“சொல்ல முடியாத சூழ்நிலைப்பா. பிளீஸ்ப்பா எனக்கு இப்போ மேரேஜ் வேண்டவே வேண்டாம். இதை அவங்க முன்னாடி சொல்லக் கூடாதுன்னு தான் உங்ககிட்ட இப்பவே சொல்றேன்” என்றாள்.
“சரி பையன் என்ன பண்றான்?” என்றார்.
இதற்காகத் தானே ஆரா பயந்தது. என்னவென்று சொல்வாள் அவரிடம் பதிலை. பேசத் தயங்கி நின்றவளைப் பார்த்தவருக்கு ஏதோ புலப்பட துவங்கியது.
“நீ சொன்ன அந்த கண்டக்டர் கதைல வர்ற பொண்ணு நீயாம்மா?” என்றார் வேதனை நிறைந்த குரலுடன்.
“ஆமாம்” என்பதைப் போல் அவள் தலை ஆட, அதிர்ந்து அப்படியே சமைந்து விட்டார் ரவிக் குமார்.
“என்ன ரவி என்னென்னமோ சொல்ற? எந்த பையன்? அதுவும் கண்டக்டர்ன்னு சொல்ற? எனக்கு எதுவுமே புரியலை” என்று சுலோச்சனா நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.
“சரி அந்த பையனை வர சொல்லு” என்றார் ரவி.
“ரவி என்னப்பா சொல்ற? அவ தான் ஏதோ புத்தி கெட்டுப் போய் இப்படி சொல்றான்னா, நீயும் அவனை வர சொல்லி சொல்ற?” என்று சுலோச்சனா குரலை உயர்த்த,
“அம்மா அமைதியா இருங்க. இந்த ஒரு வருஷம் அவ எப்படி இருந்தான்னு பார்த்திங்க தானே. காசு பணம் எல்லாம் முக்கியம் இல்லை. அதான் நம்மகிட்ட இருக்கே. நீ அந்த பையனை வர சொல்லு ஆரா” என்றார் மீண்டும்.
அவள் அமைதியாக நிற்க,
“என்னாச்சு ஏன் பேசாம இருக்கம்மா?” என்றார் புரியாமல்.
“எப்படி பேசுவா அங்கிள்! அவன் தான் எங்க இருக்கான்னே தெரியலையே? வரேன்னுட்டு போனவன் வரவே இல்லை. ஒரு போன் இல்லை, மெசேஜ் இல்லை.” என்றாள் மித்ரா வேகமாய்.
“மித்ரா சொல்றது உண்மையாடி? ஏமாத்திட்டு போனவனுக்காகத் தான் இப்படி தவம் கிடக்குறியா? அப்படி என்னத்தைக் கண்டு மயங்குன? அம்மா சொல்றதை கேளு ஆரா” என்று காயத்ரி அழுது கொண்டே அவளை அடிக்க ஆரம்பிக்க, அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அப்படியே நின்றாள் ஆரண்யா.
“அம்மா என்னோட ஜெய் கண்டிப்பா திரும்ப வருவாரு” என்றாள் தீர்க்கமாய்.
“சரி அவன் நம்பரையாவது குடும்மா. நான் விசாரிக்கிறேன்” என்றார் ரவி.
“நம்பர் நாட் ரீச்சபிள் அங்கிள்” என்றாள் மித்ரா.
“நல்லா இருக்கு ரவி நீ பேசுறது? சின்ன பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க. ஏதோ வயசுக் கோளாறுல அப்படி நடந்திருப்பா. நீயும் அவனைப் பத்தி விசாரிக்கிறேன்னு சொல்ற. அதான் அவனே எங்க இருக்கான்னு தெரியலையே. பேசாம போய் கிளம்புறதுக்கு வழியைப் பாரு ஆரா” என்றார் சுலோச்சனா.
“எனக்கு கொஞ்ச நாள் டைம் குடுங்கப்பா பிளீஸ்” என்றாள் ஆரா, கலங்கிய கண்களுடன்.
“உனக்கு புரியுதா இல்லையா ஆராம்மா. லவ் பண்றவன் இப்படி சொல்லாம கொள்ளாம போவானா? அவன் உன்னை ஏமாத்தியிருக்கான். இப்படி விவரம் இல்லாம இருக்கியேன்னு உன்மேல அனுதாபப் படுறதா இல்லை, இப்படி மெண்டல்த்தனமா இருக்கியேன்னு ஆத்திரப்படுறதா?” என்றார் காயத்ரி.
“என்னமோ இவளுக்கு உலகமே தெரியாதுன்னு சொன்னிங்க? பார்த்திங்கல்ல உங்க அருமை பேத்தி பண்ணியிருக்கிற காரியத்தை. நீங்க அந்தஸ்து பேசிட்டு இருக்கீங்க. ஆனா, உங்க செல்ல பேத்தி ஆப்டர் ஆல் ஒரு கண்டக்டரை லவ் பண்ணிட்டு வந்திருக்கா. அதுவும் உருப்படியா இருக்கான்னா இல்லை. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு” என்றாள் ஆதிரா கிண்டலாய்.
வெளியே கார் சத்தம் கேட்க,
“அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல. நீ புடவையை மாத்து ஆரா” என்று காயத்ரி கண்ணைத் துடைத்துக் கொண்டு சொல்ல, சிலையாய் நின்றாள் ஆரண்யா.
ரவியும், சுலோச்சனாவும் அவர்களை வரவேற்க செல்ல, சமைந்து நின்றவளை கேள்வியாய் பார்த்தாள் மித்ரா.
“கிளம்பு ஆரா” என்றாள் வேண்டுமென்றே.
ஆரா அமைதியாய் புடவையை மாற்றிக் கொண்டு தயாராக, அவளை யோசனையுடன் பார்த்தாள் மித்ரா.
“எதுக்கு மித்ரா இப்படி பார்க்குற?” என்றாள்.
“இன்னேர வரைக்கும் மாட்டேன்னு சொன்னவ இப்ப இப்படி கிளம்புறாளேன்னு பார்க்குறேன்” என்றாள் மித்ரா.
“வந்தவங்க முன்னாடி வேற என்ன செய்ய முடியும். நான் என் அப்பாகிட்ட சொல்லிட்டேன் அவர் பார்த்துப்பார்” என்றாள் நம்பிக்கையாய்.
“அதையும் பார்க்கலாம்” என்று நினைத்துக் கொண்டாள் மித்ரா.
‘தனக்கு பிடிக்காததை செய்ய மாட்டார்கள் ‘ என்ற நம்பிக்கை ஆரண்யாவிற்கு. நடந்ததோ எதிர்மறையாய் இருந்தது. வந்தவர்களுக்கு அவளை பிடித்துப் போய்விட, மாப்பிள்ளை பையனோ அவளை போட்டோவில் பார்த்து பிடித்தே பெண் பார்க்க வந்திருந்தான்.
“அப்பறம் என்ன? எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இன்னைக்கே மோதிரத்தை போட்டு உறுதி பண்ணிக்கலாம். கல்யாணத் தேதியையும் குறிச்சிடலாம்” என்று மாப்பிள்ளை வீட்டினர் பேச, சுலோச்சனாவும் அதற்கு சம்மதம் என்பதைப் போல் பேசிக் கொண்டிருந்தார். ஆராவிற்கு தான் மயக்கமே வரும் போல் இருந்தது.
“இப்ப என்ன சொல்ற?” என்பதைப் போல் மித்ரா பார்க்க, ஆராவின் முகம் இறுகியது.
“என்னடி அமைதியா இருக்க?” என்றாள்.
“என்ன பேச சொல்ற? அவங்க போகட்டும் பேசிக்கலாம்” என்றாள் ஆரா நிதானமாக.
“அவங்க நிச்சயம் பண்ற வரைக்கும் பேசி, கல்யாணத் தேதி குறிக்க நாள் பார்க்குற வரைக்கும் பேசிட்டு இருக்காங்க. நீ சாவகாசமா பதில் சொல்ற?” என்றாள் மித்ரா.
“இப்ப என்ன பிரச்சனை மித்ரா உனக்கு. நீதான ஜெய் வேண்டாம், வீட்ல பார்க்குற பையனை கட்டிக்க சொன்ன? இப்போ நீயே இதை நிறுத்த சொல்ற மாதிரி பேசிட்டு இருக்க?” என்றாள் ஆரா.
ஆராவின் கேள்வியில் முகத்தை மாற்றிய மித்ரா,
“நான் அப்படி நினைப்பேனா ஆரா. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம். நீ மனசு வருத்தப்படுவியேன்னு தான் அப்படி சொன்னேன். மத்தபடி நீ இப்படி மாறியிருக்கிறது எனக்கு சந்தோசம் தான்” என்றாள்.
“நான் மாறியிருக்கேன்னு நீ பார்த்தியா?” என்றாள்.
“இல்லையா பின்னே! எங்க ஜெய்யை நினைச்சு உன் வாழ்க்கையை வீணாக்கிடுவியோன்னு பயந்தேன்” என்று மீண்டும் அவனை ஞாபகப் படுத்தினாள் மித்ரா.
‘ஜெய்’ என்ற பெயரைக் கேட்டவுடன், அனைத்து மன உறுதிகளும் உடைய, கலங்கினாள் ஆரா. நேராக ஹாலிற்கு சென்றவள்,
“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்றாள் பட்டென்று. அனைவரும் அதிர்ந்து அவளைப் பார்க்க, பாட்டியோ,
“உள்ள போ ஆரா” என்றார் அதட்டலாய்.
“உங்க விஷயத்தை அங்கிள் இப்ப தான் என்கிட்டே சொன்னார் ஆரண்யா. எனக்கு பிரச்சனை இல்லை. எல்லாருக்குமே பர்ஸ்ட் லவ் கண்டிப்பா இருக்கும்” என்றான் அந்த பையன் பெருந்தன்மையாக.
“இல்லை, லவ் மட்டுமில்லை. எனக்கு அவர்கூட கல்யாணமே நடந்திடுச்சு. இன்பேக்ட் நான் அவர் மனைவியாவே வாழ ஆரம்பிச்சுட்டேன். சோ பிளீஸ் என்னை மன்னிச்சிடுங்க. “ என்றவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். மித்ராவின் முகத்தில் புன்னகை வழிய, அதை பிறர் அறியாமல் மறைத்துக் கொண்டாள்.
“என்ன ரவி இதெல்லாம்?” என்றவர்கள் அடுத்து ஒரு நிமிடம் கூட அங்கு இருக்கவில்லை.
“அன்னைக்குத்தான் முதல் முறையா ஆராவால நான் தலைகுனிஞ்சு நின்னேன் மாப்பிள்ளை” என்ற ரவிக் குமாரை தேற்ற தேவ் வரவில்லை. அவன்தான் ஏற்கனவே நிலைகுலைந்திருந்தானே!!
வெளி வரத் துடித்த கண்ணீரை அவர் அறியாமல் துடைத்தவன்,
“அப்பறம் ஏன் உங்க பொண்ணு விடோன்னு சொல்லணும்?” என்றான் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியுடன்.
“நடந்த அந்த பிரச்னைக்கு அப்பறம் வீட்ல நாங்க யாரும் அவகூட சரியா பேசலை மாப்பிள்ளை. அம்மா அவகூட பேசுறதையே நிறுத்திட்டாங்க. ஒருத்தன் போட்ட செயினை தாலின்னு சொல்லிட்டு இருந்த அவ முட்டாளா? இல்லை அவளை இப்படி வளர்த்த நாங்க முட்டாளான்னு தெரியாம, பேசுறதையே நிறுத்திட்டேன். நிறைய நாள் அவகூட பேசச் சொல்லி என் பொண்ணு ரொம்ப கெஞ்சுனா மாப்பிள்ளை. நான் பேசவேயில்லை. அதுக்கப்பறம் அவ உண்டு, அவ வேலை உண்டுன்னு இருக்க பழகிட்டா.” என்று அவர் நிறுத்த, அவரை கேள்வியாய் பார்த்தான் ஜெய்,