Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

4

நீலகண்டன், அதியமான் சென்றதும் அமைதியாக அமர்ந்து வேலையை பார்க்க தொடங்கிவிட்டான். அவனுக்கு அவர் பேசி சென்றது எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.. தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டான்.

மனதில் ஒரு அழுத்தம்தான்.. ஆனால், அவனை அது ஒன்றும் செய்யவில்லை. ‘என் வேலையை தவிர எதுவும் பெரிதல்ல எனக்கு’ என அமர்ந்துக் கொண்டான்.

ஒருமணி நேரம் சென்று புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.. அதியமான் சொன்னது போல தன் மாமாவாக இருக்கும் என எண்ணிக் கொண்டே போனை எடுத்தான்.. நீலகண்டன்.. “ஹலோ” என்றான், இறுகிய குரலில்.

அந்த பக்கம் “ஹலோ, வள்ளி அத்தை பையன் தானுங்க..” என கேட்டது ஒரு ஆண்குரல்.

நீலகண்டன் “ஆமாம். நீங்க” என்றான் அதே இறுகிய குரலில்.

தொடர்ந்து அந்த நடுத்தர வயது மனிதர் “நான் கண்ணன் சித்தப்பா வீட்டிலிருந்து பேசறேனுங்க.. சித்தப்பாக்கு உங்களை பார்க்கணுமாம்.. வர சொல்றாருங்க..” என்றான்.

நீலகண்டனின் தாய்மாமா கண்ணன். எனவே மருமகன் நீலன் “ஏன்” என்றார் ஒரே வார்த்தையில்.

இந்த உரையாடலை தொடங்கியவருக்கு, என்னமோ போலானது.. இது உறவில் தொடங்கும் பேச்சு.. எதோ நண்பர்களோ தொழில்முறையிலோ இல்லை பேசுபவர். உறவுக்காறார். நீண்ட காலமாக பிரிந்திருந்த உறவு.. தன் உடல்நலமில்லாத போது.. பேசும் ஒரு அசாத்திய சூழல். அதிலும், அவருக்காக.. மற்றவர் பேசும் போது இந்த ‘ஏன்..’ என்ற வார்த்தை தவறுதானே.

ஆனால், அந்த இயந்திரனுக்கு அப்படி ஒன்றும் தவறாக தெரியவில்லை போல.. “சொல்லுங்க” என்றான் அதே குரலில்.

பேசியவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார், பின் மெல்லிய குரலில் “அதுங்க.. இந்த ஒருவாரமாக ரொம்ப முடியலைங்க.. ஒரு கிட்னி முன்னாடியே வேலை செய்யலை.. டயாலிசீஸ் பண்ணிகிட்டுதான் இருக்கோம். இப்போ இரண்டாவது கிட்னியும் எதோ ப்ரோப்ளம் போல.. டெஸ்ட்க்கு கொடுத்துட்டு வந்திருக்கோம்.. நேற்றுதான் ஹாஸ்பிட்டலிருந்து வந்தோம். டோனர் தேடிகிட்டு இருக்கோம்.. நீங்க வந்தது தெரியும். அப்போவே பார்க்கனும்ன்னு சொன்னாங்க.. இப்போ வீட்டில்தான் இருக்காங்க.. பெரிதாக நடமாட்டம் இல்லைங்க.. ஒரெட்டு வந்து பார்த்துட்டு போயிடுங்க” என்றார் சின்ன குரலில், எங்கே நீலகண்டன் வராமல் போயிடுவாரோ என விளக்கினார்.

நீலகண்டன் “ம் சரிங்க.. பார்த்துட்டு சொல்றேன்.. வைக்கட்டுங்களா” என்றவன் வைத்துவிட்டான் போனை.

அது முதல் நீலகண்டனுக்கு மனது ஒருநிலையில்லை. சலித்துக் கொண்டது மனது. ‘இப்போது எதுக்கு கூப்பிடுறாங்க..’ என சலிப்பாக வந்தது. ‘எதுக்கு என்னை பார்க்கணும், அதான்.. அம்மாவை விட்டுட்டாரில்ல.. இப்போ எதுக்கு கூப்பிடுறார். கஷ்ட்டபட்டது நாங்க.. இப்பவும் நாங்க அவரை தொந்திரவு செய்யலை.. ஆனா, எனக்குதான் கஷ்ட்டம்.. கடைசி நேரத்தில் நாங்க வந்து பார்க்கலைன்னு.. ச்ச…’ என சலித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். 

கடையில் பில்லிற்கு ஆட்கள் வந்துக் கொண்டே இருக்கவும்.. அவனால் என்னமோ முடியவில்லை.. அதிசியமாக, அசதியாக உணர்ந்தான் நீலகண்டன். இறுகி இருப்பவன் எரிச்சலாக “கோகுல்.. “ என்றழைத்தான் சத்தமாக.

அதியமான் ஏற்பாடு செய்திருந்த பையன் இங்கே வேலை செய்கிறான்.. டிப்ளமோ முடித்திருக்கிறான்.. இளையவன் இருபத்தி இரண்டு வயதுதான்.. சுறுசுறுப்பாக இருப்பான்..  எல்லா வேலையும் பார்ப்பான். சிஸ்டம் வேலையும் செய்வான்.. லோட் இறக்கவும் செய்வான்.. நீலகண்டனுக்கு அவன் இருபது பெரும் உதவி. இந்த  நாட்களில் கொஞ்சம் அவனை பிடிக்கவும் செய்திருந்தது. எனவே, எதுவாக இருந்தாலும் கோகுல்தான் அவனுக்கு. 

இப்போதும் அப்படியே, நீலகண்டன் “பார்த்துக்க.. நான் வீட்டுக்கு போறேன்.. கூப்பிடுறேன்” என்றவன். இதுவரை வசூல் ஆனத் தொகையை மட்டும் கணக்கு செய்து, எடுத்துக் கொண்டு பதினைந்து நிமிஷத்தில் கிளம்பிவிட்டான்.

தன்னுடைய ஸ்பென்டர் வண்டியை எடுத்துக் கொண்டு.. நேரே வீட்டிற்கு வந்தான்.. தங்களது பார்கிங்கில் வண்டியை நிறுத்தினான். 

எதோ ஒரு குழந்தையின் சத்தம் “ஹா.. ஆ… “ என எதோ குழந்தை இருப்பதற்கான சத்தம் இவன் காதுகளை நிறைத்தது.

சுற்றிலும் பார்த்தவனுக்கு.. தனக்கு பின்னால் அங்கே, இவன் வண்டி  நிறுத்திய இடத்திலிருந்த தூணில், ஒரு சிறுவன்.. மூன்று வயது இருக்கும்.. தன்னை மறைத்துக் கொண்டு.. மொத்த பற்களையும் காட்டிக் கொண்டு.. யாரிடமிருந்தோ மறைந்துக் கொள்ளும் பாவனையில் நின்றிருந்தது. ஆனால், அந்த சிரிப்பு மட்டும் நிற்கவில்லை இன்னமும்.. குதூகலமாக சிரித்துக் கொண்டே மறைந்து நின்றது.

நீலகண்டன்.. அந்த சிறுவனை பார்த்தான். இயல்பாக ஒரு குழந்தையை பார்த்ததும் ஒரு இலகு தன்மை வரும் முகத்தில்.. அருகில் யாருமில்லை என்றால்.. ‘யாருடைய குழந்தை’ என தோன்றும் இயல்பாக. இவனுக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை போல.. போனை எடுத்து பார்த்துக் கொண்டே.. குழந்தையை கண்டுக் கொள்ளாமல்.. இவன் லிப்ட் நோக்கி செல்ல எத்தனிக்க.. இவன் இரண்டடி எடுத்து வைத்திருப்பான்.. அந்த சிறுவன் “ஹா.. ஹா… ஞா..ன் இ..வ்.. வி.. ட… ஸீ.. ஞா…ன்” என சிரித்துக் கொண்டே தன் ஷூ கால்கள் காற்றில் பறக்க.. யாரரையோ நோக்கி ஓடியவன்.. ‘பொத்தென’ கீழே விழுந்து அழுகை.. 

எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

நீலகண்டன் அழுகை சத்தம் கேட்டு.. திரும்பி குழந்தையை தூக்க வந்தான்.. அப்போது, பக்கவாட்டில் உள்ள தூணிலிருந்து இரண்டு பிள்ளைகள்.. ஓடி வந்தது குழந்தையை நோக்கி.. சரி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என எண்ணி நீலகண்டன் திரும்ப.. அவன் புஜத்தில் இடித்துக் கொண்டு.. அவனை தாண்டி ஒருத்தி செல்ல எத்தனிக்க.. இப்போது அந்த பெண் தடுமாறி, சுதாரித்து நின்றாள். பின் “வழிமறிச்சு அங்கேனே நிக்கானு.. மரம்.. மரம்..” என திட்டிக் கொண்டே.. முன்னே சென்று..  விழுந்த குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டாள்.

நீலகண்டனுக்கு என்ன நடந்தது.. ஏது நடந்தது என புரியவில்லை.. இப்போது ஒருநிமிடத்தில் எல்லாம் விளங்க, தன்னை திட்டிய பெண்ணை முறைத்தான்.. அந்த பெண் திரும்பி நின்றுக் கொண்டு குழந்தையின் கால் கைகளை தடவிக் கொடுத்துக் கொண்டு.. மற்ற இரண்டு பிள்ளைகளிடம்.. “எந்த ஆயி..” என விசாரித்துக் கொண்டிருந்தாள்.

நீலகண்டனுக்கு கோவம்தான்.. ஆனால், நான் வேணும்ன்னே செய்யலையே என தோன்ற “ஹெலோ..” என்றான் அந்த பெண்ணை பார்த்து.. அந்த பெண் திரும்பவும், நீலகண்டன் “என்ன சொன்னீங்க..” என்றான் அந்த பெண்ணை நோக்கி வந்துக் கொண்டே.

அந்த பெண் முகம்.. குழந்தை விழுந்ததிலேயே பதறியதாக இருக்க.. இவன் திரும்பி கேள்வி கேட்டதில்.. ‘யார் இவன்’ என புரியாமல் பார்த்து.. நின்றாள். 

நீலகண்டன் அருகில் வந்து “நீங்கதான்  என்மேல இடிச்சிட்டு.. வந்தீங்க, நான்தான் திட்டனும்.. நீங்க என்ன சொன்னீங்க மரமா..” என்றான் விடாமல். அந்த பெண் கொஞ்சம் பயந்து போனாள்.

இப்போது, வளர்த்த இரண்டு பிள்ளைகளும் விழித்து நின்றது.. நீலகண்டன் எதோ பேசவும் ‘பெரியவர்களிடம் சொல்லுவதற்கு’ ஓடியது. 

அந்த குட்டி பையன்.. அழுகையை நிறுத்தி நீலகண்டனை பார்த்ததுக் கொண்டிருந்தான், மீண்டும் நீலகண்டன் “நீங்க இடிச்சிட்டு, சாரி கூட சொல்லல.. என்னை திட்றீங்க..” என்றான். ‘நீ, சாரி சொல்லாமல் போக மாட்டேன்’ எனுமாறு நின்றான்.

அந்த பெண்ணுக்கு உண்மையாகவே அவன் உயரத்தை பார்த்து பயம் வந்தது.. “அதுஒக்கே.. அ..துக்கே..” என தடுமாறினாள்.

நீலகண்டன் அந்த பெண்ணின் மிரண்ட விழிகளை இப்போதுதான் பார்த்தான்.. மைதீட்டிய நயனங்கள் இரண்டும்.. நீண்டு.. மிரண்டு.. இமைக்காமல் இவனையே பார்க்க.. நீலகண்டன் கொஞ்சம் தளர்ந்தான்.. “கேர்புல்..” என்றவன் ஏதும் பேசாமல் லிப்ட் நோக்கி சென்றான்.

அவனுக்கு குழப்பம்.. இல்லையென்றால், இந்த பெண்ணிடம் நின்று பேசியிருக்க கூட மாட்டான்.. எதோ அவள் திட்டவும் வேகத்தில் பதில் பேசிவிட்டான். ஆனால், அவள் பயந்தது என்னமோ செய்தது.. வந்துவிட்டான்.

தன் வீட்டிற்கு வந்ததும்.. மீண்டும் தன் மாமாவின் எண்ணம் வந்துவிட்டது. அப்படியே அமர்ந்துக் கொண்டான், வேலை ஏதும் ஓடவில்லை..

அங்கே கீழே அந்த பெண் முகம் சிவக்க நின்றிருந்தாள்.. இவள் பதட்டத்தில் திட்டிவிட்டாள்.. ஆனால், அவன் அதை பேசி.. இல்லை, அதை கொண்டு மிரட்டிவிட்டு சென்றது அவளுக்கு என்னமோ போல ஆனது. 

இப்போது அவளின் தந்தை வந்தார் “எந்தா மவளே.. “ என தொடங்கி விசாரித்தார். (எல்லாம் மலையாளம். நமக்கு தமிழில்தான் வரும்.. ப்ளீஸ்.. இதை மலையாளமா நினைச்சி படிச்சிடுங்க!..)

பெண்ணும் எதையும் மறைக்காது நான்தான் முதலில் ஓடி வந்த அவசரத்தில் எதிரில் நிக்கவும் திட்டிட்டேன்.. அதான் திட்டிடிட்டு போறார். என சொல்லவும்.. தந்தை “நீ கவனமாக இருக்க வேண்டாமா..” என்றார் சாந்தமானக் குரலில்.

பெண் அமைதியாக இருந்தாள்.

மீண்டும் தந்தை “மின்னு.. இங்க நாம நிம்மதியா இருக்க வந்திருக்கோம்.. ப்ளீஸ் ஆரம்பமே பிரச்சனை வேண்டாம்.. திரும்ப அவரை பார்க்கும் போது சாரி சொல்லிடு.. ஓகே.. வா.. போலாம்.” என்றவர்.. கார் நோக்கி சென்றார்.

இரண்டு காரில் எல்லோரும் இருந்தனர்.. மின்னு.. என்கிற மயூரா இப்போது தன் தந்தையோடு முன்பக்கம் ஏறிக் கொள்ள.. ஒன்றன்பின் ஒன்றாக கார்கள் இரண்டும் கிளம்பியது.

நீலகண்டன் சோபாவின் சாய்ந்து கண்மூடிக் கொண்டான். அம்மாவின் நினைவு.. ‘ஏன் போகணும்’ என கேள்வி அவனுள். ‘எங்களுக்கு, அப்போதே அம்மாவினுடைய சொத்தை கொடுத்திருந்தால்.. நாங்களும் கொஞ்சம் கடனை அடைத்திருப்போம்.. இப்படி கஷ்ட்டப்பட்டிருக்க மாட்டோம்.. அம்மா பாவம், எல்லாம் இருந்தும்..’ என மனதில் அம்மா தன் உடல்நிலை முடியாத போது தன் அண்ணனை பற்றி சொல்லியது நினைவு வந்தது.

ஆனால், எப்போதும் ஏழை சொல் அம்பலம் ஏறாதே.. அப்படிதான் யாருக்கும் இது புரியாது தெரியாது. நீலகண்டனுக்கே வளர்ந்தபின்தான் தெரிந்தது. எனவே, அவனுக்கு கோவமே பிரதானமாக வந்தது.

நேரம் சென்றதே தெரியவில்லை. 

கோகுல் அழைத்தான் நீலகண்டனுக்கு.. “அண்ணா கடை பாதி ஷட்டர் இறக்கிட்டேன் அண்ணா.. கணக்கு பார்த்துட்டு இருக்கேன்.. காஷ் வீட்டுக்கு எடுத்துட்டு வரவா..” என்றான்.

மணி அப்போதே 1௦ நெருங்கிக் கொண்டிருந்தது.

நீலகண்டன் நேரத்தை பார்த்துவிட்டு “அதியமான் சர் இருக்காரா” என்றான். 

கோகுல் “ம்.. இருக்கார்.. ண்ணா” என்றான்.

நீலன் “நீ அவர்கிட்ட கொடுத்திடு.. அலையாதே.. நீ கிளம்பு, நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்றான்.

நீலகண்டன், அதியமானுக்கு அழைத்தான். அவர் அப்போதுதான் வண்டியை எடுத்தார்.. கோகுலும் வந்து நின்றான். பணத்தை கொடுத்தான் “அண்ணன் பேசுவார் சர்” என்றான்.

சரியாக நீலகண்டன் அழைக்கவும் அதியமான் கோகுலிடம் “உங்க முதலாளி.. மிலிடரி டா.. டையமுக்கு கூப்பிட்டான் பாரு” என பெருமையடித்துக் கொண்டே “நீ போ நான் பேசிக்கிறேன்.. இதில் எவ்வளோ இருக்கு” என கேட்டுக் கொண்டார்.

நீலகண்டன் போனை ஏற்று பேசினார். நீலகண்டன் ‘கோகுல் பணம் கொடுப்பான், நீங்க எடுத்து போங்க.. காலையில் கொண்டு வந்திடுங்க..சர்’ என்றான்.

அதியமானும் “சரிப்பா —தொகை இருக்கு” என தொகையை சொல்லி வைத்துவிட்டு கிளம்பினார்.

சற்று நேரத்தில் நீலகண்டனை, போனில் அழைத்தான் குகன் “அண்ணா, என்ன.. கடை சாத்திட்டியா” என்றான்.

நீலகண்டன் “ம்.. கோகுல்தான் இன்னிக்கு எல்லாம் பார்த்தான்..” என்றான்.

குகன் “என்ன ஆச்சு” என்றான்.

அண்ணன் மதியம் நடந்தது தொடங்கி.. தன் மாமாவின் உறவில் யாரோ அழைத்து பேசியது வரை சொன்னான்.

குகன் “என்ன செய்ய போற.. போய் பார்க்கலாமா” என்றான்.

நீலகண்டன் “தெரியலை.. பார்க்கலாம்” என்றான்.

குகனுக்கு தெரியும் அண்ணன் பற்றி. தன் தாய்மாமாவை பற்றி அன்னை இவர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அதியமான் சொல்லியதற்கு எல்லாம் மாறாக.. வேறாகாதான்.. இவர்களுக்கு கண்ணன் பற்றி தெரியும். எனவே, குகனுக்கும் தன் மாமாவின் மேல் கோவம்தான். அதனால், ஏதும் கேட்டாமல் தினப்படி வேலையான “சாப்பிட்டியா” என்றான் தம்பி.

நீலகண்டன் “இன்னும் இல்ல டா.. செய்யணும் ஏதாவது.. டயர்டா இருக்கு” என்றான்.

குகன் “என்ன.. மிஷினுக்கு டயர்டா..” என்றான் ஆச்சர்யமாக.

அண்ணன் “டேய்..” என்றான் சலிப்பாக.

தம்பி “இரு நான் ரெண்டுநாள் லீவ் போட்டிட்டு வரேன்” என்றான்.

அண்ணன் “டேய்… வேலையை பாருடா..” என்றபடி வைத்துவிட்டான் போனை.

நீலன் அதன்பிறகு சமைக்க என சென்றான்.. காய்கறி போட்டு உப்புமாதான் இன்று என முடிவெடுத்துக் கொண்டான், நேரம் ஆகிவிட்டதே. எனவே காய்கறி நறுக்க தொடங்கினான்.

உப்புமா, பப்பாளி.. தயிர்.. என தன் உணவை முடித்துக் கொண்டு.. ஹாலில் லேப்டாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான். அவன் இன்னமும் வேலை பார்க்கிறானே.. முடித்துக் கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் இருக்கிறதே.. எனவே அமர்ந்துக் கொண்டான்.

இரவு எப்போது உறங்கினானோ.. மறுநாள்  காலையில் எப்போதும் போல எழுந்துக் கொண்டான். காபி முடித்து, குளித்து.. மெல்லிய வேட்டி அணிந்துக் கொண்டு, பூஜை அறை சென்ரு தீருநீறு சின்னதாக வைத்துக் கொண்டான். பின், தன் அம்மாவின் படத்திற்கு முன் விளகேற்றி.. பிரிட்ஜ்ஜிலிருந்து பூ எடுத்து வந்து.. சாமி படத்திற்கு பூ போட்டு.. சற்று நேரம் அங்கே அமர்ந்தான். 

மனது தெளிவாக இருந்தாலும்.. மாமாவை எதற்கு சென்று பார்க்க வேண்டும் என ஓடிக் கொண்டே இருந்தது. அதை சமன் செய்ய.. அமர்ந்துக் கொண்டான், த்யானத்தில். அவனுக்கு வலுவான காரணம் இருக்கிறது அவரை பார்க்காமல் இருக்க.. ஆனால், எதோ ஒரு மனம் சொல்லுகிறது.. இல்லை, உறுத்துகிறது.. ‘எப்படி பார்க்காமல் இருப்ப..’ என உறுத்துகிறது. எனவே, அமர்ந்தான்.. த்யானத்தில்.

தியானம், உடற்பயிற்சி எல்லாம் அவனின் பழக்கம் இல்லை.. அதை பழக்கப்படுத்திக் கொள்ளவும் மாட்டான். அவனின் எண்ணம் எல்லாம் கடமையை.. வேலையை.. தொழிலை.. சரியாக செய்தால் போதும் எதற்கு, தனியே த்யானம் உடற்பயிற்சி எல்லாம் என எண்ணுவான்.

அனால், அவனின் அம்மாவிற்கு.. உடல் நலமில்லாத போது.. அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க த்யான வகுப்பை நாட சொல்லினர், மருத்துவர்கள்.

அப்படி அம்மாவை கூட்டி சென்ற போது.. தானும் கற்ற தொடங்கினான். அம்மாவிற்கு சொல்லிதர ஏதுவாக இருக்கும் என சென்றான். அதில்தான் ஓரளவு கற்றுக் கொண்டான்.. கொஞ்சம் ஓரிடத்தில் அமர்ந்து.. ஒன்றுமே இல்லா மனதை தேடுவது.. அதை நோக்கி தன்னை செலுத்துவது.. அவனுக்கு பிடித்தது. தினமும் அம்மாவை அந்த சின்ன சின்ன பயிற்சிக்கு பழக்குவான். தானும் செய்வான். ஆனால், அப்படி ஏதும் அவனின் அம்மாவை பிடித்து வைக்கவில்லை.. ‘பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என் கடமை முடிந்தது’ என வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் வள்ளி.

அம்மா இறந்த பிறகு தானாகவே சென்று, அடுத்த பயிற்சி என மூன்று பயிற்சிகள் கற்றுக் கொண்டான், நீலகண்டன்.

ஆனாலும் தொடர்ந்து செய்வதில்லை.. இப்படி, தான் சோம்பலாக உணரும் நாள்.. ப்ரீயாக இருக்கும் நாள்.. இல்லை, அம்மாவின் நினைவு தாக்கும் நாள்.. இப்படி அக்கேஷனாக.. அமர்ந்துக் கொள்வான் த்யானம் என.

அப்படி இன்றும் சற்று நேரம் அமர்ந்துக் கொண்டான். மெல்ல மூச்சை ஒருநிலைப் படுத்தி.. அவனின் சித்தம் அந்த மூச்சை கவனிக்கும் நேரம்.. எதோ சப்தம்.. இல்லை இசை.. அவனை கலைந்தது.. 

எதோ பாட்டு “தாலேலோ…”  அவனின் த்யானம்.. அந்த பாட்டு சப்தத்தை.. நோக்கி சென்றது..

பெண் குரலில்.. எதோ தமிழ் தெரிந்தும் தெரியாத மழலை குரலில்.. ராகமாக “தாலேலோ..

அவன் மோகநிலை கூட.. 

ஒரு யோக நிலை போலிருக்கும்..

யாரவனை தூங்கவிட்டார்..

ஆராரோ.. 

யாரவனை தூங்கவிட்டார்..

ஆராரோ..” என அந்த அதிகாலையில் காற்றில் மிதந்து வந்து சேர்ந்தது இவனை.

நீலகண்டனுக்கு அந்த பாட்டு என்னமோ செய்தது.. ‘என்ன இது இவ்வளோ சத்தமாக பாடுறாங்க..’ என கண்ணை திறந்தான்.

எல்லா இடம் வழியாகவும் வெளியே பார்த்தான். கண்டிப்பாக டிவி.. மியூசிக் பிளேயர் இப்படி ஏதும் தான் ஆன் செய்யவில்லை, எனவே இது வெளியே இருந்தான் வருகிறது என பார்த்தான்.

‘எங்கிருந்து வருகிறது.. ம்..’ என தனது திறந்திருந்த கதவை சென்று பார்த்தான்.. பின் தன் பால்கனி சென்று பார்க்க.. அங்கே நேற்று பார்த்த, அந்த பெண்.. குழந்தையோடு.. கையில் பால் கிளாஸ் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். குழந்தை பொறுமையாக குவளையிலிருந்த பாலை மெதுவாக குடித்துக் கொண்டிருந்தான்.

அவள் “ஆராரோ..” என முடிக்காமல் ஹம் செய்துக் கொண்டிருந்தாள். எதிர் பிளாட்.. வந்து நின்றால்.. பேசிக் கொள்ளும் தூரம்தான்.. முகம் தெளிவாக தெரிந்தது அவனுக்கு..  நைட் ட்ரெஸ்.. குழந்தையோடு.. காற்றில் மிதக்கும் கூந்தல்.. நேற்று போல் இன்று அஞ்சனம் இல்லை கண்களில்.. விடியலில்.. எதோ தேவதை என.. நின்றிருந்தாள், மயூரா.

பார்த்தவன் ‘இங்கதான் இருக்காங்களா’ என எண்ணிக் கொண்டு, சமையலை கவனிக்க சென்றான்.

அப்போது அழைப்பு மணி ஒலித்து, அழைத்தது அவனை.

Advertisement