Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

17

நீலகண்டன் உறங்கிவிட்டான். நீண்டநாள் சென்று ஒரு அமைதியான உறக்கம்.. மருந்தின் விளைவு அவனை வேறு நினைக்க விடவில்லை.. படுத்தவுடன் கண்கள் மூடிக்கொள்ள.. எந்த நினைவும் இல்லை அவனுக்கு  நிம்மதியாக உறங்கிவிட்டான்.

ஆனால், அங்கே ரஞ்சனி படும் பாடு.. ‘வீடு வந்திருக்கிறேன்.. அக்கறையாக கண் பார்த்து நிற்கிறேன்.. கடன்காரன் முகத்தில் ஏதாவது ஒரு பாவம் தெரிகிறதா.. அப்படியே எதோ மண் மரத்தை பார்ப்பது போல ஒரு பார்வை.. இத்தனைக்கும் உடம்பு முடியலை இவருக்கு.. அப்போது கூட என்மேல் காதல் வேண்டாம்.. ஒரு ஆதரவான பார்வை இல்லை..’ என மனதில் ஓட்டிக் கொண்டிருந்தாள். 

ரஞ்சனி, தங்கள் வீட்டில் வேலை செய்யும் அக்கா சொல்லியபடியே அரிசியை வறுத்து.. பொடித்து.. என கஞ்சிக்கு தேவையானதை எல்லாம் செய்துக் கொண்டிருந்தாலும், மனது அவனின் ஒரு சம்மத பார்வைக்கும்.. இளகிய உடல்மொழிக்கும் தவித்துக் கொண்டிருந்தது.

ஆனால், இதுவரை அவனின் பேச்சிலோ.. பார்வையிலோ, உடல்மொழியிலோ.. இவள் என் பொறுப்பு என்றோ.. எனக்கு பிடிக்கும் என்றோ ஒரு ப்பாவமோ.. பார்வையோ காட்டியதில்லை.. நீலகண்டன். 

பெண்ணுக்கு புரிகிறது, இது அவனுக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.. வேறு யாரையேனும் அவனுக்கு பிடித்திருக்கலாம்.. இல்லை, நான் அவனுக்கு பொருத்துமில்லை என அவன் நினைக்கலாம்.. இப்படி எதுவாக இருந்தாலும்.. தவறில்லையே. ம்.. ஆனால், எனக்கு அவனை இப்போது பிடிக்கிறது. அப்பா சொன்னதால் கூட இருக்கலாம்.. இல்லை, வீட்டில் நடந்தவைகளின் தாக்கமாக கூட இருக்கலாம். ஆனால், அவனின் கண்ணியமான பேச்சும்.. அன்னியமாக பார்க்கும் பார்வையும் எனக்கு பிடிச்சிருக்குதான்.. அவனுக்காகவே அவனை பிடித்திருக்கு.. அவன் எப்படி எனத்தான் எனக்கு தெரியனும்.. யோசனையோடி ரசம் வைத்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

வேலையை முடித்து, நீலகண்டனை எழுப்பினாள் “நீலா சர்…” என்றாள். அவளுக்கே அவளின் அழைப்பு கொஞ்சம் சிரிப்பாகத்தான் வந்தது. ஆனால், தன் கண்ணில் கூட சொந்தம் கொண்டாடாதவனை எப்படி முறையாக அழைப்பது என மனம் வாடித்தான் இப்படி அழைத்தாள். இரண்டு முறை அழைத்த பின்தான் எழுந்தான் நீலகண்டன்.

ரஞ்சனி, ஒன்றும் அவனிடம் பேசாமல்.. ஒரு பௌலில் கஞ்சியில்,  ரசம் கலந்து ஸ்பூன் போட்டு தந்தாள். நீலகண்டனும் ஒன்றும் பேசாமல் அதை உண்டான். ஒரு பெண் தன் வீட்டில் சுவாதீனமாய் நடமாடுகிறாள் என்ற எண்ணமே இல்லாமால் உறங்கிஇருக்கிறேன்.. எப்படி முடிகிறது என்னால்!’ என எண்ணிக் கொண்டே எதோ குற்றம் செய்தவனாக உணர்ந்து.. அவளை பார்க்காமல் அமைதியாக உண்டான்.

ரஞ்சனிக்கு கோவமாக வந்தது ‘ஏதாவது பேசினால் என்ன.. அப்படியே நல்லவருன்னு நெனைப்பு..’ என எண்ணிக் கொண்டே சுடுதண்ணீர் எடுக்க.. ரசம் வேண்டுமா என கேட்க.. அங்கும் இங்கும் டங் டங் என பாதம் வைத்து நடந்தாள் பெண்.

நீலகண்டனுக்கு என்னமோ புதிதாக இருந்தது இதெல்லாம்.. ‘வந்ததும் சண்டை போடுவது போல பேச்சு.. என்ன உங்க தம்பிக்கு அவசரமா கல்யாணம்’ என கேட்பது.. எல்லாம் அவனுக்கு புதிது.. அதுவும் இப்படி டங் டங் என வேகமாக நடப்பது அதில் எதோ சொல்லுவது என.. ஒரு பேய்யடித்த நிலையிலிருந்தான் நீலகண்டன்.

ரஞ்சனி, அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.. நன்றாக வேர்த்து இருந்தது.. “காய்ச்சல் இல்லை..” என்றவள் மாத்திரைகளை எடுத்து வைத்தாள்.. சுடுதண்ணீர் வைத்தாள். நீலகண்டனை யட்சி இன்னும் பலமாக வதைத்தாள்.

அவன் ஏதும் கேட்பதாகவோ, பேசுவதாகவோ இல்லை..

ரஞ்சனி, தன்னுடைய போனை எடுத்து தன் கைபையில் வைத்தாள்.. வண்டி சாவியை எடுத்துக் கொண்டு “உங்ககிட்ட ஒன்னு கேட்டு க்ளாரிஃப்ய் செய்யத்தான் வந்தேன்..” என்றாள், அவனின் முகத்தை பார்த்து இப்போது. 

நீலகண்டன் நிமிர்ந்து ‘என்ன’ என்பதாக பார்த்தான்.

ரஞ்சனி, அவனின் அந்த பாவனையில் அருகில் வந்தாள்.. மண்டியிட்டு அவன்முன் அமர்ந்தாள்.. “எ…எனக்கு இல்ல, என்னை.. ச்ச.. உங்களுக்கு, ம்.. உங்களுக்கு என் நிலை.. அதான் அ..அப்பா.. உ..உங்ககிட்ட.. அதான், எனக்கு என்ன பதில்” என்றாள் நெற்றி வேர்க்க.. கண்கள் கரிக்க.. மூக்கு நுனி சிவந்து.. அவள், அவள் இல்லை.. எனுமாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.

நீலகண்டனுக்கும் அவளின் வாய்மொழியாக இந்த வார்த்தைகளை கேட்கவும்.. மனது சமநிலையை இழந்தது. ‘ஏந்திக் கொள்ள கைகள் அல்ல, இதயம் நீட்டுகிறாள்.. என்னெதிரில்’ என அப்படியே பார்த்திருந்தான், அவளை. 

‘இவள் எப்படி என் வாழ்வில் வந்தாலோ.. வேண்டாத உறவு என நான் எண்ணியதாக இருக்கலாம்.. அந்த நேரத்து.. பெரியவரின் ஆசை என இருக்கலாம்.. ஆனால், இப்போது நிற்பவளை எப்படி நான் விடமுடியும்.. ஆனால், தம்பியிடம் ஏதும் சொல்லவில்லையே.. பேசவில்லையே.. அவன்தான் எனக்கு இருக்கும் ஒரே உறவு.. அவனுக்கு புரியவைக்கும் வரை.. என்ன பதிலை இவளுக்கு சொல்ல முடியும் என்னால்..’ என அப்படியே அவளை பார்த்திருந்தான்.

ரஞ்சனி, அவனையே பார்த்திருந்தாள்.. நொடிகள் எல்லாம் யுகமானது பெண்ணுக்கு.. “பரவாயில்ல.. எ.. நான்தான்..” என்றவள், எழுந்துக் கொண்டாள். அவனின் கரு விழிகளில் கூட சிறு அசைவு இல்லை.. ஏதேனும் நகர்ந்தாலோ, அந்த நெற்றி சுருங்கினாலோ.. இவன் யோசிக்கிறான் என கொள்ளலாம்.. ஆனால் அப்படி ஒரு அசைவும் அவனிடம் இல்லை. ஏமாந்து போனாள் பெண்.. இருந்தும் சுதாரித்து எழுந்துக் கொண்டாள்.. “சாரி..” என்றவள் திரும்பி நடந்தாள் வேகமாக.

நீலகண்டன் அவசரமாக “ரஞ்சனி” என்றான் கரகரப்பான குரலில்.

நின்றாள் பெண்.. நீலகண்டன் “போன் செய்யறேன்.. “ என்றான்.

“ஏங்கி ஏங்கி நான் கேட்பது.. 

உன்னைத்தான டா..

தூங்கி போனதாய் நடிப்பது

இன்னும் ஏன்ன டா..”

ரஞ்சனி ஏதும் பேசவில்லை.. திரும்பியும் பார்க்கவில்லை அவனை.. வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு வேகமாக அந்த இடம்விட்டு நகர்ந்தாள்.

வீடு வந்து சேர்ந்தாள் ரஞ்சனி.

வீட்டில், வேலைக்கு செய்யும் அக்கா வந்து “ஏன் இவ்வளோ நேரம் பாப்பா.. உன் அண்ணன் மாதவன் சர் போன் செய்துகிட்டே இருந்தார்.. நீங்க போனை எடுக்கலையாமே.. வந்ததும் கூப்பிட சொன்னார், பேசிடுங்க பாப்பா” என்றார்.

ரஞ்சனி, காதில் வாங்கியும் வாங்காத நிலையில் மேலே சென்றுவிட்டாள். வேலை செய்பவர்.. சாப்பிட அழைக்கவில்லை. எப்போதும் அப்படி பழக்கமில்லை, அந்த வீட்டில்.. அவர்களே உண்ணுவார்கள். எனவே, ஏதும் கேட்கவில்லை, விட்டுவிட்டார். 

!@!@!@!@!@!@!@!@!@!@!

நீலகண்டன் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அமர்ந்திருந்தான். அவள் கண்ணில் கண்ட காதலும்.. மினுமினுப்பு.. தனக்கானது என புரிந்தது அவனுக்கு. ஆனால், அவளை பற்றி யோசிக்கவே பயமாக இருக்கிறது, கண்முன் கோவமான தம்பி வந்து நின்றுவிடுகிறானே. எப்படியும் அவளை விடவோ.. அவளை தாண்டி வேறு பெண்ணை நினைக்கவோ எனக்கு வராது.. ஆனாலும், இந்த நொடி அவளை ஏமாற்றிவிட்டேனே என மனது வலித்தது அவனுக்கு.. அழுகையோடு செல்லும் அவளை வெறித்து பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

கார்த்திக், அப்போதுதான் அழைத்தான் நீலகண்டனை.. அதில் தன் நினைவு கலைந்தவனாக.. போனில் பேசத் தொடங்கினான் நீலகண்டன்.

போன் பேசி முடித்து, தன்னை தானே, தேற்றிக் கொண்டு,  மாத்திரைகளை விழுங்கி மீண்டும் உறங்கிவிட்டான். 

மாலையில்தான் எழுந்தான். குளித்து முடித்து.. அமர்ந்திருந்தான். கடைக்கு செல்லவும் மனதில்லை.. மனது அவளிடமே நின்றது.

சற்று நேரத்தில் பொறுக்காமல் அவளுக்கு அழைத்தான்..

ரஞ்சனி எடுக்கவில்லை.

அவனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. மீண்டும் இரண்டு முறை அழைத்தான் அப்போதும் எடுக்கவில்லை. விட்டுவிட்டான்.

குகன், அழைத்தான் நீலகண்டனை. வீடு பற்றி பேசினான்.. “அதன், வீடியோ அனுப்பி இருக்கிறேன் பார்” என்றான்.

நீலகண்டன், “ஏன் இவ்வளோ அவரசம்.. ஏதாவது கட்டும் வீடாக.. புது வீடாக பார்க்கலாமே டா, ஏன் பழைய வீடு.. முதல் முதலில் நாம் வீடு என்ற ஒன்றை வாங்குகிறோம்.. புது வீடாக வாங்கலாமே..” என்றான் அண்ணன்.

தம்பி “ எனக்கு வீடு பார்க்கும் ஐடியா இருக்கா இல்லையா உனக்கு..” என்றான்.

நீலகண்டன் அமைதியாக இருந்தான்.

தம்பிக்கும் தான் பேசுவது கொஞ்சம் அதிகபடி என தோன்றியது. இவர்கள் முன் இப்படித்தான் பேசிக் கொள்வர்.. ஆனா, இப்போதெல்லாம் இருவருக்குமே.. சாதாரன பேச்சு கூட அதிகபடியாக தோன்ற தொடங்கிவிட்டது. குகனும் ஏதும் பேசவில்லை.

நீலகண்டன் “சரி.. என்ன செலவு.. ஏதாவது சொல்லு..” என்றான்.

குகனுக்கு, கோவம் திருமணத்திற்கு ‘கல்யாணத்திற்கு துணி எடுக்க போறேன்னு சொன்ன போது ஏதும் கேட்கவில்லை… ரிஷப்பஷன் செலவில் மட்டும் பாதியை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறான், இவ்வளவு நாள்.. என்னிடம், என்ன செய்தாய் என கேட்கவேயில்லை..’ என கொதித்தது தம்பிக்கு.

குகன் “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. உனக்கு ட்ரெஸ் எடுத்திட்டியா” என்றான். 

கோவமாகவோ வேகமாகவோ தம்பி அப்படி கேட்டது நீலகண்டனுக்கு சந்தோஷமே. அண்ணன் “இல்ல டா, எடுக்கணும்” என்றான், இயல்பாக ஒட்டுதலோடு சொன்னான்..

தம்பிக்கு, அண்ணனின் வார்த்தையில் சற்று இதம் வர “எப்போ எடுக்கறது.. சீக்கிரம் எடு.. உடம்பு பரவாயில்லையா” என்றான்.

நீலகண்டன் “போகணும், நாளைக்குதான் போகணும்.. அப்புறம் எப்படி இருக்காங்க அர்ச்சனா” என்றான்.

குகன் “என்ன இருக்காங்க.. அர்ச்சனான்னு சொல்லு” என்றான், உரிமையான அதட்டலாக.

நீலகண்டன் “சரிதான், பேசி.. பழக.. சரியா போய்டும்.. வேலைக்கு போறாங்களா.. இல்ல, வீட்டுக்கு போயாச்சா” என்றான்.

Advertisement