Advertisement

ரஞ்சனிக்கு, பழக்கமான தெரிந்த முகங்கள் மிக குறைவு.. தந்தை, அண்ணன், வேலை செய்யும் ஒரு தம்பதி. தந்தை வாரத்தில் நான்கு நாட்கள் பெண்ணோடு கண்டிப்பாக இருப்பார். மற்ற நாட்களில்.. வெளியூர் சென்றாலும் போனில் பேசி பெண்ணை தொடர்பிலேயே வைத்திருப்பார்.

பார்த்து பார்த்து வளர்த்தார் ராதா.. பெண்ணை. அன்னை இறந்தது முதல்.. ரஞ்சனி தனியானாள். அவளை கவனிக்க ஆளில்லை.. தலை வாரி விடுவதற்கு வேலை செய்யும் அம்மா வந்து நிற்பார். அமைதியாக தலையை காட்டுவாள் பெண். அம்மா என்றால், ஆயிரம் கதை பேசுவாள்.. இப்போது வாயே திறப்பதில்லை.. உண்பதற்கு மட்டும்தான் வாய் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். பேச்சுகள் குறைந்தது. தனக்கென ஒரு வட்டம்.. பள்ளி.. நண்பர்கள்.. டியூஷன் எடுக்க ஒரு டீச்சர் வருவார்.. அவ்வளவுதான் அவளின் உலகம். 

ஆனால், கல்லூரியில் எல்லாம் மாறியது. எதோ புது வகையாக மாறினாள் ரஞ்சனி. கல்லூரியில் நட்பு வட்டம் பெருகியது. அமைதியாக இருந்தவள் கொஞ்சம் பேசினாள் சிரித்தாள்.. வீடும் பெண்ணின் சாயலில் கொஞ்சம் கவலைகள் குறைந்து, தளர்ந்து.. இயல்புநிலை கொண்டதாக உணர்ந்தார் கண்ணன்.

சின்ன சின்ன மாற்றாங்கள் செய்தாள்.. ‘அப்பா பெயிண்ட் பண்ணலாம்.. வீடு பழசாக இருக்கு ‘ என்றாள், செய்தார் தந்தை.

கார்டன் போடணும் ஏற்பாடு பண்ணுங்க என்றாள்.. செய்தார் தந்தை. இப்படி எல்லாம் செய்தாலும் எங்காவது சோர்ந்து விடுவாள்.. எதையோ தொலைக்க.. நினைப்பவள் போல.. இரண்டு நாட்கள் எதற்கும் வெளியே வராமல் இருப்பாள்.. 

சின்ன சின்ன விஷயங்களுக்குதான் பிடிவாதம் வரும். அதுவும் உருண்டு பிரண்டு அழும் பிடிவாதம் இல்லை.. கத்தி சண்டை போட்டு, கண்ணில் கண்டதை உடைக்கும் பிடிவாதம் இல்லை. இது அமைதியான பிடிவாதம்.. வேண்டாம் என்று தந்தை சொல்லுவதை.. செய்துவிட்டுதான் அடுத்த வேலை பார்க்கும் பிடிவாதம்..

அப்படிதான் ஒருமுறை.. கல்லூரி சென்ற புதிது சினிமாவிற்கு தோழிகளோடு போவேன் என தந்தையிடம் அனுமதி வேண்டினாள். 

கண்ணன் “பாப்பா.. எப்படி பாப்பா, அனுப்ப.. நீ இங்கே பாரு.. இல்லை, அண்ணன், நாளைக்கு வந்திடுவான் அவனை கூட்டி போக சொல்றேன்.. ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் இப்போ வேண்டாம் பாப்பா.. கொஞ்சநாள் ஆகட்டும் யாரு என்னான்னு தெரியாதில்ல..” என பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார்.

ரஞ்சனி “அப்பா ப்ளீஸ்..” என்றாள்.

கண்ணன் “இல்ல, பாப்பா.. இப்போ வேண்டாம்” என்றார், கண்டிப்பான குரலில்.

ரஞ்சனி உள்ளே சென்றுவிட்டாள்.. தனதறைக்கு.

மறுநாள்.. யாரிடமும் சொல்லவில்லை.. மாலையில் கல்லூரிக்கு கார் வருவதற்கு முன்னமே கிளம்பிவிட்டாள்.. தியேட்டருக்கு.. தன் நண்பர்களோடு.

கண்ணன் பயந்து போனார் அன்று. 

ஆனாலும், எல்லாம் அப்பாவிடம் மட்டும்தான். அண்ணன் என்றால் கொஞ்சம் பயம். மாதவனும் அவள் தியேட்டர் சென்ற அன்று.. “இங்க பாரு ரஞ்சி, அப்பா பெர்மிஷன் கொடுக்கலைன்னா.. எங்கிட்ட சொல்லணும்.. அதுக்காக இப்படி போக கூடாது.. இதுதான் லாஸ்ட்” என்றான் கொஞ்சம் கண்டிப்பான குரலில்.

ரஞ்சனியும் “அம்மா இருந்திருந்தால்.. இப்படி திட்டுவாங்களா” என அழுவாள். அவ்வளவுதான் கண்ணன் உருகி போவார். 

ரஞ்சனி அதிகம் அழுவாள் குழந்தை என. எது சொன்னாலும் சட்டென அழுவாள்.. நேரெதிர் துருவங்களாக அவளின் இயல்பு இப்படிதான். பிடிவாதம் வரும் போது யார் பேச்சையும் கேட்கமாட்டாள்.

யாரவது ஒரு சொல் சொன்னால்.. அம்மா என அழுகை. அதை தொடர்ந்து   அவளுள் எதோ வெறுமை வந்துவிடும்.. தனிமையை உணர்வாள். ‘தான் சரியாக வளரவில்லையோ’ என இரண்டு நாளேனும் பேசமாட்டாள்.. சரியாக உண்ணமாட்டாள். அவசரமும்.. சுய அனுதாபமும்.. சரிக்கு சரி அவளிடம் உண்டு. இப்படி நிறைய அவள். 

இந்த செய்கைகள் எப்போதும் கண்ணை பயமுறுத்தும்.. திணறுவார். ஒன்று எதிர்த்து நின்றால் சரிதான் இவள் இப்படி என உணரலாம்.. இல்லை எது சொன்னாலும் கேட்பாள் என்றால்.. அதன்படி வளைக்கலாம் அவளை. ஆனால், ரஞ்சனி எப்படி எப்போது இருப்பாள் என கணிக்க முடியாமல் தந்தை மனம் தவிக்கலையில்.. அவர் வீட்டில் இருக்க தொடங்கினார்.. உடல் அவரை படுத்த தொடங்கியது.

ரகு வந்தான். அவன் ஒருவகையில் தம்பியை தாங்கினான்.. அரசியல்தான் உனக்கு சரி என மாதவனை முழு பொறுப்பேற்க வைத்தான். மாதவன் அருகில் தன்னை நெருங்கவிடாது செய்தான். அவரின் ஒரே தொழில் கார் மெக்கானிக் ஷாப் இப்போது அவனின் வசம்.. பவர். இப்படி, கண்ணன் சேர்த்த  சொத்து, நர்பெர்யர் எல்லாம் மாதவன் வசம், ரகு செய்தான். 

மேலும் தன்னுடைய மருத்துவத்திற்கு மகன் கணக்கு பார்க்க தொடங்கினான்.. அதை கொண்டு மாதவன் மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கண்ணனுக்கு காணாமல் போனது. அத்தோடு, அந்த கட்சி ஆபீசும் வேண்டும் என மாதவன் கேட்க.. பழைய பத்திரங்கள் தூசி தட்ட.. வள்ளியின் பெயரும் உடன் இருந்தது, அப்போத்துதான் கண்ணனே பார்த்தார்.

அதனால், மாதவன் முகம் கொஞ்சம் கடுமையானது. ‘பூர்வீக சொத்து என்றால் எனக்கு இல்லையா.. நான் சட்ட ரீதியாக உங்கள் மகன்’ என கொத்தித்தான். கண்ணனை படுத்தினான். 

‘எனக்கு ஆபீஸ் வேண்டும். இத்தனை நாள் நீங்க இருந்தீங்க.. எனக்கு மட்டும் செய்ய மாடீங்களா.. நான் அதை வைத்துதான் அடுத்த எலெக்ஷனில் சீட் கேட்கணும்.. உங்களுக்கு தெரியாதா எவ்வளவு செலவு இருக்குன்னு.. வருகிற கமிஷன் எல்லாம் பத்தாது. அதை நம்பவும் முடியாதே.. இன்னும் மூன்று மாசத்தில் எனக்கு அந்த இடம் வேண்டும்’ என படுத்தினான் மாதவன்.

எனவே, கண்ணன் ஒரு ஆபத்பாண்டவனை தேடினார்.. தனக்கு சாதகமானவர்களை தேடினார்.. நீலகண்டனை தேடினார். 

அரசுதான் கண்டுபிடித்து சொன்னார். சொந்த ஊருக்கே வந்துவிட்ட செய்தியை. அதுமுதல் கொஞ்சம் நிம்மதிதான். ஆனாலும் தயக்கம் இல்லாமல் இருக்குமா.. கண்ணனுக்கு. எப்படி கேட்பது.. எது கேட்பது..  எல்லாவற்றையும் காப்பாற்று என. அதான் வேறு பேச முடியாமல் பெண்ணை கொடுத்து  சென்றார். 

மீண்டும் தங்கை குடும்பத்திற்கு ஆரதவு தரவில்லை.. சிக்கல்தான் தந்திருக்கிறார். அது அவருக்கும் தெரியும். ஆனாலும், பக்தன் எப்போதும் பேசாத தெய்வத்திடம்தானே பக்தியை வைக்கிறான். தெய்வம் பேசவில்லை என்றாலும்.. நம்பிய பக்தனுக்கு தேவையான நேரத்தில் அருள் செய்திடுமே.. இது இந்த உறவு விளங்கிக் கொள்ள முடியாது எல்லோராலும்.. இப்போதும் அதே மாயாஜாலம்தான் மாமன் மருமகனிடையே.

இதையெல்லாம் அரசு.. இன்று  கிடைத்த  நேரத்தில், அதியமானிடம் எல்லாம் பகிர்ந்தார். 

கார்த்திக்கும்.. நீலகண்டனும் சற்று தள்ளி வாசலில் நின்ருந்தனர்.

மாலையில் எல்லோரும் உண்டு ஊர்.. அந்த மூவரும்.. அதான், நீலகண்டன்.. அதியமான், கார்த்திக் வந்து சேர்ந்தனர்.

கோகுல், கடையை முழுமையாக பார்த்துக் கொண்டான். அதிகமாக நீலகண்டனை அழைத்து தொந்திரவும் செய்யவில்லை.

நீலகண்டனும் மாலையில் வந்து குளித்து.. கடைக்கு சென்றான். அவனின் லாப் வேலையையும் பார்க்கவில்லையே.. எனவே, அதில் முழ்கினான். தம்பியிடம் பேச வேண்டும் என ஓடிக் கொண்டே இருந்தது அவனுள். ஆனால், என்ன சொல்லுவது, அங்கே நடந்தததை எப்படி சொல்லுவது என தெரியாமல் வேலை பாதி.. தம்பியிடம் பாதி என இருந்தான் நீலகண்டன்.

Advertisement