Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

21

நேற்று நீலகண்டன், இரவில் தன்னை மீறி அவளிடம் நெருங்கியிருக்க.. அதை அவள் ஏற்காமல் போனது.. அவனை இன்னமும் அவனுள் ஒடுங்க செய்திருந்தது. உணர்வுகளை சட்டென கொட்டுபவன் இல்லை இவன். அத்தோடு கலகலவென பேசி.. மனதை பகிருபவனும் இல்லை. ஒரு அனுமானம்.. அவளுக்கு என்னை பிடிக்கும் என்பதே.. அதுவும் அவளாக அன்று வந்து சொன்னதுதான். அவனுக்கு, அதுவே போதுமானதாக ஒரு எண்ணம். மேலும் திருமணத்திற்கு அவசரப்பட்டு விட்டோம் ஆனால், சேர்ந்து வாழ்வது என்பதற்கு அவசரப்பட கூடாது.. கொஞ்சம் அவள் எனக்கு பழக வேண்டும்.. என தனக்கு தானே சொல்லிக் கொண்டுதான் அடுத்தநாள் காலை பொழுதை தொடங்கினான்.

அதன்படியே காலையிலிருந்து அவனின் செய்கைகள் இருந்தது..  ரஞ்சனி பூரி வைக்க.. கணவன் உண்ணத் தொடங்கினான். உண்டு முடித்தவன் “நீ உட்கார்.. சாப்பிடு” என்றான்.

ரஞ்சனி “இல்ல, நானே போட்டுகிறேன்” என்றாள்.

நீலகண்டன் “அதெல்லாம் நான் நல்லா போடுவேன்.. நீ சாப்பிடு” என்றான் அவளின் முகம் பார்க்காமல், அடுப்பின் முன் வந்து அவளோடு ஒட்டி நின்று பேசவும், ரஞ்சனி அமைதியாக தட்டெடுத்து அமர்ந்தாள்.

நீலகண்டன் அதன்பின் ஏதும் பேசவில்லை. ரஞ்சனிக்கு கோவமாக வந்தது நல்லாத்தான் பேசறாங்க.. இன்னும் ரெண்டு வாரத்தை பேசினால்தான் என்னவாம்’ என எண்ணிக் கொண்டே உண்டாள்.

நீலகண்டன் கடமையாக பூரி போட்டானே அன்றி பேசவேயில்லை.. ரஞ்சனி “போதும்” என்றாள். 

நீலகண்டன் “என்ன நாலுதான் சாப்பிடுவியா.. குகன் நான் பூரி போட்டால், எப்படியும் இருபது.. அஹ.. கணக்கில்லாமல் சாப்பிடுவான்” என ரெண்டு வார்த்தை, தன்னை மீறி பேசினான்.

ரஞ்சனி.. அதிசையமாக பார்த்தாள் கணவனை. அதற்குள் நீலகண்டன் அமைதியாகிவிட்டான். அவனுக்கு, தம்பியை பற்றி தானே பேசியது ஒருமாதிரி ஆகிவிட்டது. அமைதியாகிவிட்டான்.

ரஞ்சனி உண்டு முடித்தவள் “அர்ச்சனா, அதுதானே அவங்க பேரு.. எத்தனை மாசம் ஆகுது.. உங்க தம்பி ரொம்ப பிசி போல..” என்றாள்.. பேச்சை ஆரம்பிக்கும் விதமாக. கணவன் பேசவில்லை.. நேற்று தான் செய்தது.. பேசியது.. அவனை காயப்படுத்தியிருக்கும் அதான் தயங்குகிறான் என எண்ணி பேச்சை வளர்க்க விரும்பினாள்.

நீலகண்டன் “ம்.. ஐந்துமாதம்ன்னு.. நினைக்கிறேன்” என்றான், கொஞ்சம் இயல்பாக இருந்தவன்.. அவளின் கேள்வியில் அமைதியாகிவிட்டான்.. என்னமோ தம்பியை பற்றி பேச அவ்வளவு சங்கடமாக இருந்தது அவனுக்கு. தனக்கு இருக்கும் ஒரே உறவும்.. தன்னை தள்ளி வைப்பதும், அதை ஏன் என அவள் கேட்டிடுவாளோ என பயம். அப்படி கேட்டால்.. மனையாளிடம் பொய் சொல்லும் தைரியம் தனக்கில்லை என்பதும் நிஜம்.. எனவே, தம்பியை பற்றி பேசவும் நீலகண்டன் இறுகிக் கொண்டான்.

ரஞ்சனிக்கு எதோ கேட்க தோன்றியது.. ஆனால், அமைதியாக இருந்தாள், அவனின் இறுக்கமான பதிலில்.

நீலகண்டன் “கடைக்கு போயிட்டு வரேன்..” என்றான் அறைக்கு, கிளம்ப சென்றபடியே.

ரஞ்சனி, பேசாமல் அடுப்படியை சுத்தம் செய்ய தொடங்கினாள். மீண்டும் நேற்றைய வெறுமை அவளுள் வந்தது.. எதற்கு இந்த திருமணம் என ஒரு யோசனை.. பேசுவதற்கே தயங்கும் அவனை பார்க்க என்னமோ வலித்தது.. அவளுக்கு.

நேரம் சென்றது நீலகண்டன் சொல்லிக் கொண்டு கடைக்கு கிளம்பினான்.

ரஞ்சனியின், வீட்டில் யாரும் அழைக்கவில்லை மறுவிருந்துக்கு என அவர்களை.  

ஆனால், ரஞ்சனிக்கு ரகு போன் செய்தான்.. பதினோரு மணிக்கு. ரஞ்சனிக்கு அழுகைதான் வந்தது.. அந்த அழைப்பில். மாதவன் இதுவரையில் ஒரு போன் கூட செய்யவில்லை என தோன்றியது. ரகுவிடம் எப்போதுமில்லாமல் இப்போது அமைதியாக பேசினாள்.. பெண். சமைக்கிறேன் என்றாள். 

ரகு “அம்மா எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்கடா.. மறுவிருந்துன்னு விழா இருக்கு.. நான் எப்படி கூப்பிட.. மாதவன் சரியாகட்டும்.. நீயே பேசு அவன் கிட்ட..” என பல யோசனைகளை சொல்லி தங்கையை சமாதானம் செய்தான்.

ரஞ்சனிக்கு கணவனை நினைத்து ஒருமாதிரி வலி என்றால், அண்ணனை நினைத்து கோவமும், சொல்ல முடியாத பாசமும் வருகிறது. புது இடத்திற்கு வந்திகிருக்கிறாள்.. கணவன் இன்னமும் நெருங்கி தனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை.. தன்னை போற்றி பேசவில்லை.. பிறந்த வீடும் தன்னை தொலைத்துவிட்டது, கண்டுக் கொள்ளவில்லை..  என ரகு பேசி முடித்ததும் ஒரு தாக்கம் அவளிடம்.

ரஞ்சனி, பொறுமையாக குளித்து.. பொருட்களை தேடி எடுத்து சமையல் வேலையை பார்த்தாள்.

இப்படியேதான் அடுத்தடுத்த நாட்களும் சென்றது. இருவர்குள்ளும் முதல் நாளைய நிகழ்வு ஒரு கசப்பான அனுபவமாக மாறியிருந்ததால்.. தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டனர், பேசாமல். ஆனால், காலையில் அவளுக்கு குங்குமம் வைக்கும் வேலையை மட்டும் கடமையாக செய்ய தவறுவதேயில்லை நீலகண்டன். அவர்களுக்கு நடுவில் அந்த நொடிகள்.. தினமும் இருவரும் எதிர்பார்க்கும் நொடிகளாக, மாறிற்று. 

கணவன் அமைதியாக அருகில் வருவான்.. ரஞ்சனி அதற்கெனவே காலையில் எழுந்ததும் குளித்திடுவாள். இவள் பூஜை அறையில் விளக்கேற்றுவது கூட கிடையாது.. எங்கே அங்கே சென்றால், கணவன் அருகில் வரமாட்டானோ என எண்ணம். அதனால், பூஜை அறைக்கு செல்லுவதில்லை. கணவன், சாமி கும்பிட்டு, குங்குமம் எடுத்து வருவான்.. இவள் வேண்டுமென்றே திரும்பாமல் நிற்பாள்.. நீலகண்டன் அவளின் பக்கவாட்டில் வந்து நின்று.. அவளது நெற்றியில் அமைதியாக விரல் உரசுமா.. காற்றில்தான் மிதந்து வருமோ தெரியாது.. பட்டும் படாமல் குங்குமம் வைத்துவிட்டு நகர்வான் கணவன். ரஞ்சனி அந்த நொடிக்கு கண்கள் மூடாமல்.. அவனை நிமிர்ந்து பார்ப்பாள்.. அதை கண்டும் காணாமல் லேசாக தலை குனிந்து அவள் பார்த்ததை தான் பார்த்தும் பாராமல் கடந்திடுவான். அதில் இருப்பது கடமையா.. காதலா.. ஆசையா.. நேசமா.. தெரியாது இருவருக்கும்.. ஆனால், இருவரின் ஒவ்வொரு அணுவும் அதை எதிரிபார்த்து.

“உன்னோட உன்னோட 

உயிருக்கு காவலா 

இன்னொரு நெஞ்சமும்

துடிதுடிக்கும்..

மண்மேல் வாழ்ந்திட 

உனக்கொரு காரணம்.. உண்டாக்கி..

கல்யாணம் பரிசளிக்கும்..”

ரஞ்சனியும் அந்த சின்ன வீட்டில் தன்னை பொருத்திக் கொண்டாள்.. கணவன் காலையில் சென்றால், மதியம் உணவிற்கு வருவான். அதன்பின் இரவு பத்துமணிக்குத்தான். நடுவில் பெரிதாக வரமாட்டான்.. போனில்  அழைத்ததில்லை.. ஒரு அமைதியான எண்ண ஓட்டத்தில் நகர்ந்தது அவர்களின் நாட்கள்.

சரியான நேரத்திற்கு மதிய உணவுக்கு வருவான்.. உண்பான், சற்று நேரம் லேப்பில் வேலையை பார்ப்பான்.. பின் ஒருசில நாட்கள் டீ குடித்து கிளம்புவான். சிலநாட்கள்.. அவள் உறங்கினாள்.. சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவான். கிட்சென் சென்று டீ போடுவது.. சமையலில் ஏதேனும் செய்வது எல்லாம் இல்லை.. அவள் எப்படி சமைத்தாலும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக உண்டு கிளம்பிடுவான்.

அவள் வந்த இந்த நாட்களில் இருந்து கிட்சென் பக்கம் செல்லவில்லை அவன். ரஞ்சனியும் கணவனை அங்கே விடவில்லை. தனக்கு தெரியுமோ தெரியாதோ.. சமையலை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள். காலையில் நேரமாக எழுந்து அவனுக்கு டீ கொடுப்பது தொடங்கி.. குளித்து வந்து டிபன் செய்வது.. மதியம் சமையல்.. இரவு உணவு என எல்லாம் தானே செய்தாள். 

நீலகண்டனுக்கு, கிட்சென்னில் வேலை என்பது பெரிதல்ல.. ஆனால், மனையாள் வந்ததும் அங்கே திரும்பியும் பார்ப்பதில்லை இவன்.  அது இதமாக இருந்தது.. மதியம் உணவுக்கு என வீடு வருவது சொல்ல முடியாத ஆனந்தத்தை தந்தது. இரவில் தனக்காக ஒரு ஜீவன், வீட்டில்  கதவை திறக்கவும்.. சொல்ல முடியாத ஒரு திருப்தியான மனநிலையில் உள்ளே வருவான். என்னமோ தனது வாழ்க்கையும்..  தான் செய்யும் வேலையும் அழகாக அர்த்தமானதாக தெரிய தொடங்கியது.

அன்று, குகனின் மாமியார் வீட்டிலிருந்து, நீலகண்டனின் திருமணத்தை விசாரிக்க என வந்தனர். காலையில் கிளம்பி மாலையில் வந்தனர். 

அர்ச்சனாதான் அழைத்து சொன்னாள் நீலகண்டனிடம். நீலகண்டன் கடையில் இருந்தான். கணவன், ரஞ்சனிக்கு அழைத்து செய்தியை சொல்ல, ரஞ்சனி முதலில் அதிர்ந்தாள்.. காரணம் நாலு நபர்கள் வருகிறார்கள் இரவு உணவு தயார் செய்ய வேண்டும் என்பதனால்.

ரஞ்சனி “ஐயோ… டிபன்னா, என்ன செய்யறது..” என அழும் குரலில் கேட்டாள். நீலகண்டனுக்கு லேசாக சிரிப்பு கூட வந்தது.. ”ஏன் என்ன ஆச்சு, நீதான் சூப்பரா சமைக்கிறியே” என்றான் சிரிப்பு இழையோட. 

 

 

Advertisement