Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

27

மண்டபத்தில் நால்வரும் வந்து இறங்கினர்.. அர்ச்சனாவின் சொந்தம் முழுவதும் வந்திருந்தது. அதுபோக, குகனின் நண்பர்கள்.. முன்பு தாங்கள் சென்னையில் இருந்த போது தெரிந்தவர்கள்.. என எல்லோரையும் அழைத்திருந்தான் குகன்.

விழா நல்லபடியாக தொடங்கியது… அர்ச்சனாவின் வீட்டிலிருந்து, அவளின் சின்ன பாட்டிதான் பெரியவர் என அவர் முதலில் வளையல் அணிவித்தார். பின்னர், அர்ச்சனாவின் அன்னை யார் என தேட.. ரஞ்சனி தானே வந்து நின்றாள்.. “எங்க வீட்டின் சார்பாக நான்தான் பெரியவள் உறவில்..” என்றாள், அர்ச்சனாவின் அன்னையிடம்.

அங்கிருந்த எல்லோருக்கு அது சரியெனதான் தோன்றியது. நீலகண்டன் முன் வரிசையில் அமர்ந்திருந்தான், எதோ பேசுகிறாள் என தெரிகிறது.. ஆனால், அவனுக்கு காதில் விழவில்லை. 

ஆனால், தன் மனைவியின் அருகே, மேடையில் நின்றிருந்த குகன் காதில் அழகாக எல்லாம் விழுந்தது.. குகன் “இன்னும் அவங்க பெரியம்மா.. அம்மா.. எ.ல்லோரும் இருக்காங்க” என்றான் சின்ன குரலில்.

ரஞ்சனி  இப்போது “இருக்கட்டும்.. நம்ம வீட்டு சார்பா நான்தான் முதலில்..” என்றவள் அர்ச்சனாவின் அன்னையிடம் தாம்பூல தட்டு வாங்கி.. கொண்டாள்.

அர்ச்சனா, தன் அன்னையை பார்த்தாள், அர்ச்சனாவின் அன்னை “சரிதான் மாப்பிள்ளை.. ரஞ்சனிதான் வைக்கணும்..” என்றார் சமாதானமான குரலில்.

ரஞ்சனி, அர்ச்சனாவிற்கு சந்தன குங்குமம் வைத்து பூ வைத்து.. வளையல் இரண்டு கைகளிலும் அணிவித்தாள்.. பின் அங்கே மனைவியின் பின் நின்றிருந்த குகனிடம் ஒரு முறைப்பை கொடுத்தாள். பின் அர்ச்சனாவின் அன்னையோடு நின்றுக் கொண்டாள். யாரும் எதையும் தனக்கு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை அவள்.. எனக்குண்டானத்தை நானே செய்வேன் என யாரையும் பொருட்படுத்தாமல் தன் கடமையை செய்தாள், பெண். 

நீலகண்டன் சற்று நேரத்தில் பிசியாகினான்.. குகனோடு வேலை செய்பவர்கள்.. அவனின் நண்பர்கள்.. தாங்கள் முன்பிருந்த சுற்று வட்டம் என தம்பி அழைத்திருக்க, அவர்கள் வரவும் நீலகண்டன், அவர்களை கவனிக்க தொடங்கினான். நீலகண்டனோடு, அர்ச்சனாவின் அண்ணன் நின்றான்.. என்னமோ அர்ச்சனாவின் அண்ணன் நீலகண்டனிடம் நன்றாக பழகினான். இருவரும் உணவு பரிமாறு இடத்தில் நின்றனர். அளவான கூட்டம்.. ஒவ்வொருவரையும் நின்று.. கவனித்து.. பேசி.. நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர், இருவரும்.

எந்த குறையும் இல்லாமல் விழா நல்லபடியாக நடந்தது. மாலையை நெருங்கும் நேரம்.. மண்டபத்தை காலி செய்துக் கொண்டு வீடு வந்தனர்.. அர்ச்சனாவின் பெற்றோர்,நீலகண்டன் தம்பதி, குகன் தம்பதிகள். அர்ச்சனாவின் அன்னை ஆர்த்தி எடுத்து அர்ச்சனாவை உள்ளே அழைத்தார்.

சற்று நேரத்தில் அர்ச்சனாவின் வீட்டினர், அவளை கூட்டிக் கொண்டு பிறந்த வீடு செல்லுகிறார்கள். இரண்டு நாட்கள் சென்று, அர்ச்சனா இங்கே தன் வீடு வந்து விடுவதாக ஏற்பாடு.

எல்லோரும் கிளம்ப தொடங்கினர். ரஞ்சனி மண்டபத்திலிருந்து வந்த பொருட்களை ஒழுங்கு செய்துக் கொண்டிருந்தாள். அர்ச்சனாவின் அன்னை தாங்கள் கிளம்புவது பற்றி சொல்லிக் கொண்டே அவளோடு வேலை செய்துக் கொண்டிருந்தார்.

நேரம் சென்றது, இரவு உணவை கையில் எடுத்துக் கொண்டு, அர்ச்சனாவோடு கிளம்பினர் அவர்கள் பெற்றோர். 

குகன், மனையாளை நல்ல விதமாக வழியனுப்பிவிட்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு அவன் வீடே விரோச் என இருந்தது. அமைதியாக அமர்ந்தான்.

நீலகண்டனும் இரவு உணவை முடித்துவிட்டு கிளம்புவதாக எண்ணம். எனவே, அமைதியாக தங்களின் உடமைகளை எடுத்து வைக்க தொடங்கினான். நீலகண்டன், தன் மனையாளின் புடவையை மடித்துக் கொண்டிருந்தான்.

ரஞ்சனி, குகனின் அமைதி பார்த்து.. அவனுக்கு ஏதாவது குடிக்க கொடுக்கலாம் என ஹோர்லிக்ஸ் கலந்தாள்.. ஆண்கள் இருவருக்கும்.

ரஞ்சனி ஹோர்லிக்ஸ் கொண்டு வந்து குகனின் எதிரில் வைத்தாள்.. இன்னொன்றை எடுத்துக் கொண்டு.. தன் கணவன் இருக்குமிடம் சென்றாள். இப்போது குகனும், கையில் ஹோர்லிக்ஸ் எடுத்துக் கொண்டு வந்தான்.. அண்ணன் இருக்குமிடத்திற்கு.

நீலகண்டன் “வா குகன்.. உன் ப்ரெண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டிருந்த.. ரொம்ப நாள் ஆச்சு எல்லோரையும் பார்த்து.. “ என பேச்சை ஆரம்பித்தான்.

இப்போது, ரஞ்சனி வெளியே செல்ல போக, நீலகண்டன் “ரஞ்சனி, நீ குடிச்சியா.. எடுத்துட்டு வரியா” என்றான், அக்கறையாக.

ரஞ்சனி “இல்லைங்க.. நான் கொஞ்சம் படுக்கிறேன்.. ஹாலில்” என்றவள் இருவரும் பேசட்டும் என கிளம்பினாள்.

குகன் அமைதியாக அண்ணனையே பார்த்திருந்தான்.

நீலகண்டன் மனையாளின் முகம் பார்த்து “ஒருமணி நேரத்தில் கிளம்பனும்.. முடியமா” என்றான்.

ரஞ்சனி “ம்.. நான் சும்மா படுக்குறேன்” என்றவள் வெளியே சென்றாள்.. 

நீலகண்டன், ஒன்றும் சொல்லவில்லை. அண்ணன் தம்பி இருவரும் தனிமையில் இருந்தனர். ஆனால், இருவருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.. சிறுவயதில் கூட சண்டைகளை அதிகம் போட்டதில்லை இருவரும்.. தங்களின் நிலை புரிந்து, அண்ணன் எது சொன்னாலும் சரி என தம்பி சிறுவதில் நடப்பான். குகனுக்கும் விவரம் தெரிய.. தானும் சில யோசனைகள் சொன்னாலும், அதை, அண்ணனும் இயல்பாய் ஏற்பான். எனவே பெரிதாக சண்டை என வந்ததில்லை. இப்போது தாங்களே அறியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த பிரிவில்..என்ன செய்வது என தெரியாமல் இருவரும் நின்றனர்.

குகன் “நீ.. க்கும்… எனக்கு உங்க க..ல்யாணம் பிடிக்கலைதான். அதான் அப்போது வர முடியலை. ஏன் அந்த வீட்டில் பெண் என கோவம்தான்.. சாரி, எ.. என்கிட்டே எதுவும் சொல்ல தோணலை உனக்கு.. எப்படி, அவங்க வீட்டில் பெண் பிடிச்சது.. இல்ல, கேட்க கூடாது, நான் எத்தனை வரன் பார்த்தேன் உனக்கு..” என்றான் ஆற்றாமையாக.

நீலகண்டன் “நீ, என்னை, மாமா வீட்டிலிருந்து கூப்பிட்டாங்க என சொன்னதும் கோவமாக போனை வைத்துவிட்டாய், மாமா இறந்த செய்தியை கூட கார்த்திக்தான் உன்னிடம் சொன்னான், நீ என்கிட்டே அதன் பிறகு பேசவேயில்லை.. என்ன ஆச்சுன்னா” என தொடங்கி கண்ணன் இறக்கும் போது என்ன நடந்தது என சொன்னான் அண்ணன்.

குகன் “அ..அதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே” என்றான், ஆதங்கமாக. ‘தான் மாமா பெண்ணை பிடித்து, காதலித்து திருமணம் செய்துக் கொண்டான் அண்ணன்’ என தான் எண்ணியது மாறியது இப்போதுதான்.

நீலகண்டன் “எங்க சொல்ல முடிஞ்சது.. உனக்கு அப்போது நிறைய பிரச்சனை.. இதை எப்படி சொல்றது, அப்புறம் பேசலாம்ன்னு இருந்தேன்.. அதுக்குள்ள.. அவங்க வீட்டில் பிரச்சனை.. என்னமோ தெரியலை.. சொல்ல முடியலை.” என்றான் அண்ணன்.

குகன் “என் கல்யாணத்துக்கு முன்னாடி தானே மாமா இறந்தது.. அப்போ.. அப்போவே, அந்த பெண்ணை… இல்ல, அவங்களை உனக்கு பேசியாச்சா..” என்றான் தன் சந்தேகம் தீர.

நீலகண்டன் “அவரின் கடைசி ஆசை.. அதான்” என்றான்.

குகன் “அப்போ ஏன், என் கல்யாணத்தில் நீ கோவமாகவே இருந்த.. நான் என்ன தப்பு செய்திருந்தாலும்.. என்கிட்ட நீ பேசி இருக்கலாம் ” என்றான் சட்டென.

நீலகண்டன் “எப்படி சந்தோஷமா இருக்க முடியும்ன்னு சொல்லு.. அம்மாவின் வளர்ப்பு வீண் போச்சோ.. நம் பண்பாடு எல்லாம் பெண்ணுக்கு மட்டும்தானோ.. நமக்கு இல்லையோன்னு..” என்றவன் தன் கைகளை தன் நெஞ்சுக்கு நேராக கட்டிக் கொண்டு இறுக்கமாக திரும்பி நின்றான், அண்ணன்.

குகன் அமைதியாகிவிட்டான் சற்று நேரம். மீண்டும் இருவருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை. நீலகண்டனுக்கும் ‘தான் தம்பியிடம் சொல்லி இருக்க வேண்டும்’ என தோன்றியது. குகனுக்கும் தன்னுடைய செயலில் அண்ணன் கொண்ட வருத்தம் இப்போதுதான் தெரிந்தது.  அப்போது எது செய்தாலும் அண்ணன் துணை நிற்க வேண்டும் என்ற அகம்பாவம் மாறி.. நான் தவறு செய்ததால் அவன் என்னுடன் இல்லை என்ற, கண்ணுக்கு தெரிந்த உண்மை.. ஓங்கி அடித்தது அவன் உச்சந்தலையில். அமைதியாக நின்றான் அவனும்.

குகன் “மன்னிச்சிடு ண்ணா” என்றான், திடீரென

நீலகண்டன் ஒரு பெருமூச்சு விட்டு திரும்பி நின்றான் தம்பியை பார்த்து “இல்ல, அதுக்காக சொல்லல.. விடு, எல்லாம் நல்லபடியா நடந்திடுச்சி.. இனி அடுத்ததை பார்க்கலாம். நீ எப்போதும் போல இரு” என்றான் லேசாக புன்னகைத்துக் கொண்டு.

குகன் அமைதியானான்.

சற்று நேரம் சென்று குகனே “நீ… உன் மேரேஜ் லைஃப் ஏதும்.. பிரச்சனையில்லையே..” என்றான் தயக்கமான குரலில்.

நீலகண்டன் லேசாக சிரித்தான் “அப்படி எல்லாம் ஏதும் இல்லை. என்மேல ம்… எனக்கும் அவளுக்கும் பத்து வயது வித்யாசம்.. சின்ன பெண். உன்னால் நான் நிம்மதியா இல்லைன்னு ஏதாவது சொல்லியிருப்பா.. அதையெல்லாம் மனதில் எடுக்காத. எனக்காக யோசிச்சு பேசியிருப்பா.. நீ ஏதும் நினைக்காதே.. சரியா..” என்றான். தம்பி கேட்ட கேள்விக்கு நேரடியாக ஏதும் சொல்லாமல், அதே சமயம் ரஞ்சனியை.. தம்பி தப்பாக நினைக்கிறானோ என எண்ணி.. பேசினான் நீலகண்டன்.

Advertisement