Advertisement

நீலகண்டன், இரண்டுநாள் மழிக்காத முகம்.. கடுகடுப்பான விழிகள்.. இறுகிய உடல்மொழி என ஏதும் பேசாமல் நின்றான். முன்பே அவன் கொஞ்சம் இறுக்கமானவன்.. இப்போது யாருமில்லாமல் தனித்து.. நிற்கிறவன்.. இன்னும் இறுக்கமாக நின்றான்.

அரசு “என்ன பா, யாருப்பா இவங்க எல்லாம்..” என்றார், இறங்கி வந்த மாதவனை பார்த்து.

மாதவன் “என்ன அங்கிள், என்ன வேண்டும் உங்களுக்கு” என்றான்.

இப்போது வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள்.. அவர்கள் உட்காருவதற்கு சேர் கொண்டு வந்து போட்டனர். அரசு அமர்ந்து.. மற்ற எல்லோரையும் அமர சொன்னார்.

அரசு “மாதவா, உன்னை கண்ணன் வளர்ப்புன்னு நினைச்சு அமைதியா விட்டுட்டேன் பா, இல்ல போல.. யாருக்கும் தெரியாமல், யாரையும் கேட்க்காமல், அவன் பெண்ணு இப்படி கல்யாண ஏற்பாடு பண்ணலாமா.. குறிப்பா, அவளோட அத்தை பையன் இருக்கும் போது, அதை தாண்டி யாரு வருவா பெண்ணு கேட்டக.. தப்பில்லையா ப்பா.. என்ன அண்ணே நான் சொல்றது” என பெரியப்பாவை கேட்டுக் கொண்டு ஆரம்பித்தார்.. அரசு.

நீலகண்டன் பிரசாந்தையே பார்த்திருந்தான்.. அளவிடும் பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

நீலாவிற்கு, ரஞ்சனிமேல் அளவுக்கு அதிகமான கோவம் ‘ஒருவார்த்தை என்னை அழைத்து.. இப்படி ஏற்பாடு நடக்கிறது என ஏன் சொல்லவில்லை’ என கோவம்.. கடுப்பு எல்லாம்..’ அவளுக்கு தன்னை தவிர யாரையும் பிடிக்காது என்பது உறுதி, ஆனால், அவள் ஏன் என்னை அழைக்கவில்லை என கோவம். 

அரசு பேசி முடிக்கவும், மாதவன்.. இப்போது பெரியப்பாவை பார்த்து “என்ன பெரியப்பா, காலையில் நான் என்ன சொன்னேன்.. நீங்க இப்போது என்ன செய்யறீங்க..” என்றான் எரிச்சலாக.

பெரியப்பா “ஏன் மாதவன், முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. நீ யாரையும் கேட்க்கலை.. முடிவெடுத்துட்ட, அதுவும் தப்பாக. இவங்க என்னை கேட்டாங்க.. நீங்க வரணும்ன்னு சொன்னாங்க.. அவங்க சொல்றதும் சரிதானே பா.. தப்பில்லையே.. அத்தை பையன் இருக்கையில், அத்தோடு.. உங்க அப்பா போகும் போது, அவன் கையில் பிடித்து கொடுத்துவிட்டு போயிருக்கான்.. அதுக்கு சாட்சி அரசு.. அதெப்படி ப்பா, ஒருத்தன் பொருளை, இன்னொருத்தனுக்கு கொடுக்கிறது..” என்றார்.

பிரசாந்த் காதுகளை மூடிக் கொண்டான் “அய்யோ, இதென்ன பேச்சு” என்றான்.

பிரசாந்தின் அப்பாவும் அம்மாவும் அதிர்ந்து போயினர். அவர்களுக்கு ‘நானும் அவளும் விரும்புகிறோம்’ என சொல்லியிருந்தான். அதனால், அவசரமாக பெண் கேட்டு வந்துவிட்டனர். இப்போது இவர்கள் பேச்சு உண்மை நிலையை சொல்ல.. பிரசாந்தின் தந்தைக்கு அவமானமாக போகிற்று.. “பிரசாந்த்..” என்றார் அதட்டலாக.

பிரசாந்த் வரவும்.. அவரின் தந்தை சற்று தள்ளி பிரசாந்தை அழைத்து சென்றார்.. எதோ ரகசியம் பேசினர் இருவரும், அதற்குள் பிரசாந்தின் சொந்தங்களுக்குள் ஒரு சலசலப்பு.

ரகுவின் தந்தை இப்போது, அரசுவை பார்த்து “ஏங்க, பெண்ணுக்கு கல்யாணம் பேசறது எங்க விருப்பம்.. இப்படி நடுவீட்டில் உட்கார்ந்துகிட்டு.. கலாட்டா பண்றது சரியா” என்றார்.

அரசு “யாருங்க கலாட்டா செய்யறது.. ஏற்கனவே நிச்சயம் ஆனா பெண்ணுக்கு.. நீங்கதான வரன் கொண்டு வந்தீருக்கீங்க, அதை நாங்க கேட்ட கலாட்டாவா..” என்றார்.

இப்போது மாதவன் என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்தான்.

அரசு “கூப்பிடுங்க ரஞ்சனியை.. பேசிக்கலாம்..” என்றார் சத்தமாக.

ரஞ்சனியின் காதுகளில் இந்த சலசலப்பு கேட்டது. தன் அறையிலிருந்து.. வந்து பார்த்தாள்.. பார்த்தவளின் கண்கள் விரிந்தது.. யாருமேயில்லை என எண்ணியிருந்த நிலையில், நீலகண்டனை அவள் கண்கள் பார்த்ததும் அப்படி ஒரு நிம்மதி. யோசிக்காமல் அப்படியே இறங்கி வந்தாள். அவளின் உடல்பொருள் ஆவி எல்லாம்.. நீலகண்டனிடமே. உறைந்த நிலையிலிருந்தாள்.

நீலகண்டனும் அவளை பார்த்துவிட்டான்.. அவளை பார்க்க பார்க்க கோவம்தான் கொப்பளித்தது.. ‘ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை நீ.’ என இமைக்காமல் பார்த்திருந்தான். வந்து நின்றாள் அவனை பார்த்துக் கொண்டே..

பிரசாந்தும் தன் தந்தையை சமாதானம் செய்துக் கொண்டிருந்தான் “அப்பா, அவங்க சொந்தம்தான், ஆனால், நான்தான் ரஞ்சனியை விரும்பறேன்.. அவங்க சு..ம்மா கலாட்டா” என சொல்ல.. அவனின் தந்தை “யாருடா கலாட்டா செய்யறா.. பார்த்தால் அப்படி தெரியலையே, அவங்க சொன்னது எல்லாம் பொய்யின்னு நீ இன்னும் சொல்லவேயில்ல, அவங்க எல்லாம் வந்து உரிமையா நிக்கறாங்க.. சொந்தகாரங்க வேற.. நான் உன் பேச்சை கேட்டிருக்க கூடாது.. எப்போதும் போல.. இதிலையும் நீ உருப்படி இல்லை.. போ” என்றார் ஆற்றாமையாக. பிரசாந்த் குழம்பி போனான்.

பிரசாந்தின் தந்தை.. மகனிடம் பேசி முடித்து வெளியே வந்தவர்.. ரஞ்சனியை பார்த்தார்.. அவளின் பார்வை முழுவதும் நீலகண்டனிடம் இருக்கவும் தம் மக்களை பார்த்து “வாங்க போகலாம்” என்றவர் கிளம்பிவிட்டார்.

அரசு அமைதியாக அவர்கள் செல்லும் வரை அமர்ந்திருந்தார்.

பிரசாந்த், தயங்கி.. தயங்கி..  செல்லுவதா வேண்டாமா என நின்றிருந்தான். பிரசாந்தின் தந்தை.. அவனின் கைபிடித்து இழுத்து சென்றுவிட்டார்.

அரசு “ரஞ்சனி, என்ன ம்மா, இதெல்லாம்.. நீ நீலகண்டனுக்கு நிச்சயம் ஆகிய பெண். எப்படிம்மா.. இதுகெல்லாம் நீ ஒத்துகிட்ட” என்றார்.

இப்போது பெரியப்பா “பாப்பாக்கு ஏதும் தெரியாது அரசு.. நீ, வந்த வேலையை முடி” என்றார்.

அரசு எழுந்து நின்று “நீலகண்டனுக்கு முன்பே நிச்சயமான பெண் ரஞ்சனி தேவி.. எனவே, நாளை மறுநாள் எளிமையாக நீலகண்டனின் குலதெய்வ கோவிலில் அவர்களின் திருமணம் நடைபெறும்.” என அறிவித்தார்.

ரகுவின் தந்தை “இது சரியில்லைங்க.. இத்தனைநாள் சும்மாதானே இருந்தீங்க.. இப்போது வந்து இப்படி செய்யறது எல்லாம் சரியில்லைங்க.. மாதவன்தானே ரஞ்சனிக்கு பொறுப்பு. அவன் பார்த்து பெண்ணுக்கு, நல்லது செய்யும் போது.. நீங்க இப்படி முடிவெடுத்தால்.. நாளைபின்ன, பெண்ணுக்கு எந்த நல்லது கெட்டதுக்கும் எங்க தேவை இல்லையா.. ஊரே பார்த்துக்குமோ” என்றார்.

நீலகண்டன் “ஓ.. சந்தோஷம்ங்க.. நான் பார்த்துக்கிறேன்.. என்ன ரகு, பயப்படுத்துறீங்களா” என்றான்.

ரகு “பின்ன என்ன சொல்லுவாங்க.. இப்படி நடுவீட்டில் வந்து நின்று, கலாட்டா செய்தால்..” என்றான்.

நீலகண்டன் முனகினான் ‘என் பொண்டாட்டிய இன்னொருத்தனுக்கு பேசுவாய்.. நான் பார்த்துகிட்டு இருக்கணும்.. கலாட்டா செய்யாமல்’ என, முனகினான். எல்லோர் காதிலும் அது நன்றாக விழுகவும்.. அரசு அவசரமாக “ரஞ்சனி, காபி கொடும்மா” என்றார்.

அவள், அந்த பக்கம் செல்லவும் அரசு “இங்க பாருங்க.. கண்ணன் விருப்பம்.. இதுதான். பெண்ணை நல்லவிதமாக கல்யாணம் செய்துக் கொடுங்க.. அதுதான் வழி உங்களுக்கு.. அதையும் இதையும் பேசி.. பகையை வளர்க்க வேண்டாம். உறவு வேண்டும் இருவருக்கும்” என்றார்.

நீலகண்டன், எழுந்துக் கொண்டான். ‘மனது சந்தோஷமாக இல்லை.. என்னமோ தம்பியும் வரவில்லை.. இங்கேயும் உறவில் ஒட்டுதல் இல்லை.. என்ன டா இது..’ என தோன்றியது.

ரஞ்சனி அந்த நேரம் காபி எடுத்து வந்தாள்.. அப்படியே அமர்ந்தான் காபியை எடுத்துக் கொண்டான். 

ரகுவின் தாய் தந்தை இருவரும் உள்ளே எழுந்து சென்றுவிட்டனர். மாதவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவன்தான் நிமிரவேயில்லை.. அவனுக்கு தன் சீட்டு கிடைக்காது என எண்ணம். எனவே அப்படியே அமர்ந்துக் கொண்டான்.

ரகுதான் ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்திருந்தான்.

வந்த பெரியவர்கள் எல்லோரும், ரகுவிடமும்.. ரஞ்சனியிடமும் விடைபெற்று கிளம்பினர். அரசுவும் கிளம்ப நீலகண்டனும் ரஞ்சனியிடம் முறைத்தபடியே விடைபெற்று கிளம்பினான்.

திருமணநாள் அழகாக விடிந்தது. ரஞ்சனி வீட்டில், மாதவன் விடுத்து மற்ற எல்லோரும் கிளம்பினர். 

நீலகண்டனின் குலதெய்வ கோவில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில். அங்கேதான் திருமணம். எல்லா ஏற்பாடுகளையும் அரசுவும் அதியமானும் செய்தனர்.

குகனுக்கு தகவல் சொல்லியிருந்தனர். நீலகண்டன் அழைக்கவில்லை. கார்த்திக், அதியமான், அரசு என மூவரும் அழைத்து பேசியிருந்தனர். எனவே, குகன் முதலில் வரமுடியாது என்றுவிட்டான். அர்ச்சனாதான் பிடிவாதமாக குகனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எளிமையாக நீலகண்டன் ரஞ்சனிதேவி திருமணம் முடிந்தது.

 

Advertisement