Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

5

நீலகண்டனுக்கு, அந்த அழைப்பு மணியோசையை கேட்டதும் தம்பிதான் வந்திருப்பான் என தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்காமல் நின்றிருந்தான் குகன். 

புல் ட்ரவல் ட்ரெஸ்சில் நின்றிருந்தான். கோட், ஹெல்மெட்.. ஷோல்டர் பாக்.. கை கிளொவ்ஸ் என டூ வ்வீலரில் வந்ததற்கான அனைத்து அம்சங்களோடும் நின்றிருந்தான் தம்பி.

நீலகண்டனுக்கு கோவம்தான்.. ‘வண்டியில் வந்திருக்கிறான்’ எனவும். ஆனால், தம்பியின் முகம் சோர்வை காட்டாவும், ஒன்றும் சொல்லாமல் ‘வாவென’ கூட அழைக்காமல் உள்ளே சென்றான் அண்ணன்.

குகனுக்கு தெரியும் அண்ணன் எப்படியும் கோவப்படுவான் என, எனவே எதுவும் பேசாது.. அறையின் உள்ளே சென்றுவிட்டான். இருவர் மட்டும் இருக்கும் நாட்களில் இப்படிதான், கோவம் வந்தால் கூட காட்டுவதில்லை. அவர்களின் அம்மா இருக்கும் போதெல்லாம் இருவரும் சண்டை போடுவார்கள்தான்.. ஆனால், இப்போது அமைதியாக இருக்க பழகிக் கொண்டனர். அது தானாகவும் வந்துவிட்டது.

குகன் குளித்து கிளம்பி வந்தான்.. நீலகண்டனும் சமையல் முடித்து கிளம்பிக் கொண்டிருந்தான், கடைக்கு செல்வதற்கு.

இருவரும் உண்பதற்காக அமர்ந்தனர். குகன் “அண்ணா, நீ ரெஸ்ட் எடுக்கலாமில்ல, நான்தான் வந்துட்டேனே.. நான் கடைக்கு போறேன்.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என்றான்.

நீலகண்டன் “அப்படி என்ன அவசரம்ன்னு நீ டூ வீலரில் வந்திருக்க.. டிக்கெட் போட்டு நாளைக்குதான் வரது. இதுவே கடைசியா இருக்கணும் இப்படி டூ வீலரில் வரது.” என்றான் காரமான குரலில்.

குகன் “அடுத்த முறை ட்ரெயினில்தான் வருவேன்.. பைக் இங்கேயே இருக்கட்டும்..” என்றான்.

நீலகண்டன் “ஏன் டா, அங்க வேண்டாமா உனக்கு” என்றான்.

குகன் “அங்கே நான் ப்ரெண்ட்ஸ் வண்டியில் மேனேஜ் செய்துக்கிறேன்.. இங்க வரும் போது எதில் போக வர.. நீ வைச்சிருக்கற வண்டி நாப்பதுக்கு மேல போகவே மாட்டேங்குது.. இத யூஸ் பண்ணிக்கோ, இல்ல, நான் வரும் போது இருக்கட்டும்” என்றான் உண்ட படியே.

நீலகண்டன் “ஏன், என் வண்டிக்கு என்ன குறை.. நீ கொஞ்சம் தூங்கி எழுந்து வா.. நான் முன்னாடி போறேன்” என்றவன்  எழுந்துக் கொண்டான் உண்டு முடித்து.

குகனும் எழுந்துக் கொண்டு.. “நீ வேற வேலையை பார்.. நானும் கடைக்கு வருவேன்..“ என்றபடி.. அண்ணனுக்கு முன்னே சென்று நின்றான், வாசலில். 

அண்ணன் தம்பி இருவரும் கீழே வந்தனர். லிப்டில் வர வர.. நீலகண்டனுக்கு, போனில் அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது. இறங்கி பேசிவிடலாம் என எண்ணிக் கொண்டே லிப்டின் கதவு திறக்க காத்திருந்தான். கதவு திறக்கவும்.. நீலன் போனை எடுத்து பேசிக் கொண்டே தனது வண்டி நோக்கி நடந்தான்.

அப்போது அங்கே நேற்று இவனை இடித்த பெண் நின்றிருந்தாள். அதை அவன் கவணிக்கவில்லை. அவளும் அவள் தந்தையும்.. ஒரு டூ வீலரோடு போராடிக் கொண்டிருந்தனர். 

மயூரா.. நேற்று போல டென்ஷனாக இருந்தாள்.. அவளின் தந்தை.. கிக்கரை உதைத்து உதைத்து அந்த வண்டியை இயக்க முற்பட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் நடக்கவில்லை.

குகன், அதை பார்த்துவிட்டு அவர்களை நோக்கி சென்றான்.. “என்னாச்சுங்க..” என்றான், இயல்பாய் உதவும் எண்ணத்தில்.

இப்போது மயூராவின் தந்தை, திரும்பி பார்த்து மலையாளமும், தமிழும் கலந்து “என்னமோ ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது.. ஒருவாரமாக எடுக்கலை, மேக்கனிக் யாரையாவது கூப்பிடனுமா தெரியலை” என சொல்லிக் கொண்டே மீண்டும் கிக் ஸ்டார்ட் செய்தார்.

குகன் “இருங்க சர்” என சொல்லி.. நன்றாக ஒரு உதைய் உதைத்தான்.. வண்டி ஆன் ஆகிவிட்டது.

அதற்குள், நீலகண்டன் “டேய்.. நான் கிளம்பறேன்” என சொல்லிக் கொண்டு வண்டியை எடுக்க.. அந்த பெண், தன் தந்தையிடம் மலையாளத்தில் எதோ சொல்ல.. அவர் நீலகண்டனை பார்த்து “சர்..” என்றார்.

நீலகண்டன் ‘என்ன’ எனும் விதமாக பார்க்க.. அப்போதுதான் அந்த பெண் தன் வீட்டின் எதிரே இருக்கிறார்கள்.. நேற்று என்னை திட்டிய பெண் என புரிய, அந்த பெண்ணை பார்க்காது.. அழைத்த பெரியவரை பார்த்தான் நீலன்.

மயூராவின் தந்தை “சர், பெண் எதோ தெரியாமல் பேசிட்டா.. குழந்தை விழவும் கொஞ்சம் டென்ஷனில் பேசியாச்சு.. நீங்க மனசில் ஏதும் வைக்க வேண்டாம்..” என்றார் தனமையாக.. அவரின் குரலில் மன்னிப்பு கேட்க்கும் பாவமில்லை, மாறாக.. யாரையும் பகைத்துக் கொள்ள எண்ணவில்லை போல.. சுமுகமாக பேச முற்படுகிறார்.. என தோன்றியது நீலகண்டனுக்கு.

நீலகண்டனும் “பரவாயில்லை ங்க.. நீங்க பாருங்க” என சொல்லி தம்பியிடம் தலையசைத்து விடைபெற்றான்.

மயூராவிற்கு, அவன் தன்னை பார்க்காதது கொஞ்சம் உறுத்தியது.. ‘ப்பா கெத்தோ’ என எண்ணிக் கொண்டிருந்தாள்.

மயூராவின் தந்தை பெயர் ரவி. அவர், இப்போது குகனை பார்த்து “யாரு உங்க.. சொந்தமா” என்றார்.

குகன் “என் அண்ணன்தாங்க.. வண்டி ரெடி…” என சொல்லி அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து.. ஐந்து நிமிடம் அப்படியே விட்டான்.

இப்போது ரவி “இங்க வந்து ஒருவாரம்தான் ஆகிறது. அப்படியே வண்டி எடுக்கவேயில்லை, அதான் ஸ்டார்ட் ஆகலை.. இன்னிக்குதான் பொண்ணு வேலைக்கு போகனும்.. அதான்.. நீங்க எந்த பிளாட்” என்றார்.

இவன் பிளாட் எண் சொல்லவும்.. ‘இதோ.. அதோ’ என கணக்கு கேட்டு.. பேசி பார்க்க.. “ஓ.. எதிர் பிளாட்டோ..” என சிநேகமாக சிரித்தார்.

குகன் பேச தொடங்கினான் “அப்படியா.. நீங்க என்ன பண்றீங்க” என்றான்.

ரவி “நான் ஸ்கூல் டீச்சர். இப்போ ரிட்டயர்டு. பெண் இப்போது இங்கே ஒரு டான்ஸ் டீச்சரா வொர்க்கில் சேர போகுது.. அதுதொட்டு, நாங்கள் இங்கே வந்தது..” என்றார்.

குகன் “ஓ.. நாங்க இங்கதான் சூப்பர்மார்கெட் வைச்சிருக்கோம்.. இப்போதான் ஸ்டார்ட் பண்ணோம் புதுசா” என ஆரம்பித்து பேச தொடங்கினான்.

அவரும் “அப்படியா.. எங்கே.. “ என கேட்டுக் கொண்டார்.

குகன் இப்போது வண்டியை ஆப் செய்து மீண்டும் ஸ்லெப் ஸ்டார்ட் செய்ய, வண்டி ஸ்டார் ஆகியது. 

குகன் இப்போது சிரித்துக் கொண்டே விடைபெற்றுக் கிளம்பினான்.

இப்போதுதான் ரவி “இது என் பெண் மயூரா” என அறிமுகம் செய்தார், தன் பெண்ணை. இவன் ஹலோ சொல்ல.. மயூராவும் சிரித்து ஹாய் சொல்ல.. ரவி “நன்றிங்க.. தேங்க்ஸ்..” என நூறுமுறை நன்றி சொன்னார்.

குகன் “போதும், கடைக்கு வாங்க.. எல்லாம் இருக்கும்.. கேரளா அரிசி கூட அங்கே உண்டு, வாங்க” என சொல்லி சிரித்து விடைபெற்றான்.

ரவி சிரித்துக் கொண்டே “வரன் வரன்..” என பெண்ணை அழைத்துக் கொண்டே கிளம்பினார்.

குகன் கடைக்கு வந்தான். நீலகண்டன் பேங்க் சென்றிருந்தான். 

அடுத்து இயல்பாய் நாட்கள்  கடந்தது.. வேலைகள் நடந்தது. இரண்டு மூன்று நாட்கள் குகனோடு வேலை சென்றுது நீலகண்டனுக்கு. குகனை கடையில் வைத்துவிட்டு.. மாலையில் சிற்றுண்டி போடுவதற்கு ஆட்களை தேடினான்.. அது குறித்து அவனின் வேலை சென்றது.

காலையில் அண்ணன் தம்பி இருவரும் வரும் போது அந்த பெண் மயூராவும் அங்கே வண்டியோடு நின்றாள். குகன் “குட் மோர்னிங்.. கிளம்பியோ..” என பேசி சிரித்து கடப்பான்.

நீலகண்டன் கண்டுக் கொள்ளவே மாட்டான். அந்த ஸ்பெண்டரை.. துடைத்து.. முன்னாடி விளக்கில் இருக்கும் தூசியை ஊதிவிட்டு.. ஹெல்மெட் அணிந்துக் கொண்டு.. கிளம்பிவிடுவான். அது என்னமோ மயூராவிற்கு ‘ஒருமாதிரி இருந்தது அதென்ன.. பார்க்காமலே போவது’ என தாக்கம் அவளிடம் வந்தது இந்த இரண்டு நாளில்.

குகன், அண்ணனின் உதவிக்கு என வந்தாலும்.. பாதி நேரம் அதியமான் கடையில்தான் நின்றான்.. அவரிடம் பேசிக் கொண்டே இருந்தான். அன்று ஒருநாள் மதியம் அவர் வீட்டிற்கு உண்பதற்கு அழைக்கவும், சென்றான். அப்போதுதான் அதியமான் “ஏன் பா.. கண்ணனை பார்த்தீங்களா” என்றார்.

குகன் “தெரியலை அங்கிள்.. எல்லாம் அண்ணன் பார்த்துக்குவான்” என்றவன் உணவில் கவனமானான்.

அதியமானுக்கு நாம் இதை கேட்டிருக்க கூடாதோ என தோன்றியது. அமைதியாக அதன்பின் ஏதும் பேசாமல் உண்டார். 

குகனுக்கு, உணவு பிடித்து போகிற்று “ஆன்ட்டி, நீங்களும் எங்க வீட்டுக்கு ஒருநாள் வாங்க, என் அண்ணன் சூப்பரா சமைப்பான்.. ஒருநாள் எங்க வீட்டில் விருந்து. சரியா..” என வாக்குறுதி வாங்கிக் கொண்டான்.

பார்வதி “ஐயோ, பசங்க சமைச்சி நான் சாப்பிடறதா.. நீ உங்க அண்ணனை கூட்டிட்டு ஒருநாள் வா, சாப்பிட.” என்றார்.

குகன் “ம்… தேங்க்ஸ் ஆன்ட்டி.. கண்டிப்பா அவன்கிட்ட சொல்றேன். ஆனால், அவன் வருவானா தெரியாது. நான் வருவேன்.. எனக்கு சாப்பாடு போடுவீங்கல்ல” என்றான்.

பார்வதி “கண்டிப்பா இதென்ன கேள்வி.. எப்போ ஊருக்கு வந்தாலும், இங்க வந்திடு சாப்பிட சரியா” என்றார் பொறுமையானக் குரலில்.

குகன் சிரித்துக் கொண்டே “எஸ் கண்டிப்பா வரேன்.” என்றான்.

இன்று விடுமுறை. மதியம் வரை கடை திறந்து வைத்திருந்தனர்.. குகன் “அண்ணா.. ஈவினிங் வந்து கடையை ஓபன் பண்ணிக்கலாம்.. கொஞ்சம் எல்லாரும் ரெஸ்ட் எடுக்கட்டுமே..” என்றான் மதியம் இரண்டு மணிக்கு.

எப்போதும் அப்படி நீலகண்டன் விடமாட்டான்.. அதுவும் சண்டே நாளில்தான் கூட்டம் அதிகம் வருமென கடையை அடைக்க மாட்டான். தம்பி இப்படி கேட்கவும் தட்ட முடியாமல் “சரி ஐந்து மணிக்கு திறந்திடுங்க..” என சொல்லி அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

குகன் வீடு வந்ததும்.. அப்படியே சோபாவில் சாய்ந்தான் “டாயர்டா இருக்கு..” என்றபடி.

சற்று நேரம் சென்று குகன் “நீலா… உனக்கு கல்யாணம் பண்ணலாமா” என்றான்.

அண்ணன் ‘என்ன திடீர்ன்னு’ எனுமாறு பார்த்துவிட்டு, இவன் விளையாடுகிறான் என எண்ணி.. உணவை எடுத்து வைக்க சென்றான்.

குகன் “உட்காரு அண்ணா… இப்போ நான்தான் உனக்கு இருக்கேன்.. அதனால, நான்தானே உனக்கு எல்லாம் செய்யணும்.. மேட்ரிமோனில என்ட்ரி பண்ணிடவா.. சொல்லுண்ணா” என்றான்.

நீலகண்டன் “பசிக்குது.. நீதானே எனக்கு இருக்க.. எங்க சாப்பாடு போடு பார்க்கலாம்” என்றபடி தட்டெடுத்து அமர்ந்தான் அண்ணன்.

குகன் “விளையாடாத.. சொல்லு உனக்கு எப்படி பொண்ணு வேண்டும்.. வேலைக்கு போகனுமா.. இல்லை வீட்டில் இருக்கனுமா.. என்ன படிச்சிருக்கணும்.. உன் ஹைட் என்ன..” என கேட்டுக் கொண்டே லேப்டாப்பில் எதையோ செய்துக் கொண்டே கேட்டான்.

பின் குகன், எங்கோ எழுந்து சென்றான்.. கப்போர்ட் திறந்து எதையோ எடுத்து வந்து.. விவரங்களை எல்லாம் நிரப்பினான்.

நீலன் “இரு இப்போதானே கடையை ஓபன் செய்திருக்கோம்.. கொஞ்சநாள் ஆகட்டுமே” என்றான்.

குகனும் “அதான் சொல்றேன். நமக்கு என்ன சொந்தமா பந்தமா… செலவு ஆகும்ன்னு பயப்பட.. எண்ணி நாலுபேர் வர போறாங்க.. அதுக்கு எதுக்கு இந்த கதை.. சும்மா,. இப்போ ரெஜிஸ்ட்டர் செய்து வைப்போம்.. வரும் போது பார்த்துக்கலாம்” என்றான்.

அண்ணன் “வேண்டாம் டா.. ரெஜிஸ்ட்டர் எல்லாம் இப்போது செய்யாத.. அதுக்கு வேற காசு கேட்பான்” என்றான்.

குகன் “அப்புறம் ஓசியிலா கொடுப்பாங்க.. டேய் சொந்த வீடு இருக்கா” என்றான், வேண்டுமென்றே கேட்க்கிறான்.

இப்போது அண்ணன் முறைத்தான் “கேட்க்கிறாங்க பா.. என்ன சொல்ல” என்றான், சிரித்துக் கொண்டே..

நீலகண்டன் ஒன்றும் சொல்லவில்லை.

குகன் “இருக்குன்னு போடுவோம்..” என்றான் கிண்டலாக. தொடர்ந்து “நாம ஒரு த்ரீ பெட்ரூம் பிளாட்க்கு மாறிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்.. பொண்ணு பார்க்க வசதியா இருக்கனுமில்ல..” என்றான்.

நீலகண்டனின் முகம் மாறியது.. எப்போதும் போல மிஷின் மோட் வந்துவிட்டது இப்போது. 

அதை பார்த்த குகன் “இப்படி உர்ன்னு இருந்தா.. எப்படி, கல்யாணம் நடக்கும் கொஞ்சம் சிரி..” என்றான்.

அண்ணன் அசையவில்லை.

குகன் தங்களின் எல்லா விவரங்களையும் கொடுத்தான், அண்ணனின் பெயரை ரெஜிஸ்ட்டர் செய்தான். இப்போது குகன் “அண்ணா, எத்தனைநாள் இப்படியே இருப்ப.. இப்போவெல்லாம் ரொம்ப தனியா இருக்க நீ.. எனக்கு கஷ்ட்டமா இருக்கு.. கொஞ்சம் யார்கூடவாது பேசு.. சிரி.. என்னமோ நீ எல்லார் மாதிரியும் ப்ரீயா இல்லையோன்னு தோணுது. நீ ஜெயிச்சிட்ட.. சொந்த ஊரில் சொந்த இடத்தில் வந்து உட்கார்ந்துட்ட.. வேற என்ன வேண்டும் உனக்கு.. உனக்கான வாழ்க்கையை கொஞ்சம் பாரேன்.. எங்கையாவது டூர் போ.. தண்ணியாவது அடி.. என்ஜாய் பண்ணு.. ஏன் இப்படி கல்லு மாதிரி இருக்க..” என்றான்.

நீலகண்டன் “போடா.. போய் சாப்பிடு, நான் கொஞ்சம் இஞ்சினியர் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.

தம்பிக்கு என்னமோ ஆற்றாமையாக இருந்தது.. ‘எதுக்கு ஓடுறான், யாருக்காக ஓடுறான்.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாமே..’ என செல்லும் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இரவு குகன், டிக்கெட் புக் செய்துக் கொண்டு சென்னை கிளம்பினான். அடுத்த தான் ஒரு பெரிய வெடிகுண்டோடுதான் வருவோம் என தெரியாமல் அண்ணன்மேல் கோவமாக ஊருக்கு கிளம்பினான்.

அண்ணனுக்கு சிரிப்புதான் வந்தது “நான் வருகிறேன் ட்ராப் செய்ய” என்றான். குகன் “வேண்டாம் அந்த கடையை கட்டிடே அழு” என்றபடி டாக்ஸி புக் செய்து கிளம்பிவிட்டான்.

நீலகண்டன் ‘அவன் இப்படிதான் சின்ன பையன் மாதிரி இன்னமும் இதுகெல்லாம் கோவம் வருது அவனுக்கு’ என எண்ணியபடி கடையை சாற்றிவிட்டு வீடு வந்தான்.

குகன் கிளம்பவும் அன்று வந்த எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது நீலகண்டனுக்கு. இந்த நேரத்தில் அழைப்பா.. ஏற்கலாமா, வேண்டாமா.. என எண்ணம் அவனுள். நீலகண்டனுக்கு ஏற்கவே மனதில்லை. அமைதியாக இருந்தான். மீண்டும் அழைப்பு வர.. ஏற்று, காதில் வைத்தான்.

அன்று பேசியவர்தான் பேசினார்.. “தம்பி, ரொம்ப முடியலைங்க தம்பி.. ஒரெட்டு வந்து பார்த்துட்டு போயிடுங்களேன்..” என்றார்.

நீலகண்டனுக்கு அந்த குரலை தட்டவே முடியவில்லை “ம்.. சரிங்க.. நீங்க அட்ரஸ் அனுப்புங்க, நாளைக்கு வரேன்” என்றான்.

அன்று இரவு, குகனும் இல்லாமல்.. மனது அழுத்தமாக இருந்தது நீலகண்டனுக்கு. தம்பியோடு உண்டுவிட்டான். அதனால், இப்போது லேப்டாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான்.

மறுநாள் எப்போதும் போல எழுந்து விட்டான். இன்று தம்பி இல்லாமல் போக.. எதையோ மிஸ் செய்யும் எண்ணம்.. பொறுமையாக இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தான்.. சமைக்கும் எண்ணம் வரவில்லை.. ஹாலில் தரையில் அப்படியே மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தான்.. நேற்று தம்பி பேசியது எல்லாம் நினைவு வந்தது.. ‘ஏன் இப்படி இருக்கிறேன் நான்..’ என தோன்றியது.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ.. குகன் இப்போது மெஸ்சேஜ் செய்திருந்தான் ‘ரீச்சீடு ஹோம்..’ என.

அப்போதுதான் நீலகண்டன் எழுந்தான். குளித்து வந்தான்.. பூஜை அறையில் பூ போட்டு விளகேற்றி வந்தான்.. உடைமாற்ற தனதறைக்கு செல்ல.. அங்கே பால்கனியில் அந்த பெண் குழந்தையோடு நின்றிருந்தாள்.. பாட்டு ஏதும் கேட்டகவில்லை இன்று. 

என்னமோ அங்கே பார்க்க பிடிக்காதவனாக பால்கனி திரையை இழுத்துவிட்டு.. ட்ராயர் அணிந்துக் கொண்டு.. சமையலறை சென்றான்.

காய்கறி வகைகள்.. கொஞ்சம் நூடூல்ஸ்.. சாஸ் வகைகள்.. காரம் உப்பு சேர்த்து குக்கரில் வைத்தான். மதியத்திற்கு ஏதும் சமைக்கவில்லை.. மீண்டும் வந்து லாப்டாப்பில் அமர்ந்துக் கொண்டான்.

உண்டு கீழே வந்தான்.

கீழே வார முதல் நாள்.. மயூராவின் வண்டியும் மக்கர் செய்துக் கொண்டிருந்தது. இன்று அவள் புடவை அணிந்திருந்தாள்.. அதனால், புடவையை தூக்கி சொருகிக் கொண்டு, வண்டியை முயன்று உதைத்தாள்.. ம்கூம்.. ஸ்டார்ட் ஆகவில்லை.

நீலகண்டன் வந்து தனது பழைய ஸ்பெண்டரை துடைத்து.. ஊதி.. ஏறி அமரும் வரையும் அவளின் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. பொறுக்க முடியாமல் நீலகண்டன் வந்து நின்றான் அவளின் அருகில்.. “நகருங்க..” என்றான்.

மயூரா தள்ளி நின்றாள்.. ஒரே தம்மில் கிக்கர் அடித்து ஸ்டார்ட் செய்தான் நீலகண்டன்.. வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் கொண்டே நின்றான் ஐந்து நிமிடம். வண்டி ரெடி எனவும் ஆப் செய்து.. தனது வண்டி நோக்கி சென்றான்.

மயூரா “தேங்க்ஸ்” என்றாள்.

நீலகண்டன் ‘இதே வேலையா போச்சு..’ என எண்ணிக் கொண்டு “அடுத்தமுறை.. உங்க ஹஸ்பண்ட் வந்து ஸ்டார்ட் பண்ண சொல்லுங்க..” என்றான் லேசான புன்னகையோடு.

மயூரா விருட்டென நிமிர்ந்து “என்னது.. ஹஸ்பெண்ட்’டா.. அப்படி எல்லாம் யாரும் இல்லை” என தன் முந்தாணியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு “தேங்க்ஸ்.. சாரி உங்க நேம்” என்றாள், மிதமாக சிரித்துக் கொண்டே.

நீலகண்டன் ஏதும் சொல்லாமல் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்.

மீண்டும் அவளுக்கு என்னமோ போலானது.. அவளின் விகாசித்திருந்த முகம், வாடி போனது..  ‘என்ன பண்ணிடுவாங்க இவரை.. பேர்தானே கேட்டேன்..’ என ஒருமாதிரி தொண்டையை அடைத்து.. சட்டென நிகழ்ந்துவிட்ட அவமானம்.. அவளுக்கு வருத்ததையும் கோவத்தையும்  தந்தது. மனதில் ‘இனி இவரை பார்க்கவே கூடாது.. எந்த பகவதி,.. இவரை என் கண்ணிலே காட்டாதே’ என வேண்டிக் கொண்டு கிளம்பினாள்.

Advertisement