Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

13

நீலகண்டனின், நான்காவது அழைப்பில்தான் குகன் போனை எடுத்தான். அதுவரை நீலகண்டனின் மனம் வேண்டிக் கொண்டும்.. திட்டிக் கொண்டும்.. இருந்தது தம்பியை. 

இன்னதுதான் பிரச்சனை என தெரிவதற்கு முன்னால் ஒரு குழப்பம் வரும்.. ‘என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற குழப்பம்..’ அது ஒரு திருகுவலி.. குடைந்து எடுக்கும் வலி அது.. அந்த வலியில்தான்  இருந்தான் நீலகண்டன்.

குகன் “ஹலோ, நீலா” என்றான் தம்பி.. எப்போதும் பேர் சொல்லி அழைக்கமாட்டான்.. சில விளையாட்டு நேரங்களில் மட்டும்தான் பேர் சொல்லி அழைப்பான் தம்பி. இப்படி ஒரு இக்கட்டான நேரம் அவன் வாழ்வில் வந்ததேயில்லை.. அப்படி வர விட்டதேயில்லை அவனின் அண்ணனும், அன்னையும்.. இப்போது ஒரு இக்கட்டான நிலை.. தன்னை அறியாமல் அண்ணின் பேர்தான் வாயில் வந்தது.

நீலகண்டன் “என்ன டா…” என்றான்.

குகன் “நீலா.. சென்னை வரியா.. நீ வாயேன்.. நான் சொல்றேன்” என்றான் அமைதியான குரலில். ஆஅனால், எதோ பெரிதாக ஒரு பூகம்பம் இருக்கிறது என சொல்லியது அந்த அமைதியான குரல், அண்ணனுக்கு. 

அது என்னவென சொன்னால்தான் அண்ணனின் மனதில் ஒரு குழப்பத்திற்கு விடை கிடைக்கும் எனவே, நீலகண்டன் “நான் வரேன்.. என்னான்னு சொல்லு முதலில்.. எங்க இருக்க” என்றான், அதட்டலாக.

குகன், போனை எடுத்துக் கொண்டு வெளியே பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தான், “அது ண்ணா, நான் ஒரு பெண்ணை விரும்பறேன்.. அவ இப்போது டூ மந்த கன்ஸீவா இருக்கா, அது தெரிந்ததும், ஸ்ப்ரெட் எடுத்து குடிச்சிட்டா.. அவளை ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்திருக்கேன்.. அங்க அவங்க, வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிட்டேன்.. எ.. எனக்கு எப்படி இதை உன்கிட்ட சொல்றதுன்னு தெரியலை.. சாரி..” என கண்ணை மூடிக் கொண்டு ஒப்புவிப்பவன் போல.. மரத்து போன குரலில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் அண்ணிடம். 

நீலகண்டனுக்கு அதிர்ச்சி.. ‘என்ன செய்தாய்..’ என மீண்டும் கேட்ட கூட முடியாத ஒரு தவறை தம்பி செய்திருக்கிறான்.. மனதில் இதுதான் பதிந்தது. திட்ட முடியுமா.. ‘ஏன் டா இப்படி’ என நிமிர்ந்து அவனை பார்த்து மிரட்டத்தான் முடியுமா.. ஒரு தகுதியில்லாத.. இலக்கணங்கள் மீறி.. எப்படி இப்படி நடக்கும் என அண்ணனாக அதை பற்றி யோசிக்க கூட முடியாத ஒரு செயலை செய்துவிட்டான் தம்பி. 

நீலகண்டன் ஏதுமே பேசவில்லை. குகனும் சொல்லி முடித்து அமைதியாகிவிட்டான். ஏன் இந்த அமைதி! இருவருக்கும் தெரியும்.. அதிலும் குகனுக்கு, இந்த அமைதி வலித்தது.. திருகி திருகி வலித்தது.. சொல்லும் வரை அண்ணனுக்கு வலித்த திருகுவலி.. சொல்லியபின் தம்பிக்கு இடம்மாறியது.

நீலகண்டன் போனை வைத்துவிட்டான்.. எப்படி பேசமுடியும் அவனால்.. நீலகண்டன் திருமணம் என்றாலே கூச்சப்படும் ஒரு அனிச்சம் ஆண்மலர் போல.. அவன் இது போன்ற விஷயங்களை தன் தம்பியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.. அதை ஏற்கவும் முடியவில்லை அவனால். அப்படியே அமர்ந்துவிட்டான் சோபாவில்.

யாரோ தன்மேல் ஏறி நின்று.. அழுத்துவதாக உணர்ந்தான்.. மூச்சு விடமுடியவில்லை.. அவனுக்கு, தங்கள் வளர்ப்பின் மீதிருந்த திமிரை யாரோ கத்திக் கொண்டு குத்தி குத்தி எடுப்பதாக உணர்ந்தான். அழுத்தம்.. மூச்சு திணறும் பாரம்.. அதை தொடர்ந்து வலி.. முழுமையான போராட்டம் அவனுள்.

தன்னை தானே மீட்க.. போராடுகிறான்.. மூச்சுகளை இழுத்து இழுத்து விடுகிறான்.. இருபது முறைக்கு மேல் ஆகிற்று.. அந்த அழுத்தம் இன்னமும் நீங்கவில்லை.. இறுதியாக.. இழுத்து மூச்செடுத்து வெளிவிட.. ‘ஹப்ப்பா..’ என மூச்சு இயல்பானது. தன்னை தானே தேற்றிக் கொண்டான்.. ஆனால், அவ்வளவு எளிதானதாக இல்லை அது.

இருவரின் வளர்ப்பும் வேறு.. அம்மா என்றாலும் பிள்ளைகள் வள்ளியை நெருங்கி அணைத்தது கூட கிடையாது.. ‘அரைகாசானாலும் அடுத்தவன் காசு உனக்கு வேண்டாம்’ என்பார். பெண் தோழி என பிள்ளைகள் அறிமுகம் செய்தாலும்.. ‘வேண்டாம்.. தோழி நட்பு எல்லாம் சமூகம் பொதுவாக ஏற்பதில்லை.. வகுப்பில் பேசு அத்தோடு முடிச்சிக்கோ.. வீடு, போனில் பேசுவது என ஏதும் கூடாது’ என்பார்.

ஒழுக்கம்.. நேர்மை.. இதெல்லாம்தான் திமிர்.. கர்வம். அதைவிடுத்து பணம் புகழ் என்பது அல்ல கர்வம். அவனின், இந்த கர்வத்தை தொலைத்து விட்டவனாக உணர்ந்தான் நீலகண்டன். குடும்பம் என்பதால் தம்பியின் தவறு.. பொற்றோர் இருந்தால்.. அவர்களை சாரும், அவர்கள் இல்லாததால்.. நீலகண்டனுக்கு, தன் பொறுப்பாக தோன்றியது. கொஞ்சம் நிலை தடுமாறி போனான்.

சற்று நேரம் அமர்ந்துக் கொண்டான்.. ‘எதையும் யோசிக்க கூடாது’ என.

பின், தேவையானவைகளை எடுத்துக் கொண்டு.. காரின் அருகில் வந்தான். கோகுல்க்கு ஒரு செய்தி அனுப்பினான் ‘அவசர வேலையாக செல்லுகிறேன்.. காலை கூப்பிடுகிறேன்.. கடையை நேரமாக திற..’ என ஒரு செய்தி அனுப்பினான்.

கார்த்திக்கும் அப்படியே ‘குகனை பார்க்க போகிறேன்..ப்ரீ பண்ணிக்கிட்டு கூப்பிடுறேன்..’ என செய்தி அனுப்பினான்.

குகனுக்கு ‘லொகேஷன் அனுப்பு..’ என்பதாக செய்தி. எல்லோருக்கும் அனுப்பிவிட்டு காரெடுத்தான். 

அவனுடையது செண்ட்ரோ.. செகண்ட்ஹன்ட்.. அதனால், பொறுமையான பயணம்.. சென்னை நோக்கி, கொஞ்சம் கொடுமையான பயணமும் கூட ‘அடுத்து என்ன’ என.

நீலகண்டன், காலையில் சென்னை வந்தடைந்தான். குகனின் வீட்டிற்கு சென்று, குளித்து உண்டு மருத்துவமனை கிளம்பினான். முகம் எப்போதும் இருக்கும் இறுக்கத்தை காட்டிலும் சற்று கடினமாக இருந்தது. நீலகண்டனுக்கே அது புரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை, அவனால்.

மருத்துவமனையில்,

குகன் வெளியே அப்படியே அமர்ந்திருந்தான். நடு இரவில்.. அர்ச்சனா, குகனை பார்த்து பேசினாள். இப்போது ஊசியின் வீரியத்தில் உறங்குகிறாள். மருத்துவர்கள்.. எந்த கவலையான விஷயமும் அவளை பாதிக்கும் என்றிருந்தனர். எனவே, குகன் அமைதியாக அவளை பார்த்து நல்லவிதமாக பேசி வந்தான். அர்ச்சனாவின் பெற்றோரும் பார்த்து வந்தனர். ஆனால், முகத்தில் ஒளி இல்லை. 

இரவில், அவளின் அண்ணன்னும், அம்மாவும் அர்ச்சனாவிற்கு என ஒதுக்கிய அறையில் இருந்தனர். குகன் icuவின் எதிரே இருந்த சேரில் இருந்தான்.

காலையில், அர்ச்சனாவின் அண்ணன் அப்பா பெரியப்பா என ஆண்கள் வெளியில் அறை எடுத்து தங்கியிருந்தனர் போல.. அண்ணனும் அம்மாவும் இங்கிருக்க.. பெரியவர்கள் இருவரும் லாட்ஜில் இருந்தனர்.

இப்போது அர்ச்சனாவின் அண்ணன் தன் அன்னைக்கு மட்டும் காபி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருந்தான். 

குகன் தன் அண்ணனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

மருத்துவர்கள் ரௌண்ட்ஸ் வந்தவர்கள், அர்ச்சனாவை அறைக்கு மாற்றலாம்.. என தெரிவித்திருந்தனர். 

சற்று நேரத்தில் அர்ச்சனாவின் தந்தையும் பெரியப்பாவும் வந்தனர். அவளின் அண்ணன் லாட்ஜ்க்கு சென்றான். அன்னை இங்கேயே குளித்து உடைமாற்றி பெண்ணின் வரவுக்காக காத்திருந்தார்.

இப்போதுதான் அவர்களுக்கு பேச்சு வார்த்தையே நடந்தது.. அதுவரையில், பெண்ணின் நிலைதான் முக்கியம் என ஏதும் பேச எண்ணவில்லை அவர்கள். இப்போது என்ன செய்வது என தெரியவில்லை.. பெண்ணுக்கு அதிர்ச்சி கூடாது, இரண்டுமாத கருவை சுமந்துக் கொண்டிருக்கிறாள்.. என அழுகையாக வந்தது அன்னைக்கு.

அவளின் தந்தையும் பெரியப்பாவும் நடக்க வேண்டியதை பேசிக் கொண்டனர். அன்னை “எப்படி எல்லாம் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கனும்ன்னு நினைச்சேன்.. இப்படி அனாதையாட்டம் இரண்டு நாளா இருக்கான்.. இவன்தான் என் மாப்பிள்ளையா” என விசனப்பட்டார். 

தந்தையும் பெரியப்பாவும் ‘ஷ்.. இனி நல்லதா பேசு.. பொண்ணு எப்படி இருக்கா பாரு’ என்றனர். ஆனாலும் வாய் ஓயவில்லை, அந்த தாய்க்கு.

இப்போதுதான் நீலகண்டன் வந்தான்.. குகன் எங்கிருக்கிறான் என தெரியவில்லை, அவனை போனில் அழைத்து “எங்கிருக்க நான் ஹாஸ்ப்பிட்டலில் இருக்கேன்..” என்றான்.

குகன் பேசிக் கொண்டே மருத்துவமனையின் முகப்பிற்கு வந்தான்,  அண்ணனை பார்த்ததும் “அண்ணா” என்றான். 

நீலகண்டன், தம்பியை பார்த்து முதலில் அதிர்ந்தான், ஓய்ந்த தோற்றமாக.. பாவமாக.. கண்களில் யாசகம் பெரும் பாவத்தோடு இருந்தான் குகன்.. நீலகண்டனுக்கு கோவமாக வந்தது ‘என்ன இப்படி இருக்கான்.. செய்யறதெல்லாம் செய்துட்டு.. என்ன முகபாவம் இது’ என தோன்ற. ஏதும் பேசாமல் குகனோடு நடந்தான்.

 

Advertisement