்சு. பார்த்து பார்த்து வளர்த்த புள்ளைய கொஞ்சம் கண்டிச்சும் வளர்த்திருக்கணும்னு அப்போ தான் உணர்ந்தேன்.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, தேவ்வின் கரங்களோ அவன் அறியாமல் நடுங்கிக் கொண்டிருந்தது.

நடந்த உண்மைகளை கேட்டவனுக்கு, அதன் கனத்தை தாங்க முடியவில்லை. ஆழ் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை போன்று உணர்ந்தான். அவன் எதையோ நினைத்து, எதையோ எதிர்பார்த்து வந்திருக்க, அங்கு முழுக்க முழுக்க குற்றவாளி கூண்டில் அவன் மட்டுமே நின்று கொண்டிருந்தான்.

“சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்தா ஆரா. அதுக்கப்பறம் நாங்க அவ கூட பேச முயற்சி செய்தோம். ஆனா, அவ எங்களையெல்லாம் ஒதுக்க ஆரம்பிச்சா. அவளுக்குள்ளயே ஒடுங்க ஆரம்பிச்சா. கேட்ட எல்லார் கிட்டையும் புருஷன் செத்துட்டதா சொன்னா. நாங்க ஏதாவது சொல்லப் போனா, ‘என்னை உயிரோடவாவது இருக்க விடுவிங்கன்னு நம்புறேன்னு’ ஒரே வார்த்தையில எங்க எல்லாரையும் கொன்னுட்டா” என்றார் ரவிக் குமார்.

“நீங்க அந்த பையனைப் பத்தி விசாரிக்கலையா அங்கிள்? ஐ மீன் எப்படி இறந்தான்? அதை ஆராகிட்ட சொன்னது யார்ன்னு?” என்றான் கமரிய குரலில்.

“நானும் விசாரிச்சேன் தம்பி. அந்த பையனைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியலை. ஆரா பிரண்ட் கணேஷ்க்கு மட்டும் தான் தெரியும்னு நினைக்கிறேன். ஆனா, அவனையும் அம்மா கோபத்துல அடிச்சே விரட்டிட்டாங்க” என்றார் ரவி.

“கணேஷை ஏன் அடிச்சு விரட்டனும்?” என்றான் புரியாமல்.

“ஆரா பாய்ஸன் சாப்பிட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ கணேஷ் பார்க்க வந்தான்” என்றார் ரவி.

“இங்க எதுக்குடா வந்த? அவ உயிரோட இருக்காளா இல்லை செத்துட்டாளான்னு பார்க்க வந்தியா?” என்று மித்ரா கோபத்தில் கத்த, அனைவரும் புரியாமல் பார்த்தனர்.

“அங்கிள், ஆன்ட்டி.. இவன் தான் எல்லாத்துக்கும் காரணம். நான் அப்பவே அந்த ஜெய்யை நம்ப வேண்ட்மானு சொன்னேன். இவன் தான் அவளை உசுப்பேத்தி விட்டு லவ் பண்ண வச்சது. அவங்க காதலுக்கு தூது போனது எல்லாமே இவன் தான். இன்னைக்கு ஆரா நிலைமைக்கு காரணம் இவன் மட்டும் தான்” என்று மித்ரா ஆங்காரமாய் சொல்ல, அவளை வெறித்தான் கணேஷ்.

“அடப்பாவி! கூடவே இருந்து இப்படி ஒரு காரியத்தை பண்ண எப்படி மனசு வந்தது உனக்கு. அவளை இப்படி படுக்க வைக்கத்தான் இந்த வேலையெல்லாம் செஞ்சியா?” என்று பாட்டி அவனை கன்னத்தில் அறைய,

“பாட்டிமா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க” என்றான் கணேஷ் பாவமான குரலில்.

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் கணேஷ். உன்னையும் என் வீட்ல ஒரு ஆளாத்தான பார்த்தேன். இப்படி பண்ண எப்படி மனசு வந்ததுப்பா. உங்களையெல்லாம் நம்பித்தான அவளை உங்க கூட அனுப்பினேன்” என்று ரவி பேச,

“அங்கிள் நீங்களாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்றான்.

“வெளிய போடா முதல்ல. இன்னொரு தடவை இந்த வீட்டுக்குள்ள வந்த நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.” என்று சுலோச்சனா அவனை விரட்டி விட,

அவனின் அருகில் வந்த ஆதிரா,

“எங்க வீட்டு ஆளுங்க எப்பவும் இப்படித்தான். தப்பு செஞ்சவளை விட்டுட்டு, கூட இருந்தவன், பக்கத்துல இருந்தவன்னு எல்லாரையும் காரணம் சொல்லுவாங்க. நீங்க கிளம்புங்க கணேஷ். அவளுக்கு ஒண்ணுமில்லை. உயிருக்கு ஆபத்தில்லைன்னு சொல்லிட்டாங்க. நல்லாத்தான் இருக்கா” என்றாள் ஆதிரா.

ஆதிராவைப் பார்த்தவன், மித்ராவை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இது தான் நடந்தது மாப்பிள்ளை என்று ரவி சொல்லி முடிக்க, தேவ்வின் முகம் வெறுமையாய் இருந்தது. அவனின் முகத்தைப் பார்த்தவருக்கு பயம் வர,

“நீங்க தப்பா எதுவும் நினைக்கலையே மாப்பிள்ளை” என்றார் வேகமாய்.

“அங்கிள் பிளீஸ் ! ஆரா என்னோட உயிர். கண்டிப்பா அவளை நான் அப்படி நினைக்க மாட்டேன். நீங்க இனி அவளை பத்தியோ அவ வாழ்க்கையைப் பத்தியோ வொர்ரி பண்ணிக்காதிங்க. நான் இருக்கேன் அங்கிள்” என்றவனுக்கு ஏனோ அந்த நேரத்தில் உண்மையை சொல்லும் தைரியம் வரவில்லை. இப்போது சொன்னாலும் அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை. யாரோ வேண்டுமென்றே இருவருக்கும் இடையில் விளையாடி இருப்பது அவனுக்குத் தெளிவாய் தெரிந்தது. அந்த துரோகி யாரென்று தான் தெரியவில்லை.

“அப்போ நான் கிளம்பட்டுமா மாப்பிள்ளை” என்றார் ரவி.

“நானும் கிளம்புறேன் அங்கிள்.” என்றான்.

“நம்ம வீட்டுக்கு எப்போ வர்றீங்க?” என்றார்.

“ஒன் வீக் ஆகட்டும் அங்கிள். நான் ஒன் மந்த் ப்ரீ தான். கண்டிப்பா ஆராவோட வர்றேன்” என்றான். அவனுக்கோ உடனே சென்று ஆராவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.