Advertisement

கணவன் இப்போது கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான்..  கையில் மாதுளை பழங்களோடு வந்தான். மனையாள் படுத்திருப்பதை பார்த்து “என்ன ரஞ்சனி.. இன்னும் தூக்கம் போகலையா..” என்றபடி கிட்சென் சென்று.. பழங்களை வைத்துவிட்டு வர.. மனையாளின் கண்ணீர் முகம்தான் கண்ணில் பட்டது கணவனுக்கு.

நீலகண்டன் அவள் சரிந்திருந்த பக்கம் சென்று, மனையாளின் அருகே கீழே அமர்ந்து “என்னாச்சு ம்மா… என்ன செய்யுது” என்றான்.

ரஞ்சனிக்கு இன்னமும் கண்ணீர்தான் பெருகியது.. ஏனென்று தெரியவில்லை.. தன்னை நினைத்து அவளுக்கே கோவமாக வந்தது. ‘அவர் இரவு வந்ததும் லேட்.. காலையில் எழுந்து கடைக்கும் சென்றுவிட்டு வந்துவிட்டார்.. ஏதாவது உண்பதற்கு செய்து வைத்திருக்கலாம்.. பாவம் அவர்’ என தோன்ற, கணவனின் இந்த கேள்வியில்.. இன்னும் கண்ணில் நீர்தான் வந்தது, பெண்ணுக்கு.

நீலகண்டன் “கால் வலிக்குதா.. முதுகு வலிக்குதா..” என்றான் அவளை எழுப்பி தன்மேல் சாய்த்துக் கொண்டு. ரஞ்சனி இப்போது எல்லாம் பில்ட்டில் நிற்பதால்.. அதிகம் அவளுக்கு கால்கள் வலிக்கும்.. வந்து சொல்லுவாள்.. சிலசமயம், நீலகண்டன் அழுத்தி விடுவான் அதனால் இப்போது வினவினான்.

ரஞ்சனிக்கு, கணவன் மேல் நின்ற கோவம் காணாமல் போல.. அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அழுகை.. ஏனென்றே தெரியாத அழுகை அழுதாள்.

நீலகண்டன் “என்னான்னு சொல்லு.. எதுக்கு அழற.. சாப்பிடலாம் முதலில், மாவு இருக்கா” என்றான்.

ரஞ்சனி “சாரி, எனக்கு முடியலை.. என்னமோ தலை  சுற்றுது.. கண்ணை மூடினா.. இருட்டா இருக்கு” என்றாள்.

கணவன் சிரித்தான் “கண்ணை மூடினா இருட்டாதான் இருக்கும்..” என குலுங்கி குலுங்கி சிரித்தான். என்னமோ அவனுக்கு, அப்படியோரு சிரிப்பு.

ரஞ்சனி “எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றேன்.. நீங்க இப்படி சிரிக்கிறீங்க..“ என கணவனை அடித்தாள்.

நீலகண்டன் சிரிப்பதை முயன்று நிறுத்தினான். ரஞ்சனி “நான்.. முன்போல இல்லை தானே, என்னமோ டல்லா இருக்கேன்..  எனக்கு எங்கையாவது போகனும் போலிருக்கு, கிட்சென் பக்கமே வர பிடிக்கலை..” என்றாள் பாய்ந்த குரலில். 

நீலகண்டன் “அது.. நீ பில்ட்டில் அதிகம் நிற்கற அதான். இன்னிக்கு உனக்கு புல் ரெஸ்ட்.. நான் பார்த்துக்கிறேன்.” என்றான், ஆறுதலாக.

ரஞ்சனி “நீங்களும் அப்படிதானே.. எப்போதும் அலைச்சல்தான் உங்களுக்கு.. நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்” என சொல்லி விருட்டென எழுந்தவள்.. எழுந்த வேகத்தில் தலை சுற்ற.. மீண்டும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். 

கணவன் “என்னாச்சு.. ரஞ்சி” என்றான். கண் திறக்கவில்லை பெண். நீலகண்டன் யோசனையாக “ரஞ்சி.. நீ இந்த மாசம் டேட் ஆகிட்டியா..” என்றான்.

ரஞ்சனிக்கு இப்போதுதான் மூளையின் செயல்பாடே வந்தது.. நிமிர்ந்து கணவனை பார்த்தாள். இருவருக்கும் பர்பரப்பானது.

அதன்பின் நீலகண்டன் செக் செய்யும் கிட் வாங்கி வந்தான். ரஞ்சனி பரிசோதித்தாள்.. அதில் இரண்டு கோடுகளை பார்த்தவள்.. இன்னும் ஆனந்தமாக அழுதாள். 

நீலகண்டனுக்கும் அப்படியே.. இறுக்கமாக தன்னவளை கட்டிக் கொண்டான். திருமணமாகி இரண்டு வருடத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத இந்த ஆனந்தம் அவர்களுக்கு நிறைவை தந்தது.

ஐஷ்வர்யா, வீடு வந்த போதே.. இருவருக்கும் ஆசை இருக்க.. அடுத்தடுத்து வந்த மாதங்களில் அப்படி ஏதும் விடை கிடைக்காமல் போனது. ஐஷ்வர்யாவும் முதல் பிறந்த நாளை கொண்டாடி இருந்தாள். அப்போது சென்று வந்த போது.. இன்னும் கணவன் மனைவி இருவருக்கும் ஏக்கம் அதிகமாகியது. 

கொஞ்சம் மனதளவில் இருவரும் குழந்தை வரத்தை எதிர்பார்த்திருந்தனர். அத்தோடு, அது இத்தனை மாதங்களாக ஏமாற்றத்தை கொடுத்திருக்க..  இப்போது எதிர்பாரா ஆனந்தத்தை தந்தது, இன்று. என்ன சொல்லி சந்தோஷத்தை பகிர்வது என புரியவில்லை நீலகண்டனுக்கு.. இறுக்கமான அணைப்பும்.. சின்ன சின்ன முத்தங்களுமாக தன்னவளை நனைத்துக் கொண்டிருந்தான். ரஞ்சனி, கணவனிடம்  தன்னை இழந்து நின்றாள்.

சற்று நேரத்தில் இருவருக்கும் உணர்வு  வர.. ரஞ்சனி “கங்க்ராட்ஸ் நீலா.. அப்பா ஆகிட்டீங்க” என்றாள் சிரிப்பும் வெட்கமுமாக.

நீலகண்டன் “தேங்க்ஸ்” என்றான்.

ரஞ்சனி “நானும் தேங்க்ஸ் சொல்லனுமா.. போங்க.. போங்க..  எனக்கு எப்போ டிரீட்..” என்றாள்.

நீலகண்டன் “அடி போடி.. ட்ரீட் போதுமா..” என்றான், சந்தோஷக் குரலில்.

ரஞ்சனியின் கண்கள் விரிந்தது ஆச்சர்யத்தில்.. “அப்பா ஆன உடனே பேச்சை பாருடா…” என வியந்தவள் “என்ன வாங்கி கொடுப்பீங்கன்னு பார்க்கிறேன்.. இப்போ சோறு வேண்டும்..” என்றாள்.

கணவன் சிரித்துக் கொண்டே தோசை ஊற்றினான்.. ரஞ்சனி அருகில் அமர்ந்து உண்ண தொடங்கினாள். பின் ரஞ்சனி பிடிவாதமாக “நான் உற்றுகிறேன்.. நீங்க சாப்பிடுங்க” என்றாள். நீலகண்டனும் அவள் போலவே அமர்ந்து உண்டான்.

பின் அருகில் இருந்த மருத்துவரை சென்று பார்த்து வந்தனர். அவர்கள் ஐம்பது நாட்கள் ஆகிற்று என ஸ்கேன் செய்து பார்த்தனர். மற்ற பரிசோதனைகள் எல்லாம் செய்தனர். குழந்தை நன்றாக இருப்பதாக சொல்லினர். தேவையான அறிவுரைகள் சொல்லி அனுப்பினர்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வரவே மதியமானது. இருவரும் நல்ல உணவகம் சென்று உண்டு வீடு வந்தனர். நீலகண்டன் தன் தம்பிக்கும் மைத்துனனுக்கும் அழைத்து விஷயத்தை சொன்னான்.

மாலையில் மாதவன் ஆர்பாட்டமாக வந்து தன் தங்கையை பார்த்தான். என்ன என்னமோ வாங்கி வந்திருந்தான்.. “ரஞ்சி..” என்ற அழைப்போடுதான் உள்ளேயே வந்தான். என்னமோ இப்போதுதான் உறவுகளின் அருமை தெரிவதால்.. இந்த புது வரவை ஆர்பாட்டமாக வரவேற்றான் மாதவன்.

மூவரும் பேசி பேசி தீர்ந்த்தனர். மாதவன் “வேண்டாம் பாப்பா.. இனி வேலைக்குன்னு ஏதும் போக வேண்டாம். அப்படி போகனும்னு நினைத்தால், நம்ம ஆபீஸ் வா.. இனி நீ ரெஸ்ட் எடு. நான் கண்மணி அக்காவை வேலைக்கு அனுப்பறேன்.. கொஞ்சநாள் இங்க இருக்கட்டும். நீ நல்லா ரெஸ்ட் எடு. சந்தோஷமா இரு.. அதுதானே இப்போது முக்கியம், நாங்க மத்ததை பார்க்கிறோம்” என்றான் அமர்ந்தலான குரலில். இதுதானே மாதவனின் பழைய குரல். தங்கையை அதட்டும் குரல். அதை கேட்டது தங்கைக்கும் சந்தோஷமாக இருந்தது.

நீலகண்டனும் ரஞ்சனியும் மதியமே இதை பற்றி பேசி இருந்தனர். கணவனும் அதையேதான் சொன்னான். அதனால், ரஞ்சனி வேலைக்கு செல்லுவதில்லை என முடிவெடுத்திருந்தாள்.

இரண்டுநாள் சென்று குகனும் அர்ச்சனாவும் குழந்தையோடு வந்து பார்த்தனர். அர்ச்சனா செல்ல மிரட்டலாக “நான் லீவ் போட்டுட்டு வர முடியாது.. நீங்க அங்க வந்து பத்துநாள் இருக்கணும், சொல்லிட்டேன்” என்றாள். குகன் அதை கண்களால் தன் அண்ணிடம் சொன்னான்.

ரஞ்சனி “கண்டிப்பா வரே அர்ச்சு.. ஐந்து மாதம் ஆகட்டும்.. வந்து உட்கார்ந்துகிட்டு.. உங்களை ஒரு வழியாக்குறேன்” என்றாள் சிரிப்போடு.

குகன் “க்கும்.. நீலா நீயும் கூடவே வந்திடுடா.. நம்மால சமாளிக்க முடியாது டா..” என்றான் நக்கலாக.

ரஞ்சனி “அதெல்லாம் முடியாது.. நான் தனியாதான் வருவேன்.. நான் கேட்கறதெல்லாம் வாங்கி தரனும்..  சொல்ற இடத்துக்கு எல்லாம் கூப்பிட்டு போகனும், சொல்லிட்டேன்” என்றாள் ஆசையான குரலில்.

அர்ச்சனா இருவரின் பேச்சையும் கேட்டு “என்னங்க அவ சும்மா சொல்றா.. நீ வா ரஞ்சனி, நான் பார்க்கிறேன், அப்படி என்ன வழியாக்குறேன்னு” என்றாள், திடமாக.

நீலகண்டன் ஐஷ்வர்யாவோடு ஐக்கியம் ஆகிவிட்டான். இவர்களின் பேச்சை காதில் வாங்கவில்லை. 

குகன் குடும்பம் கிளம்பியது.

அடுத்து, கண்ணனின் பெரியம்மா வந்து பார்த்தார் ரஞ்சனியை. ஏதாவது விசேஷ நாட்கள் என்றால் நீலகண்டன் தம்பதி அங்கே சென்று வருவர்தான். அதனால், வந்து பார்த்து சென்றனர்.

ரஞ்சனி வேலையை விட்டுவிட்டாள். வீட்டில் மாதவன் வேலைக்கு என கண்மணி என்ற பெண்மணி வந்தார். அதனால், நீலகண்டன் நிம்மதியாக வெளி வேலைகளை பார்த்தான்.

நீலகண்டன் நேரமாக வீடு வந்துவிடுகிறான். மாலையில் எங்கும் வெளியே செல்வதில்லை. மாதவன் பீல்டில் நின்றுக் கொள்கிறான்,  நீலகண்டன் நேரமாக வீடு செல்ல ஏதுவாக. 

நீலகண்டன் இப்போது பெரிய வருமானத்தை பார்க்கிறான். அவன் தேடிய அங்கீகாரம் அவனுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. ஊரில் அவன் கடையை தெரியாதவர்கள் இல்லை. அத்தோடு இப்போது மாதவனோடு ரியலேஸ்ட்டே பிஸினெஸ்.. கண்ணனின் மருமகன்.. என  ஒரு அங்கீகாரம். ஆக, நீலகண்டன் நிதானித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டான்.

அத்தோடு, உறவிலும் அரவணைக்கும் பாங்கு. உறவுகளிடம் புரிதல் அதிகமாகியது. நீலகண்டன் அனைவரையும் அரவணைத்து போவதும்.. அதற்கு ரஞ்சனி துணை நிற்பதும் உறவுகளை காத்துக் கொண்டது. அது நீலகண்டனுக்கு மட்டும் பலமல்ல.. குகன்.. மாதவன்.. நீலகண்டன் என எல்லோருக்கும் பலமானது. உறவு என்றும் பலமே.

தினமும் ரஞ்சனி கணவனோடு வாக்கிங் சென்றாள்.. நிறைய பேச்சுகள்.. குழந்தையை பற்றிய கனவுகள். நீலகண்டன் அதிகம் வாய் திறப்பதில்லை. ரஞ்சனிதான் வாய் ஓயாமல் பேசுவாள். அவனின் மொழி தனிமையில், தனக்கே உண்டான இறுகிய அணைப்பிலேயே தன் எண்ணத்தை அவளிடம் சொல்லிடும்.. மொழிதான். அவளுக்கும் அது புரிந்திடும். சொல் அவளினது.. செயல் அவனினது. இங்கே சத்தமான ரஞ்சனி தேவி ஆட்சிதான். ஆலகாலன்  செயல்வீரன் மட்டுமே. இருக்கட்டுமே.. யார் பேசினாள் என்ன.. இருவரும் சேர்ந்துதானே ஜொலிக்கின்றனர்.  

 “நான் பகல் இரவு..

நீ கதிர் நிலவு..

என் வெயில் மழையில்

உன் குடை அழகு..

என் உறக்கங்களில்..

நீ முதல் கனவு.. 

நீ வேண்டுமே..

எந்த நிலையிலும் 

எனக்கென நீ போதுமே..”

#$சுபம்$#

Advertisement