Advertisement

திறமையில முன்னாடி வரணும்… அடுத்தவங்களை அழிச்சு இல்ல…” என்றவன்,

உண்மையிலேயே சுபத்ராவுக்குத் திறமை இருந்திருந்தா அந்த வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கும். இல்லாததுனால தான் அனுப்பலை…” என்றான் தமிழ் கைகளைத் தேய்த்து விட்டபடி… அடித்ததில் அவனுக்குக் கை வலித்து இருந்தது.

நீங்க உட்காருங்க தமிழ் வீணா ஏன் உங்களை வருத்திகிட்டு? இவங்களை எப்படிக் கவனிக்கனும்னு எங்களுக்குத் தெரியும்.” என்ற தாமோதரன்,

நீ சொல்லுமா இதெல்லாம் உன் வேலையா?” என்றதும்,

தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையென்றால் சுபத்ரா.”

ஏய்… நீதானே எதாவது பண்ணுன்னு சொன்ன…” என்றான் பிரபாகரன்.

நான் இந்த அர்த்தத்தில சொல்லலை… எனக்கு எப்படியாவது போகணும்னு சொன்னேன்.” என்றாள்.

வேற என்ன வழியில நீங்க மகிழினி வெளிநாடு போறதை தடுத்திருக்க முடியும் சொல்லுங்க சுபத்ரா, நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.” என தமிழ் நேரடியாகச் சுபத்ராவை கேட்க… அவள் திருதிருவென விழித்தாள்.

எதாவது செய்து மகிழினிக்குப் பதில் தான் போய் விட வேண்டும் என்ற எண்ணம் சுபத்ராவுக்கு இருந்தது தான். அதைத்தான் மறைமுகமாகப் பிரபாகரனுக்குக் கோடிட்டு காட்டி இருந்தாள். அவன் அரசுவை அதற்காகத் தொடர்பு கொண்டு என இப்போது இந்த நிலையில் வந்து நின்றது.

சார் என் பொண்டாட்டிக்கு நடந்ததுக்கு எனக்கு நியாயம் வேண்டும்.” என்ற தமிழ் அங்கிருந்து கிளம்பி விட… பிரபாகரனிடமும் சுபத்ராவிடமும் மேலும் விசாரணை துவங்கியது.

தமிழ் வீட்டுக்கு வந்த போது பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க… அவன் சென்று குளித்துவிட்டு வந்ததும், அவனுக்கும் தனக்கும் இட்லியை பரிமாறிய மகிழினி, “என்னங்க ஆச்சு? போன் பண்ணாலும் எடுக்கலை.” என்றதும், அப்போது மூர்த்தியும் வந்து நின்றார்.

மகிழினிக்கு நடந்தது விபத்தே இல்லை. இவ கூட வேலைப் பார்க்கிற சுப்த்ராவோட காதலன் தான் இந்த வேலையைப் பண்ணி இருக்கான். மகிழினியை வெளிநாடு போகாம தடுக்க.” என்றதும், மூர்த்தி மகிழினி இருவருமே அதிர்ந்தனர். ஆனால் மகிழினிக்கு தான் அதிர்ச்சி அதிகம்.

சுபத்ராவா அவ ரொம்பப் பேச கூட மாட்டா… அவளா இப்படி?” என மகிழினியால் நம்பவே முடியவில்லை.

தெரிஞ்சிக்கோ நமக்குப் பக்கத்துல இருக்கிறவங்க, நமக்கு எவ்வளவு ஆபத்தா இருக்க முடியும்னு.” தமிழ் சொல்ல…

முன்னாடி எல்லாம் வேலைக்குப் போறவங்க அக்கம் பக்கம் இருக்கிறவங்களை நம்பிதான் குழந்தைகளை விட்டுட்டு போவாங்க. இப்போ காலம் எப்படி இருக்கு… கூட வேலை செய்யுறவங்களைக் கூட நம்ப முடியலை… எப்போ யாரு என்ன செய்வான்னே தெரியலை…” என்றார் மூர்த்திக் கவலையாக.

தன் பெண்ணை விட நல்லா படிக்கிறான்னு சின்னப் பையனுக்குக் கூல் ட்ரிங்க்ஸ்ல விஷம் கலந்து கொடுத்ததை எல்லாம் பார்த்தோமே… இதை விடப் பாவமும் அநியாயமும் இருக்க முடியுமா?”

நாம உழைக்கனும், நாம முன்னேறனும்னு நினைக்காம… அடுத்தவங்களை அழிச்சு முன்னேறனும்னு நினைக்க ஆரம்பிச்சுடாங்க.” என்ற தமிழ்,

உன் ப்ரண்டை நல்லா கேட்டு தான் வந்தேன். உனக்குத் திறமை இருந்திருந்தா… உனக்கு வெளிநாடு போக வாய்ப்பு வந்திருக்கும்னு.” என்றான்.

இது தான் கலிகாலம் போல…” என்றார் மூர்த்தி.

மகிழினிக்கு இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியவில்லை. மறுநாள் காவல் நிலையத்திற்கு அவளையும் தான் வர சொல்லி இருந்தனர்.

சுபத்ராவின் பெற்றோர் எதோ கிராமத்தில் கூலி வேலை செய்யும் எளிய மனிதர்கள். அவர்களுக்கு மகள் இப்படித் திருமணம் ஆகாமலே ஒரு ஆணுடன் சேர்ந்து வசிப்பது எல்லாம் நம்பவே முடியவில்லை. அவர்களுக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சி.

எங்களைப் போலச் சேத்துளையும், சகதியிலேயும் கஷ்ட்டபடாம இருக்கட்டும்னு தானே உன்னைப் படிக்க அனுப்பினோம். இப்படியா இருப்ப. இவ்வளவு தைரியம் உனக்கு எங்க இருந்து வந்தது.” என மிகவும் வருந்தினர்.

பிரபாகரனுக்கும் சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்லை. ஒழுங்காகவும் வேலை பார்ப்பது இல்லை. எப்போது வேண்டுமானாலும் வேலை போகும் நிலை. அவனே சுபத்ராவின் சம்பளத்தைத் தான் நம்பிக் கொண்டு இருந்தான். சீக்கிரம் முன்னேற வேண்டும் என்ற ஆசையில் இருவரும் சேர்ந்து வீணாகி போனார்கள்.

மகிழினி சுபத்ராவிடம், “நீயா இப்படி?” எனக் கேட்க…

எல்லா வசதியோடவும் இருக்க உனக்கு எங்க நிலைமை புரியாது. எனக்குச் சொத்து சேர்த்து வைக்க… உன்னைப் போல அப்பாவோ புருஷனோ இல்லை. நானே தான பார்த்துக்கணும். எனக்கு இந்த வெளிநாட்டு வேலை அவ்வளவு முக்கியம். அதுதான் எதையோ நினைச்சு எப்படியோ ஆகிடுச்சு.” என்றாள்.

என் அப்பாவும் புருஷனும் எந்தக் குறுக்கு வழியிலும் பணம் சம்பாதிக்கலை… உழைச்சு தான் சம்பதிச்சாங்க. உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. அதுதான் இப்படிக் குறுக்கு வழியில முன்னேற ஆசைபட்டிருக்க.” என்ற மகிழினி தொடர்ந்து,

நல்ல வேலையில தான் இருந்த… நீ மட்டும் நல்லா வேலை பார்த்திருந்தா… இந்தத் தடவை இல்லைனாலும் அடுத்தத் தடவை உனக்கு வெளிநாடு போகும் வாய்ப்பு வந்திருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், தமிழோட குணம் சரியில்லைனா என்னால நிம்மதியா வாழ முடியுமா? பணம் மட்டும் இல்லை வாழ்க்கை.” என்றாள்.

நல்லா சொல்லுமா… இப்போ இவ தானே ஜெயில்ல போய்க் கஷ்ட்டபடப்போறா… இதையெல்லாம் எங்களால பார்க்க முடியாது.” என்றார் சுபத்ராவின் தாய். சுபத்ராவுமோ ஒரு விரக்தி மனப்பான்மையில் தான் இருந்தாள்.

தமிழைத் தனியே அழைத்துச் சென்று பேசிய மகிழினி, சுபத்ராவின் பெற்றோருக்காகவாவது அவளை மன்னிக்கலாம் என்று சொல்ல…. தமிழுக்கும் தெரியும் ஜெயிலுக்குப் போனவர்கள் எல்லாம் திருந்திவிடுவார்கள் என்று இல்லை… அங்கே போய் இன்னும் மோசமானவர்கள் எல்லாம் உண்டு. நம் நாட்டுச் சிறைசாலைகள் எல்லாம் குற்றம் செய்தவர்களைத் திருத்தி விடுவது இல்லை. அங்கே போய் அங்கே இருக்கும் குற்றவாளிகளோடு சேர்ந்து மேலும் வீணாகவும் வாய்ப்பு உண்டு.

சுபத்ராவிடம் இனி இது போலச் செயல்களில் ஈடுபடுவது இல்லை என்று எழுதி வாங்கிக்கொண்டு, அவள் பெற்றோரோடு அனுப்பி வைத்தனர்.

மகிழினி சொல்லி விட்டாள். “நீ அதே இடத்தில் வேலை பார். உன் வேலையை நான் பரிச்சுக்கலை…. ஆனா இனியாவது உழைச்சு உன்னையும் உன் குடும்பத்தையும் முன்னேற்று.” என்று.

பிரபாகரன் அரசு இருவரின் பேரிலும் வழக்கு பதியப்பட்டு, வழக்கு விசாரணை கோர்ட்டுக்குச் சென்று, அவர்களுக்கு தண்டனையும் கிடைத்தது. 

சுபத்ராவின் பெற்றோர் அவளுடனே இங்கே வந்து தங்கி இருந்து மகளை நல்வழிப்படுத்தினர். 

விஷயம் கேள்விப்பட்டு மகிழினியின் வீட்டினர் எல்லோரும் வந்து பார்த்து விட்டு ஆறுதலாக பேசிவிட்டு சென்றிருந்தனர். 

மகிழினியின் மனதை இந்த விஷயத்தில் இருந்து மாற்ற எண்ணி தமிழ் அவளை அழைத்துக் கொண்டு ஒரு வாரம் வெளிநாடு சுற்றுலா சென்று வந்தான். மனைவியை அவள் விருப்பப்பட்ட வெளிநாடு அழைத்து போனது போலவும் ஆனது. 

மகிழினி அலுவலகத்தில் வேலைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாள். வேலையில் இருந்து விடுபடும் வரை வீட்டில் இருந்து வேலை பார்த்தாள்.

இங்க பாரு நீ ஒழுங்கா வேலைக்குப் போ… இல்லைனா என்னை சீக்கிரம் வீட்டுக்கு வான்னு உயிரை எடுப்ப…” தமிழ் சொல்ல…

வேற வேலை தேடிட்டு தான் இருக்கேன்.” என்றாள்.

நாட்கள் வேகமாகச் செல்ல… மகிழினி கருவுற்று இருக்க… பேத்திக்கு துணைக்குக் காஞ்சனா வந்து இங்கே தங்க… மகிழினிக்கு வேறு நிறுவனத்தில் வேலையும் கிடைத்திருக்க… வேலைக்குச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவள், தற்காலிமாக வேலைக்குச் செல்ல வேண்டாம் என முடிவு எடுத்தாள்.

தமிழும் மகிழினியும் ஆசைப்பட்டது போல அவர்களுக்குப் பெண் குழந்தையே பிறக்க… பெண்ணரசியின் வரவால் வீடு இன்னும் சந்தோஷத்தால் நிறைந்து காணப்பட்டது.

தமிழும் மூர்த்தியிடம் சொல்லி விட்டான். “அப்பா, போதும் நீங்க அலைஞ்சது.” என்று. அதனால் மூர்த்தியும் தன் வேலையை உள்ளூரில் மட்டும் சுருக்கிக் கொண்டு பேத்தியோடு இருந்தார்

இந்தக் குடியிருப்பில் குழந்தைகள் அதிகம் என்பதால்… மாலை நேரம் மகிழினி மகளை வைத்துக் கொண்டு வெளியே தான் இருப்பாள். பொழுது நன்றாகப் போய் விடும்.

தமிழ் மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டால்… மகள் சாகித்யாவுடன் தான் இப்போது அவனுக்கு நேரம் செல்லும்.

உங்க அம்மா வெளிநாட்டுக்கு போய் வேலை பார்க்கனும்னு ஆசைபட்டா… இப்போ வேணா அனுப்பிடலாமா?” தமிழ் மகளிடம் கேட்க…

ஓ… பொண்ணு வந்ததும் பொண்டாட்டி வேண்டாமா?” என மகிழினி கேட்க…

ஹே… நான் எங்க டி அப்படிச் சொன்னேன். ஆனாலும் நீ எனக்காகத் தான போகலை.” என்றான் தமிழ்.

நீங்க எனக்காக எவ்வளவு பண்ணி இருக்கீங்க. நான் உங்களுக்காக இது கூடப் பண்ண மாட்டேனா தமிழ். அதோட எனக்கு உங்களோட இருக்கிறதை விட சந்தோஷம் வேற எதிலும் இல்லை.” என்றவள், கணவனை மகளுடன் சேர்த்து அனைத்துக் கொள்ள… தமிழும் அவளை நிறைவான மனதுடன் அனைத்துக் கொண்டான்.

Advertisement