Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

14

குகன், அண்ணன் சொல் தட்டாமல் வீடு சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தான் மதியம். அதற்குள் நீலகண்டன், தங்களின் குடும்பம், தங்களின் தொழில்.. என எல்லாம் பேசியிருந்தான் அர்ச்சனா குடும்பத்தாரிடம்.

அதை கொண்டு, அர்ச்சனாவின் வீட்டில் கலந்து பேசி.. ஒரு முடிவு எடுத்திருந்தனர். அதனால், பெரியவர்கள் நீலகண்டனிடம் பேசுவதற்காக வந்தனர்.. “இல்ல, குகனும் வந்திடட்டும்” என்றுவிட்டான், நீலகண்டன்.

குகன், வந்து.. அண்ணன் அருகில் அமர்ந்தான். நீலகண்டன் ஏதும் அவனிடம் பேசவில்லை. அவனிற்கு ‘என் தம்பியா இப்படி’ என்ற எண்ணம் போகவேயில்லை. எனவே, அப்படியே அமர்ந்திருந்தான்.

இப்போது அர்ச்சனாவின் அப்பா, பெரியப்பா இருவரும் வந்து நின்றனர், குகனிடம். பொதுவாக.. “உங்ககிட்ட பேசணும்” என்றனர்.

குகன் “சொல்லுங்க” என்றான்.

அர்ச்சனாவின் அப்பா “முதலில் நாங்க அர்ச்சனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறோம். ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாண தேதி வைச்சிக்கலாம்ங்க” என்றார்.

குகன் “அது.. அ.. அண்ணாகிட்ட சொல்லிடுங்க.. அவர் எப்படி சொல்றாரோ பண்ணிக்கலாம்” என்றான்.

நீலகண்டன், தம்பியை முறைத்தான் அப்பட்டமாக, இருந்தாலும் தம்பியை விட்டு கொடுக்க முடியாமல் அவர்களிடம் பார்வையை திருப்பினான். அவர்களும் “நேராக கல்யாண தேதி குறிச்சிடலாம்..” என்றார் தெளிவான குரலில்.

நீலகண்டனுக்கும் அது சரியானதாக இருந்தது.. ‘இனி அவர்கள் சொல்லுவதுதானே முடிவு..’ என்ற எண்ணத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை. நீலகண்டன் “சரிங்க.. அப்படியே செய்திடலாம்.. நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க.. உங்களுக்கே தெரியும், எங்களுக்கு பெரிதாக யாரையும் தெரியாது.. சொல்லுங்க என்ன உண்டோ செய்திடுறேன்” என்றான் தன்மையாக.

பெண் வீட்டு ஆட்கள் தயங்கியபடி “பெரியவங்கன்னு யாரும்.. ஒரு நாலு பேராவது இருக்கனுமில்ல.. ப்பா, உங்க சித்தப்பா வீட்டில்..” என, அவரும் தயங்கிய குரலில் சொல்லி பார்த்தார்.

நீலகண்டன் “என்ன செய்ய… இல்லைதான். எங்க சித்தப்பா குடும்பம் இங்க சென்னையில்தான் இருக்காங்க, நாங்க இங்க, எங்க அம்மாவுடன் இருந்த போது எட்டி கூட பார்க்கலை.. இப்போது போய் என்னை அவங்களை பார்க்க சொல்றீங்களா..” என்றான் எழுந்து நின்று, அழுத்தமாக அவர்களை பார்த்து நேரடியாக கேட்டான். அதில் ‘முடியாது’ என்ற பாவம் இருந்தது.

குகன், என்ன பேசுவது என தோன்றாமல் நின்றான்.

நீலகண்டன் “இப்போதைக்கு எங்க ஊரில் இருக்கிற அதியமான் பாமிலிதான் வருவாங்க.. அவ்வளவுதான் எங்களுக்கு சொந்தம்.. திரும்ப திரும்ப இதை கேட்காதீங்க..” என்றான் கொஞ்சம் இறுகிய குரலில்.

இப்போது அர்ச்சனாவின் குடும்பம் எதோ சற்று தள்ளி சென்று பேசியது.

சற்று நேரத்தில் நீலகண்டனிடம் வந்தனர் “அ..அப்புறம்.. ஒரு வீடு, சொந்த வீடு.. சென்னையில் சொந்த பிளாட்.. அப்படி, நாங்க என்ன சொல்ல வரோம்ன்னா.. சொந்தம் எல்லாம் கேட்க்கும் ப்பா..” என்றார் தயங்கிய குரலில்.

அர்ச்சனாவின், அண்ணன் இன்னமும் இந்த பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அவன் குகனை முறைத்துக் கொண்டேதான் இருக்கிறான்.

நீலகண்டன் இப்போது அவர்கள் சொல்லுவதை மறுக்கவில்லை.. ஆனால், emi போட்டால், தம்பி பாதிக்கப்படுவான்.. அப்படி ஒன்றும் வருமானம் இல்லாமல் இல்லை, நல்ல இடமாக வாங்க வேண்டும் என்றால்.. கொஞ்சம் அதிகமாகுமே.. எனவே, அண்ணன், தம்பியின் வருமானம்.. அடுத்து இருவர் மட்டும் இல்லையே, மூவர் ஆகிற்றே..’ என தாடையை தடவியபடி யோசித்தான். அஹ.. எத்தனை வருட அனுபவம் அவனுக்கு. அதனால் தன்போல தம்பியின் பொருளாதாரத்தை யோசித்தான், அண்ணன்.

நீலகண்டன் “ம்.. வாங்கலாம்… யோசிக்கணும்” என்றான் குகனை பார்த்துக் கொண்டே.

அர்ச்சனாவின் தந்தை “நா..நாங்களும் கொஞ்சம்.. சேர்ந்தே பார்க்கலாம்” என்றார், நல்லவிதமாக.

குகன் அந்த வார்த்தையில் மாமனாரை ஆறுதலாக பார்த்தான். தலையை லேசாக ஆமோதிப்பதாக அசைத்தான், அவரின் வருங்கால மாப்பிள்ளை.

நீலகண்டன் தம்பியைதான் பார்த்துக் கொண்டிருந்தான். மனதிலிருந்து என்னமோ பொங்கி எழுந்தது பாரமாக அண்ணனுக்கு. என்னவென தெரியவில்லை.. நீலகண்டனால்.. இதை ஏற்கவே முடியவில்லை.. அழுத்தியது அவன் தொண்டையை. உண்மையை சொன்னால், யார் நமக்கு மிகவும் முக்கியமோ.. யார் நமக்கு மிகவும் பெரிய விஷயமோ.. அவர்கள் பாரம்தான் நமக்கு. அந்த பாரம் அவனுள் இப்போது.

நீலகண்டன் தன்னை சமன்ப்படுத்திக் கொண்டான்.. ஒரு பெருமூச்சு விட்டு.

அப்போதுதான் ரஞ்சனியின் அழைப்பு வந்தது.. பேசிவிட்டு வந்தான்.

அதற்குள், குகனும்.. அவனின் மாமனாரும்.. தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். நீலகண்டன் அப்படியே சற்று தள்ளி போனோடு நின்றுக் கொண்டான்.

நீலகண்டனுக்கு பசி எடுத்தது, தம்பியை அழைக்க.. நிமிர்ந்து பார்க்க.. குகனும், அவனின் மாமனாரும் அர்ச்சனாவின் அறைக்குள் சென்றனர். நீலகண்டன் அமைதியாகி அமர்ந்தான். 

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். மணி இரண்டுக்கு மேல்.. காலையில் உண்ணவில்லை நீலகண்டன். இரவு கண்விழித்து.. அதிர்ச்சி.. அலைச்சல் என எல்லாம் கலந்த கலவையில் அமர்ந்திருந்தான். தம்பி வெளியே வரவில்லை. 

நீலகண்டனுக்கு “வா டா..” என உரிமையாக அழைக்க முடியவில்லை, எதோ தடுக்கிறது. தானாக எழுந்து வெளியே வந்தான், உண்பதற்காக.

எதிரே இருந்த ஒரு சைவ உணவகத்தில் அமர்ந்தான்.. ‘சாப்பாடு’  என சொல்லி காசையும் கொடுத்தான்.

உணவு வந்துவிட்டது.. ஆனால், தொண்டையில் இறங்கவில்லை.. வயிரு நிறைய பசி.. மனதின் இறுக்கத்தில் தொண்டை இறுகி போனது போல, பாரம்.. அழுத்தம் எல்லாம் சேர்ந்து உணவை உண்ண முடியவில்லை அவனால். உணவை கையில் எடுக்காமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.

‘ஓவென’ கத்த வேண்டும் போல இருந்தது… அவனுக்கு. எங்கே இருக்கிறோம் என புரிகிறதே.. அதனால் அமைதியாக இருந்தான். வயிற்றுக்கு தெரியாதே.. மனது.. தம்பி.. உணர்வு.. என, அது அதன் இருப்பை உணர்த்த.. நீலகண்டன் என்ன செய்வது என தெரியாமல் தண்ணீர் எடுத்து அருந்தினான்.

அவனால், தம்பியின் செய்கையை  தாளவே முடியவில்லை. தன்னுள் இறுகிக் கொள்கிறான். முன்பே ஒதுங்கிக் கொள்பவன்.. இப்போது தம்பியும் தன்னை புறக்கணிப்பதாக உணர்ந்து.. இறுகி போக்கினான்.

போனெடுத்து கார்த்திக்கு அழைத்தான். அவன் எடுக்கவில்லை. ‘இந்த நேரத்தில் அவன் வேலையில் இருப்பான்’ என தோன்றியது.. 

யோசிக்காமல் ரஞ்சனிக்கு அழைத்தான், நீலகண்டன். என்னமோ தலை முழுவதும் வெடித்துவிடும் பாரம்.. எங்காவது கொட்ட வேண்டும்.. ‘தனக்கு ஏன் யாரும் நண்பர்கள் இல்லை’ என இப்போது தோன்றியது. எனவே, யோசிக்காமல் அவளுக்கு அழைத்தான்.

ரஞ்சனி, அவளும் அங்கேதான் அமர்ந்திருந்தாள். எதோ யோசனை.. தனியாக அப்படியே அமர்ந்திருந்தாள். இவன் போன் வரவும்.. கொஞ்சம் யோசனை ‘இப்போதானே பேசினேன்’ என, ஆனாலும் வேகமாக எடுத்து “ஹலோ” என்றாள் புன்னகையோடு.

நீலகண்டன் “ஹலோ..” என்றான்.

ரஞ்சனி “என்னாச்சு அதுக்குள்ளே..” என பேச வர..

நீலகண்டன் “ம்.. சும்மாதான்.. பேச கூடாதா” என்றான் இறுகிய குரலில்.

ரஞ்சனிக்கு அந்த குரலில் ஒன்றுமே புரியவில்லை. பெண்ணை பொறுத்தவரை.. தனக்கு அழைத்தது.. இப்போதுதான் தன் வாழ்வின் குழப்பத்திற்கு, விடை சொன்ன ஒருவன்.. அவனும், என்னமோ பழகியவன் போல.. பேச கூடாதா.. என உரிமையாக சொல்லவும்.. மனது தடுமாறியது.. அத்தோடு, சந்தோஷமாகவும் மாறியது பெண்ணவளுக்கு. இரண்டு நொடி அமைதி. 

நீலகண்டனும் ஏதும் பேசவில்லை.

ரஞ்சனியே  தொடங்கினாள்.. “எங்கிருக்கீங்க.. சாப்பிட்டீங்களா” என்றாள், குரலில் ஒரு தயக்கம் இருந்தாலும்.. தைரியம் வந்தது அவன் அழைத்ததில்.

அவள் கேட்டதில், சின்ன ஆறுதல்.. ஆனாலும், பதிலில்லை அவனிடம்.. தன் எதிரே இருந்த உணவையே பார்த்தான். இன்னும் இன்னும் தம்பியின் நினைவு.. தாங்க முடியவில்லை அவனால்.

ரஞ்சனி “அ.. என்னாச்சு” என்றாள்.

Advertisement