Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

9

நீலகண்டனுக்கு, அடுத்த அரைமணி நேரம் ஒன்றும் புரியவில்லை. இதை எப்படி எடுப்பது என புரியவேயில்லை.. அவனின் அறிவுக்கும், மனதில் தோன்றும் பிம்பங்களுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு நிகழ்வுதான், சற்று முன் நடந்தது. அதில் மாமா இறந்தது அவனை இன்னும் வந்தடையவேயில்லை.

தமிழரசுதான், சுழன்றுக் கொண்டிருந்தார்.. “என்னாச்சு.. அவ்வளவுதானா” என ஏதேதோ மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ரகுவிடம் எதோ வாக்குவாதம்.. ரகு “அதெல்லாம் ஒத்துக்க முடியாது.. மாதவன் வரட்டும் பேசிக்கலாம்” என.

இந்த வார்த்தைகள் நீலகண்டன் அனுமதியின்றியே.. அவன் காதுகளை வந்தடைகிறது. 

மருத்துவமனையில் இறுதி நேர பணிக்காக ரகுவை அழைத்தனர் மருத்துவர்கள். இத்தனை நாட்களாக ரகுதான் பழக்கம் எனவே, அவனை அழைத்தனர். 

பில் செட்டில் செய்ய வேண்டும்.. அதன் பின்னேதான் மற்ற ஏற்பாடுகள் நடக்கும்.. பல லட்சங்கள் பில் தொகை. ரகு சற்று கோவமாக இருந்தான்.. தமிழரசு சொல்லியிருந்தார்.. “இப்படி கண்ணன் தன் பெண்ணை நீலகண்டனிடம் ஒப்படைத்தார்” என சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குதான் சற்று முன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் ரகு.

அத்தோடு இவர்கள் மட்டுமே உள்ளே செல்லுகிறார்கள், என் தம்பியை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என கோவம்.. இப்போது பில் தொகை.. ரகுவை கொஞ்சம் மிரட்டியது. அதனால் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தான். “உடனே எப்படி தர முடியும்.. முதலில் ஆக வேண்டியதை செய்யுங்கள், பின் பத்து நாளில் பணம் ஏற்பாடு செய்கிறோம்” என்றான்.

நிர்வாகம்.. ‘நிறைய காலதாமதம் ஆகவிட்டது.. நிறைய சலுகைகள் உங்களுக்கு கொடுத்துவிட்டோம்..’ என அவர்களும் முணுமுணுத்தனர். கிட்ட தட்ட இரண்டு மாதமாக மருத்துவமனையில் இருக்கிறார். ஆக, செலவு என்பது.. கையை கடித்து.. எனவே ரகு சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

இந்த வாக்குவாதத்தில்தான் நீலகண்டன் சுயயுணர்வு கொண்டான். சுற்றும் முற்றும் பார்க்க.. அந்த இரவில்.. கொஞ்சம் சத்தமாக பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது. என்னவென சற்று நேரம் அமர்ந்தபடியே கவனித்தான். ரகுவின் நிலை புரிந்தது.

மொத்த தொகை எவ்வளவு என அரசு மூலமாக அறிந்துக் கொண்டான். முன்பு எப்படியோ, அவரின் சூழ்நிலை தெரிந்து அவரின் உடல்நிலையை கவனிக்காததை தன் குற்றமாக எண்ணியிருப்பவனால், இப்போது அமைதியாக இருக்க முடியவில்லை.

எனவே, அரசுவோடு நிர்வாகத்தினரிடம் தானாகாவே சென்று பேசினான். “இப்போது ஒரு குறிப்பிட தொகை செலுத்துகிறோம்.. பின் ரகு சொன்னது போல நேர் செய்கிறோம்..” என்றான் தன்மையாக.

அத்தோடு அரசு ஒரு வக்கீல்.. அதனால் கொஞ்சம் புரியும் படி குடும்ப சூழ்நிலையை சொல்லி நிர்வாகத்திடம் விளக்கினார். எனவே நிர்வாகமும், நீலகண்டன் செலுத்திய தொகையை பெற்றுக் கொண்டு.. கண்ணனின் இறுதி நேர வேலைகளை செய்தது.

மாதவன் இன்னும் வரவில்லை.. வருவதற்கு காலை நேரமாகும் என்றனர் ரகுவோடு நின்றிருந்த ஆட்கள் இருவரும்.

மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்ய என கேட்டுக் கொண்டிருந்தது. நிர்வாகத்திற்கு.. கண்ணன் இறந்து மூன்று மணி நேரமாகிறது. இன்னமும் உரியவர்களிடம் கொடுத்து வேலையை முடிக்கவில்லை.. அல்லது, மார்சுரியில் வைக்க வேண்டும். எனவே, நிர்வாகம் தமிழரசுவை கேட்க என்ன செய்வது என தடுமாறினார்.

ரகு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் ‘எப்படி என் தம்பி இல்லாமல் நீங்கள் அவரை எடுக்கலாம்’ என. எனவே, நீலகண்டன் “இங்கேயே மார்சுரியில் வையுங்கள்.. அவர் மகன் வரட்டும்’ என்றான்.

அது தெரிந்து ரகு அதற்கும் முணுமுணுத்தார் ‘எப்படி மார்சுரியில் வைக்கலாம்.. வீடு எடுத்து செல்ல வேண்டும்.. என் சித்தப்பாவை இப்படி எல்லாம் படுத்துகிறீர்கள்’ என நிர்வாகத்திடம் சண்டை. ரகு என்னமோ நிலையில் இல்லை.. நிறைய ஏமாற்றம் அவருக்கு.. அது அந்த ஆர்பாட்டாத்தில் தெரிந்தது எல்லோருக்கும்.

தன் தந்தை பற்றி தெரிந்ததும் ரஞ்சனி அழ தொடங்கினாள் “மாமா.. ஏன் மாமா.. அப்பாவை வீட்டுக்கு கூட்டி போயிடலாம் மாமா.. இங்கே எல்லாம் வேண்டாம் மாமா..“ என அழ தொடங்கினாள்.. அரசுவிடம்.

இது உறவு சிக்கல். கவலையான நேரம்.. என்னதான் இருந்தாலும் மாதவன்தான்.. இத்தனைநாட்கள் அவரை பார்த்தது.. இப்போது உரிமையுள்ளவன் நீலகண்டன் என்றாலும்.. மாதவனின் இடம் அப்படியேதானே இருக்கிறது. புதிதாக நாம் ஏதும் அதை மாற்ற கூடாதே, அதனால் நீலகண்டன் இங்கேயே இருக்கட்டும்.. மருத்துமனை நிர்வாகத்தின் விதிப்படி என்றுவிட்டான்.

அடுத்த நாலு மணி நேரம் ரஞ்சனி அழுகைதான்.. ‘வீடு செல்’ என்றதற்கு ‘மாட்டேன்’ என அங்கேயே.. மார்சுரி வாசலிலேயே.. அமர்ந்துக் கொண்டாள். கத்தி கதறவெல்லாம் இல்லை.. ஓயாமல் கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள்.

காரத்தி, நீலகண்டனை அழைத்துக் கொண்டு போய் டீ வாங்கி கொடுத்தான். கார்த்தி “நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்.. நீ.. இங்க மேனேஜ் செய்துக்குவதானே” என்றான்.

நீலகண்டனுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தனக்காக அவனையும் இருக்க சொல்லுவது சரியாக படவில்லை எனவே ‘சரி’ என்பதாக தலையசைத்தான். 

நீலகண்டனுக்கு, ரகு தன்னை பார்க்கும் பார்வையும்.. முனுமுனுப்பதும் சரியாக படவில்லை. என்ன நினைக்கிறார்கள் என்றே அவனுக்கு தெரியவில்லை.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ‘தம்பியிடம் சொல்ல வேண்டும் என்றாலும், மணி மூன்று.. இப்போது எப்படி அவனை எழுப்புவது.. எல்லாம் காலையில் சொல்லிக் கொள்ளலாம்.. அவன் வந்து என்ன செய்ய போகிறான்’ என யோசனையோடே நின்றான் நீலகண்டன்.

கார்த்திக் விடை பெற்று கிளம்பினான், போகும் போது “நாங்க வரோம்.. அப்பாவை கூட்டி வரேன்.. பேசிக்கலாம், நீயாக ஏதும் பேசிவிடாதே” என குறிப்பு கொடுத்துதான் வீடு சென்றான் கார்த்திக்.

அப்போதும் கார்த்தி தனது போனிலிருந்து கண்ணனின் இறப்பு செய்தியை மட்டும் அனுப்பிவிட்டுதான் வீடு சென்றான்.

அரசுவும் நீலகண்டனும் எல்லோருக்கும் டீ வாங்கி கொடுத்தனர். ரஞ்சனி பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.. நிமிர்ந்தே பார்க்கவில்லை அவள். 

அவளின் அருகில் யாராலும் செல்ல முடியவில்லை. எல்லோரும் ஆண்கள்.. அதிலும் அவளுக்கு நெருக்கமில்லாதவர்கள்.. எல்லோரையும் தெரியும் உறவுதான்.. ஆனால், உரிமையாக சென்று தோள் சாய்த்துக் கொண்டு அவளின் துக்கத்தை பகிர கூடிய நெருக்கத்தில் அங்கே யாருமில்லை. எனவே, அவள் தனியாகவே அமர்ந்திருந்தாள். எல்லா ஆண்களும் அவள் அழுவதை நிமிடத்திற்கு ஒருமுறை திரும்பி பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தனர்.. அதை தவிர அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

கண்ணன் இறந்த செய்தி.. ஊரில் பரவியது. ரகு, தன் சொந்தத்திற்கு எல்லாம் சொல்லி விட்டார். அரசுவும்.. தனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டார். 

இன்றைய விடியல் துக்கமாக இருந்தது.. கண்ணனை சார்ந்தவர்களுக்கு..

காலை ஏழு மணிக்கு மாதவனும் வந்து சேர்ந்தான்.. நான்கு நபர்கள் சுற்றிலும் வந்தனர். அடுத்த எலெக்ஷனில் கண்டிப்பாக mla ஆகிவிடுவான்.. அந்த தோரணை அவனிடம் இருந்தது. என்ன, கப்பம் கட்ட வேண்டும்.. அவ்வளவுதான். இப்போதும் கழுத்தில் கட்சி துண்டு ஜொலிக்க.. ஒரு அரசியல்வாதியாகவே உள்ளே வந்தான் மாதவன்.

மாதவனை இடம் சொல்லி அழைத்து வந்தனர்.. மாதவன் ஒரே சத்தம் “எதுக்கு என் சித்தப்பாவை மார்சுர்யில் வைச்சீங்க..” என ஆரம்பித்தான். நிர்வாகம் மிக பொறுமையாகவே பதில் சொல்லியது. எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்.. அது அரசோ தனியார் நிறுவனமோ.. எனவே, நிர்வாகம் பொறுமையாக சொல்லியது. 

இருந்தாலும் அரசியல் பலத்தில் ஒரு ஆட்டம் ஆடிதீர்த்த பின்தான் அடங்கினான் மாதவன். 

ரஞ்சனிக்கு, மாதவனை பார்த்ததும்.. துக்கமும் அழுகையும் பொங்கிக் கொண்டு வந்தது. இருந்தும் இடத்தை விட்டு எழுந்துக் கொள்ளவில்லை. அண்ணனையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். ‘எப்போதும் வீட்டில் இருந்தால் மட்டும்தான் மாதவனை நெருங்க வேண்டும்.. அலுவலகம்.. கட்சி.. என பொது இடத்தில் இருக்கும் போது அவனை நெருங்க கூடாது..’ இது அவன் வாய்மொழியாக தங்கைக்கு சொன்னது.  இப்போது அதெல்லாம் நினைவில்லை என்றாலும்.. ஏனோ ஒரு அயர்வு.. துக்கம்.. அதன்பொருட்டு எழ தோன்றவில்லை பெண்ணிற்கு. 

எப்போதடா.. அண்ணன் தன்னிடம் வருவான் என அமர்ந்திருந்தாள் பெண்.

பத்து நிமிடம் சென்று தனது கட்சி துண்டை எடுத்து உதவியாளரிடம் கொடுத்துவிட்டு “ரஞ்சி ம்மா” என்றான்.

ரஞ்சனி யோசிக்கவேயில்லை “அண்ணா.. அப்பா பா…” என அண்ணனின் கைகளில் அடைக்கலம் ஆகினாள் பெண்.

மாதவனும் மெல்லிய குரலில் “தெரியுமே டா நமக்கு.. அப்பாவை பற்றி தெரியுமே டா.. நீ கொஞ்சம் உன்னை கண்ட்ரோல் பண்ணிக்கலாமில்ல.. உடம்பெல்லாம் சுடுது ரஞ்சி.. இனி நீதான் என்னை பார்த்துக்கணும், நான்தான் உன்னை பார்த்துக்கணும்.. அழாத டா.. தைரியமா இருக்கணும்..” என்றான் தோளில் சாய்த்துக் கொண்டு.

இருவரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.. அவனின் ஐந்தாம் வயதில்.. பெரிய கொண்டாட்டத்தோடு பிறந்தவள் ரஞ்சனி.. வராமாக வந்த தேவதை அவள்..  குடும்பமே தாங்கிக் கொண்டாடும் தேவதைதான் அவள். என்ன, அப்போது குடும்பம் இருந்தது.. இப்போது இவள் மட்டுமே இருக்கிறாள்.. தாங்குவார் யாருமில்லை.

மாதவன், இந்த இரண்டு வருமாக அரசியலில் நுழையவும்.. கொஞ்சம் தந்திரங்களும் அவனுக்கு பழக்கமானதால்.. அவளை நெருங்க அண்ணனாக அவனின் மனசாட்சி கொஞ்சம் தயங்குகியது.. அதனால் தான், அவளுக்கு அத்தனை விதிமுறைகள். இந்த நொடி.. அவனின் குட்டி தங்கையை முழுமனதுடன் அரவணைக்கிறான்.

ரஞ்சனி “வீட்டுக்கு அப்பாவை கூட்டி போலாம் ப்ளீஸ்.. எல்லோரும் நீ வரணும்ன்னு வெயிட் பண்றாங்க.. அப்பா பாவம்” என தேம்பியபடியே சொன்னாள். சென்ற மாதம்தான் இருபது வயது தொடங்கியது பெண்ணுக்கு. போன ஷணம் வரை குமரியென தனியே நின்றவள்.. இப்போது குழந்தையாகி தேம்பிக் கொண்டிருந்தாள்.

அதன்பின் காரியங்கள் சூடு பிடித்தது. நீலகண்டன் எப்போதும் போல யாரின் கருத்தையும் கவராமல்.. ஒதுங்கி நின்றுக் கொண்டான். கண்ணனை வீடு சேர்ந்தனர்.. ரகு, மாதவன் இருவரின் தாய் தந்தை.. ரஞ்சனியின் பெரியம்மா குடும்பம்தான் இப்போதைய நெருங்கிய சொந்தம். அவர்கள் முன்னமே வந்து இருந்தனர்.. எல்லாம் அவர்களின் பொறுப்பானது, இப்போது.

நீலகண்டன் அமைதியாக அமர்ந்திருந்தான். 

Advertisement