Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

8

நீலகண்டன், காலையிலிருந்து ஒரு சுயஅசலில் இருந்தான். ‘ஏன் எனக்கு மனது அங்கே செல்ல வேண்டும்.. தம்பி அனுப்பிய விவரங்கள் ஏன் மனதில் பதிய மறுக்கிறது என குழப்பம் அவனுக்கு. கூடாது இது சரி கிடையாது.. என் வாழ்க்கை.. அதன் முடிவுகள் எல்லாம்,  நாளை தம்பியையும் கண்டிப்பாக பாதிக்கும்.. ஏதும் தப்பாகி விட கூடாது நான்..’ என எண்ணிக் கொண்டே எழுந்து கிட்சேன் சென்றான்.

மெதுவாக ‘அப்படி என்ன அந்த பெண்ணை பார்ப்பது.. தம்பி சொன்னா மாதிரி சீக்கிரம் ஒரு கல்யாணம் செய்துக்கணும்.. மனது எங்கேயும் போக கூடாது’ என எண்ணிக் கொண்டான்.

சமையல் முடித்தான்.. தன் அன்னையின் படத்திற்கு முன்பே பூ போட்டு விட்டான் எனவே கைகூப்பி நின்றான் ‘எனக்கு எது சரியோ அதோ நடத்தி கொடு ம்மா’ என வேண்டுதலை வைத்தான்.

மனது கொஞ்சம் இயல்புக்கு வந்தது.

கடைக்கு கிளம்பினான்.. அன்றைய நாள் நன்றாக சென்றது.

இரவு குகன் அழைக்கும் போது தட்டாமல் எடுத்ததான், எடுத்ததும் குகன் “ஒண்ணுமே பிடிக்கலையா நீலா” என்றான் விசாரிக்கும் குரலில்.

அண்ணன் மெயிலியே “சிக்ஸ் மந்த் அப்புறம் பார்க்கலாம்” என செய்தி அனுப்பி இருந்தான். அதை பார்த்ததும் கோவம்தான் குகனுக்கு.

நீலகண்டன் “அ..அது அப்படியில்லை குகா, இப்போது கல்யாணம் வேண்டாம் கொஞ்சநாள் போகட்டுமே.. நிறைய வேலையிருக்கு.. அப்புறம் பேசலாம் அதை பற்றி இப்போ வேண்டாம்” என்றான் இதுதான் இறுதி முடிவு என்பது போல..

குகன் அமைதியாக இருந்தான். அண்ணனின் ஒட்டாத குரலில் அமைதியானான். அது எப்போதுமே தள்ளி நிறுத்தும் பாவம் என புரிந்தது தம்பிக்கு. எனவே ஏதும் பேசவில்லை. இந்த குரல் எப்போதுமே பயத்தை தரும்.. எங்கும் கலந்து பழகமாட்டான்.. சிரிப்பாதே கொஞ்சம் கவனமாகத்தான் சிரிப்பான், அதனாலேயே ஒரு திருமணம் அவனை மாற்றும் என அன்று அப்படி பேசி வந்தான், குகன்.

ஆனால், அப்படி பேசியதற்கு ஒரு பயனும் இதுவரையில் இல்லை தன் அண்ணனிடம்.. மீண்டும் இப்போது திருமணம் வேண்டாம் என்ற நிலையில் நிற்கிறானே என எண்ணம். அத்தோடு, தனக்காகவும் தன் அண்ணனை கொஞ்சம் அவசரப்படுத்தலாம் என நினைத்தான். ஆனால், எப்போதும் போல.. அண்ணன் மிஞ்சிவிட்டான்.

 குகன் “இப்படியே சொல்லு எப்போதும்.. யார் சொல்றதையும் கேட்டிடாத.. உனக்கு என்ன தோணுதோ அப்படிதான் இருப்ப இல்ல.. அப்படியே இருந்துக்கோ.. இனி நான் உன் கூட பேசமாட்டேன்” என்றவன் வைத்துவிட்டான். இதற்காக அவன் வருந்தபோவது தெரியாமல்..

நீலகண்டன் மீண்டும் தம்பியை அழைத்தான் எடுக்கவில்லை.. ‘இன்னமும் சின்ன பையன் மாதிரி பண்றான்’ என எண்ணிக் கொண்டே உறங்கினான்.

@!@!@!@!@!@!@!@!@!@!@!

மறுநாள் இன்பமாக விடிந்தது.. இன்றும் ஒரு சலங்கை சத்தம்.. தூரமாக கேட்டது.. என்ன தனது அறையின் கதவை திறக்கவேயில்லை.. நீலகண்டன்.

மனதையும் கதவையும் இழுத்து மூடிக் கொண்டான்.

தனது கடமையை செய்தான்.. இரவில் கார்த்தி வந்து பேசி சென்றான்.. இன்று அவன் வீடு வரை வரவில்லை.. எனவே, சீக்கரமாக லாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான் நீலகண்டன்.

இரவு மணி பனிரெண்டுக்கு மேல் இருக்கும்.. அவனின் அலைபேசி அழைத்து.. அவனை. அன்னவுன் எண்ணிலிருந்து வந்திருந்தது.. யோசனையோடு எடுத்தான்.

நீலகண்டனிடம்,  கண்ணனின் நண்பன் என அறிமுகம் செய்துக் கொண்டு ஒருவர் பேச தொடங்கினார் “நீலகண்டன், நான் கண்ணின் நண்பன்  கண்ணுக்கு இப்போது சற்று முடியவில்லை.. மருத்துவர்கள் நேரம் சொல்லி இருக்கிறார்கள்.. உன்னை பார்க்கனும்ன்னு நினைக்கிறான்.. நீ வரியா பா” என்றார்.

நீலகண்டனுக்கு சட்டென மனது என்னமோ போலானது ஒரு அமானுஷ்யம் சூழ்ந்துக் கொண்டது அவனை.. “வரேங்க” என்றவன். கிளம்பினான்.

என்னமோ தனியாக செல்வதற்கு ஒரு நடுக்கம் வந்தது அவனுள்.. அந்த நேரத்தில் கார்த்திக்கு அழைத்தான்.. விஷயம் சொல்லி அழைத்தான். கார்த்தியும் காரெடுத்து வந்தான்.

இருவரும் மருத்துவமனை சென்றனர். நீலகண்டனுக்கு இது ஒன்றும் அவனால் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை இல்லை.. ஆனால், அதையெல்லாம் தாண்டி என்னமோ அவனை சூழ்கிறது.. மனது ‘தெரிந்தே ஒருவரின் உயிரை அலட்சியம் செய்தாயோ’ என கேள்விக் கேட்கிறது அவனின் மனது. அவர் அழைக்க சொன்னது அவனை உறுத்துகிறது.. மனது பதட்டமாகவே வந்தான் அந்த பயணத்தில்.

நடு இரவு.. மனிதர்கள்  நடமாட்டம் குறைந்திருந்தது.. எனவே, சீக்கிரமாக வந்து சேர்ந்துவிட்டனர், அந்த மருத்துவமனைக்கு.

இரவில் மருத்துவமனை அமைதியாக் இருந்தது.. இன்னமும் பயம் கூடியது நீலனுக்கு. வெளிச்சம்.. மருத்துவ அன்பர்களின் நடமாட்டம் இருந்தாலும் அந்த நிசப்தம் அவனுக்கு பயத்தை கூட்டியது.

தன் அன்னையின் நினைவும் வந்தது, இப்போது.

அன்று அவர் இருந்த அறைக்கு செல்ல.. அங்கே இல்லை கண்ணன். 

அந்த வளாகத்தில் இருந்த அட்டண்டரிடம் கேட்டு விசாரித்துக் கொண்டு.. ICU இருக்குமிடம் கேட்டு சென்றனர் இருவரும்.

பெரிதாக கூடம் இல்லை.. அமைதிதான் அங்கும் இங்கும் என செவிலியர்கள் கூட காணோம்.. அமைதியாக இருந்தது அந்த வளாகம்.. 

யாரையும் அடையாளம் தெரியாது.. அங்கே அமைதியான கூட்டம்.. இவனுக்கு தெரிந்தது போல ரகு நின்றார். ரகு பார்த்தார்.. ஆனால், பெரிதாக அருகில் வரவில்லை.. கண்ணில் அழைப்புக்கான பாவம் கூட தெரியவில்லை. 

நீலகண்டன் அங்கே சென்றான்.. ரகுவின் அருகில் செல்ல மனதில்லை.. பொதுவாக icu கதவின் அருகில் நின்றான். தன்னை அழைத்தது யார் என பார்க்கும் எண்ணத்தில்.. சுற்றிலும் பார்த்தான்.

இப்போது அவனின் அருகில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் வந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் போல.. அருகில் வந்தார்.. “நான் தமிழரசு.. நான்தான் போன் செய்தேன்.. நீலகண்டன் தானே.. யார் நீலகண்டன்” என்றார்.

நீலகண்டன் முன்னால் வந்தான், கார்த்தி பின்னால் போனான்.

விளக்குகளின் வெளிச்சம்.. பதட்டமான ஓரிரு மனித முகங்கள்  அந்த இடத்தை மிரட்டியது. ஆண்கள் மூவரும் நின்றுக் கொண்டிருந்தனர்.. ரகு இன்னொரு நபர் இருவரும் தனியே நின்றுக் கொண்டிருந்தனர்.

நாலு வரிசை சேரில்.. சுவரை ஒட்டி ஓரமாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.. 

வக்கீல் “நீலகண்டன்.. உங்களை பார்க்கனும்ன்னுதான் இருக்கார்.. ரொம்ப மூச்சு வாங்குது.. கிர்ட்டிகல்ன்னு சொன்னாங்க.. டாக்டர்ஸ்.. என்னமோ அவனக்கு இப்படி” என்றார்.

நீலகண்டனுக்கு எதுமே இவர்களை பற்றி தெரியாத நிலை.. “ஏன் இவ்வளவு அவஸ்த்தைபடுகிறார்.. என்னதான் பிரச்சனை.. நல்ல ஹோஸ்பிட்டல், இல்லை, என்கிட்டே கிட்னி ஃப்யிளிர்யர் சொல்லியிருந்தாங்க.. பணமில்லையா.. கொஞ்சம் பெட்டெர்ரா பார்த்திருக்கலாமே..” என்றான் நிறுத்தி நிதானமாக.

வக்கீல் “ம்.. சரிதான், ஆனால் யார் பார்ப்பார்கள் ” என்றார்.

நீலகண்டன் “ஏன், பசங்க இருக்காங்களாம்.. புரியலை..” என்றான்.

வக்கீல் ”இல்ல பா, அப்படி இல்லை.. இவனின் பூர்வீகம் சொத்து இருந்தது அவ்வளவுதான். இவனின் தொழில் ஒரு கார் சர்வீஸ் சென்டர் அவ்வளவுதான். அளவான சொத்து. அரசியலில் இருந்தான்.. ஆனால், இவனால் காலூன்ற முடியவில்லை.. 

கவுன்சிலர் பதவியில் நின்றான்.. அதற்கென அப்போதே பல லட்சங்களை கொட்டிவிட்டான்.. கொஞ்சம் நிலபுலன்கள் எல்லாம் போயிற்று.. ஊரில் உள்ள நல்ல பேரினால்தான் அந்த கவுன்ஸிலர் பதவியும் கிடைத்தது.

அத்தோடு.. தேவையில்லாமல் ஒரு மகனை தத்தெடுத்து.. அவர்களின் குடும்பத்திற்கு என எதோ செய்தான்.. அதை சொல்ல கூடாது. ஆனால், எனக்கு அனாவசியமாக தோன்றியது. அவர்கள் இப்போது கணக்கு பார்க்கிறார்கள்.. செலவு செய்ய.. என்ன சொல்ல..” என்றவர் அமைதியானார் சிலநொடிகள்.

வக்கீல் “அரசியலில் எல்லோரும் சம்பாதிப்பதில்லையே.. இவன் வீழ்ந்தவன்.. புதிதாக சேரும் போது என் நாடு.. என் மக்கள் என தோன்றும்.. ஒரு அரசு ஊழியன் எண்ணம்தான்.. அப்படிபட்டவன் இவன். நல்லது செய்வேன்.. என நினைத்தான். எல்லாம் பிடுங்கி கொண்டனர் மற்றவர்கள்.

இவன் சமபாதித்தது என எதுவும் இல்லை.. இரண்டு வீடும் பூர்வீக இடத்தில் இருப்பதால் அப்படியே இருக்கிறது. அதையும் அந்த மாதவனும் ரகுவும் கேட்க்கிறார்கள். ஒரே போராட்டம்.. இன்னமும் மாதவன், அதான் தத்தெடுத்த மகன் வரவில்லை.. இன்னமும். மருத்துவ செலவு கூட.. இவன் கட்டிய புது வீட்டை அடமானம் வைத்து நடக்கிறது.” என எல்லாம் சொன்னார் மனிதர்.

பணம்! பணம்! பணம்! இறப்பு கூட நல்ல விதமாக.. கௌரமாக வேண்டுமென்றால் பணம் வேண்டும். இல்லை என்றால்.. இவன் ஏன் இன்னும் இருக்கிறான் என எண்ணிவிடுவர்.

நீலகண்டனுக்கு என்னமோ போலானது.. ‘என் நினைப்பு எல்லாம் தவறாகிவிட்டதே’ என எண்ணம் எழுந்தது.. அது ஒரு சங்கடத்தை தந்தது. அமைதியாக அமர்ந்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் மூவரும் உள்ளே சென்றனர். கண்ணன் “முடியலை பா..” என அயர்வாக கண் மூடிக் கொண்டார். மூச்சு வாங்கியது.. மூச்சு குழாயை எடுக்க அனுமதியில்லை.. ஆனால், பேச எண்ணுவதால், மருத்துவர்கள் பேசுவதற்கு அனுமதித்திருந்தனர்.

உயிரை உருவும் வலி.. கண்களில் தெரிந்தது.. அமைதியாக நின்றனர் இருவரும். கார்த்தி வெளியில் நின்றான். நீலனும் அரசுவும் உள்ளே சென்றனர். பின்னாடியே ரஞ்சனி உள்ளே சென்றாள்.

இரண்டு நிமிடங்கள் சென்று மீண்டும் கண்திறந்தார் கண்ணன். அவரின் பார்வையில் எதோ யாசகம் கேட்க்கும் உணர்வு.. அப்படியே  இளையவனை பார்த்தார் கண்ணன். நீலகண்டன் தன்னை தானே திட்டிக் கொண்டான்.. ‘கவனிக்கலையா டா நீ.. பழச நினைச்சிட்டியே டா’ என தன்னையே கேட்டுக் கொண்டான்.

முன்போல ஒரு கோவமில்லை நீலனுக்கு.. அமைதியாக அருகில் சென்றான். வலியும் வேதனையோடான கண்ணனின், கண்கள் புன்னகைக்க முயல.. அந்த புன்னகை அவனை குற்றவாளி ஆக்கியது.

நீலகண்டன் புன்னகைக்க முயன்றான் ஆனால், முடியவில்லை.. கண்ணன் “என்ன சொல்றான் அரசு..” என்றார் கொஞ்சம் திடம் வரபெற்ற குரலில். திட்மெல்லாம் இல்லை.. ஆனாலும், நீலகண்டனை பேச வைக்க நினைக்கிறார்.

நீலகண்டன் இதமாக புன்னகைத்தான்.

கண்ணன் “நேரத்தை எண்ணிகிட்டு இருக்கேன்” என்றார் அயர்வாக சிரித்து.

நீலகண்டன் “சாரி..” என்றான்.

கண்ணன் “விடு பா.. இப்போ எதுக்கு வர சொன்னேன் தெரியுமா.. உன்கிட்ட ஒன்னு கேட்ட போறேன்” என்றார்.

நீலகண்டன் என்னவாக இருக்கும் என பார்த்தான்.

கண்ணன் “என் பொண்ணு.. ரஞ்சனி.. ரஞ்சி வாடா” என்றார். எல்லாம் தடுமாறி.. கரகரப்பான காற்றாக வந்த வார்த்தைகள்தான்.

பெண் வந்து நின்றாள்.. கண்ணெல்லாம் சிவந்து.. முகமே சிவந்த வண்ணத்தில்.. ஆய்ந்து ஓய்ந்து.. அழுது.. அது இன்னும் முடியாமல்.. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள் பெண்ணொருத்தி.. அவளின் தந்தையின் அருகே..

பெண்ணின் கைகளை பற்றிக் கொண்டார் கண்ணன்.

கண்ணன் “எனக்கு தெரியும் என் நிலை நீலகண்டா.. எனக்கு பிறகு யாருமில்லை இவளுக்கு.. உனக்கு இவ பாரமாக கூட இருக்கலாம்.. ஆனால், என் தங்கை மகன் மேல் எனக்கு ஒரு எண்ணம்.. இந்த பொறுப்பை உன்னை தவிர யாரிடமும் கொடுக்க முடியாதுன்னு ஒரு எண்ணம்.. அதான் காத்துகிட்டு இருக்கேன் போல.. நாலுநாள் முன்னாடிதான் இவன் ஊரிலிருந்து வந்தான்.. அதான், உன்னை பத்தி விசாரிக்க சொன்னேன். தப்புதான்.. ஆனால், கல்யாணம் ஆகியிருக்குமோன்னு விசாரிக்க சொன்னேன்..” என்றார் திடமான குரலில்.. நண்பனை காட்டி சொன்னார்.

நீலகண்டனுக்கு என்ன நடக்க இருக்கிறது என புரிகிறது.. ஆனால், அதை தடுக்கும் சக்தி அவனுக்கு இருக்குமா என சமைந்து நின்றான் கல்லாய்.. அவனின் அமைதி, அவரை இன்னமும் பேச வைத்து..

கண்ணன் தன் பெண்ணின் கையை நீலகண்டன் பக்கம் முயன்று கொடுக்க.. தன்போல அனிச்சையாய் அந்த மலர்கரங்களை ஏந்திக் கொண்டான் நீலகண்டன். சட்டென நடந்துவிட்டது.. யாருக்கும் பிடித்தமில்லை.. ஏன்? அவரை தவிர வேறு எண்ணமே யாருக்கும் இல்லை.. ஆனால், சட்டென ஒரு கன்னிகாதானம் நடந்துவிட்டது அங்கே. அதை யாரும் அங்கே பெரிதாக எடுக்கவில்லை.. பதறாமல் அவர்மேல் பார்வையை வைத்து.. நீலகண்டனும்.. அவனின் அருகில் ரஞ்சனியும் நின்றனர்.

கண்ணன் முடியாமல் விழியை உருட்டி உருட்டி பார்த்தார் இருவரையும்.. தேடிய நிம்மதி.. இறுதியில் கிடைத்தே விட்டது போல.. மூச்சு வாங்கியது. அரசு.. அந்த ஆக்சிஜன் மாஸ்கை போட்டு விட்டார்.

மீண்டும் ஒரு போராட்டம் அவருக்குள்.. இப்போது கண்ணன் “நீதான் சாட்சி அரசு.. நீதான் சாட்சி..” என்றார்.

இப்போது கார்த்தி உள்ளே வந்தான். உள்ளே வந்தவன் பார்த்து அதிர்ந்தான்.. 

நீலகண்டன் செய்வதறியாது.. ஏதும் சொல்லமுடியாத நிலையில் நின்றான்.

இப்போது அவனின் கைகளிலிருந்து விடுபட்ட அந்த பெண்ணின்  கரங்கள் “அப்பா… என்னப்பா.. இப்படி எல்லாம் பேசறீங்க” என்றாள். தன் கையை அவனின் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு.

கண்ணன் “அப்படி இல்ல டா, அவங்க என்ன பண்ணுவாங்க தெரியாது.. சொத்தை கேட்க்கிறாங்க டா.. மாதவனை நல்லா படிக்க வைச்சிட்டேன்.. என் காலத்திலேயே அவங்களுக்கு நிறைய குடுத்திட்டேன் டா.  ஆனாலும்.. சொத்து கிடைக்காத நிலையில் உன்னை ஏதாவது செய்துட்டா.. நீ.. நீ அப்பா சொல்றத கேளுடா.. சின்ன பிள்ளை உனக்கு ஏதும் தெரியாது..” என்றார்.. இப்போது கண்மூடிக் கொண்டார்.. கண்ணின் ஓரத்தில் நீர் கசிந்தது.

அதை பார்த்த பெண்ணவள் தன் தளிர் விரல்களால் துடைத்தாள்.

நீலகண்டன் என்ன பேசுவது  என்றே தெரியாமல் நின்றான். கார்த்தி “ப்ரோ” என்றான்.

வக்கீல் “வா பா,” என்றார்.

கண்ணன் நீலகண்டனை தாண்டிக் கொண்டு, கார்த்தியை பார்த்தார்.

கண்ணன் “நீயும் சாட்சி” என்றார் புன்னகைத்துக் கொண்டே.

கார்த்திக்கு ஓரளவு விஷயம் புரிகிறது.. எனவே சங்கடமாக சிரித்தான் என்ன சொல்லுவது என தெரியாமல்..

கார்த்தி நீலகண்டனின் கையை பற்ற.. அதில் உயிர் வந்தவனாக சுதாரித்தான்.. இவருக்கு நல்லாக வேண்டும்.. என அந்த நொடி எண்ணினான்.. “நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க.. வாங்க சென்னை போலாம்.. நம்ம வேற ட்ரீட்மென்ட் பார்த்துக்கலாம்.. மாமா” என்றான் கொஞ்சம் கட்டளையானக் குரலில்.

கண்ணன் கலையாக சிரித்தார் “மாமான்னு சொல்றான்..” என்றார் தன் நண்பரிடம், குழந்தையாக மாறி.

நீலகண்டனுக்கு குற்றவுணர்வு அதிகமானது இவரின் பேச்சில்.. ‘என்னென்னமோ நினைத்துவிட்டேனே நான்.. முன்பே கவனித்திருக்க வேண்டுமே நான்.. எதோ பழைய கோபத்தில்.. இவரை இப்படி விட்டுவிட்டானே..’ என அந்த புன்னகை அவனை சாடியது.

நீலகண்டன் “நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றவன் தன் மாமாவின் கையை பிடித்தான் “நான்.. எனக்கு தெரியாது.. அதான் உங்க பசங்க இருக்காங்களே.. என பழைய கோவத்தில் விட்டுவிட்டேன்.. இப்போதும் ஒண்ணுமில்லை.. நாம வேற இடத்தில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்.. ப்ளீஸ் மாமா..” என்றான்.

கண்ணன் சிரித்தார் “அந்த கட்டமெல்லாம் தாண்டியாச்சு டா.. அத்தோடு.. நான் இப்படி தனியா குழந்தையை விட்டுட்டு போறேனேன்னு இருந்த கவலையும் இல்லை.. இனி இந்த வேதனையும் வலியும் ஒன்னுமே இல்லை.. இன்னும் மணி கணக்குதான்..” என மீண்டும் கண்மூடிக் கொண்டார்.. 

பெண் அழுதாள்.

கண்ணன், கண் விழித்து பெண்ணின் கை பிடித்துக் கொண்டார்.. “இவர் என் தங்கச்சி பையன்.. உன் அத்தை பையன்.. அப்பா எது செய்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ..” என பேசிக் கொண்டிருக்க.. அரசுவும்.. நீலகண்டனும் கார்த்தியும் வெளியே வந்தனர்.

அடுத்த பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.. பின் கண் மூடிவிட்டார் கண்ணன்.   

“வந்து விழுகின்ற மழை துளிகள் 

எந்த இடம் சேரும் யார் கண்டார்..

மனிதன் கொண்டாடும் உறவுகளோ..

எந்த மனம் சேரும் யார் கண்டார்..

மலைகளில் தோன்றும் கண்களை நதி..

அது கடல் சென்று சேர்வது காலன் விதி…”

Advertisement