Advertisement

குகன், நிமிர்ந்து இத்தனை நேரம் அண்ணனை பார்க்கவேயில்லை. இப்போது தன் மனையாளுக்காக பேசுபவனை நிமிர்ந்து பார்த்தான் தம்பி. நெளிவு குழைவு.. ஒரு சின்ன புன்னகை என ஏதும் இல்லை முகத்தில்.. ஆனாலும், முன்பு இருக்கும்.. அந்த இறுக்கமும் இல்லை.. தன் அண்ணனிடம் என தோன்றியது, தம்பிக்கு. ‘ஆக, அண்ணனுக்கு அவர்களை பிடித்திருக்கிறது.. அண்ணன் நிம்மதியாகத்தான் இருக்கிறான்’ என எண்ணிக் கொண்டான் தம்பி.

குகன் “ம்..” என்றபடி “சாப்பிடலாம் அண்ணா.. மணியாச்சு உங்களுக்கு. இல்லை, காலையில்தான் போங்களேன்” என்றான் தம்பி.

நீலகண்டன் “இல்ல டா.. ட்ரவல் ஹௌவர் ஜாஸ்தி, நைட் போயிட்டா.. நாளைக்கு அவள்  ரெஸ்ட் எடுத்துட்டு.. மறுநாள் வேலைக்கு போக சரியா இருக்கும்.. எனக்கும் கடையில் வேலை இருக்கு.. வா, சாப்பிடலாம்” என வெளியே சென்றான் நீலகண்டன், தம்பியுடன்.

ரஞ்சனி வெளியே சோபாவில் உறங்கிக் கொண்டிருந்தாள். நீலகண்டன் “ரஞ்சனி.. ரஞ்சனி..” என அவளை அழைத்து எழுப்பினான். உணவு எடுத்து வைக்க சொன்னான்.

மூவரும் உண்டனர்.. தன் கணவனுக்கு என்ன வேண்டுமோ பார்த்து பரிமாறினாள்.. ரஞ்சனி. குகன், தானே எடுத்து வைத்து உண்டான். ரஞ்சனியும் பாதியில் அமர்ந்து உண்டாள்.

நீலகண்டன், உண்டு முடித்து எல்லாம் எடுத்து வைத்தான் காரில். ரஞ்சனி கிட்சனை சுத்தம் செய்தாள்.. குகன் வந்து பாத்திரம் துலக்கினான்.. ரஞ்சனி “நான் பார்த்துக்கிறேன்” என்றாள் வேறு வேலையில் கவனமாக. 

குகன் கேட்கவில்லை, அவளுக்கு பதிலும் சொல்லவில்லை.

ரஞ்சனி “என்னங்க.. நான் பாத்திரம் தேய்ப்பேன்.. இதென்ன.. இவர் செய்யறார்.. போக சொல்லுங்க” என்றாள் சத்தமாக.

குகனுக்கு பிடிவாதம் ‘பெரிய இவங்க.. இவங்க சொல்றதை கேட்கணுமா’ என தோன்ற அமைதியாக தன் வேலையை செய்தான்.

நீலகண்டன் “விடேண்டா..” என்றான் சலிப்பான குரலில்.

குகன் “நீ எடுத்து வைச்சிட்டியா.. அங்க பாரு பழம் இருக்கு.. எடுத்துட்டு போ.. ஸ்வீட் எல்லாம் உனக்குன்னு எடுத்து வைத்தாங்க அத்தை அதை பார்த்தியா.. அங்க கட்டை பையில் இருக்கு நீலா.. எடுத்துக்கோ” என்றான்.

நீலகண்டன், தன் மனைவியிடம் சைகையால் ‘விடு’ என சொன்னான்.

ரஞ்சனி முணுமுணுப்பாக “எனக்கு என்ன.. செய்யட்டும்.. க்கும்” என பேசிவிட்டு தன் வேலை முடித்து வெளியே வந்தாள்.

எல்லாம் எடுத்து வைத்தாகிற்று. ரஞ்சனி பூஜை அறை சென்று குங்குமம் வைத்துக் கொண்டு வந்தாள் வெளியே.. நீலகண்டன், தான் தங்கியிருந்த அறைக்கு சென்றான்.. “ரஞ்சனி..” என்றான் அங்கிருந்தே.

எதையோ மறந்துவிட்டேனோ என ரஞ்சனி உள்ளே சென்றாள். கணவன், அவள் உள்ளே வரவும்.. கட்டிலின் அருகில் நின்றிருந்தவன் அவளை வாவென இரு கைவிரித்து அழைத்தான், கண்ணில் காதலோடு.. 

ரஞ்சனிக்கு எதற்கு.. என்னவென.. புரியவில்லை.. முகம் புன்னகையில் மிளிர.. ரகசிய குரலில் “எ..என்ன” என்றாள்.

நீலகண்டன் “ம்..” என ஒன்றும் சொல்லாமல் அவளின் கைபிடித்து அழைத்து, அணைத்துக் கொண்டான் இறுக்கமாக. மனம் முழுவதும் நிம்மதியாக இருந்தது அவனுக்கு.. என்னவள்.. எனக்காக.. எதோ பேசி.. என் தம்பியை என்னிடம் சகஜமாக இருக்க செய்துவிட்டாள்.. என ஒரு நிம்மதி அவனுக்கு. இறுக்கமாக.. அவளை தன்னுள் புதையும் படி திவ்யமாக  தன்னவளை அணைத்துக் கொண்டான். பேச்சு அவனுக்கு வராது.. இதுவும் வராதுதான்.. ஆனால், எனக்காக செய்தவளை எப்படி கொண்டாடாமல் இருப்பது என மனதில் ஓடிக் கொண்டே இருந்தது அவனுக்கு. ஊரில் போய், தன் நேசத்தை சொல்லும் வரை.. அவனுக்கு பொறுமையில்லாமல் போக.. இந்த சத்தமில்லா மெனக்கெடல் அவனிடம். 

ரஞ்சனி, திமிறி கணவனிடமிருந்து தன்னை பிரித்தவள்.. “என்ன.. என்ன ஆச்சு” என்றாள்.

வாயே திறக்கவில்லை கணவன். ரஞ்சனி “என்னங்க..” என்றாள் ராகமாக.

நீலகண்டன் தன்னவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.. இன்னமும் அவளின் இடையிலிருந்து கையை எடுக்கவில்லை.. அவள் விலகியதில்.. கலைந்திருந்த சிகையை ஒதுக்கினான். நெற்றியில் தன்னிதழ் ஒற்றினான்.

ரஞ்சனி அவனின் கண்களின் மினுமினுப்பை பார்த்து “என்னங்க.. அழறீங்களா.. யாரு உங்க தம்பி பேசிட்டாரா.. ம்.. சந்தோஷம் தாங்கலையோ.. ம்..” என்றாள் புன்னகையோடு. கணவன் அவளின் இதழ்களில் மென்மையாக.. அழுத்தமாக ஒரு முத்தம் செய்தான்.. அவனின் இளகிய உதடுகளால். அது என்னமோ ரசனையாக இருந்தது அவளுக்கு.. எப்போதும் தரும் முத்தத்திலிருந்து இது மாறுபட்டு இருந்தது அவளுக்கு.. கணவனின் கண்கள்.. நேசத்தை சுமக்க.. உதடுகள் காமத்தோடு.. ரசனையையும் சுமந்து அவளிடம் உரசியது.. அழுத்தமாக. கணவனையே இமைக்காமல் பார்த்தாள் பெண். நீலகண்டன் மயங்கித்தான் நின்றிருந்தான்.

“ஆனாலும் இந்த மயக்கம்..

ஆகாது நெஞ்சே உனக்கு..

போனாலும் நின்னு சிரிக்கும்..

போகாது இந்த கிறுக்கு..

எனக்கு புடிச்ச அது மாறி..

உலகம் கிடக்கு அழகேறி..

உன்னால.. ஓ…ஓ….”

ரஞ்சனி “உங்க தம்பி எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.. சரியான அவசர குடுக்கை.. அவ்வளவுதான்” என அவள் சொல்ல சொல்ல.. அவளின் இதழ்களில் மீண்டும் ஒரு முத்தம் வைத்தான் கணவன்.. “ஏதும் அவனை சொல்லாத.. அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அவங்க வரட்டும்.. வராமல் போகட்டும், நம்மை மதிக்கட்டும் மதிக்காமல் இருக்கட்டும்.. எப்படியோ இருக்கட்டும்.. ஆனால், கெட்டவன் இல்லை அவன். எனக்கிருக்கும் ஒரே உறவு.. அவனை விட முடியாது..” என்றான், உணர்வுபூர்வமாக.

ரஞ்சனி “யாரும் விட சொல்லல” என்றாள் செல்ல கோவமாக கணவனை முறைத்து.

நீலகண்டன் “இல்ல இல்ல.. அப்படி சொல்லல.. போலாம் வா..” என மீண்டும் தன்னவளை லேசாக அணைத்து நின்றான்.

இருவருக்கும் என்ன சொல்லவருகிறோம் என புரிகிறது. எனவே அமைதியாகினர்.. அப்படியே சற்று நேரம் நின்றனர். 

கணவன் வெளியேக் கூட்டி வந்தான் அவளை.

நீலகண்டனும் ரஞ்சனியும், குகனிடம் விடைபெற்று கிளம்பினர்.

இரவு பயணம். அதிகாலையில் வந்தனர். எப்போதும் போல அவர்களின் நாட்கள் சென்றது. குகன் தினமும் அழைத்தான், அண்ணிடம் பேசினான், ஒரு மாற்றமாக. 

மாதவன், தங்களின் ஊருக்கே வந்து சேர்ந்தான். இப்ப்போது ஓரளவு சுவற்றை பிடித்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் செல்லும் அளவுக்கு நடக்கிறான். 

நீலகண்டனும் ரஞ்சனியும் பார்த்து வந்தனர். மாதவனின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர். எனவே, மாதவனை காண ஊள்ளூர் ஆட்கள் வந்து சென்றனர். எல்லோரும் சொல்லிய வார்த்தை ‘உனக்கு இப்படி ஆகிபோச்சே.. எலெக்ஷன் வேலை நல்லபடியாக நடக்கிறது.. ம்.. என்ன சொல்லு, அந்த பிள்ளை ரஞ்சனி அதிஷ்ட்டகாரிதான். அவள் பிறந்ததும்தான் கண்ணனுக்கு அரசியல் செல்வாக்கு வந்தது.. அவ போனதும் இப்படி எல்லாம் போச்சு பாரு..’ என போகிற போக்கில் எதையோ விதைத்து சென்றனர் மாதவனிடம்.

மாதவனுக்கு, கட்சியின் அலுவல்களும் தெரிய தொடங்கியது. கட்சி ஆட்கள் வந்து சென்றனர். மாதவனின் நிலை பார்த்து.. அவனுக்கும் ஒரு பங்கு கமிஷன் வந்து சேர்ந்தது. மாதவன் ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.. அவனின் உழைப்பும் அதில் இருக்கே.. ஆனால், மனது வலிக்கத்தான் செய்தது அவனுக்கு.

அமைதியாக உடம்பை கவனிப்பதுதான் வேலை என மருத்துவர்கள் பரிந்துரைத்த எல்லா உடற்பயிற்சியையும் கவனமாக செய்தான். உணவில் கவனமாக இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம்  பெற தொடங்கினான். 

ரஞ்சனி, வாரம் இருமுறை வந்து அண்ணனை பார்த்து சென்றாள். நீலகண்டன், ரகுக்கு உதவியாக அவ்வபோது வந்து வொர் ஷாப் பார்த்துக் கொண்டான்.

ரஞ்சனியும் நீலகண்டனும்  எந்த பாரபட்சமும் பார்க்காமல் வந்து போவது எல்லாம் பார்க்க பார்க்க.. மாதவன் தன் தவறை முழுவதுமாக உணர்ந்தான், எனலாம். மாதவன் இப்போது நீலகண்டனை “மாமா” என உறவுமுறை சொல்லி அழைக்க பழகினான். உறவு கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற தொடங்கியது. 

இடையில் குகன் ரஞ்சனிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குகன், அழைத்து அண்ணனுக்கு சொல்லி வைத்தான். நீலகண்டன் ரஞ்சனி இருவரும் சென்று குழந்தையையும் அர்ச்சனாவையும் பார்த்து வந்தனர்.

அடுத்து, கண்ணின் வருட திவசம் வந்தது. மாதவன் முன்போல இல்லாமல் எல்லோரையும் அழைத்தான், தன் தந்தைக்கு சாமி கும்பிட. இத்தனை மாதங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே உண்டான். ஒரு ஆண்மகனாக இப்போதுதான் அதன் வலி புரிந்தது. கண்ணின் சொத்து.. அவரின் செல்வாக்குதான் நான்.. எனக்கான இந்த வாழ்வு.. என மாதவனுக்கு இப்போதுதான் புரிந்தது. ரஞ்சனியையும் நீலகண்டனையும் அழைத்து கலந்து பேசி.. தந்தைக்கு என்ன செய்வது என பேசி நிறைவாக செய்தான் கண்ணனுக்கு.

மாதவன், அப்போது குகனுக்கும் அழைத்து பேசினான். குகன் தன் அண்ணிடம் “நான் எதுக்கு வரணும்.. என்னால முடியாது. நீயே பார்த்துக்க..” என்றுவிட்டான். நீலகண்டனும் ஒன்றும் சொல்லவில்லை.. அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என விட்டுவிட்டான்.

ஆனால், ரஞ்சனி தன் கணவனிடம் முறைத்தாள்.. ”அதெப்படி, என் சொந்தம்.. உங்களுக்கு வேண்டாமோ, அத்தோட.. உங்க மாமா அவரு. கூப்பிட்டு சொத்து கொடுத்த உங்க மாமா பசங்க வேண்டாமா.. வரலை, அப்புறம் இருக்கு, உங்க பொண்டாட்டிக்கு.. எங்க அப்பா திவசத்துக்கு வந்தே ஆகணும் சொல்லிட்டேன்.” என குகன் ஒருநாள் பேசும் போது.. கணவனை ஸ்பீக்கரில் போட வைத்து, ஏசிவிட்டாள் பெண்.

குகன் “நீலா.. ஏன் டா, இப்படி பேசறாங்க..” என்றான் கோவமாக.

நீலகண்டன் “அவ சொல்றதும் சரிதானே டா.. இவளுக்காக வர வேண்டாம். உனக்கு சொத்து கூப்பிட்டு கொடுத்தாங்களே, மாதவன், அவனுக்காக வரலாம் தானே..” என்றான் தன்மையாக.

குகனும் ஒன்றும் பேச முடியாமல் “வரேன், ஆனால், அவங்களுக்காகன்னு நினைச்சிக்க வேண்டாம். இது எங்க அம்மாக்காக வரேன்..” என்றான் வீம்பாக.

ரஞ்சனி “அவங்க அம்மா எனக்கு இரண்டு முறை அத்தையாகனும்.. க்கும், யாருக்கோ வாங்க.. வந்தாள் சரி” என்றாள்.. கணவனின் போனிலேயே.

பின்தான் நீலகண்டன் பேசவே தொடங்கினான்.

கண்ணின் திவசத்திற்கு, குகன் வந்தான். அப்போதுதான் அண்ணன் வீட்டிற்கு வந்தான். இரவில் வந்து, காலையில் அங்கே சென்றுவிட்டு.. ஒருநாள் அண்ணன் வீட்டில் தங்கிவிட்டுதான் கிளம்பினான் குகன். ரஞ்சனி தன் பிறந்த வீட்டில் இருந்தாள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக அண்ணன் வீட்டில் இருந்தான் குகன். அஹ.. அப்படிதான் அவன் நினைத்துக் கொண்டான்.

மாதவனுக்கு, உடல்நலம் தேறியது.. வண்டி எடுக்க கூடாது, மற்றபடி எல்லா வேலையும் செய்யலாம் என்றனர் மருத்துவர்கள். மாதவன், கட்சி அலுவலகம் செல்ல எண்ணினான், சென்றான். அவனுக்கு அதை தவிர வேறு தெரியாதே. மேலும் தெரிந்துக் கொள்ளவும் அவனின் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஆனால், அங்கே அடுத்த மாதம் எலெக்ஷன் என்ற நிலையில் கட்சி அலுவலகம் தீவிரமாக பிரச்சாரத்தில் இருந்தது. எனவே, அங்கே இவனை கவனிப்பார் யாருமில்லை. மாதவனுக்கு அந்த இடத்தை பார்க்க பார்க்க.. தான் இழந்ததன் வலிதான் அதிகமாக தெரிந்தது. எதையும் முகத்தில் காட்டாமல் தினமும் கட்சி அலுவலகம் சென்றான்.

 

Advertisement