Advertisement

தொலைதூரம் செல்லும் நதியின் பயணம் போல ரஞ்சனி நீலகண்டன் வாழ்க்கை பயணம் சலசலவென அவர்களுக்கான காதல் சத்தத்தோடு தொடங்கியது.

நீலகண்டனும் ரஞ்சனியும்,  அதியமான் வீட்டிற்கு சென்றனர் ஒரு வார இறுதி நாளில். பார்வதி இனிமையாக உபசரித்தார். அசைவ விருந்து மிகவும் ஆர்பாட்டமாக தாயர் செய்திருந்தார், பார்வதி. 

கார்த்திக், கீர்த்தி இருவரும் ரஞ்சனியை  அழகாக “அண்ணி அண்ணி “ என  அழைத்து பேசினர்.

அந்த அழைப்பு தம்பதி இருவருக்கும் ஆறுதலாக இருந்தது. நீலகண்டனுக்கு, அது குகனை நினைவுப்படுத்தினாலும்.. கார்த்தியின் மேல் இருந்த அன்பு இன்னும் இன்னும் அதிகமானது. சொல்ல முடியாத பிணைப்பும்.. சொந்தமும்.. இனிமையாக உருவானது அங்கே.

கீர்த்தனாவிற்கு வரன் பார்க்க தொடங்கியிருப்பதாக சொல்லினார் அதியமான்.

மாலை வரை இருந்து பேசி, உறவாடிதான் வந்தனர் ரஞ்சனி நீலகண்டன் தம்பதி.  இருவருக்கும், இரவு உணவையும் கையில் கொடுத்துதான் அனுப்பினார் பார்வதி. 

இயல்பான நாட்கள் வேலை.. சமையல் என ரஞ்சனிக்கு சென்றது. நீலகண்டன் கடை.. இரவில் தன் ப்ரோஜெக்ட் என கவனம் செலுத்தினான். நடுநடுவில்.. மனையாளுக்கு வித விதமாக சமையல் செய்துக் கொடுத்தான். அதில் இன்னமும் பெண் அவன்மேல் பித்தாகி நிற்கிறாள். கணவனின்.

மாலை சிற்றுண்டி, கணவனின் முறையானது.. மதியமே ஏதாவது செய்து வைப்பான் நேரம் இருக்கும் போது.. எனவே, ரஞ்சனி, தன்னை அழைத்து வரும் கணவனிடம் ‘என்ன இன்னிக்கு.. ஸ்நாக்ஸ் என ஆரம்பிப்பாள். எதோ சிறு பிள்ளையாய்.

நீலகண்டன் எப்போதும் போல வாய் திறக்க மாட்டான்.. ரஞ்சனி நிறைய பேசுவாள்.. அந்த டூ வீலர் பயணம் காலையில் ஹர்ரி பர்றியாய் இருந்தாலும் மாலையில் காதலால் நிரம்பி வழியும் இருவருக்குள்ளும். ஒட்டி.. உரசி.. கதை பேசிக் கொண்டே.. தோள்கள் உரசிக் கொண்டு  வருவதை இருவருமே ரசிப்பார். எப்போதுமே அவன் வண்டி வேகமேடுக்காது.. மாலையில் அவளோடு வருகையில் மிதக்கும்.. காற்றில் மிதக்கும் பறவையென. இதமான நேரங்கள் அவை.

“மௌனம் பேசாமலே.. பேசாமலே.. 

செல்ல.. வாவி நீரில் கமலம் போல்.. 

ஆடி மெல்ல கனவுகள் வருதே.. 

கண்ணின் வழியே.. என் தோள் மீது நீ..

நான் குளிர் காய்ந்கின்ற தீ.. “

நடுவில் மாதவனை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர். மாதவன் இந்த முறை புலம்பி தீர்த்துவிட்டான்.. நீலகண்டனிடம். ம்.. ரஞ்சனியிடம் பிரசாந்த பற்றி பேச முடியாதே.. ரகுவும் பாவம்.. மருத்துவமனையே கதியென கிடப்பதால்.. தன் அண்ணனிடம் பேசினால், சங்கடபடுவான் என எண்ணினான் போல மாதவன். இந்த முறை நீலகண்டனை பார்த்ததும் “வாங்க மாப்பிள்ளை” என்றான், தயக்கமாக.

நீலகண்டன் “எப்படி இருக்கு… வலி குறைஞ்சிருக்கா..” என கேட்டவும்தான் மாதவன் சற்று குற்றயுணர்ச்சியிலிருந்து.. வெளியே வந்தான். எனவே, இயல்பாக பேசினான்.

ரஞ்சனி “அண்ணா.. நாம நம்ம ஊரில் இருக்கிற ஹாஸ்ப்பிட்டல் மாத்திக்கலாமா.. பெரியம்மாவும் வந்து இருப்பாங்க.. இங்க எத்தனைநாள் இருப்ப” என்றாள்.

ஆனால் ரகு அங்கு ஒன்றும் பேசவில்லை, “தங்கையை வெளியே அழைத்து வந்து வேறு சொன்னான். ரகு “பாப்பா.. நம்ம கட்சி ஆபீஸ் இப்போ எப்படி இருக்கு தெரியுமா.. மாதவனுக்கு அதெல்லாம் தெரிந்தால், இன்னமும் சங்கடப்படுவான். நம்ம தொகுதிக்கு.. வேற ஆளுக்கு சீட் கொடுத்தாச்சுல்ல.. தேர்த்தல் வேலை நடக்குது மும்முரமா. நம்ம ஆபீஸ்சிலவேளை எல்லாம் பலமா நடக்குது. இவன் அங்கே போனால், இன்னமும் சங்கடப்படுவான்.. இப்போவே காலையில் எழுந்ததிலிருந்து என் கட்சி.. எத்தனை வேலை நான் பார்த்திருப்பேன்… நான்தான் அங்கே எல்லாமேன்னு இருந்தேன்.. இந்த பிரசாந்த் பேச்சை நம்பி ஏமாந்துட்டேன்.. நானே போகியிருந்தால் கூட சீட் வாங்கி இருப்பேன்.. இப்போ எனக்கு கெட்டபேர் ஆகிபோச்சுன்னு ஒரே புலம்பல்..” என்றான் ரகு. “அதனால், இப்போதிக்கு மாதவன் இங்கேயே இருக்கட்டும்.. கொஞ்சம் நடக்கிற அளவுக்கு வந்ததும், ஊருக்கு போயிக்கலாம், அவன் மனசும் கொஞ்சம் தெம்பாகிடும்” என்றான் ரகு.

இவர்கள் இங்கே வெளியே பேசிக் கொள்ள மாதவன் நீலகண்டனிடம் “நிறைய பணம்.. அப்பாவை கூட கவனிக்கலை, மாப்பிள்ளை. கட்சி சீட்டுன்னு இருந்தேன்.. என் புத்தியும் கெட்டு அத்தனை வேலை பிரசாந்துக்கு செய்தேன்.. இப்போது பாருங்க, எனக்கு சீட் இல்லைனுட்டான், நானும் படுத்துட்டேன். கட்சி சீட் கொடுத்திருக்கே, அவரு கூட்டத்துக்கு கூட வரமாட்டாரு, கட்டபஞ்சாய்த்து எப்போதும், நம்ம கட்சி பேர் சொல்லி வட்டி தொழில்.. நிறைய இடத்தில் கமிஷன்.. ச்ச.. நாமும் தான் வாங்கினோம், ஆனா, அதை சொந்த செலவுக்கு, அப்பாவோட வைத்திய செலவுக்கு கூட கொடுக்கல.. எல்லாம் கட்சி நிதின்னு கொடுத்தேன்.. இப்போ, எனக்கு சொந்த பகையை சொல்லி சீட்டு இல்லைன்னுட்டான். ஆனால், இன்னமும் நம்ம இடத்தில்தான் ஆபீஸ் இருக்கு.. இந்நேரம் திருவிழா மாதிரி இருக்கும் நம்ம கட்சி ஆபீஸ்..” என வருத்தபட்டான். 

நீலகண்டன் மாதவனின் கண்ணில் உண்மையான வருத்தத்தை பார்த்தான்.. நீலகண்டனுக்கு மனிதர்களை கொஞ்சம் தெரிந்துக் கொள்ள முடியுமே.. அப்படி மாதவனின் வருத்தமும் புரிந்தது.. கைநழுவி போன வாய்ப்பு என்பது பாதி வெற்றிக்கு சம்மம் எனவும் தெரியுமே அவனுக்கு. எனவே, “விடுங்க.. என்ன இப்போ, சின்ன வயதுதானே.. இன்னும் எத்தனையோ இருக்கு.. இன்னும் நிறைய ஓடலாம். இப்போது மனச குழப்பிக்காம ஒய்வு எடுங்க.. நல்லதே நடக்கும்” என ஆறுதல் சொன்னான்.

ரஞ்சனி ரகுவிடம் “செலவுக்கு ண்ணா” என்றாள்.

ரகு “அதெல்லாம் இருக்குடா… நீ இதெல்லாம் யோசிக்காத.. மாதவனை சரியாக்கி கூட்டி வர வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

ரகுவும்.. ரஞ்சனியும் உள்ளே வந்தனர்.

மாதவன்.. நீலகண்டனிடம் “வொர்க் ஷாப் போய் பாருங்க மாப்பிள்ளை.. அது ரஞ்சியோடதுதான்.. நீங்க போய் பார்க்கலாம். ரகு இங்கேயே இருப்பதால்.. என்ன நடக்குதுன்னு சரியா தெரியாதுல்ல..” என பேசிக் கொண்டிருக்கவும் ரகு உள்ளே வந்ததும் 

மாதவன் “ரகு, இன்சார்ஜ் டாஸ்லின் அண்ணாகிட்ட நீலகண்டனை இன்ட்ரோ கொடேன்… கொஞ்சம் வொர்க் ஷாப் போய் பார்க்க்கட்டும்.. கணக்கு வழக்கு மட்டும்” என்றான்.

ரகுவும் “சரி டா.. பேசிடுறேன், நானே சொல்லனும்ன்னு நினைச்சேன்.. எப்படி சொல்றதுன்னு பேசாமல் இருந்தேன்” என்றான்.

நீலகண்டன் “வேற ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க நான் பார்த்து தரேன்.. இன்னும் கொஞ்சநாள் தானே. நான்  ஹெல்ப் செய்யறேன்” என்றான், தன்மையாக.

ரகு மாதவன் இருவருக்கும் நீலகண்டனை பிடித்தது. என்னமோ பழைய நினைவுகள் எல்லாம் இருவருக்கும் வந்தது.. அதிகாரம் பணம் இருக்கும் போது நாம் நடந்துக் கொண்டது எல்லாம் மனதில் வந்து வருத்தியது இருவரையும். 

நீலகண்டன், மனைவியிடம் “ஏதாவது குடிக்கிறீயா ரஞ்சி.. நைட் என்கூட முழிச்சிகிட்ட வந்த.. கொஞ்சம் தூங்கேன்” என அவளின் முகம் பார்த்து சின்ன குரலில் அக்கறையாக நீலகண்டன் கேட்க.. அண்ணன்கள் இருவரும்.. கண்டும் காணாமல் போனை எடுத்து பார்க்க தொடங்கினர். ரகு டாஸ்லின் உடன் போனில் பேச சென்றான். மாதவன் போனை பார்க்க தொடங்கினான். இறைவன் போடும் கணக்கு நமக்கு புரியாதே.

எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டும் வாங்கிக் கொண்டும் ஊர் வந்து சேர்ந்தனர் நீலகண்டன் தம்பதி. 

மீண்டும் இயல்பான வாழ்க்கை..நேலக்ந்டநுக்குஇனுமொரு வேலையாக வொர்க் ஷாப் வேலை சேர்ந்துக் கொண்டது. ஒன்று விட்டு ஒருநாள் அங்கே சென்றான். கணக்கு பார்த்தான். மேலும் வார இறுதி நாளில், தன் பிறந்த வீட்டிற்கு ரஞ்சனி சென்றாள், கணவனோடு. நேரம் வேகமாக சென்றது.

ஒருநாள் குகனின் மாமியார் மாமனார் நேரில் வந்தனர் வளைகாப்பு நிகழ்வை கொண்டு, அழைப்பதற்காக வந்தனர்.

நீலகண்டனுக்கு அதிர்ச்சி.. இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வளைகாப்பு என வந்து நிற்கவும். தம்பி அழைத்து தன்னிடம் சொல்லி இருக்கலாமே எந்த தோன்றியது. அத்தோடு நாம்தானே வளைகாப்பு செய்ய வேண்டும், இல்லை அவர்கள் வீட்டில் செய்து கூட்டி போவார்களா எனவும் யோசனை.

அன்றே வழி தெரியும் என்பதால், நேரே வீட்டிற்கு வந்துவிட்டார்கள்,அர்ச்சனாவின் பெற்றோர். ஆனால், வீடு பூட்டி இருக்க.. நீலகண்டனுக்கு, அழைத்தார் அர்ச்சனாவின் தந்தை. அதன் பின்னேதான் கடையிலிருந்து நீலகண்டன் வந்தான். ரஞ்சனி வேலைக்கு சென்றிருந்தாள். 

இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என பார்த்தால்.. பத்திரிகை தாம்பூல தட்டு என நின்றார்கள். நீலகண்டனுக்கு ஒன்றும் புரியவில்லை ‘சரி, அர்ச்சனாவின் அண்ணனுக்கு திருமணம்’ என எண்ணினான். 

அர்ச்சனாவின் அன்னை “ரஞ்சனி எங்க தம்பி” என்றார்.

நீலகண்டன் “அவள் வேலைக்கு போயிருக்கா ங்க. நீங்க வருவது தெரியாதே” என்றான், பால் எடுத்து அடுப்பில் வைத்து. வந்தவர்களை உபசரித்தான். 

அர்ச்சனாவின் தந்தை “எங்க பேசுவதற்கு நேரம்.. எல்லாம் அவசரமாக நடக்கிறது..” என்றார் பொதுவாக. பின் அர்ச்சனாவின் தந்தை, ரஞ்சனி..  என்ன வேலை என கேட்டுக் கொண்டார், கடை பற்றி விசாரித்தார்.. நேரம் சென்றது.

இப்போது இருவரும் தாம்பூல தட்டு எடுத்து, அழைத்தனர் “உங்க தம்பி மனைவிக்கு, வளைகாப்பு நீங்கள் முன்னின்று நடத்தி தர வேண்டும்.. உங்கள் குல முதல் வாரிசு.. ” என்றாகளே பார்க்கலாம்.. நீலகண்டன் அதிர்ந்து போனான்.

நீலகண்டன் தட்டை வாங்கியவன் “எ..என்ன” என்றான் அதிர்ந்து.

அர்ச்சனாவின் அன்னைக்கு, சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால், தன் மாப்பிளையின் மனதிற்கு, இவர்கள் ஒத்துவரவில்லை எனவும் உறவுகளை அனுசரிக்கும் பெண்மணி நடைமுறைக்கு பழகிக் கொண்டார். தாங்களே வளைகாப்பை நடத்த திட்டமிட்டனர். அர்ச்சனாவின் தந்தையும் பெரியப்பாவும் “என்ன பா.. செய்யறது.. பெண் சென்ற வீட்டில் யாரும் இல்லை என்றால் நாம்தான் பொறுப்பெடுத்து நடத்த வேண்டும்..” என சொல்லி விழாவை நன்றாக நடத்த திட்டமிட்டனர். திருமணம் அவசரத்தில் நடந்ததால்.. மண்டபத்தில் வளைகாப்பு வைக்க முடிவு செய்தனர்.. அதனால் பத்திரிக்கை வரை அடித்து நன்றாக செய்ய திட்டமிட்டனர்.

அர்ச்சனாவின் தந்தை தன் மகளும் மருமகனும் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று காட்டினார். குகனும் அர்ச்சனாவும் சின்ன கொடியில் ஆண் பெண் குழந்தைகளின் உடைகளை பிடித்தபடி நிற்பதாக..  ஒரு புகைப்படம், கவிதையாக இருந்தது பார்ப்பதற்கே.. அதை நீலகண்டனிடம் காட்டி “கல்யாணத்தின் போது.. ஏதும் போட்டோ, வீடியோ எடுக்க முடியலை.. அவங்க நினைச்சா மாதிரி.. எந்த ஏற்பாடும் செய்துக்க முடியலை, அதான் தம்பி.. இதை கல்யாணம் மாதிரி கொண்டாடுறாங்க..” என சொல்லி ஆனந்தமாக சிரித்தார். ஏனோ, நீலகண்டனால், அந்த சிரிப்பில் கலக்க முடியவில்லை.

நீலகண்டன் அதன்பின் ஏதும் பேசவில்லை, அவர்கள் ஏதேதோ பேசினர்.. பின் அவர்களும்.. ஆயிரம்முறை அழைத்து, விடைபெற்று கிளம்பினர்.

நீலகண்டன் கடைக்கு செல்லவில்லை.. மனது கனத்து போனது.. எப்படி எதை நினைப்பது என தெரியவில்லை அவனுக்கு. கண்ணில் வருத்தம்தான் வந்தது.. கண்ணீர் வரவில்லை. அவனுக்கு புரியவேயில்லை.. தம்பி ஏன் விலகுகிறான் என புரியவேயில்லை. நீண்ட பெருமூச்சு விட்டு அமர்ந்தான்.. எதையும் யோசிக்க பிடிக்கவில்லை.

ரஞ்சனிக்கு அழைத்தான்.. அப்போதிலிருந்து இப்போது வரை..அவன் தேடும் இடம் அவள்தான். சிறிது நேரம் பேசினான். 

ரஞ்சனி “என்ன இந்த நேரத்திற்கு கூப்பிட்டிருக்கிறீங்க.. என்ன ஆச்சு, ஏன்” என பல கேள்விகள் கேட்டாள். ஆலகாலன் எப்போதும் போல பேசவில்லை.. “சும்மாதான் கூப்பிட்டேன், பேச கூடாதா.. கடையில் யாருமில்லை.. கூப்பிட்டேன்” என்றான், அதிராத குரலில்.. 

மனையாளும் சிறிது நேரம் பேசி “என்னமோ இருக்கு.. சொல்ல மாட்டீங்கல்ல.. கண்டுபிடிக்கிறேன்..” என சொல்லி.. ஏதேதோ பேசி அவனை கொஞ்சம் இலகுவாக்கி போனை வைத்தாள்.

நீலகண்டன்கொஞ்சம் அமைதியானான்.. ‘அவளின் கலகல பேச்சு,அவனை  கொஞ்சம் தேற்றியது.. அவனின் கவலையை கழுவியது.. யாருமில்லை என்றால் என்ன.. ‘என்னவள் என்ற பெருந்தலைவி இருக்கிறாள்..’ என்ற தெம்பை தந்தது அவனுக்கு.

மாலையில் மனையாளை அழைத்து வரும் போதும் ஏதும் அவளிடம் சொல்லவில்லை நீலகண்டன், ரஞ்சனி வீட்டில் வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது அர்ச்சனாவின் வளைகாப்பு பத்திரிகை.

ரஞ்சனி “யார் வந்தார்கள், குகன் மாமாவா.. யாரு வந்தார்கள்” என தொடங்கி ஆயிரம் கேள்விகள் கேட்டாள்.

நீலகண்டன், பொறுமையாக பதில் சொன்னான். மனையாள் அமைதியாக கேட்டுக் கொண்டாள். அவ்வளவுதான் மீண்டும் நீலகண்டன் தம்பியை நினைக்க தொடங்கினான்.

ரஞ்சனிக்கு, ‘அதுதான் காலையில் தன் கணவன் தன்னை அழைத்த காரணமா’ என தோன்றியது. இப்போதும், அவளின் கணவன் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான், அவளிடம்.

ரஞ்சனி “போதும் உங்க பாச போராட்டம். அவங்களுக்கு நல்லது நடக்குது நாம் ஏன் முகம் தூக்குவானே.. சந்தோஷமா ரெண்டுபேரும் போறோம் வாழ்த்துறோம்.. சாப்பிடுறோம்.. கிளம்பி வந்துட்டே இருக்கோம்” என்றாள் நல்ல விதமாக.

நீலகண்டன்  “போடி…” என்றபடி எழுந்து பால்கனிக்கு சென்றான்.

ரஞ்சனி, அமைதியாக காபி கலக்க சென்றாள்.

இருள் கவிழ தொடங்கியிருந்த நேரம்.. மாலை காற்று இதமாக வீசியது. இப்போது பால்கனியில் இரண்டு செடிகள் புதிதாக குடியேறி இருந்தது.. பன்னீர் ரோஜா.. மற்றது சந்தன மல்லி.. சந்தன மல்லியில் நான்கு மொட்டுக்கள் மலர்ந்து மணம் வீசி அந்த சின்ன பால்கனியை சொர்க்கமாக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் நீலகண்டனுக்கு ஏதும் ரசிக்கவில்லை. கைகளை கட்டிக் கொண்டு, வெறித்தபடி நின்றான்.

ரஞ்சனி இருவருக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்தாள். கணவனின் நிலை என்னமோ செய்தது.. ஏதும் சொல்லாமல் பின்னிலிருந்து கணவனை அணைத்துக் கொண்டாள்.. “என்ன.. என்ன.. யோசனை.. விடுங்க, என்ன இப்போது பாப்பா பிறந்தால் எல்லாம் சரியாகிடும்.. சிலதை அப்படியே ஏத்துக்கணும்.. கஷ்ட்டம்தான், வேறு வழி இல்லையே.. சண்டையா போட முடியும்.. ஏன் என்கிட்டே சொல்லலைன்னு.. அது நமக்குதானே அசிங்கம்.. அவர்கள் தள்ளி வைக்கும் தூரத்தில் இருப்போமே..” என்றாள்.

எத்தனை உண்மையான வார்த்தைகள், ஆனால், ஏற்கத்தான் கஷ்ட்டமாக இருந்தது அவனுக்கு. நீலகண்டன், அப்படியே நெடுமரம் போல் நின்றான், மனையாளின் அணைப்பு அவனை தளர்த்தவில்லை.. அப்படி யாருமில்லாதவன் போல அவனால் ஒதுங்கி போக முடியவில்லை.. “முடியல்லையே டி.. நாம் அனாதையாகிட்டோம் இல்ல.. என் சொந்தம்ன்னு இப்போது யாருமில்ல இல்ல..” என அவளையும் சேர்த்துக் கொண்டு பேசினான்.

ரஞ்சனிக்கு, என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியவில்லை. அவர்கள் வளர்ந்த முறை.. தெரியும், தன் கணவன் தம்பியின் மேல் கொண்டுள்ள பேரண்பு தெரியும்.. எனவே, அவளுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. அமைதியாகிவிட்டாள். ஆனால், அணைப்பை விலக்கவில்லை.

சற்று நேரத்தில் நீலகண்டனாக சுதாரித்தான் “ம்.. எங்க காபி” என்றான்.

அதன்பிறகே இருவரும் காபி குடித்தனர். நீலகண்டன் மேற்கொண்டு ஏதும் குகன் பற்றி பேசவில்லை. கடை பற்றி பேசினான்.. ஆனாலும் எதிலும் உயிர்ப்பில்லை.  ஆனாலும், பிடிவாதமாக தம்பி பற்றிய பேச்சை குறைத்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் கவனமாக, நீலகண்டன் தம்பியின் நினைவிலிருந்து தப்பிக்கவே.. நிறைய வெளியே சென்றான். தினமும் ரஞ்சனியின் வொர்க்ஷாப் சென்றான். கடையை கவனித்தான், லோப்டோப் எடுத்து அமர்ந்தான். அதனால் மனையாளோடு செலவிடும் நேரம் குறைந்தது. எல்லாம் ரஞ்சனிக்கு புரிந்தாலும் மனம் கணவனை எதிர்பார்த்தது.

வளைகாப்பு நாள் நாளை என்ற நிலையில் ரஞ்சனி “நைட் கிளம்பலாம்..” என்றாள்.

நீலகண்டன் எங்கே என கேட்கவில்லை.. அப்படி அவன் மறந்தும் போகவில்லை.. கணவன் “போகனுமா” என்றான்.

ரஞ்சனி “அர்ச்சனா வீட்டிலிருந்து பெரியவர்கள் அழைத்திருக்கிறார்கள், அத்தோடு, நாம் என்ன தவறு செய்தோம்.. போகாமல் இருக்க..” என்றாள், முறைத்தபடி.

நீலகண்டன் “தம்பி மதிக்கலையே..” என்றான்.

ரஞ்சனி “அது அங்கே வருகிற சொந்தத்திற்கு தெரியுமா.. குகனோட அண்ணன் இருக்கிறான், அவன் இதற்கு கூட வரவில்லை எனத்தான் பேசுவார்கள்.. போவோம்.. வாழ்த்திட்டு வந்திடுவோம்..” என்றாள்.

நீலகண்டன் குழம்பினான்.

(வலைத்தளைத்தில் பார்த்த கவிதை… இதற்கு பொருத்தமா தெரியாது.. ஆனால், பாதித்தது.)

“நன்றாக தெரியும் எனக்கு..

புன்னகையோடு புதையவும்..

புதைந்திருப்பதை மறைத்து

தெளிவுரை தொடுக்கவும்..

மறந்தாய் சொல்லி ஏமாற்றிக் 

கொள்ளவும்..

தெரியாதது எல்லாம்…

சுலபமாய் நகர்த்துவது எப்படி என்றுதான்..

என்னை உன்னிலிருந்து நீ

நகர்த்தியது போல்..

மலர் மென்மையாய் உதிர்வது போல்..

எந்த சலனங்களுமின்றி..

என்னை சவக்குழியில் தள்ளியது போல்..

சுலபமாய் நகர்வது எப்படி என்றுதான்”

-குட்டிகவி.

Advertisement