Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

23

குகன், காலையில் எழுந்ததும் தன் அண்ணனிடமிருந்து வந்த செய்தியை பார்த்தவனுக்கு மூட் அப்செட். அர்ச்சனாவின் அன்னை மகளின் உதவிக்காக வந்திருந்தார். அர்ச்சனா வேலைக்கு செல்லுகிறாள் இப்போது, எனவே, வயிற்றில் பிள்ளையோடு அலைகிறாளே.. என உதவிக்கு வந்திருந்தார். மாப்பிள்ளை எழுந்ததும், குகனுக்கு காபி எடுத்து வந்து கொடுத்தார், மகள் இன்னும் எழவில்லை. மாப்பிள்ளையிடம் என்ன சமைக்க ‘இன்னிக்கு கீரை.. உங்களுக்கு கொஞ்சம் சாம்பார் வைக்கவா’ என வினவிக் கொண்டிருந்தார்.

குகன் எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான். ‘யார் அழைத்தார் அவனை, எதுக்கு வந்திருக்கிறான்.. மாமியார் வேற இருக்காங்க.. இப்போது என்னை அசிங்கபடுத்தவே அண்ணன் வருகிறான்..’ என ஒரு சலிப்பு மனதில் வருகிறது அவனுக்கு.

மாமியார் மாப்பிள்ளையின் நிலை பார்த்து மகளை எழுப்பினார்.

அர்ச்சனா, மெதுவாக எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று.. கணவனிடம் வந்து அமர்ந்தாள். குகன் அதுவரையிலும் எதோ யோசனையில் இருந்தான் சரியாகவில்லை.

அர்ச்சனா “என்னங்க என்ன ஆச்சு ஆபீசில் ஏதும் பிரச்சனையா.. என்னமோ மாதிரி இருக்கீங்க.. அம்மா கேட்கறாங்க” என்றாள்., அர்ச்சனாவிற்கு வயிறு நன்றாக தெரிய தொடங்கிவிட்டது. இரவில் வாக்கிங் சென்று வந்து படுத்தாலும், நடு இரவில் விழிப்பு  வந்துவிடுகிறது.. அதிகாலையில்தான் உறக்கமே அவளுக்கு. எனவே, சலிப்பான ஒரு குரலில் கேட்டாள் பெண்.

குகன் “ஒண்ணுமில்ல.. ஏன் எழுந்துட்ட.. ஏழரைக்கு எழுந்துக்கலாமில்ல..” என்றபடி அவளின் தோள்களை அழுத்திவிட்டான் இதமாக. அவளுக்கும் ஒரே பக்கமாக உறங்கியது தோள்கள் வலித்தது. கணவன் வலி அறிந்து அழுத்திவிட்டது போல தோன்ற.. அமைதியாக அமர்ந்தாள்.

பின் மீண்டும் அந்த கேள்வியை கேட்டாள் “ஆபீசில் ஏதும் பிரச்சனையா, என்னாச்சு” என்றாள்.

குகன் தங்களின் அறைக்கு எழுந்து சென்றான், முகமே இந்த கேள்வியில் வாடி போக, கணவன் பின்னால் மனையாளும் சென்றாள்.

குகன் “அண்ணன் வந்திருக்காராம் சென்னைக்கு” என்றான்.

அர்ச்சனா அவ்வளவுதானே என தோன்ற “சரி..” என்றாள்.

குகன் “இங்கே வரேன்னு மெஸ்சேஜ் அனுப்பி இருக்கான்.. நாம் ஆபீஸ் கிளம்பிடுவோம்.. அதான்” என்றான்.

அர்ச்சனா “அதான் அம்மா இருக்காங்கல்ல” என்றாள்.

குகன் கோவமாக திரும்பி மனையாளை பார்த்தான். ஆனால், அவளின் மேடிட்ட வயிறு.. அவனின் கோவத்தை திசை திருப்பியது.

குகன் “எதுக்கு அவர் வரார்.. நாம் கூப்பிட்டோமா.. தேவையில்லாமல் டென்ஷன் எல்லோருக்கும்” என சொல்லி குளியலறையில் புகுந்துக் கொண்டான்.

அர்ச்சனா வெளியே வந்து தன் அன்னையிடம் சொன்னாள்.. “இப்போதுதான் இவரும் அவரும் பேசறதில்லையே.. நம்ம விஷயம் தொடங்கி, அதான் டென்ஷன் போல.. விடும்மா.. அவர் பார்த்துக்கட்டும்” என கூறிவிட்டு, தன் அம்மா கொடுத்த ஹெல்த் ட்ரின்க்ஸ் குடிக்க தொடங்கினாள்.

அர்ச்சனாவின் அன்னை “அவ்வளவுதானே.. அவரே ஏதும் பார்க்காமல் வரேன்னு சொல்றார்.. என்னாவாம் உன் வீட்டுகாராருக்கு, நீங்க கல்யாணத்துக்கு போயிட்டு இப்படியே வந்துட்டீங்க.. அப்புறமும் ஒரு வார்த்தை, அவங்களை இங்க வான்னு கூப்ப்டீங்களா.. இதெல்லாம் நான் சொல்ல கூடாது, அவர், உங்களுக்காக எவ்வளோவோ செய்திருக்கார்.. அந்த பொண்ணும் சின்ன பெண்.. அவங்களை கூப்பிட்டிருக்கணும் இந்நேரம் நீங்க.. உனக்கு இதெல்லாம் தெரியாதா” என்றார் முனகலாக சின்ன குரலில் தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அர்ச்சனா “ம்மா, நான் என்ன செய்ய முடியும்.. நான் நீலா அண்ணா கிட்ட நல்லாதான் பேசறேன். போன் செய்வேன். இவர்தான் பேசறதில்லை.. அதுக்க நான் என்ன செய்ய முடியும். அவங்களை கூப்பிடணும்ன்னு எனக்கு என்ன தெரியும், அவரே ஒன்னும் சொல்லல.. நான் என்ன செய்யறது” என்றாள் வெடுக்கென.

நியாம்தானே.. அவரின் தம்பியே அமைதியாக இருக்கும் போது ஒரு சராசரி மனைவி என்ன செய்ய முடியும். தான் பேசினாள் உறவை வளர்த்தாள், அவ்வளவுதான்.

அர்ச்சனாவின் அன்னை “அப்படி சொல்லாத, எனக்கு எப்படி தெரியும்.. தெரியாதுன்னு சொல்லாத..” என கோவமாக வந்தது அன்னைக்கு. ஒரு அன்னையாக அவரின் மனம் சுட்டது.. ‘அண்ணனுக்கு முன் தம்பிக்கு திருமணம்.. அதுவும் எப்படி நடந்தது.. எங்களுக்கு இருந்த அதே நிலைதானே, அவரும் உணர்ந்திருப்பார். தெரிந்தவர்கள் எல்லோரும் ஏன் என கேட்டிருக்க மாட்டார்களா.. அதைவிட, வீடு வாங்கு என நாங்கள் சொன்னதும், உடனே வீடு.. அதில் கணிசமான பங்கு நீலகண்டன் கொடுத்திருக்கிறார். அவருக்கு திருமணம் என அழைத்த போது தம்பியாக முன் நிற்காமல் வந்துவிட்டார். நாங்கள் மாப்பிள்ளை கேட்டோம்.. அது நடக்காது என ஆகிற்று.. அதற்காக இவர் அண்ணனை தள்ளி வைப்பாரா..’ என நியாமான மனது அவரிடம் கேள்வி கேட்டது. என்ன செய்வது பெண் வாழ்கிற வீடு.. மாப்பிள்ளை செய்வதை எப்படி தவறென சொல்ல முடியும். எனவே அமைதியாக பெண்ணை முடிந்தவரை கடிந்துக் கொண்டு வேலையை பார்த்தார். மனதெல்லாம் ஒரு அஞ்ஞானம்.. ‘அந்த தம்பிக்கு ஒரு வாய் சாப்பாடு செய்து போட முடியாமல் போக்கிடும் போலவே’ என. ஒன்றையும் வெளிக்காட்டாமல் சமையலை செய்தார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் இருவரும் கிளம்பினர். குகன் காரெடுத்ததும் மனைவியை நீலகண்டனிடம் பேச சொன்னான். அர்ச்சனா நீலகண்டனை அழைத்தாள்.. “ஹலோ அண்ணா.. எப்படி இருக்கீங்க” என்றாள்.

நீலகண்டன் பதில் கூறி “சென்னையில்தான் இருக்கேன்.. ஆபீஸ் கிளம்பிட்டீங்களா..” என்றான்.

அர்ச்சனா “ஆமாம் ண்ணா, நேற்று லேட் ஆகிடுச்சு ஆபீஸ் முடித்து வர.. உங்க மெஸ்சேஜ் பார்த்ததும் கூப்பிடுறேன்.. என்ன விஷயம் அண்ணா” என்றாள்.

நீலகண்டன் விஷயம் சொன்னான்.. 

அர்ச்சனா “அய்யோ எப்போ.. நீங்க எப்போ வந்தீங்க.. ரஞ்சனியும் வந்திருக்கா.. தெரிந்திருந்தால் சாவி வைத்து வந்திருப்பேனே” என்றாள் அப்பாவியாய்.

நீலகண்டன் “விடும்மா, நாங்க இங்கேயே பார்த்துக்கிறோம்.. நாளைக்கு இருக்கிற மாதிரி இருந்தால்.. நைட் வரோம்” என்றான். வைத்தும் விட்டனர்.

நீலகண்டனுக்கு மனிதர்களை புரியும்.. அதுவும் தன் தம்பியை புரியும்.. அவன் தன்னிடம் பேசவில்லை என புரிகிறது. வாவென அழைக்கவில்லை என புரிகிறது. ஆனாலும் தம்பியை தவறாக நினைக்க.. ஒத்துக்கொள்ளவில்லை அவனின் இன்னொரு மனம். அர்ச்சனாவிடம் இரவு வருகிறோம் என்றான். நீலகண்டனுக்கு ஒருமனது சொல்லுகிறது போகாதே என.. அதையும் செவியும் கேட்க்கிறது.. விருப்பமு இல்லை. ஆனால், இன்னொரு மனம்.. என் தம்பியை எனக்கு தெரியும்.. போய் பேசினால்.. சரியாகிவிடுவான், எத்தனைநாள் இப்படியே இருப்பது.. எனவும் கேள்வி கேட்க.. இரு மனநிலையில் இருந்தான்.

மருத்துவமனையில் மாதவனுக்கு என அறை ஒதுக்கியிருக்க.. ரகு, பெரிய அறையாக எடுத்துக் கொண்டான். அதனால், ரஞ்சனி, பெரியம்மா என பெண்கள் இருவரும் அங்கே இருந்தனர். icu வாசலில் ரகு நிற்க, அவனுக்கு துணையாக நீலகண்டன் நின்றான். பெரியப்பா அறைக்கு செல்லுவது.. இவர்களுக்கு டீ வாங்கி தவறுவது. ரஞ்சனியும் பேசுவது.. அவளை தேற்றுவது.. அவர்களுக்கு உணவு வாங்கி தருவது என இருந்தார். நேரமும் கடந்தது.

மாதவன் மதியம்தான் கண் விழித்தான். இடதுகாலில் அறுவைசிகிச்சை.. வயிற்றில் எதோ குத்தி.. அங்கேயும் அறுவை சிகிச்சை.. அடுத்து சின்ன சின்ன சிராய்ப்புகள், காயங்கள் ஆங்காங்கே.. இன்னும் ஒருமாதம் எழ முடியாத நிலை என்றுவிட்டனர் மருத்துவர்கள்.

மாதவன் கண் விழித்ததும் ரஞ்சனியை பார்த்து அதிர்ந்தான்.. ரஞ்சனி எல்லோரும் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகுதான் சென்றாள். அதனால், மாதவனிடம்.. ரகு, சொல்லி இருந்தான் ‘பாப்பா வந்திருக்கு.. ஒரே அழுகை’ என.

எனவே மாதவன் ரஞ்சனியை பார்க்கவும்.. அழுத கண்கள் நன்றாக தெரிந்தது.. மாதவன் ஒன்றும் சொல்லாமல் பார்த்தான். இருவருக்கும் சட்டென பேச்சு வரவில்லை. அண்ணனுக்கும் தான் செய்த குற்றம் தெரிந்தது.. அதையும் தாண்டி.. என்னை பார்க்க வந்திருக்கிறாள்.. எனவும் சங்கடமாக இருந்தது. அருகில் நீலகண்டன் வேறு நிற்கவும், தலை குனிந்துக் கொண்டான் மாதவன். 

ரஞ்சனிதான் “அண்ணா… எப்படி இருக்க..” என்றாள்.

மாதவன் “ம்.. எப்போ வந்தீங்க” என்றான், நீலகண்டனை பார்த்து.

நீலகண்டன் பதில் சொன்னான்.

அதன்பின் பேசவில்லை மாதவன். வலி தெரிய தொடகியது போல..

ரஞ்சனி “வலிக்குதா.. உனையும் இப்படி பார்க்க என்னமோ போல இருக்கு..“ என அழுகை.

நீலகண்டன் “ரஞ்சனி, அழுகையை நிறுத்து, அவர் நல்லாத்தான் இருக்கார்.. நீ அழுது பயப்படுத்தாத..” என்றான்.

மாதவன் ‘ஆம்’ என்பதாக தங்கையின் கையை பிடித்தான்.. நர்ஸ் “அப்புறம் பார்க்கலாம்ங்க..” எனவும் மாதவன், நீலகண்டனிடம் கூட்டி போங்க என சைகை செய்தான்.

நீலகண்டன், ரஞ்சனியை வெளியே அழைத்து வந்துவிட்டான்.

நாளைதான் அறைக்கு மாற்றுவோம் என்றனர். எனவே இரவில், ரஞ்சனியோடு தம்பிக்கு வீட்டிற்கு கிளம்பினான் நீலகண்டன்.

எட்டு மணிக்கு அர்ச்சனாவிற்கு போன் செய்து வருகிறோம் என சொல்லித்தான் கிளம்பினான் நீலகண்டன். இரண்டு மனநிலைதான். ஆனாலும், ‘என்னதான் டா பிரச்சனை’ என கேட்க்கும் எண்ணத்தில்தான் பிடிவாதமாக, அவர்கள் வாவென அழைக்காவிட்டாலும் கிளம்பினான்.

நீலகண்டன் தம்பதி செல்லவும், குகன் தம்பதி வீடு வரவும் சரியாக இருந்தது. நீலகண்டன் தங்கள் காரிலிருந்து இறங்க.. குகனும் தங்கள் காரிலிருந்து இறங்கினான்.

அர்ச்சனா “வாங்க அண்ணா, வா ரஞ்சனி.. என்ன ஆச்சு” என ரஞ்சனியிடம் பேசினாள்.

குகன் “வாங்க” என்றான்.. முகமே கடுகடுவென இருந்தது. ரஞ்சனியை பார்க்கவில்லை.. எப்படி இருக்கீங்க என ஏதும் கேட்கவில்லை. அண்ணனையும்தான்.

நீலகண்டனுக்கு என்னமோ செய்தது, தம்பியின்  இந்த நடத்தை. இருந்தும் அமைதியாக உள்ளே சென்றான்.. அங்கே, அர்ச்சனாவின் தாய் இருந்தார்.. நீலகண்டன் “நீங்க எப்போ வந்தீங்க” என்றான். அர்ச்சனா காலையில் சாவி வைத்து வந்திருப்போம் என சொன்னதும், தோன்றியது, கேட்டான். 

அவர் பதில் சொல்லும் முன் அர்ச்சனா “இப்போதுதான்.. நீங்க வாங்க” என்றாள்.. பேச்சை நிறுத்தும் விதமாக.

அர்ச்சனாவின் அன்னை இருவரையும் வாங்க என வரவேற்றார். உபசரிக்க தொடங்கினார்.

அர்ச்சனா நேரே தன் அறைக்கு சென்றுவிட்டாள். குகன் மற்றொரு அறைக்கு சென்றுவிட்டான். நீலகண்டனிடம் அடுத்த வார்த்தை ஏதும் தம்பி பேசவில்லை.

அர்ச்சனாவின் அன்னைதான் காபி கொடுத்து.. ரஞ்சனியின் அண்ணனுக்கு என்ன ஆகிற்று என விசாரித்து பேசிக் கொண்டிருந்தார். 

அர்ச்சனா சற்று நேரத்தில் வெளியே வரவும்.. அர்ச்சனாவின் அன்னை “ரஞ்சனி நீ போய் ப்ரெஷ் ஆகி வாம்மா.. சாப்பிட்டலாம்” என்றார்.

அர்ச்சனாவிற்கு குடிக்க எதோ கொடுத்தார்.

நீலகண்டன், தம்பி சென்ற அறைக்கு சென்றான்.. கதவை லேசாக் தட்டிவிட்டு உள்ளே சென்றான். உள்ளே, குகன் படுத்திருந்தான். அதை பார்த்ததும் அண்ணனுக்கு என்னமோ போலானது ‘உடனே கிளம்பிவிட வேண்டும்’ என எண்ணிக் கொண்டே பாத்ரூம் சென்றான்.

குகன் வெளியே சென்றுவிட்டான்.

நீலகண்டனும் வெளியே வந்தான், ரஞ்சனி ஹாலில் அமர்ந்திருந்தாள். அர்ச்சனா பேசிக் கொண்டிருந்தாள் அவளிடம்.

குகன், அங்கே இல்லை.. நீலகண்டன் கேட்க. அர்ச்சனா “அவர் மொட்டமாடிக்கு போயிட்டார் அண்ணா” என்றாள்.

ரஞ்சனிக்கு எதோ புரிகிறது. ஆனால், சரியாக தெரியவில்லை. பெண்கள் இருவரும் நன்றாக பேசவும், அவர்களுடம் பேசினாள்.

நீலகண்டனுக்கு இன்னும் சங்கடமாக போனது. தன் மனையாளிடம் “ரஞ்சனி தூங்கறேன், ஒருமணி நேரம் சென்று எழுப்பு.. சாப்பிட்டு கிளம்பனும்” என சொல்லியவன்.. இப்போது வெளியே வந்த அறையில் சென்று படுத்துக் கொண்டான்.

Advertisement