Advertisement

ரஞ்சனி “உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. நீங்க அவர்க்கு, எதோ பெண் பார்த்திருந்தீங்க போல.. அதை அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்ன்னு உங்களுக்கு கோவம், அவ்வளவுதானே.  ஆனால், உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. அத்தோட என்னைத்தானே பிடிக்கல.. அவர் என்ன செய்தார். உங்க அண்ணன் உங்களை நினைச்சி பீல் பண்ணுவார் தெரியாதா.. உங்களை மாதிரி அவரால் இருக்க முடியாது.. உங்களுக்கு கல்யாணம் அவர்தானே செய்து வைத்தார்.. எத்தனை செய்த போதும்.. அவர் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா.. அதை பற்றி” என்றாள் சின்ன குரலில்.. ‘நீ செய்தது தவறு.. அவர் என்ன செய்தார்’ என கோவம் அவளுக்கு.

மீண்டும் அவளே கொஞ்சம் கோவமாக “அடுத்தடுத்து எல்லாம் செய்தார் தானே.. இப்போது வரை நீங்கள் மதிக்கிறீங்களோ இல்லையோ.. வந்துடுறார் தம்பி தம்பின்னு.. அங்கயும் அப்படிதான்.. தொட்டதுகெல்லாம் தம்பிதான். ஆனால், நீங்க.. என்ன நடந்துதுன்னு கூட கேட்க்காமல் அவரை பார்க்காமல்.. பேசாமல்.. ஒதுக்கி வைக்கிறீங்க.. இது தப்பு. இது சண்டை இல்லை.. கோவமில்லை. ஒதுக்குவது.. மறுப்பது.. சொல்ல போனால் கற்கால வியாதி.. இது சரியில்லை. வாய் திறந்து.. முக்கியமா மனது திறந்து பேசுங்க… உங்க அண்ணாகிட்ட. அப்போதுதான், அவர் வாழ்வில்.. நான் எப்படி வந்தேன்னு உங்களுக்கு தெரியும்.. உங்களுக்கு நான் வேண்டாதவளாக இருந்தாலும்.. உங்க அண்ணனுக்காக பேசுங்க.. பேசியபின் அவர்தான் தவறுன்னு நினைத்தால், அவரை நேராக பார்த்து சொல்லுங்க.. மண்டம் ஏழுமணிக்கு போகணும்.. இன்னும் நேரம் இருக்கு.. அண்ணன் வேண்டும்ன்னு நினைத்தால் இப்போதே பேசுங்க.. இல்லை, நாங்க வளைகாப்பு முடிந்ததும் கிளம்பிடுவோம்.. அவர்க்கு ஒரு முடிவு இன்னிக்கு தெரியட்டும்.. மனிதர்.. தினமும் அவஸ்த்தை படுகிறார்..” என்றாள் கோவமாக.. ஆற்றாமையாக, கொட்டி தீர்த்தாள்.. இப்போது திரும்பி பூக்களை சாமி படத்திற்கு வைக்க தொடங்கினாள்.

குகனுக்கு, இவள் தன்னை பேசுவதா என தோன்றினாலும், எதோ ஒரு சந்தோஷம்.. அது என்னவென புரியவேயில்லை.. என்ன செய்வதென்றே தெரியவில்லை.. ‘எனக்கு அண்ணனை பற்றி தெரியும்.. அதேதானே சொல்றாங்க இவங்க.. என்ன சொல்றாங்க, இந்த கல்யாணம் அண்ணனுக்கு பிடிக்கலையாம்.. எனக்கு தெரியும் அப்போவே, போய் சிக்கிக்கிட்டான்.. ‘ எனதான் முதலில் தோன்றியது குகனுக்கு. எப்போதும் குகனுக்கு முடிவுகள் எடுத்தே பழக்கம்.. முடிவுகள் எல்லாமே சரியாக இருக்காதே.. இப்போது அதே தவறான முடிவோடு அண்ணன் அறைக்கு சென்றான் கோவமாக.

கதவைத் தட்டேவெல்லாம் இல்லை.. நுழைந்துவிட்டான் குகன். ரஞ்சனியின் பேச்சு.. தம்பிக்கு மீண்டும் அவனுள்ளிருந்த, எதோ ஒன்று.. அண்ணன் குறை தீர்க்க.. நான் சொன்னதுதான் சரி என்ற எண்ணம் கொடுக்க.. நேர வந்தான்.

நீலகண்டன், தன் லேப்டாப்போடு அமர்ந்துக் கொண்டிருந்தான். கதவு திறக்கவும் மனையாள்தான் வருவாள் என அனுமானம் அவனுக்கு.. எனவே, வேலையில் மூழ்கியிருந்தான்..

குகன் “எப்போ வந்த” என்றான் கதவை திறந்து கொண்டு அவசரமாக உள்ளே வந்து.

நீலகண்டனுக்கு அதிர்ச்சி.. தம்பி குரல் கேட்கவும், தம்பியை நிமிர்ந்து பார்த்தான்.. சந்தோஷமாக “மூணு மணிக்கு வந்தேன்” என்றான் முகம் சட்டென பிரகாசமாக.

தம்பி, அண்ணனை ஆராய்ந்தான்.. ரஞ்சனி சொல்லியது எல்லாம் மனதில் ஓட.. அண்ணனை ஆராய்ந்தான்.. முகத்தை உற்று உற்று பார்த்தான்.. மேலிருந்து கீழ் ஆராய்ந்தான்.. ‘கொஞ்சம் வெயிட் போட்டிருக்கான்.. முகம் பிரகாசமாகதான் இருக்கு.. கல்யாணம் பிடிக்கலையோ.. அப்படி தெரியலையே என மீண்டும் முடிவெடுக்க ஆரம்பித்தான்.

நீலகண்டன் “சொல்லுடா.. ஏதாவது வேணுமா” என்றான் நீலகண்டன். 

குகன் “இல்ல, அ.. அந்த பொண்ணு.. உனக்கு இந்த கல்யாணம்…” என சொல்ல சொல்ல.

நீலகண்டன் “எந்த பொண்ணு” என்றான்.

குகன் “அதான் நீ கல்யாணம் செய்திருக்கியே அந்த பொண்ணு” என்றான்.

நீலகண்டன் கடுப்பாகிவிட்டான் “ரஞ்சனியா, பேர் தெரியாதா உனக்கு” என்றான்.

குகன் “எ.. எதுக்கு தெரியனும்…” என சொல்ல சொல்ல, ரஞ்சனி கதவை திறந்துக் கொண்டு வந்தாள் உள்ளே வந்தாள்.

இப்போது தன் கணவனின் அருகில் போய் நின்றாள் “என்ன சொல்றார் உங்க தம்பி..” என்றாள்.

குகன், ரஞ்சனியின் வரவை உணர்ந்ததும், முகம் ஒவ்வாமையை காட்டியது. வெளியேற எத்தனித்தான்.. இப்படி வேறு அவள் கேட்கவும் திரும்பினான்.

நீலகண்டன் “நில்லு குகா..” என்றான்.

ரஞ்சனி “உங்க தம்பிக்கு பயம்.. நம்ம பேசி உண்மை என்னான்னு புரிஞ்ச்சிடுச்சின்னா அப்புறம் முகத்தை எப்படி பார்க்கிறதுன்னு பயம்..” என்றாள் வீம்பான குரலில்.

நீலகண்டன் “ரஞ்சி,,” என்க..

குகன் “நீலா.. “ என்றனர் இருவரும் ஒருசேர..

ரஞ்சனி “என்னை ஏங்க.. கல்யாணம் செய்துகிட்டீங்க.. சொல்லுங்க உங்க தம்பிகிட்ட.. அப்போவே பாதி பிரச்சனை தீர்ந்திடும்..” என்றாள், கோவமாக.

நீலகண்டன் “என்ன ரஞ்சி இது.. தம்பிகிட்ட என்ன பேச்சு.. அமைதியா இரு” என்றான்.

நீலகண்டன் “ரஞ்சனி மணியாச்சு… கிளம்பனுமில்ல, போய் வேலையை பாரு.. ம்..” என்றான் அமைதியான குரலில். அவளும் வெளியே சென்றாள்.

தம்பியிடம் திரும்பி “என்ன டா… என்ன சொன்னா இவ.. ஏதாவது சொன்னாளா..” என்றான் அமைதியான குரலில்.

குகன் என்ன நடக்கிறது என தெரியாமல் வீர ஆவேசமாக வந்தவன்.. இவர்களின் பேச்சில் குழம்பி நின்றான்.

நீலகண்டன் “அவளுக்கு, கொஞ்சம் டென்ஷன் நீ என்கிட்டே பேசறதில்லைன்னு நான், அப்போப்போ அப்செட் ஆகிடுவேன்.. அதான் கொஞ்சம் ஏதாவது பேசியிருப்பா.. ஃபங்க்ஷன் நல்லபடியா நடக்கட்டும் பேசலாம்.. நீ கிளம்பு” என்றான் அமைதியான குரலில்.

குகனுக்கு என்னமோ போலானது.. “அ..அது கடை எப்படி போகுது.. யார் பார்த்துப்பா” என்றான்.

நீலகண்டன் “கோகுல்ன்னு ஒருத்தர் இருப்பான், அவன்தான் மேனேஜ் பண்றான். கார்த்திக் கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கிறான்.. அப்படியே போகுது.. நீ ஒருதரம் வாயேன்.. இப்போது ஸ்னக்ஸ்  கடை முன்னாடி போட்டிருக்கு..” என்றான் சந்தோஷமான குரலில்.

குகன் “நீ… ஓகே தானே.. அவங்க, ஏதாவது இப்படி டென்ஷன் பண்றாங்களா” என்றான்.

நீலகண்டன் மெலிதாக புன்னகைத்தான், அதற்கு என்ன அர்த்தம் என தம்பிக்கு விளங்கவில்லை.. “நீ கிளம்பு போ.. அப்புறம் பேசலாம்” என்றான், அண்ணன்.

தம்பிக்கு இன்னமும் சந்தேகம் தீரவில்லை.. மர்மமாக தெரிந்தான் அண்ணன்.. ஆனால், சந்தோஷமாக இருக்கிறான் என அவனின் கண்ணிலும் பாவனையிலும் தெரிகிறது தம்பிக்கு.. ஆனாலும், இந்த ரஞ்சனி என அவள்மேல் சந்தேகம் வந்தது, முன்பே பிடித்தமில்லை.. இப்போது வெடுக்கென பேசுவது.. எதோ ஒருமாதிரி தோன்ற தலையை கோதிக் கொண்டே வெளியே சென்றான் குகன்.

மனது அண்ணன் மேல் இருந்த கோவத்தை தள்ளி வைத்ததா.. மறந்து போனதா.. என தெரியவில்லை.. அண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்கிறதா.. என்ற பெரிய சந்தேகம் அவனிடம் வந்து அமர்ந்தது அவனுள்.

குகன், யோசனையோடே.. குளிக்க சென்றான். கிளம்பி வந்தான். மனைவியை பார்க்கவில்லை காலையில் எழுந்ததிலிருந்து.. அவளை கண்கள் தேடியது. மனையாள், அவன் கணங்களில் பட்டாள்.. மேடிட்ட வயற்றோடு புடவையில் அவள் நின்றாள். ரஞ்சனி, அவளின் வயிற்றில் கை வைத்து கண்களை அங்கே இங்கே சுழற்ற.. அர்ச்சனா கண்கள் விரித்து எதோ ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருந்த காட்சியைத்தான். புது புடவையில் பூரிப்புடன் நின்ற மனையாளிடம் வந்தான் குகன்.

குகன் “அச்சு..” என்றபடி மனையாளை மேலிருந்து கீழாக பார்த்தான்.. ரஞ்சனி சட்டென நகர்ந்துக் கொண்டாள், அங்கிருந்து.

நீலகண்டன், ஹாலில் அர்ச்சனாவின் அண்ணனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.. மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறாம் ஊரில்.. பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. திருமணத்திற்கு, என பேச்சு சென்றது அவர்களுக்குள். அர்ச்சனாவின் அண்ணன், இன்னமும் குகனிடம் பேசுவதில்லை. திருமணத்திற்கு வந்தவன்.. அடுத்து இப்போதுதான், இங்கே வருகிறான். மற்றபடி தங்கையிடம் போனிதான் பேச்சு அவனுக்கு, அதுவும் எப்போதாவது.

குகன் மனையாளிடம் பேசி முடித்து.. அண்ணனை பார்க்க வந்தான்.. “போலாம் ண்ணா, நீங்க எங்க கூட காரில் வந்திடுங்க” என்றான்.

நீலகண்டன் ஒன்றும் சொல்லவில்லை “சரிப்பா.. “ என்றான்.

மாமனார், மாமியார் எல்லோரும் குகனை சட்டென பார்த்தனர்.. பின் தங்கள் வேலையை கவனித்தனர். எல்லோரும் காரில் வந்திருந்தனர், எனவே, கிளம்பினர் எல்லோரும்.

குகனுக்கு, தன் அண்ணனின் ஷர்ட் என்னமோ பிடிக்கவில்லை.. குகன், ஒரு குர்த்தா அணிந்திருந்தான். அண்ணன் எதோ ஒரு ப்ளைன் ஷர்ட் டார்க் ப்ளூ நிறத்தில் அணிந்திருந்தான். வேஷ்ட்டிதான் அணிந்திருந்தனர் இருவரும்.

குகன் அண்ணனிடம் “அண்ணா, இதென்ன வயசான மாதிரி லினன் ஷர்ட் எல்லாம்.. வா.. என்கிட்டே புது ஷர்ட் இருக்கு.. வா, மாத்திக்க..” என்றான்.

எல்லோரும் கிளம்பி இருந்தனர் அர்ச்சனாவின் அன்னை.. ரஞ்சனி, அர்ச்சனா இருவரிடமும், “நால்வரும் வந்திடுங்க” என சொல்லி கிளம்பினர். எனவே, பெண்கள் இருவரும் தயாராக நிற்க.. குகனின் பேச்சு காதில் விழுந்தது.

அர்ச்சனா, குகன் தன் அண்ணிடம் பேசுவதை அதிசியமாக பார்த்திருந்தாள்.. இப்போது கணவனின் பேச்சு காதில் விழ.. அனிச்சையாக, ரஞ்சனியை திரும்பி பார்த்தாள்.. அவளின் பச்சையும் நீலமுமான புடவை கண்ணில் தெரிந்தது. ‘அய்யோ..’ என தோன்றியது அர்ச்சனாவிற்கு.. 

ரஞ்சனிக்கு, இது காதில் விழுந்ததும் ஹன்ட்பேக் எடுத்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.. 

நீலகண்டன் அவசரமாக “இல்ல இல்ல… இது சாப்ட்டா இருக்குடா.. நல்ல இருக்கு, மணியாச்சு” என்றான் அவசர குரலில்.

மீண்டும் குகனுக்கு என்னமோ போலானது.. தன் மனையாளை பார்க்க.. அர்ச்சனா “ஏங்க, அவங்க ரெண்டுபேரும்.. மேட்சா போட்டிருக்காங்க” என்றாள்.

சத்தியமாக நீலகண்டன் அதை இவ்வளவு நேரம் உணரவில்லை.. ரஞ்சனி எடுத்து கொடுத்த ஷர்ட், அதை மாற்ற விருப்பமில்லை, அவனுக்கு. மற்றபடி, மனையாளும் அதே நிறத்தில் உடுத்தியிருக்கிறாள் என இப்போதுதான் பார்த்தான்.. அர்ச்சனா சொன்னதும்.

நீலகண்டனின் கண்கள் உண்மையாகவே ஆசுவாசம் ஆனது. தப்பிச்சு மொமென்ட்.

குகன் ஏதும் பேச முடியாமல் “ம்.. வாங்க போகலாம்..” என தன் மனையாளின் கைபிடித்துக் கொண்டான்.

ரஞ்சனி பின் தங்க, நீலகண்டனும் நின்றான். ரஞ்சனி “கொன்னுடுவேன், உங்க தம்பியை அமைதியாக இருக்க சொல்லுங்க.. சும்மா முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டு” என்றவள். “என்னை கேட்க்காமல் ஏதாவது செய்தீங்க” என்றாள் விரல் நீட்டி, கோவமான குரலில்.

நீலகண்டன், அதற்கும் சிரித்தான், பூம்பூம் மாடு போல தலையை நன்றாக அசைத்தான்.. அவளை முன்னால் நடக்கவிட்டு “குகா.. சாவி” என்றான், குகன் சாவி வந்து கொடுக்க.. பூட்டினான். அதற்குள் ரஞ்சனியும் அர்ச்சனாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர்.

நீலகண்டன் முன்னால் ஏற.. குகனும் வண்டி எடுத்தான்.. முட்டி மோதினாலும் விழாவிற்கு குடும்பமாக வந்து சேர்ந்தனர்.

“பந்தங்கள் யாரும் தொடர்கதை போல..

நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்..

நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்..

பாலுடன் நெய் என கலந்திடும்நாள்..”

 

Advertisement