Advertisement

ரஞ்சனிக்கு, அதாவது ரஞ்சனி பெயரில் ஒரு கார் மெக்கானி ஷாப் இருக்கிறது.. அதையும் ரகுதான் கவனிக்கிறான். ஆனால், கணக்குகள்.. வரவு செலவு எல்லாம் ரஞ்சனி, கல்லூரி செல்ல தொடங்கியதும்.. அவள் பெயருக்கு மாற்றிவிட்டார் கண்ணன். எனவே, ரஞ்சனியின் செலவிற்கு, அதில் வரும் வருமானத்தை பயன்படுத்துகிறாள்.

எதற்கும் ரகுவை கேட்பதில்லை.. தனக்கு தேவையானதை தானே வாங்குவது என பெண் பொறுப்பாகிவிட்டாள். படிப்பில் கவனத்தை செலுத்தினாள்.. நிறைய வகுப்புகள் இவள் செல்லாததால்.. இப்போது படிப்பில் கொஞ்சம் தலை சுற்றியது.. அடுத்த ஒரு வாரமும் விடுமுறை.. படிக்க. எனவே, படிப்பை கையெடுத்துக் கொண்டாள்.

அவ்வபோது.. நீலகண்டன் நினைவு வரும்.. ஆனால், இதை எப்படி கொண்டு செல்வது என தெரியவில்லை பெண்ணுக்கு. தானே அழைத்தால்.. கொஞ்சம் அதிகமாக தெரியுமோ என எண்ணம். அவங்க என்ன நினைக்கிறாங்க என தெரியாத நிலை.. அன்று, எந்த பாவமும் குரலில் காட்டவில்லை.. அத்தோடு, எதோ பிரச்சனை போல.. எனவும் எண்ணம். எனவே யோசனையோடு அமைதியாக இருந்தாள். 

ஆனால், இந்த விடுமுறை தினம் தொடங்கியது இன்றிலிருந்து. அதிலிருந்து தனிமை போரடிக்கிறது.. தோழிகள் நினைவெல்லாம் வரவில்லை.. நீலகண்டன் நினைவு மட்டுமே வருகிறது பெண்ணுக்கு.

படிக்கணும் என கையில் எதையாவது எடுத்தால்.. இறுகிய குரலில் அவன் பேசியதுதான் காதில் விழுகிறது பெண்ணுக்கு. காலையிலிருந்து.. படிப்பதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு.. அதுதான் குளித்து.. உண்டு.. இதிலிருந்து இதுவரை.. இப்போது முடிச்சிடனும் என சபதம் செய்துக் கொண்டு அமர்ந்தாள். 

பாவம், ஒன்றும் மனதில் நிற்கவில்லை. மதியம் வரை போராட்டம்.. நீலகண்டனுக்கும்.. தனக்குமாக போராட்டம். இப்போது, மனதோடு ஒரு உடன்படிக்கை.. ‘சரி நீலகண்டனுக்கு போன் பண்ணலாம்.. ஆனால், இந்த டாபிக் முடிச்சிட்டு கூப்பிடலாம்..’ என ஒரு நல்ல உடன்படிக்கை செய்துக் கொண்டு படிக்க தொடங்கினாள், புத்திசாலி. 

மாயம்!.. காதல் என்றாலே மாயாஜாலம்தான்.. ஒருமணி நேரத்தில் ஒன்றுக்கு இரண்டாக முடித்தாள் பெண். ‘ப்பா.. இப்போது கூப்பிடனும்’ என போனைத்தான் முதலில் கையிலெடுத்தாள் பெண்.

துணிந்து நீலகண்டனுக்கு அழைத்துவிட்டாள்.. அந்தபக்கம் இன்னும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு யோசனை.. அவளுள்.

நீலகண்டன் கடையின் உள்ளே இருந்தான்.. போன் பில்லிங் அருகில் இருந்தது.. இன்னும் எடுக்கவில்லை. சற்று நேரம் சென்று மீண்டும் அவள், அழைக்கும் போதுதான்.. அவன் எடுத்தான்.. “ஹலோ..” என்றான் இறுகிய குரலில்.

ரஞ்சனி “ஹலோ.. நல்லா இருக்கீங்களா.. ஏங்க, ஊருக்கு வந்துட்டு கூப்பிடுறேன்னு சொன்னீங்க கூப்பிடவேயில்லை..” என்றாள் குற்றப்பத்திரிகை வாசித்து.

நீலகண்டனுக்கு முகத்தில் சின்ன தளர்ந்த சிரிப்பு “சாரி மறந்துட்டேன். சுத்தமா மறந்துட்டேன்” என்றான் உண்மையாக.

ரஞ்சனிக்கு இந்த பதில் உவப்பாக இல்லை.. மனமும் முகமும் ஒருசேர வாடி போனது.. அவளே “இப்படி என்னை மறந்துட்டேன்னு உண்மைனையை சொல்லி இருக்க வேண்டாம்.. ‘வேலைன்னு’ பொய் சொல்லி இருக்கலாம்.. சரி, நீங்க என்னை மறந்தே போய்டுங்க.. ஆனா, நான் பொய்க்குதான் சொல்றேன்” என்றவள் போனின் இணைப்பை துண்டித்தாள்.

நீலகண்டனுக்கு அவள் சொன்னதன் அர்த்தம்.. வார்த்தை.. இதெல்லாம் புரியவில்லை ‘என்ன இவ.. உடனே கோச்சிட்டு கட் பண்ணிட்டா இப்போ.. மறந்துட்டேன்னு சொல்லிட்டியேன்னு.. அப்படி சொல்லாத, நீ பொய் சொல்லுன்னு சொல்றா.. நான் எதுக்கு பொய் சொல்லணும். இப்போது, கூப்பிடலாமா? கூடாதா?..’ என ஓடியது உள்ளே.

மீண்டும் ‘நாம தப்பு செய்திட்டோம் போல!.. அன்னிக்கு யார்கிட்டயாவது பேசனும்ன்னு தோணும் போது பேசின தானே..’ என எதோ பட்சி எடுத்து சொல்ல.. ‘அப்போது மட்டும் ஞாபகம் இருந்தாதன்னு கேட்க்கிறா போல..’ என தோன்றியது. 

ஆனாலும் ‘அப்போ ஏன் எனக்கு மறக்கணும்’ என அவனே தன்னை கேட்டுக் கொண்டான்.. அதற்கு பதில் மூளை சொல்லியது.. ‘ரன்னிங் எர்ரோர் நீ!..’ என்றது. மனது ‘அப்போ சரி பண்ணிடலாம்’ என சொன்னது. 

நீலகண்டன் இதமான மனநிலையில் தானே அழைத்தான் ரஞ்சனிக்கு.. அவள் ஒரே அழைப்பில் எடுத்தாள் “ஹலோ” என்றாள், சின்ன பெண்ணின் ஊடலான குரலில்.

நீலகண்டன் “சாரிங்க, பொய் சொல்ல தெரியாதுங்க எனக்கு.” என்றான் சமாதானமானக் குரலில்.

ரஞ்சனி “நம்பிட்டோம்” என்றாள்.

நீலகண்டன் அமைதியாகிவிட்டான் அவனுக்கு இந்த கிண்டல் கேலி எல்லாம் தெரியாது.. அதுவும் பெண்கள் பேச்சு அவ்வளவாக இல்லை.. இதில் இவளின் செல்ல கோவம் அவனுக்கு சங்கடத்தைதான் தந்தது.. அமைதியாகிவிட்டான்.

ரஞ்சனி “ஹலோ.. என்னாச்சுங்க..” என்றாள்.

நீலகண்டனுக்கு உண்மையாக என்ன பேச என தெரியவில்லை.. அமைதியாகவே இருந்தான்..

ரஞ்சனி “நீ..நீங்க வேலையாக இருந்தால் அப்புறம் பேசலாம்” என்றாள்.

நீலகண்டன் இவளின் இந்த தயக்கமான குரலில்தான் கொஞ்சம் தன்னை சுதாரித்துக் கொண்டான்.. “இல்ல, அப்படி இல்ல.. பில்லிங்கில் இருந்தேன் சொல்லுங்க.. எ..எப்படி இருக்கீங்க” என்றான்.. குரல் எப்போதும் போல இறுகிதான்  இருந்தது.

ரஞ்சனிக்கு மனது சோர்ந்து போனது. கண்ணில் நீர் நிறைந்தது ஏனென தெரியவில்லை.. “ம்.. நல்லா இருக்கேன்.” என்றாள், அவளும் ஏதும் பேச முற்படவில்லை.

சின்ன அமைதி இருவருக்கும் இடையில்.. இருவரும் அடுத்து என்ன பேசுவது என நினைத்து ‘வைக்கலாம்’ என எண்ணினர்.. 

ரஞ்சனி “நீங்க, பில்லிங் பாருங்க.. நான் சாப்பிட போறேன் அப்புறம் பேசறேன்” என்றவள் போனை வைத்துவிட்டாள். கண்கள் அணை கட்டுக் கொண்டது சட்டென.. அதனை அவள் தடுக்கவில்லை.. மடை திறந்தது.. தாரை தரையாக.

“என் காதல் சிலையோ கல்லோ..

என் காதல் சிறகோ சருகோ..

என் காதல் வலியோ சுகமோ..

வெறுத்தோ பிடித்தோ

அடித்தோ அணைத்தோ

பீல் மை லவ்…”

நீலகண்டனும் அமைதியாகி வைத்துவிட்டான். எதோ ஒரு புதிதான அழுத்தம் அவன்  மனதில் இணைந்தது. வேலை அவனை மேலும் யோசிக்க விடவில்லை..

 அன்று சென்னையிலிருந்து மாலையில் கிளம்பிய நீலகண்டன் விடியலில்தான் வந்து சேர்ந்தான். சற்று உறங்கலாம் என எண்ணினான் ஆனால், மனது உறக்கத்தை நாடவில்லை.. சீக்கிரம் குளித்து கிளம்பிவிட்டான் கடைக்கு.

நீலகண்டன் மதியமே, அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்துவிட்டார்களா என தம்பியை கேட்டு தெரிந்துக் கொண்டான், அவளின் உடல்நலம் விசாரித்தான் தம்பியிடம். வேறு பேசவில்லை.

நீலகண்டன் சகஜமாக இருக்க நினைக்கிறான். குகனுக்கு ‘ஏன்.. இங்கிருக்கும் போது பார்த்திருக்கலாமே..’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை.

மதியம் வரை வேலை, நிமிர முடியவில்லை அவனால்.

அதன்பின் கார்த்திக் கடைக்கு வந்தான்.. அவனோடு உண்பதற்காக மெஸ் சென்றான்.. நீலகண்டன்.

கார்த்திக் “வீட்டுக்கு போலாம் ப்ரோ” என்றான்.

நீலகண்டன் “ம்கூம்.. வா” என மெஸ்சுக்கு கூட்டி சென்றான்.

உண்டு முடித்து கார்த்தியாக கேட்க்கும் வரை பேசவில்லை நீலகண்டன், கார்த்திக் “குகன் எப்படி இருக்கார்” என்றான்.

அப்போதுதான் நீலகண்டன் வாய் திறந்தான் “குகனுக்கு கல்யாணம்.. லவ் பண்ணியிருக்கான்.. எனக்கு கல்யாணம் ஆகணும்ன்னு இருந்திருக்கான்.. அந்த பொண்ணு சூசைட்அட்டம்பெட்.. ஹாஸ்ப்பிட்டல அட்மிட் ஆகிட்டா.. அதான் போயிட்டு வந்தேன்..” என வாய் கூசாமல் பொய்தான் சொன்னான். என்ன செய்வது.. தம்பியை விட்டுக் கொடுக்க மனதில்லை, அண்ணனுக்கு.

கார்த்திக் அதிர்ந்து கேட்டுக் கொண்டான் என்ன சொல்லுவது என தெரியவில்லை.. நீலகண்டன் “அனேகமாக அடுத்த முகூர்த்தத்தில் கல்யாண தேதி குறிச்சிடுவாங்க அவங்க வீட்டில்.. அதான் போயிட்டு வந்தேன்.. நானும் அப்படிதான் சொல்லிட்டு வந்தேன்.. அங்கிள் கிட்ட சொல்லணும்.. ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்.. அங்கிள் ஆன்ட்டி ரெண்டு பேர்கிட்டையும் பேசறேன்..” என்றான்.

கார்த்திக் “அதெல்லாம் ஓகே.. நீங்க முதலில் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. கல்யாணம் தானே நடக்க போகுது.. உங்க முகமே சரியா இல்லை..” என நண்பனாக அவனை படித்து.. வீட்டுக்கு அனுப்பி வைத்தான் உறங்க.

நீலகண்டனும் வீடு வந்து சேர்ந்தான். சோபாவில் அப்படியே தலை சாய்த்துக் கொண்டான்.. முழுவதும் தான்.. தம்பி.. அம்மா.. என வாழ்ந்த வாழ்க்கைதான் நினைவில் வந்தது.

ஒரு புது உடை எடுத்தாலும்.. எத்தனை தரம் கேட்ப்பான் ‘நல்லா இருக்கா  ண்ணா.. இது எப்படி இருக்கு.. எனக்கு சரியா இருக்கான்னு..’ எப்படி கேட்ப்பான் என பழைய நினைவுகள் எல்லாம் கண்ணில் வந்தது.. உறக்கம் வரவில்லை.. கண்ணை திறந்துக் கொண்டான்.

‘இந்த கவலையை இனி வைக்க கூடாது பழசை நினைக்க கூடாது’ என பிடிவாதமாக எண்ணிக் கொண்டு.. அதே பிடிவாதத்தோடு கண்மூடிக் கொண்டு உறங்க தொடங்கினான். தெரியவில்லை அவனின் பிடிவாதம் ஜெயித்ததா என.

நீலகண்டன், மாலையில் அதியமான் வீடு சென்று முறையாக சொல்லி குகனின் விஷயம் சொன்னான். “நீங்கள்தான் எல்லாம் முன்னிற்க வேண்டும்.. நான் யாரையும் அழைக்கவில்லை” என்றான் சாந்தமாக குரலில்.

பார்வதி “ஏன் ப்பா, உன் மாமா வீட்டில், அதான் இருக்காங்கல்ல.. கூப்பிடலாமே.. பழகிக்கலாமே. அத்தோடு, அதான் அந்த பெண் பற்றியும் உன்னை பற்றியும் சொன்னார்.. உன் அங்கிள்.. அவளையாவது கூப்பிடலாமே.. நம்ம பக்கத்திலிருந்து..” என்றார் குடும்ப பெண்மணியாக.

நீலகண்டன் என்ன சொல்லுவது.. அதைவேறு தம்பியிடம் சொல்லவில்லை என யோசிக்க.. 

கார்த்திக் “அம்மா.. நீ வேற ஏன் ம்மா.. குகனோட நிலையே மோசம், இதில் இப்போது இதை வேற பேசணுமா.. நீலன்.. அதெல்லாம் வேண்டாம்.. முதல்ல கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் சொல்லிக்கலாம்.” என்றான்.

நீலகண்டன், கார்த்தியை ‘நன்றியோடு’ பார்த்தான்.

நீலகண்டன் “வீடு பார்க்கணும் விலைக்கு” என அதையும் நல்லவிதமாக பேசினான். 

அதியமான் “கொஞ்சநாள் ஆகட்டுமே பா..” என்றார். நீலகண்டனின் நிலை உணர்ந்தவராக.

நீலகண்டன் “இல்ல, அங்கிள் அவனுக்கு பொறுப்பு வரணுமே..” என முடித்துக் கொண்டான்.

அடுத்தடுத்த நாட்கள் சென்றது.

அர்ச்சனா வீட்டில், நீலகண்டனுக்கு முறையாக தகவல் சொல்லினர். முறையாக நாள் பார்த்து பத்திரிக்கை அடித்தனர். நீலகண்டன் பத்தரிக்கைக்கு தேவையான தகவல் சொல்லினான். 

குகனின் திருமண வேலைகள் நடந்தது.. இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். 

அர்ச்சனாவோடு புடவை எடுத்து வந்தான்.. அவள் கேட்டது எல்லாம் வாங்கி தந்தான். அர்ச்சனாவிடம் தன் கவலையை காட்டவில்லை குகன். அது சரிதானே.. அவள் இப்போது இருக்கும் நிலையில் அவளிடம் முக சுணக்கம் காட்ட கூடாது.. அவள் பாவம் என கணவானாக அவன் உணர்ந்திருந்தான். எல்லா தவறையும் தன்மேல் எடுத்துக் கொண்டு குகன் அர்ச்சனாவை தாங்கினான்.

குகன், அர்ச்சானவை  கவனித்ததில் ஒரு பங்கு அண்ணனையும் கவனித்திருக்கலாம்.. ஆனால், என்னமோ அண்ணன் அர்ச்சனாவை பார்க்காமல் சென்றது ஒரு கோவத்தை தந்திருந்தது.. ‘நான் என்ன செய்திருந்தாலும் அண்ணன் என்னோடு இருந்திருக்க வேண்டும்’ என உரிமை கோவம் வந்துவிட்டது, அவனிடம். எனவே அண்ணனை கவனிக்க மறந்தான். அன்னை அழைத்து பேசவில்லை. ‘என் அண்ணன் என் பக்கம் நிற்பான் என்னை புரிந்துக் கொள்வான்’ என எண்ணிய தம்பி உடைந்து போய் அண்ணனிடம் பேசவில்லை. ஆனால், அண்ணன் தன்னிடம் பேசவில்லையே தவிர தன்பக்கம்தான் என அவன் புரிந்துக் கொள்ளவில்லை.

நீலகண்டனுக்கு என்ன சொல்லி அழைப்பது என தோன்ற அழைக்காமல் விட்டான்.

குகனாக, ஒரு வீடு பார்த்து வந்துதான் அழைத்தான் நீலகண்டனை.

Advertisement