Advertisement

அதியமான் கார்த்தி இருவரும் வந்தனர். அதியமானுக்கு, கார்த்திக் சொன்னதை கேட்டு.. அதிர்ச்சி.’ கண்ணன் அப்படி செய்தாரா.. அப்படி என்ன பிரச்சனை..’ என நூறுமுறை கேட்டார்.. தன் மகனை. பாவம் அவனுக்கு என்ன தெரியும்.. அவனும் பொறுமையாக பேசிக் கொண்டே அழைத்து வந்தான் கண்ணன் வீட்டிற்கு.

இங்கே அளவான கூட்டம் உள்ளூரில் எல்லோரும் கூடி இருந்தனர்.. கட்சியின் ஆட்கள் மாநகரிலிருந்து வரவிருப்பதால்.. காத்துக் கொண்டிருந்தனர்.

அரசு நீலகண்டன் இருவரும் ரஞ்சனியை மருத்துவமனையில் பார்த்ததோடு சரி அதன்பின், அவள் காணவில்லை. 

அவளுக்கு உடல்நிலை சரியில்லை.. ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டு ஒரு அறையில் அமர வைத்திருந்தனர். அவளுக்கு இங்கிருக்க விருப்பமில்லை.. ஆனால், அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. மனமும் உடலும் சோர்ந்து போகிற்று… துக்கம் அவளை ஆட்கொள்ள.. அமைதியாக அமர்ந்துக் கொண்டாள், அந்த அறையில்.

மாதவன், அவன்தான் எல்லாவற்றுக்கும் முன் நின்றான்.. கட்சி ஆட்கள்.. ஊர் மக்கள் எல்லாம் அவனை சார்ந்தே இருந்தது.. எல்லாம் அவருக்கு தெரியும்தான் ஆனால், எப்படி இப்படி அலட்டாமல் நிற்கிறான் என புரியவில்லை அவருக்கு. ம்.. கண்ணனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தவில்லை.. மாதவன், அரசு இதை கவனித்துக் கொண்டே இருந்தார்.

ஒருமுடிவோடு அமர்ந்திருந்தார்.. ‘நண்பன் என்னை நம்பி.. தன் பெண்ணின் வாழ்வை.. நீலகண்டன் கையில் கொடுத்தான்.. மாதவனை நம்பவில்லை’ என அவரின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. 

கட்சியின் முக்கிய நபர்கள் வந்தனர் அந்த இடம் பரபரப்பானது. அவர்களோடு ஒரு குடும்பம் வந்தது.. அதில் ஒரு ஆள்.. மாதவன் அருகில் வந்து நின்றுக் கொண்டான்.. மாதவன் கண் கலங்கும் போது.. ஆறுதலாக அவனை பற்றிக் கொண்டான்.

சற்று நேரத்தில்.. ரஞ்சனியை அழைத்து வந்தனர். அவளுக்கு, இதெல்லாம் யார் என தெரியாது.. தன்போல அழுதுக் கொண்டே நின்றாள். 

கட்சியின் தலைமையின் கீழ் வந்த எல்லோரும் கிளம்பினர். அந்த குடும்பம் மட்டும்  இங்கேயே இருந்துக் கொண்டது.

கண்ணனின் இறுதியாத்திரை தொடங்க ஆயுத்தமானது.

எல்லோரும் சடங்குகளை செய்துக் கொண்டிருந்தனர்.. நீலகண்டனை எல்லோருக்கும் அறிமுகம் செய்து.. அவனையும் சடங்குகளில் பங்குகொள்ள செய்தார் தமிழரசு.

எல்லாம் முடிந்து தமிழரசு “எல்லோரும் மன்னிக்கணும்.. இப்போது இதை பேச கூடாது..” என ஆரம்பித்தார். ரகுவிற்கு எதோ புரிவது போல இருந்தது.

ரகு, மாதவன் அருகில் சென்று நின்று காதை கடித்தான்.. முன்பே, மாதவனிடம் ‘ரஞ்சனியை, நீலகண்டன் கையில் கொடுத்தார்ன்னு சொல்றாரு இவர்..’ என சொல்லியிருந்தான். “இப்போது அதைதான் கூட்டத்திடம் சொல்லுவார்.. நீ போ..” என்றான் ரகு.

மாதவன் “என்ன சர்.. இப்போ என்ன சர்.. என் அப்பா பாவம் சர்.. அவரை நிம்மதியா விடுங்க” என ஓய்ந்த குரலில் சொல்ல.. கூட்டம் கொஞ்சம் ஏசியது அரசுவை.

அரசு “ஆமாங்க.. அவன்தான், அந்த நேரத்தில் இதோ.. அவனோட தங்கச்சி பையனுக்கு, தன் பெண்ணை கொடுத்திட்டுதான் கண் மூடினான்.. அதுக்கு நானும்.. இன்னொருவரும் சாட்சி.. இது ரகுவிற்கும் தெரியும்” என்றார் தழுதழுத்த குரலில்.. 

கூட்டம் ஸ்தம்பித்தது. சற்று நேரத்தில் சின்ன சலசலப்பு.. பெரிதாக ஆட்கள் யாரும் இல்லை.. கட்சியில் மாதவனின் ஆட்கள்.. ஊர் பெரியவர்கள் அவ்வளவுதான். பெண்கள் என்றால்.. குடும்ப உறுப்பினர்களும்.. இப்போது வந்த ஒரு குடும்பத்தின் பெண்ணும்தான் இருந்தனர். அந்த சின்ன அளவினால கூட்டம் கிசுகிசுக்க தொடங்கியது.

மாதவன் “ஏன் சர் நீங்க வேற.. போங்க சர், அதான் சொத்தை நாங்க வாங்கிக்கிறோம்ன்னு சொல்லிட்டோமே.. இன்னும் என்னவாம் அவருக்கு.. என் தங்கச்சியை எதற்கு இதில் இழுக்கிறீர்கள்..” என நீலகண்டனை பார்த்து ஒரு முறைப்பை பரிசாக தந்துவிட்டு.. அரசுவை பார்த்தான் மாதவன்..

நீலகண்டன், கண்ணின் கால்மாட்டில் நின்றுக் கொண்டிருந்தவன் மாதவனின் எதிரில்.. கண்ணின் தலைமாட்டில் வந்து நின்றான்.. “யார் சொத்தை யார் வாங்குறது.. ஒழுங்கா உண்மையை சொன்னால்.. அமைதியாக போயிடுவேன்.. இல்லை..” என இறுகிய குரலில் கேட்கவும்.. கூட்டம் அமைதியானது.

ரகு “சரிப்பா.. அப்புறம் பேசலாம்” என நடப்பதை கலைக்க நினைத்தார்.

நீலகண்டன் விடவில்லை “யாரோட சொத்து அந்த கட்சி ஆபீஸ்” என்றான் எல்லோர் எதிரிலும்.. அவனுக்கு, நானும் உரிமைப்பட்டவன் என்பதை சொல்ல வேண்டிய சூழல்.. எனவே, அமைதியாக கேட்டான்.

ரகு, எதோ பேச வர.. நீலகண்டன் முறைத்தான் ரகுவை.

மாதவன் “சரிப்பா.. என் அப்பாவினதும்.. உன் அம்மாவினதும்தான்.. மத்தத அப்புறம் பேசலாம்” என்றான் பல்லைகடித்த குரலில்.

நீலகண்டன் “ம்..” என அழுத்தமாக ஒரு தலையசைப்பை மாதவனை பார்த்துக் கொடுத்தான். ஆனால், மாதவன் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக நின்றான். ஆனால், உள்ளுக்குள் அத்தனை கோவம் அவனுக்கு. அரசியல்வாதி அல்லவா.. இந்த சூழல் தனக்கானது இல்லை என மாதவன் புரிந்துக் கொண்டான். எனவே, அரசுவை பார்த்து “சரிங்க.. நாங்க குடும்ப விஷயத்தை அப்புறம் பேசிக்கிறோம்.. இப்போ என் அப்பாவின் காரியங்களை நல்ல விதமாக நடக்க விடுங்கள்” என ஒரு கும்பிடு போட்டான்.

கட்சி ஆட்கள்.. ஊர் மக்கள் எல்லோரும் அதிருப்தியாய் அரசுவை பார்த்தனர்.

நீலகண்டன் சத்தமாக.. “அங்கிள், நீங்க சொன்னது உண்மை. ஆனால், இப்போ விட்டுடுவோம்.. எல்லோருக்கும் சொல்லிட்டோம்.. விடுங்க அங்கிள்.. பார்த்துக்கலாம்” என்றான் மாதவனை நேரடியாக பார்த்துக் கொண்டு.

மாதவன் கண்ணில் அப்பட்டமான அலட்சியம் தெரிந்தது.

இவர்களின் அதிகார உரிமை மோதலில்.. அந்த இளம் பெண்ணை மறந்தனர் எல்லோரும்.. அவளோ.. தன் தந்தையின் கைகளை பற்றிக் கொண்டு.. நடப்பதை உணராமல்.. சிலையென அமர்ந்திருந்தாள். 

அமர்ந்திருந்த அவளின் அருகில்.. நின்றிருந்த மாதவனின் அருகில்.. நீலகண்டனை எரிப்பது போல பார்த்தபடியே நின்றிருந்தான் அந்த மனிதன். மாதவனின் நண்பன்.. பிரசன்னகுமார்.

அதன்பின் கண்ணனின் இறுதி காரியங்கள் நல்லவிதமாக முடிந்தது. 

இடுகாட்டிலிருந்து வீடு வந்தனர் நால்வரும். நீலகண்டன், கார்த்திக், அதியமான், அரசு நால்வரும்.

நீலகண்டனை, அதியமானும் அரசுவும் வற்புறுத்தி ரஞ்சினியிடம் சொல்லி வர சொல்லி அனுப்பினர்.

வாசலில் யாருமில்லை.. வரவேற்பறையில் வீட்டு மனிதர்கள் யாரும் இல்லை.. வேலையாட்கள் பெருக்கி.. துடைத்து என வேலையில் இருந்தனர். 

கிட்சேன் சென்றான்.. நீலகண்டன் . அங்கே யாரோ ஒரு பெண்மணி இருக்கவும், அவர்களிடம் கேட்டான் “ரஞ்சனி எங்கே” என.

அவர் அவனை ஆராய்ந்தார் “நான் வள்ளி மகன்” என்றான். அந்த ஊர் பெண்மணி போல அவர்.. “மேலே மூணாவது ரூம்.. தம்பி பார்த்தா ஏதாவது சொல்லும் சீக்கிரம் பார்த்துட்டு வந்திடுங்க” என்றார்.

நீலகண்டன் அதியமானை திட்டிக் கொண்டே மேலேறினான். பின்னே அவர்தானே இப்படி செய் என சொன்னது. அதான் அந்த திட்டு.

நீலகண்டன் மேலேறி சென்றான்.. அவளின் அறையின் கதவை தட்ட.. அவளின் உடனிருந்த பெண்மணிதான் வந்து கதவை திறந்தார்.

நீலகண்டன் லேசாக திறந்ததிருந்த கதவின் வழி பார்த்தபடி “இருக்காங்களா” என்றான்.

இவனை பற்றிதான் எல்லோருக்கும் தெரிந்திருந்ததே.. எனவே அந்த பெண்மணி “ரஞ்சனி” என அழைத்தார்.

ரஞ்சனி குளித்து அமர்ந்திருந்தாள்.. அறையின் வாசலிலிருந்து நீலகண்டன் “நான் நீலகண்டன்..” என்றான்.

அவளின் காதில் விழவில்லை. எழுந்தாள் பெண்.. இவனும் உள்ளே சென்றான்.

நீலகண்டன் “நான் உங்க.. அத்தை, தெரியுமா வள்ளி அத்தை” என்றான்.

ரஞ்சனி “ம்..” என்றாள்.

நீலகண்டன் “அவங்க பையன் நீலகண்டன்.. அப்புறம்தான் மத்த எல்லாம்.. அது.. அது அப்புறம் பேசலாம்.. இ..இது என் நம்பர்.. எ…ஏதாவது தேவைன்னா..” என்றவன்.. அவளின் கண்களை பார்க்க விழைந்தான்.. அழுத்து வீங்கிய கண்கள்.. நிமிர்ந்து அவனைத்தான் பார்த்தது.. ‘எதற்கு’ என்ற பாவனையில்.

நீலகண்டன் பதில் சொன்னான் “இல்ல.. ஏதாவது தேவைன்னா.. எப்போவாது.. நா.. எ.. ஞாபகம் வந்தால்..” என ஒருமாதிரி குரலில் சொன்னவன் சட்டென சுதாரித்து “உங்க நம்பர் ப்ளீஸ்” என்றான்.

இப்போதுதான் அவள் போன் எடுக்கவும்.. தன் எண்ணை அதில் பதிந்து, தனக்கு ஒரு மிஸ்டு கால் விட்டு கட் செய்துக் கொண்டு.. அவளிடம் போனை கொடுத்துவிட்டு.. ஏதும் பேசாமல்.. தலையசைத்து விடை பெற்றான்.

“முற்று புள்ளி அருகில் நீயும்..

மீண்டும் சின்ன  புள்ளிகள்  

வைத்தாய்.. முடிவென்பதும் 

ஆரம்பமே..” 

Advertisement