Advertisement

குகன் “இப்போவாது கேட்டியே.. வீட்டில் இருக்கா, மெடிக்கல் லீவ் போட்டிருக்கு.. இரண்டு மாசம். நீ எப்போ வர.. அதியமான் அங்கிளுக்கு பத்திரிகை கொடுத்திட்டியா.. அவர்கிட்ட பேசனும். கார்த்திக் கூட பேசவேயில்லை, அங்கிள்.. ஆன்ட்டி யார்கிட்ட பேசவும் கஷ்ட்டமா இருக்கு..” என்றான்.

நீலகண்டன் “ஹே.. இல்லடா, நான் சும்மா நீ லவ் பண்ணிட்ட.. அப்படின்னு மேலோட்டமாத்தான் சொல்லி இருக்கேன் நீ பேசு” என்றான்.

தம்பி,  அண்ணன் சொன்ன வார்த்தையில் சற்று நிமிடம் அமைதிகாக இருந்தான்.. தன்னை அண்ணன் விட்டுக் கொடுக்கவில்லை என அமைதி.. எனவே உணர்ந்த குரலில்.. “தேங்க்ஸ்.. பேசறேன்.. கல்யாணத்து வருவாங்கல்ல.. நம்ம வீட்டு சைடு யாருமே இல்ல..” என்றான்.

அண்ணனுக்கு மனது தாங்கவில்லை உடனே, தம்பி நல்ல மனநிலையில் இருக்கிறான் என எண்ணி “டேய்.. மாமா, இப்போது இறந்து போனாரில்ல, கண்ணன் மாமா, அவர் வீட்டில் பத்திரிகை கொடுத்துட்டு வந்தேன்.. அரசுன்னு அவர் ப்ரெண்ட் அவருக்கும் கொடுத்திருக்கேன்.. நம்ம கடையில் வேலை செய்யறவங்க.. இஞ்சினியர்.. அப்புறம், அந்த சேட்டாக்கும் கொடுத்திருக்கேன்.. எல்லோரும் வருவாங்க டா..” என்றான் சந்தோஷமாக.

குகன் “மாமா வீடா.. என்ன சொந்தம் எல்லாம் பலமா இருக்கு” என்றான்.

நீலகண்டன் அமைதியாகி விட்டான்.

குகன் “கார்த்திக் கூட அப்போது சொன்னான்.. நீ புல் டே அங்கதான் இருந்தேன்னு.. போதும்.. எதுக்கு என் கல்யாணத்துக்கு பத்திரிக்கை எல்லாம் கொடுக்கிற.. சொத்து இருக்குன்னா.. அதை பார்த்துக்கலாம்.. சொந்தம்  வேண்டாமே.. எதுக்கு, புதுசா இந்த பழக்க வழக்கம். அப்போ நம்ம சித்தப்பாவையும் கூப்பிட்டிருக்கனுமே.. ம்.. விட்டுடலாம். எனக்கு வெறுப்பாதான் இருக்கு.. என்ன மனுஷங்க இவங்க.. கடைசி நேரத்தில் தன்னை நல்லவன்னு சொல்லிக்க.. தன் மேலே கறை பட கூடாதுன்னு இப்படி எல்லாம் டிராமா போட்டு.. அய்யோ, எனக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்.. ப்ளீஸ் அவாய்ட் பண்ணிடு..” என்றான், கடுப்படிக்கும் குரலில்.

நீலகண்டன் ஒன்றும் சொல்லவில்லை அமைதியாக கேட்டுக் கொண்டான். மீண்டும் குகனே பேசினான் “நீ எப்போ வர.. கடையை நாலு நாள் லீவ் விட்டுட்டு வந்திடு.. சொல்ல மாட்டேன்” என்றான்.

நீலகண்டன் புன்னகையோடு “வரேன் டா.. எனக்கு சொல்லனுமா நீ..” என்றான். நல்ல விதமாக பேசியே இருவரும் விடை பெற்றனர்.

நீலகண்டனுக்கு, தம்பி பேசியது நிம்மதிதான். ஆனால், மனது அமைதியாகவில்லை.. கரைகட்டிய கண்களும்.. நுனி சிவந்த மூக்கும்.. தவித்த உதடுகளுமே நினைவு வந்தது. தம்பி வேறு, அவர்களை பற்றி பேசாதே என சொல்லவும்.. இன்னும் அவளின் நினைவே அதிகமாகியது.

கார்த்திக் வந்தான்.. என்னாச்சு என விசாரித்தான். அவனும் இரவு தொடங்கி.. நடந்ததை சொன்னான். ரஞ்சனி வந்ததையும் சொன்னான். கார்த்திக் “ப்ரோ.. சத்தமில்லாமல் என்ன வேலை செய்யறீங்க..” என்றான், அதட்டலாக.

நீலகண்டன் “ஏன் டா.. நீயும்.. குகனும் திட்றான். பாவம் ரஞ்சனி.. ச்ச போடா.. என்ன நடக்குமோ தெரியலை..” என்றான் சலித்த குரலில்.

கார்த்திக் “ஹய்யோ.. இதென்ன எங்க ப்ரோ சலிச்சிக்கிறார்..” என்றான்.

நீலகண்டன் அமைதியாகவே இருந்தான்.

கார்த்திக் “சரி, என்னதான் ஆச்சு” என்றான்.

நீலகண்டன் என்னவென சொல்லுவது இவனிடம் என எண்ணி “வா, சாப்பிட வரியா.. வெளியில் போலாம்.. கோகுலை, கடையை அடைக்க சொல்லணும்.. வா..” என சொல்லி.. ஒரு ஷர்ட் அணிந்துக் கொண்டே வெளியே வந்துவிட்டான்.

கார்த்திக்கும், நீலனின் நிலை ஓரளவு புரிகிறது.. அதனால் மேற்கொண்டு ஏதும் கேட்டாமல் விட்டான்.

நீலகண்டன், கடைக்கு சென்று அமர்ந்தான், கார்த்திக்கும் பில்லிங்கில் அமர்ந்து எதோ ஹெல்ப் செய்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் நீலகண்டனிடம், கார்த்திக்கு “அம்மா இட்லி கொடுத்து விடுறாங்களாம்.. உன்னை கடையில் சாப்பிட வேண்டாம்ன்னு சொல்றாங்க.. வீட்டுக்கு போக சொல்றாங்க..” என்றான் போனை காதில் வைத்துக் கொண்டு.. இவனிடம் சொன்னான்.

நீலகண்டன் முகத்தில் சின்ன புன்னகை “ம்” என்பதாக தலையசைத்தான். கார்த்திக் போனை வைத்ததும், நீலகண்டன் “ஏன் டா, அம்மாகிட்ட எல்லாம் சொல்ற.. அவங்களுக்கு சிரமம்..” என்றான்.

கார்த்திக் “ம்.. அப்போ ரஞ்சனிகிட்ட சொல்லவா.. மத்தியானம் கஞ்சி கொடுத்தியே.. நைட் யாரு மச்சானுக்கு டிபன் கொடுப்பான்னு கேட்கவா..” என்றான் குசும்பாக சின்ன குரலில்.

நீலகண்டன் முகம் வாடித்தான் போனது, சிரிக்க கூட மனதில்லாமல் அவனின் கிண்டலை கூட ரசிக்க முடியாமல்.. அமைதியாகிவிட்டான்.

கார்த்திக் “ஏதாவது கேட்டால்.. உடனே சோகம் கீதம் பாடறா மாதிரி முகத்தை வச்சிக்க வேண்டியது.. ஆமாம், எப்படி வந்தாங்க அவங்க.. ம்.. மர்மமாவே இருக்கு.. எனக்கு” என்றான் நண்பனை பார்த்துக் கொண்டு.

நீலகண்டன் இறுகிக் கொண்டான். ஏதும் பேசவில்லை.

கார்த்திக்கும் துருவி துருவி கேட்டான், பதிலே இல்லை அதன்பின், கார்த்திக் “ம்.. பார்க்கிறேன் பார்க்கிறேன்.. எத்தனைநாள் இப்படியே இருக்கும்ன்னு..” என வஞ்சமாக சொல்லியபடி பில்லிங் கவனித்தான்.

மாதவன், ரஞ்சனியை அன்று இரவே கேள்வி கேட்டு துளைத்து விட்டான் “எங்க போன.. எதுக்கு போன யாரை பார்க்க அந்த ஊருக்கு..” என கேள்விகள் தொடர்ந்தது அவளை.. ம்.. ரஞ்சனியை கண்காணிக்கக வைத்திருந்த ஆட்கள்.. நீலகண்டன் இருக்கும் ஊருக்கு ரஞ்சனி வந்ததுமே சொல்லி விட்டார்கள் மாதவனிடம். எனவே மாதவன், கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

ரஞ்சனி தன்னை கேள்விக் கேட்க்கும் அண்ணனை பதிலாலேயே மிரட்டினாள் ரஞ்சனி “எங்க போனேன் அதான் சொல்லிட்டு தானே போனேன்.. என் ப்ரெண்ட்துக்கு உடம்பு சரியில்லைன்னு.. ஏன், வேலை செய்யறவங்க சொல்லலையா.. அதான், போனேன்.. என்ன இத்தனை கேட்க்கிற.”. என்றாள்.

மாதவன் உறுமினான் “எதுக்கு அவன் ஊருக்கு போன” என்றான்.

ரஞ்சனி “எது.. எவன் ஊரு..” என்றாள் ஒன்றுமே தெரியாதவள் போல..

மாதவன் பிரசாந்த் இருவருக்கும் கோவம் இந்த கேள்வியில் “என்ன, செய்யறது எல்லாம் செய்துட்டு அவனை பார்த்துட்டு வந்துட்டு.. இங்க வந்து பேசுறியா” என அவனும் எகிற..

ரஞ்சனி அசரவேயில்லை “யாரை பார்த்தேன் சொல்லு.. எனக்கு தெரியலை சொல்லு” என்றாள் திமிராக.

பிரசாந்த், உண்மையாகவே இவளின் தைரியம் பார்த்து அசந்தே போனான்.. கண்காணிப்பவர்கள் சொல்லுவது பொய்யாக இருக்குமோ.. இவள் அங்கே சென்றிருந்தாலும்.. அவனை பார்க்க போகவில்லையோ.. என அந்த தைரியமான பேச்சில் சந்தேகம் வந்துவிட்டது, பிரசாந்த்துக்கு.

மாதவனிடம், பிரசாந்த் “விடு விடு.. பேசிக்கலாம்.. ரொம்ப மிரட்டுனா.. ஏதாவது செய்ய போறா.. இந்த மாசம் போகட்டும் நான் அம்மா அப்பாவோடு வந்து பெண் கேட்க்கிறேன்.. நீ அவ சொல்வதை சரி சரின்னு கேட்டுக்க..” என்றான் சின்ன குரலில்.

மாதவனுக்கு, இந்த வருஷம் முடிவில் எலெக்ஷன்.. எனவே ‘இன்னும் மூன்று மாதத்தில்.. கட்சிகள் தயாராகிவிடும்.. இந்த நேரத்தில் இவளும் பிரச்சனையை இழுத்துவிட்டு என் பிரச்சனையை பெருசாக்குகிறாள்’ என கோவமாக வந்தது. 

மாதவன் “இங்க பார்.. ரஞ்சனி நீ என் பொறுப்பு.. இனி என்கிட்டே சொல்லிட்டு உன் ப்ரெண்ட்ஸ் பார்க்க போ..” என்றான் உறுமலாக.

ரஞ்சனி “முடியாது.. சும்மா, எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது.. நீ என்ன சொல்லிட்டா செய்யற.” என்றவள், வேகமாக “எனக்கு படிக்கணும் வைக்கிறேன்” என்றவள், பட்டென போனை வைத்தும் விட்டாள்.

மாதவனுக்கு கோவமாக வந்தது.. இந்த வார்த்தைகளில்.. ‘என்ன செய்யறேன் பார்..’ என எண்ணிக் கொண்டான்.

அடுத்து மாதவன்..  பிரசாந்த் சொல்லுவது போல, எலெக்ஷன் வேலை ஆரம்பிப்பதற்குள் திருமணத்தை முடித்திட வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

!@!@!@!@!@!@!@!@!@!

நீலகண்டன், அன்று ரஞ்சனியை அழைத்ததுதான், அதன்பின் அழைக்கவில்லை.. நேரம் அமையவில்லை. ஆனால், மனதில் ஒரு முடிவோடு அமைதியாக இருந்தான்.

நீலகண்டன், கார்த்திக் இருவரும் சென்னை கிளம்பி சென்றனர், திருமணத்திற்கு இரண்டுநாள் முன்னதாக. திருமண வேலைகளை பெண் வீட்டாரே பார்த்துக் கொண்டனர். சென்னையை அடுத்துள்ள ஒரு நகரம்தான் அவளுடைய ஊர். எனவே, அங்கே அவர்கள் ஊர்.. பெரிய கோவிலில் திருமணம். அதை முடித்து மதியம் ஓரு தனியார் விடுதி ஹாலில் வரவேற்பு.. என முடிவு செய்துக் கொண்டனர்.. நல்ல முகூர்த்த நாட்கள்.. மண்டபம் கிடைக்கவில்லை, எனவே, இப்படி ஏற்பாடு நடந்தது.

குகனின் மாமனார் வீடு கொஞ்சம் உதவியது.. நீலகண்டனும் தன்னிடம் இருந்த சேவீங்க்ஸ் எல்லாம் எடுத்து கொடுத்திருந்தான்.. எனவே, கணிசமான தொகையை முன்பணமாக கொடுத்து.. மற்றது லோன்.. என வீட்டை தன் பெயருக்கு பதிந்திருந்தான். 

குகன் திருமணம் முடித்து.. நேரே புது வீட்டிற்கு வருதாக ஏற்பாடு.. எனவே, பெயிண்டிங் வேலை நடந்துக் கொண்டிருந்தது.. அவன் வாங்கிய வீட்டிற்கு.

 

அர்ச்சனாவை, திருமணத்திற்கு முதல்நாள், அவர்கள் வீட்டில் சென்று நீலகண்டன் பார்த்து வந்தான். ஒரு தடுமாற்றம் நீலகண்டனிடம் இருந்தாலும் கார்த்திக்.. குகன் இயல்பான பேச்சில்.. சற்று நேரத்தில் அந்த தடுமாற்றம் இல்லாமல் நீலகண்டனும் அர்ச்சனாவோடு இரண்டு வார்த்தைகள் பேசினான். அசதியாக தெரிந்தாள்.. நீலகண்டன் கண்களுக்கு.. ‘ரெஸ்ட் எடும்மா’ என்றான் அக்கறையாக.

அர்ச்சனாவும் ‘அண்ணா’ என்றே அழைத்து பேச தொடங்கினாள்.. பெரியவர்கள் “பெரிய மாமான்னு கூப்பிடு..” என்றனர். 

நீலகண்டன் பயந்து போனான்.. “இல்ல, அவங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படியே கூப்பிடட்டும்..” என்றான் அவசரமாக.. 

குகன் இப்போது சகஜமாக “அண்ணனுக்கு என்ன அவ்வளோ வயசா ஆகிடுச்சி.. எங்க அண்ணனுக்கு அப்புறம் யாரு பெண் கொடுப்பா.. நீ பேர் சொல்லி கூட கூப்பிடு அச்சு” என்றான் தன்னவளை பார்த்து.

நீலகண்டன் லேசாக புன்னகைத்தான்.

பெண் வீட்டாரிடையே இந்த செய்தி பரவியது.. மாப்பிளையின் அண்ணனுக்கு பெண் இன்னும் அமையவில்லை என செய்தி பரவியது.

எல்லாம் நல்லபடியாக செல்ல.. குகன் அர்ச்சனா திருமணமும் இனிதாக முடிந்தது. நீலகண்டன் அழைத்த எல்லோரும் வந்திருந்தனர்.. அதியமான் பார்வதியோடு வந்திருந்தார். அரசு வந்திருந்தார்.

ரகு வந்திருந்தான். குகனிடம் அறிமுகப்படுத்தும் போது மட்டும் குகன் சரியாக ரகுவிடம் பேசவில்லை.. நீலகண்டன் அதையெல்லாம் சமாளித்து.. ரகுவை கவனித்து அனுப்பி வைத்தான்.

குகன் அர்ச்சனாவோடு அவர்கள் வீடு சென்றான் முதலில். இங்கே, பெரியவர்கள் யாருமில்லாததால்.. எல்லா சடங்குகளும் பெண்வீட்டார் சொல்படி நடந்தது. இன்னும்  இரண்டு வாரம் சென்றுதான்.. அர்ச்சனா குகன், தம்பதி புதுவீட்டில் பால் காய்ச்சுகின்றனர்.

எனவே, நீலகண்டன் இங்கே என்ன செய்ய முடியும். திருமணம் முடிந்த உடன் அவனும் ஊர் வந்து சேர்ந்தான்.

Advertisement