ஜெய் சென்று ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தது. ஆராவால் அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனும் அதற்கு பிறகு அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அவனின் நினைவில் ஆரா தான் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போனாள். அவள் இப்படி இருப்பதைப் பார்த்த வீட்டினருக்கும் ஒன்றும் புரியவில்லை. எவ்வளவு முயன்றும் அவர்களால் அவள் வாயிலிருந்து ஒன்றையும் வாங்க முடியவில்லை. ஏனோ அந்த பேருந்தைக் கடக்கும் போதெல்லாம் ஜெய்யின் ஞாபகம் அவள் மனதை பாரமாக்கிச் சென்று விடும்.
ரவி அவளுக்காக திருச்சியில் ஒரு பொட்டிக்கை வைத்துக் கொடுத்திருக்க, சிறிது சிறிதாக அவள் கவனம் அதில் செல்ல ஆரம்பித்தது. மித்ராவையும் துணைக்கு உடன் வைத்துக் கொண்டாள். கணேஷ் அவளிடம் வந்து எவ்வளவு தான் பேச முயன்றாலும், ஜெய் பற்றிய பேச்சை அறவே தவிர்த்து விடுவாள். மித்ராவும் சில முறை அவளிடம் பேச முயற்சி செய்ய, அவளின் வெறுமையான பார்வையே அவளுக்கு பதில் சொல்லிவிடும்.
ஆராவிடம் பேச முயற்சி செய்து முடியாமல் போன கணேஷ், ஜெய்யிடம் பேச முயற்சி செய்ய, அவனுக்கு கிடைத்த பதில் என்னவோ பூஜ்ஜியம் தான். ஆராவிற்கு தான் அவன் யாரென்று தெரியாது. ஆனால் கணேஷுக்கு தெரியுமே. தன் தோழிக்காக அவனைத் தேடி நேரிலும் சென்றான் கணேஷ். ஆனால் அங்கும் ஜெய் இல்லை. அவனுக்கு கிடைத்த பதில் என்னவோ வெளிநாடு சென்றிருக்கிறான் என்ற பதில் தான். அந்த பதில் கூட அவ்வளவு எளிதில் அந்த சாதாரண கணேஷிற்கு கிடைத்துவிடவில்லை.
இப்போதெல்லாம் ஆரா நிறைய மாறியிருந்தாள். ஏற்கனவே அவள் அமைதி தான். இப்போது இன்னும் அமைதியாகிப் போனாள். சிரிப்பில்லை. முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஆனால் வேலை என்று வந்தால் முழு கவனத்துடன் லயித்துவிடுவாள். ஜெய் மீதான காதல் தான் அவளை முட்டாளாகவும் வைத்திருந்தது. அதே காதல் தான் இப்போது முன்னேறவும் வைத்துக் கொண்டிருந்தது.அவனின் நினைவுகளை மறக்க அவள் கையில் எடுத்த ஆயுதம் தான் அவள் வேலை. புதிதாக நிறைய கற்றுக் கொண்டாள். ஆடைகள் அவள் கை வண்ணத்தில் மிளிர, கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கான பெயரும் கிடைக்க ஆரம்பித்திருந்தது. தனித்துவமான டிசைன்கள் வாடிக்கையாளர்களை கவர, தொழிலும் வளர ஆரம்பித்தது. அவன் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறான்,தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு, அடுத்த பிரச்சனை பாட்டியின் ரூபத்தில் வந்தது.
அன்று கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை அழைத்த சுலோச்சனா,
“இன்னைக்கு சீக்கிரம் வந்துடு ஆராம்மா. இல்லைன்னா கடைக்கு போக வேண்டாம்” என்றார்.
“ஏன் பாட்டி?” என்றாள் புரியாமல்.
“இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க” என்றார். அதுவரை சாதரணமாக இருந்தவளின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் ரவிக் குமார்.
“இப்ப என்ன பாட்டி திடீர்ன்னு?” என்றாள் திணறியபடி.
“நீயும் படிச்சு முடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு. நீ ஆசைப்பட்டன்னு ரவி கடையும் வச்சுக் கொடுத்தான். அடுத்து நல்ல சம்பந்தம் வந்தா பேசி முடிக்க வேண்டியது தான்னு நினைச்சுட்டு இருந்தேன். சரியா அந்த நேரத்துக்கு இந்த சம்பந்தம் வந்திருக்கு. மாப்பிள்ளை வீடு நமக்கு நெருங்கின சொந்தம் தான். விரும்பி கேட்குறாங்க. உனக்கும் பிடிச்சிருந்தா கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்க்குறோம்.” என்றார் சுலோச்சனா.
“இப்ப என்ன அவசரம் பாட்டி? நான் பொட்டிக்கை இன்னும் விரிவு படுத்தனும். எனக்கு நிறைய ஐடியாஸ் இருக்கு. அதையெல்லாம் இம்ப்ளிமென்ட் பண்ணனும். எனக்கு இப்போ மேரேஜ் எல்லாம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்” என்றாள் ஆரா.
அவள் குரலில் ஏதோ சோகமும், விலகல் தன்மையும் இருப்பதைப் போன்று தோன்றியது ரவிக்கு.
“நீ நினைக்கிறதை தாராளமா பண்ணு ஆரா. பையன் திருச்சி தான். அவங்களும் பிஸ்னஸ் தான் பண்றாங்க. உன்னோட கெரியருக்கு எந்த டிஸ்டர்பன்சும் வராதுமா” என்றார் ரவி.
“இல்லப்பா..! எனக்கு இப்போதைக்கு மேரேஜ் வேண்டாம்” என்றாள்.
“நான் வர சொல்லிட்டேன் ஆரா. நெருங்கின சொந்தம் வேற. சட்டுன்னு மாட்டேன்னு சொல்ல முடியலை. அவங்க வரட்டும். உனக்கு கண்டிப்பா பையனை பிடிக்கும். உனக்குப் பிடிக்கலைன்னா வேற இடம் பார்க்கலாம்.” என்றார் சுலோச்சனா.
கடைக்கு வந்து எப்போதும் செய்யும் எந்த வேலையையும் செய்யாமல், தலை கவிழ்ந்து படுத்திருந்தவளைப் பார்த்த மித்ரா முகம் யோசனைக்குத் தாவியது.
“என்னாச்சு ஆரா?” என்றாள் மெதுவாய்.
நிமிர்ந்தவளின் விழிகள் அழுததில் வீங்கியிருக்க,
“என்னாச்சு ஆரா? ஏன் இப்படி கண்ணெல்லாம் வீங்கியிருக்கு?” என்றாள் மித்ரா பதட்டத்துடன்.
“இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்கன்னு பாட்டி சொன்னாங்க” என்றாள் ஆரா.
அவளின் பதிலில் ஒரு நிமிடம் மித்ராவின் முகம் அதிர்ந்து உள்வாங்கியது. “பொண்ணு தானடி பார்க்க வராங்க. அதுக்கு ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?” என்றாள் மித்ரா புரியாமல்.
அவளைப் பார்த்து விரக்தியாய் ஒரு சிரிப்பு சிரித்தவள்,
“வாய் வார்த்தைக்கு தான் என் பாட்டி அப்படி சொல்லுவாங்க. அவங்க உறுதி பண்ணாம எந்த விஷயத்துலையும் இறங்க மாட்டாங்க” என்றாள் ஆரா.
“இப்போ என்ன பண்றதா இருக்க?” என்றாள் மித்ரா.
“ஜெய்யைத் தவிர யாரையும் என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது” என்றாள் ஆரா. பேச்சில் ஒரு பிடிவாதம் தெரிந்தது.
“லூசாடி நீ! அவன் யாருன்னே தெரியலை. எங்க போனான்? எங்க இருக்கான்? என்ன ஆனான்? இப்படி எதுவுமே தெரியாம அவன் இன்னமும் வருவான்னு நம்பிட்டு இருக்கியே? இது உனக்கே பைத்தியக்காரத்தனமா தெரியலை” என்றாள் மித்ரா.
“அதுக்காக பாட்டி சொல்ற பையனை கட்டிட்டு போக சொல்றியா?” என்றாள் கோபமாய்.
“அதுவும் வேண்டாம் தான். பேசாம அவங்க முன்னாடி நீ இப்படி ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லிடு” என்றாள் மித்ரா.
“அவங்க முன்னாடி எப்படி சொல்ல முடியும். எங்ககிட்ட சொல்லியிருக்கலாமேன்னு என் அப்பா கேட்பார். நான் என்னன்னு சொல்லுவேன்?” என்றாள் ஆரா.
“அப்போ இப்பவே உங்கப்பாக்கு கால் பண்ணி உண்மையை சொல்லிடு. பிராப்ளம் சால்வ்” என்றாள்.
“ஜெய் பத்தி கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்?” என்றவளுக்கு கண்கள் கலங்க,
“சொல்லேன்..! நான் இப்படி யாருன்னே தெரியாம ஒருத்தனை லவ் பண்ணேன். அவன் என்னை ஏமாத்திட்டு ஓடிட்டான்னு” என்றாள் மித்ரா இளக்காரமாய்.
“ஜெய் பத்தி தப்பா பேசாத மித்ரா. கண்டிப்பா அவர் வருவார்.” என்றாள் உறுதியாக.
“என்னவோ பண்ணு. ஆனா, இந்த மனநிலையோட கல்யாணம் மட்டும் பண்ணிடாத” என்ற மித்ரா ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தாள்.
ஆரா அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“நான் வேணும்னா இரு ஐடியா சொல்லவா?” என்றாள் மித்ரா யோசனையுடன்.
“என்ன?” என்றாள் ஆரா.
“நீ இந்த பையனை பிடிக்கலைன்னு சொன்னாலும் அடுத்து வேற வரன் பார்ப்பாங்க. அதானால அவங்க வரட்டும். அவங்க எல்லார் முன்னாடியும் வச்சு, உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிடு” என்றாள் மித்ரா.
“அது பொய்யெல்லாம் இல்லை. என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கும் ஜெய்க்கும் கல்யாணம் ஆகிடுச்சு” என்றாள் ஆரா தீவிரமான உணர்வு கொண்ட முகத்துடன்.
“எப்ப பார்த்தாலும் ஜெய்,ஜெய்ன்னு அவன் புராணமே பாடிட்டு இருக்க ஆரா. எனக்கு எரிச்சலா வருது. அப்படி என்னத்தைக் கண்டு தான் மயங்குன?” என்று கோபமாக கத்தினாள் மித்ரா.
“என்னாச்சு மித்ரா? இப்போ நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?” என்றாள் ஆரா புரியாமல்.
ஆராவின் கேள்வியில் நிதானத்திற்கு வந்த மித்ரா,
“அப்பறம் என்ன ஆரா? சும்மா விட்டுட்டு போனவனைப் பத்தி பேசிட்டே இருந்தா கோபம் வராதா?” என்றவள்,
“நான் சொன்ன ஐடியா தான் பெஸ்ட். இதை விட்டா வேற ஆப்ஷன் இல்லை.” என்றாள்.
“அவங்க முன்னாடி சொன்னா எங்க வீட்ல இருக்கவங்களுக்கு தான் அசிங்கம். என் அப்பாக்கு தான் அவமானம். வர்றவங்க எங்க நெருங்குன சொந்தம் வேற. கண்டிப்பா இப்படி ஒரு அவமானத்தை நான் எங்க அப்பாவுக்கு தேடித் தர மாட்டேன்” என்றாள் ஆரா.
“காதலிக்கிறப்போ இந்த அறிவு எல்லாம் எங்க போயிருந்துச்சு ஆரா?” என்றாள் நக்கலாய்.
“மித்ரா பிளீஸ்..! நானே என்ன பண்றதுன்னு புரியாம இருக்கேன். என் அப்பாவுக்கு தெரியாம, குடும்பத்தை ஏமாத்திட்டு ஜெய் கூட போகணும்னு நான் நினைச்சதே இல்லை. நீ என்னை என்கிட்டையே தப்பா போட்ரேட் பண்ற மாதிரி இருக்கு” என்றாள் ஆரா.
“உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன் ஆரா. இதை விட்டா வேற ஆப்ஷன் இல்லை. நான் சொன்ன மாதிரி சொல்லு. வர்றவங்க உங்க ரிலேட்டிவ்ஸ் வேற. எப்படியும் விஷயம் தீயா பரவும். அடுத்து யாரும் உன்னை பொண்ணு கேட்டு வரவே யோசிப்பாங்க. நீயும் அடுத்து யாரு வருவாங்கன்னு கவலை இல்லாம இருக்கலாம்” என்றாள் மித்ரா, அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.