Advertisement

நீ என் நாயகன்

இறுதி அத்தியாயம்

செல்லும் வழியிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துத் தமிழ் சொல்லி விட்டான். காவலர்களும் வந்து கொண்டு தான் இருந்தனர். முன்னால் சென்றவன் எங்கையோ செல்கிறான் என்று பார்த்தால்… அவன் சென்றது மகிழினியின் அலுவலகத்திற்குத் தான். அதையும் காவலர்களுக்கு தெரிவித்து விட்டான். 

தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை. சரி அவன் யாரை பார்க்க வந்திருக்கிறான் என்பதை முதலில் கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன், காரை ஓரமாகச் சென்று நிறுத்தினான்.

மகிழினியின் அலுவலகம் ஐந்து தளங்களைக் கொண்டது. மற்றபடி ரொம்பவும் பெரிய அலுவலகம் இல்லை. அதோடு வெளியாட்களின் வாகனங்களை முதல் கேட்டின் அருகே தான் நிறுத்த வேண்டும். அதனால் அவனுக்குக் கண்காணிப்பது எளிது தான்.

அந்தப் பைக்காரன் யாருக்கோ அழைத்து விட்டுக் காத்திருந்தான். அதே நேரம் மகிழினி தமிழை அழைத்தாள்.

என்னங்க இன்னும் வரலையா?”

வந்திட்டு நானே கூப்பிடுறேன். அதுவரை உள்ளேயே இரு…” என தமிழ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… பைக்காரனை நோக்கி ஒருவன் வர… பிறகு அழைப்பதாகச் சொல்லி தமிழ் அழைப்பை துண்டித்தான்.

வந்தவன் பைக்காரனை இங்கே எதற்கு வந்தாய் என்று சொல்லி திட்டி இருக்க வேண்டும். பைக்காரன் எதோ சொல்ல… சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டவன், எதையோ சொல்லி அந்தப் பைக்காரனை அங்கிருந்து கிளப்பினான். தமிழ் இப்போது வந்திருந்தது புது காரில் என்பதால்… அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். 

இன்னும் காவலர்கள் வரவில்லை. அதனால் தமிழ் அவனது வாகனத்தில் பைக்காரனை தொடர்ந்து சென்றான். ஆனால் வெளியே வரும் போதே எதிரே காவலர்கள் வந்து விட்டனர். காவலர்களைப் பார்த்ததும் பைக்காரன் அங்கிருந்து சிட்டாகப் பறக்க…. காவலர்கள் அவனைக் காரில் துரத்திக் கொண்டு சென்றனர்.

தமிழ் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தவன் மகிழினியை அழைத்துக் கீழே வர சொன்னான்.

என்னங்க இவ்வளவு லேட் பண்ணிடீங்க.” என்றபடி காரில் ஏறியவள், “மாமா என்ன இன்னும் காணோம்னு நினைக்க போறார்.” என்றவள், “நீங்க மாமாகிட்ட சொல்லிடீங்களா?” என்று கேட்க… “இல்லை… நீயே சொல்லிடு.” என்றான். மகிழினி மூர்த்திக்கு அழைத்து, இப்போது தான் கிளம்புகிறோம் எனச் சொல்லிவிட்டு வைத்தாள்.

மகிழினி போன் பேசி வைத்தும் தமிழ் அங்கிருந்து கிளம்பவில்லை.

மகி நல்லா யோசிச்சு சொல்லு… உன் ஆபீஸ்ல உனக்கு வேற யார் கூடவும் எதாவது பிரச்சனை இருந்ததா?” தமிழ் கேட்க….

இல்லையே… ஏங்க?”

உன்னை வண்டியில இடிச்சவனை இங்க பார்த்தேன்.” தமிழ் சொல்ல…

ஐயோ நீங்க அதை இன்னும் விடலையா… என்னை யாரு வேணும்னே இடிக்கப் போறா?” மகிழினி சொல்ல…

இல்லை மகி… இதுல எதுவோ இருக்கு. ஆனா என்னன்னு தான் புரியலை.” என்றான் தமிழ்.

அப்போது காவலர்களிடம் இருந்து, அவனை பிடித்து விட்டதாக தமிழுக்கு அழைப்பு வந்தது. தான் காவல் நிலையத்திற்கு வந்து, மேலும் சில விவரங்கள் சொல்ல வேண்டும் என்றான் தமிழ்.

உன்னை வீட்ல விட்டுட்டு நான் போலீஸ் ஸ்டேஷன் போகணும்.” என்றதும், மகிழினிக்கு கணவன் தான் அதிகமாகக் கற்பனை செய்வது போல் தோன்றியது.

செல்லும் வழியிலேயே மகிழினி பசிக்குது என்றதால்… தமிழுக்கும் காவல் நிலையம் செல்ல வேண்டியது இருந்ததால்… ஒரு பேக்கரி முன்பு நிறுத்தினான். இருவரும் ஆளுக்கொரு சாண்ட்விட்ச் மற்றும் பழசாறு வாங்கி அருந்திவிட்டுக் காரில் கிளம்ப… அப்போது அவர்கள் காரை தாண்டி ஒரு பைக் சென்றது. மகிழினி கவனிக்கவில்லை ஆனால் தமிழ் கவனித்தான். அப்போது அவன் மனைவியிடம் ஒன்றும் சொல்லவில்லை.

அவளை வீட்டில் சென்று விட்டவன், பத்திரமா இரு நான் வர தாமதமாகும் என்றான்.

தமிழ், நீங்க எதிலேயும் போய் மாட்டிக்காதீங்க எனக்குப் பயமா இருக்கு.” என்றதும்,

இல்லை… இந்தச் சம்பவம் என்னை மட்டும் இல்ல… இனி உன்னையும் சுத்தி இருக்கிறவங்களைக் கவனிக்க வைக்கும். நமக்கும் இதெல்லாம் ஒரு பாடம் தான். யாரையும் நம்ப முடியாத உலகத்துல நாம இருக்கோம்.” என்றவன், அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

வீட்டுக்குள் வந்தவளைப் பார்த்து மூர்த்தி, “என்ன மா இவ்வளவு லேட்?” என்றதும்,

உங்க பையன் தான் மாமா லேட்… இப்பவும் என்னை இறக்கி விட்டுட்டு, எதோ முக்கியமான வேலைன்னு போயிட்டார். வர வழியில ஸ்னாக்ஸ் சாப்பிட்டோம். நான் அவர் வந்ததும் சாப்பிடுறேன். நீங்க சாப்பிடீங்களா மாமா?”

நான் சாப்பிட்டேன் மா…” என்ற மூர்த்தி டிவி பார்ப்பதை தொடர… மகிழினி சென்று உடைமாற்றி வந்தவள், சமையல் அறைக்குச் சென்று முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, அவளும் சென்று மூர்த்தியுடன் டிவி பார்த்தாள்.

தமிழ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர… உயர் காவல் அதிகாரி அங்கே இல்லை. மற்ற காவலர்கள் தான் இருந்தனர். அந்தப் பைக்காரனை அங்கே தான் ஓரமாக உட்கார வைத்து இருந்தனர். 

சார் நான் சொன்னேன் இல்ல… இவன் கார் திருடன் சார்… திருடின கார்ல போகும்போது தெரியாம உங்க மனைவி கார்ல இடிச்சிட்டு போயிட்டான்… அதனால பயத்துல காரை விட்டுட்டு ஓடிட்டான் சார்.” என சப் இன்ஸ்பெக்டர் சொல்ல… தமிழ் அப்போது எதுவுமே சொல்லவில்லை.

சற்று நேரத்தில் உயர் அதிகாரி தாமோதரன் வந்துவிட… அவரிடம் தான் விசாரித்துத் தெரிந்து கொண்டதை சப் இன்ஸ்பெக்டர் சொல்ல… அந்தக் கைதியை அழைத்து வர சொல்லி அவர் சொன்னதும், அவனை அழைத்து வந்தனர்.

பெயர் என்ன என்றதற்கு, அரசு என்றான்.

இவரைத் தெரியுமா? இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?” என தமிழைக் காட்டி கேட்டதற்கு இல்லவே இல்லை என்றான். ஆனால் அவன் பொய் சொல்கிறான் என்று நன்றாகவே தெரிந்தது.

அரசு திரும்பச் சப் இன்ஸ்பெக்டரிடம் சொன்னதையே சொல்ல…

அப்போ இன்னைக்கு எதுக்கு **** கம்பெனிக்கு வந்தான்னு கேளுங்க.” தமிழ் சொன்னதும், அரசு சற்று திடுக்கிட்டு தான் பார்த்தான். ஆனால் உடனே சமாளித்துக் கொண்டு, “நான் பைக் செர்விஸ் கடை வச்சிருக்கேன். அவர் பைக் செர்விஸ் பண்ணேன் சார். அதுக்குப் பணம் வாங்க வந்தேன்.” என்றான்.

கதை நல்லா இருக்கு.” தமிழ் கிண்டலாகச் சொல்ல…

எனக்கும் இவன் மேல சந்தேகமா இருக்கு.” என்ற தாமோதரன்,

இவனுக்குத் தர வேண்டிய ட்ரீட்மென்ட் கொடுங்க. உண்மை தானா வெளிய வரும்.” என்றதும், காவலர்கள் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றனர்.

தமிழ் தாமோதரனிடம் இது என் மனைவியை டார்கெட் பண்ணி நடந்த விஷயம் தான் சார்… எனக்கு நல்லா தெரியும்.” என்றான்.

போலீசார் கவனித்த கவனிப்பில் பிரபாகரன் என்ற பெயரை அரசு சொல்லி விட… அவனை மீண்டும் உயர் அதிகாரி அழைத்து வர சொன்னார்.

ஒழுங்கா உண்மையைச் சொல்லு….” என்றதும்,

பிரபாகரன் என் கடைக்குப் பைக் செர்விஸ் விட வருவார் சார்… அப்போ பழக்கம்.”

ஒருத்தரை சும்மா ஒரு தட்டு தட்டனும். அவங்களால ஒரு காரியம் ஆகணும்னு சொல்லி… எனக்கு யாரையாவது தெரியுமான்னு கேட்டார்.”

பணத்துக்கு ஆசைப்பட்டு நானே பண்றேன்னு சொன்னேன்.”

இவர் மனைவி போட்டோ… அப்புறம் வர்ற வழி எல்லாம் அனுப்பினார். அதை வச்சுப் பைக்கிலத் தான் பின்னாடி போனேன். ஆனா ஒரு தடவை லேசா இடிக்கப் போனதுக்கே… மறுநாள் இருந்து கார்ல தான் வந்தாங்க.”

இவங்க கார்ல தெரியாம மோதுற மாதிரி மோததான், தெரு ஓரம் நின்னுட்டு இருந்த காரை எடுத்திட்டு வந்தேன். ஆனா அன்னைக்குன்னு பைக்கில வந்ததும், வேலை சுலமபா ஆகிடுச்சு.”

அரசு சொல்லிக் கொண்டு வர… தமிழுக்கு ரத்தம் கொதித்தது.

யாரு பொண்டாட்டியை யாரு சும்மா தட்டுறது. இவன் இடிச்சதுல முன்னாடி இருந்த கார் மேல இடிச்சு கீழ விழுந்தா….. அந்த நேரம் பின்னாடி எதாவது வண்டி வந்து ஏத்தி இருந்தா… என்ன ஆகி இருக்கும்?”

சார் நான் இவங்க எல்லார் மேலையும் கொலை முயற்சின்னு புகார் கொடுக்கிறேன். நீங்க பதிவு பண்ணுங்க.” என்றான்.

அவன் சொல்வதும் சரி தானே… தாமோதரன், “சரி நீங்க அப்படியே கொடுங்க,. கோர்ட் முடிவு பண்ணட்டும்.” என்றவர்,

போய் அந்தப் பிரபாகரனை அரெஸ்ட் பண்ணி கூடிட்டு வாங்க.” என்றதும், அவன் மட்டும் இல்லை சார்… அவனோட கேர்ள் ப்ரண்ட் சுபத்ராவும் இதுக்குக் காரணமா இருக்கலாம். அவங்களையும் கைது பண்ண சொல்லுங்க.” என்றதும், தாமோதரன் புரியாமல் பார்க்க… தமிழ் மகிழினி வெளிநாடு செல்ல இருந்தது பற்றிச் சொன்னான்.

இன்னைக்கு அந்தப் பிரபாகரனோட சுபத்ராவும் பைக்கிலப் போனதை நானே பார்த்தேன்.” என்றதும், தாமோதரன் பெண் காவலரையும் உடன் அனுப்பி வைத்தார்.

பிரபாகரனின் முகவரியை அரசிடம் கேட்க… “எனக்குத் தெரியாது சார்… அவர்தான் என்னைத் தேடி வந்தார். எனக்கு அவர் வீடெல்லாம் தெரியாது.” என்றான். பிறகு போலீஸ் விட்ட அறையில்… முகவரியை சொல்ல… காவலர்கள் அந்த முகவரிக்கு சென்றனர்.

பிரபாகரனின் வீட்டில் தான் சுபத்ராவும் இருந்தாள். இருவரும் திருமணதிற்கு முன்பே சேர்ந்து வசிப்பதாக அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள். இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

பிரபாகரன் உள்ளே வந்ததும், அங்கே தரையில் உட்கார்ந்திருந்த அரசுவிடம் தான் சென்றான். “உன்னை நான் தலைமறைவா இருன்னு தானே சொன்னேன். உன்னைப் போய் நம்பினேன் பாரு.” என அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சீறிக் கொண்டிருக்க.. “அவன்கிட்ட என்ன பேச்சு இங்க வாங்க.” எனச் சப் இன்ஸ்பெக்டர் அவர்களைத் தாமோதரனிடம் அழைத்துச் சென்றார்.

எடுத்ததும் தாமோதரன் சொல்லி விட்டார். “நீங்க எந்த வித்தத்திலேயும் தப்பிக்க முடியாது. உண்மையைச் சொல்லிடுங்க.” என்று.

சுபத்ரா வெளிநாடு போகணும்னு ஆசைபட்டா… ஆனா அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலை… மகிழினிக்கு தான் கிடைச்சுது. மகிழினி போகலைனா சுபத்ராவை அனுப்புவாங்கன்னு… லேசா அடி படுற மாதிரி தான் செய்யச் சொன்னேன்.” என்றதும்,

தமிழுக்கு எங்கிருந்து அவ்வளவு ஆவேசம் வந்ததோ… எழுந்து சென்று பிரபாகரனை நன்றாக நாலு காட்டுக் காட்டினான்.

Advertisement