Advertisement

28

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

மாதவன், தினமும் கட்சி அலுவலகம் சென்று வருவான்.. அங்குள்ள வேலைகளை செய்ய தொடங்கினான்.. முன்போல.. ஆர்பாட்டம் ஏதும் செய்யவில்லை. ஆனால், அவனால், பழைய இடத்திற்கு வர முடியவில்லை. எல்லோருக்கும் இவனை தெரிந்தது.. பார்த்தனர் பேசினர்.. ஆனால், பின்னால் சென்று ‘தலைமைகிட்ட கொஞ்சம் நெருங்கினதும் என்ன ஆட்டம் போட்டான்.. இப்போது பாரு, கரண்ட் பில் கட்ட.. கணக்கு பார்க்கனு உட்கார்ந்திருக்கிறான்..’ என கொஞ்சம் நக்கலாகவும், வன்மமாகவும் அவனை பற்றி பேசத்தான் செய்தனர்.

மாதவனுக்கு சட்டையை பிடிக்கும் எண்ணம்தான்.. வேகம்தான் வெறிதான் வந்தது.. அப்படியும் ஒருமுறை அடிதடி ஆகியும் விட்டது. ரகு வேறு ஊரில் இல்லாமல் போக.. பேச்சு வார்த்தை இரு தரப்புக்கும் என நடக்கவே செய்தது. 

புதிதாக தலைமை கைகாட்டிய ஆட்கள் பக்கம் எல்லோரும் நின்றனர். எதோ பாவம்.. கண்ணன் பையன்.. என இவன் சார்பாகவும் நால்வர் இருந்தனர். ஆனால், அதிகாரம் எங்கோ.. அங்கேதானே நியாமும்.. அப்படிதான் ஆனது, மாதவனுக்கு. கட்சி அலுவலகம் அவன் இடத்தில் இருப்பதால்.. கொஞ்சம் அடக்கி வாசித்தது புதிய அமைப்பு. 

மாதவன் அதன்பிறகு அதிகம் கட்சி அலுவலகம் செல்லவில்லை. ரஞ்சனியின் வொர்க் ஷாப் மட்டும் சென்று வந்தான். அவனுக்கு, இந்த வொர்க் ஷாப், வேலை பிடிபடவும் இல்லை. எதோ தெரியாத இடத்தில் அடைப்பட்ட உணர்வு. முன்போல வருமானம் என்பது இல்லை. அதனால் ரகுவையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை மாதவனால். வருமானம் இல்லாத நிலையில், அது குறித்து ரகுவிற்கு வருத்தம் அதிகமாக இருந்தது. 

மாதவனுக்கு, அதிகாரம்.. கண்ணன் மகன்.. என சொல்லி, மற்றவர்கள் கொடுத்த மரியாதையும் புகழும் பிடித்துதான் அரசியலுக்கு வந்தான். ஆனால் ரகு, வந்தபின்தான் ‘பணம், அதை கொண்டு அரசியலில் பயணம் செய்யலாம்.. வயதானவர் தந்தை அவரை எதற்கு கவனிப்பது..’ என்ற மமதை எல்லாம் வந்து சேர்ந்தது. ஆக இடை சொருகல்தான் இந்த குறுக்குவழி அரசியல் மாதவனுக்கு. ஆனால், அந்த மரியாதை மீதும்.. கம்பீரத்தின் மீதும்.. இப்போதும் ஆசை உண்டு அவனுக்கு. 

எனவே, ரகுதான் பாதித்தான்.. மாதவன், கண்ணன்.. பெயர் சொல்லி முன்போல வருமானம் வருவதில்லை.. மாதவனே அந்த கட்சி அலுவலகத்திற்கு செல்வதில்லை,   எனவே தானும் சென்று என்ன செய்வது என, கட்சி அலுவலகம் செல்லவில்லை. 

அத்தோடு, மாதவன் உடன் இருந்த வரை, நன்றாக வருமானம் வந்ததே.. அந்த கடமைக்காக மாதவனை நன்றாக கவனித்த ரகு.. இப்போதெல்லாம் தன் ஊருக்கு சென்று விடுகிறான் அடிக்கடி. இந்த கட்சியேதான்.. அங்கே போட்டியிடுபவர்கள்.. ரகுவின் நண்பனாம். எனவே, அங்கே சென்று.. உதவியாக இருக்கிறான் ரகு. இங்கே அதிகம் வருவதில்லை. எனவே மாதவன் தனியாகத்தான் இருக்கிறான் இங்கே.

எனவே, அடிக்கடி நீலகண்டன் கடைக்கு வருவதுண்டு மாதவன். ரஞ்சனியும்  நீலகண்டனும் விடுமுறை தினத்தில் அங்கே செல்வதுண்டு. அப்படி மாதவனின் முக வாட்டம் கண்டு, கடைக்கு அடிக்கடி வருவததால்.. நீலகண்டன் “கட்சி என்ன ஆகிற்று, ரகு இங்கு இருப்பதில்லை போல..” என வினவவும், மாதவன், தயங்கி தயங்கி.. பதில் சொன்னான். 

கேட்டுக் கொண்டிருந்த நீலகண்டன் தம்பதிக்கு என்ன செய்வது சொல்லுவது என்றே தெரியவில்லை. வருத்தமாக இருந்தது ரஞ்சனிக்கு, நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தவன் அண்ணன்.. இப்படி ஓய்ந்து போய் அமர்ந்திருப்பது, அதுவும் இவன் வேலை வாங்கியவர்கள், எல்லோரும் மதிக்காமல் இருப்பது.. என கேட்க.. கேட்க.. ரஞ்சனி ஆறுதல் சொன்னாள் “அண்ணா, இரு அண்ணா, எலெக்ஷன் முடியட்டும்.. நம்மளும் ஏதாவது தொழில் செய்யலாம்.. அந்த வீடு நம்ம கைக்கு வரட்டும்.. நாம ஏதாவது செய்யலாம் அண்ணா.. நீ எதையும் யோசிக்காதே பொறுமையா இரு” என தைரியம் சொன்னாள் பெண்.

மாதவனுக்கு மனது விட்டு போனது.. யாருமில்லாத நிலையை உணர தொடங்கியிருந்தவனுக்கு, தங்கையின் இந்த பேச்சு ஆறுதலை தந்தது. 

நீலகண்டனும் ரஞ்சனியும் இது குறித்து அடுத்தடுத்த நாளில் பேசினர், ஆனால், விடை கிடைக்கவில்லை. அதற்கான நேரமும் அமையவில்லை நீலகண்டன் ரஞ்சனி தம்பதி, இப்போது வீடு மாற்றும் வேலையில் பிசியாகினர். 

ம்.. குகன் அர்ச்சனாவின் பெண், ஐஷ்வர்யாவை..  ஐந்தாம் மாதம் நேராக இங்கே குகனின் சொந்த ஊருக்கு அழைத்து வருவதாக ஏற்பாடு. அதனால் நீலகண்டனும், கொஞ்சம் தனி வீடாக.. பெரிய வீடாக.. வசதியாக பார்த்திருந்தான். எனவே, அதற்கு குடிபெயற தயாராகிக் கொண்டிருந்தனர் இருவரும்.

வீடும் மாற்றியிருந்தனர்.

அர்ச்சனா குழந்தையோடு வந்து பத்து நாட்கள் தங்கி சென்றாள். குகன் விட்டு சென்றான், பின் கூட்டி செல்ல வந்தான். அப்போதும் பெரிதாக ரஞ்சனியிடம் பேசவில்லை.. அவளும் வாங்க சாப்பிடுங்க என்பதோடு நிறுத்திக் கொள்வாள். அதிகம் பேசினால் தானே, குகனுக்கு பிடிக்காது, எனவே, ரஞ்சனி பேசவில்லை. குகனும் அதே போல.. அண்ணிடம் தேவையில்லாமல்.. உரிமை எடுக்கவில்லை. ‘உறவுகளை பேணக் கற்றுக் கொண்டனர் இரு தம்பதிகளும். தங்களின் எல்லைக்குள் நின்று.. தேவைப்படும்  போது மட்டும் அரவணைத்தனர்.. அதிகம் எதிர்பாராமல்’  இனிமையாகத்தான் சென்றது அவர்களின் உறவு.

ஐஷ்வர்யா வீட்டில் இருந்த நேரம் நீலகண்டன் கொஞ்சம் குழந்தையை, கையில் வாங்க.. எடுத்துக் கொண்டு நடக்க.. என பழகினான். அவனுக்கு குழந்தையோடு பேசவோ சிரிக்கவோ விளையாடவோ வரவில்லை. அமைதியாக குழந்தையை தோளில் போட்டு நடக்க தெரிந்தது அவ்வளவே. ஆனால், வீடு கொஞ்சம் மாற்றம் கொண்டது.. இந்த பத்து நாளும். 

ரஞ்சனிக்கு, குழந்தை ஆசை வந்தது.. தனிமையில் தன் கணவனிடம் “முதலில் பாப்பா பெத்துக்கலாம், அதுக்கு அப்புறம் வீடு கட்டிக்கலாமேங்க” என்றாள் சின்ன குரலில்.

கணவன் கொஞ்சமாக முறைத்தான்.. ஆனால், அவனுக்குமே கொஞ்சம் ஆசை இருந்தது போல.. வீடு என்ற பெரிய கனவினை தள்ளி வைக்க சொன்னது.. குழந்தையின் சிரிப்பும் அழுகையும். இருவரும் யோசிக்க தொடங்கினர்.

ஐஷ்வர்யா சென்னை சென்றதும் இரண்டு நாட்கள் வீடே அவர்களுக்கு என்னமோ போலிருந்தது. இரண்டு நாட்கள் சென்று மெல்ல மெல்லத்தான் வேலை… கடை.. என அவர்களுக்கு வேலை ஓடியது.

இப்போது மீண்டும் மாதவன்தான் ரஞ்சனி கண்முன் வந்து நின்றான்.. கணவனிடம் “ஏங்க, பேசாமல் என் வொர்க் ஷாப்பை அண்ணனுக்கே கொடுத்திடவா..” என்றாள் அன்று.

 

Advertisement