Advertisement

மூன்னு மாசத்துக்கு மருந்து கொடுக்கிறாங்க. ஆனா அடுத்த மாசமே வேற மருந்து மாத்தி கொடுக்கிறாங்க. ஏற்கனவே மூன்னு மாசத்துக்கு வாங்கின மருந்தை குப்பையில தான் போடணும். ஏற்கனவே ரெண்டு முறை இப்படி ஆகிடுச்சு. காசு என்ன மரத்திலா காய்க்குது. எதுக்குத் தான் ஹாஸ்பிடல் வறோமோ…” என ஒரு நோயாளி வேதனையில் புலம்ப… தமிழ் அவரிடம் அவர் பார்த்த மருத்துவரை பற்றி விசாரித்தவன், அவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு, அவன் பார்க்க வேண்டிய நோயாளியை பார்த்துவிட்டு, பிறகு வம்சியைப் பார்க்க அவரது அறைக்குச் சென்றான்.

சொல்லுங்க தமிழ்.” என்றதும், தமிழ் நடந்ததைச் சொல்ல… வம்சி திலிபனை வர வைத்தார்.

மூன்னு மாசத்துக்கு மருந்து கொடுத்திட்டு, அடுத்த ஒரு மாசத்திலேயே மருந்து மாற்ற வேண்டிய அவசியம் என்ன?” என அவர் கேட்க…

இல்லை இது இப்போ புதுசா வந்தது, இன்னும் எபெக்ட்டா இருக்குமுன்னு நினைச்சேன்.”

வம்சி இரு மருந்துக்களையும் அலசி ஆராய்ந்தவர், “ப்ராண்டு தான் வேற மத்தபடி ரெண்டும் ஒன்னும் தான்.” என்றார்.

நீங்க கமிஷனுக்கு ஆசைப்பட்டு இப்படிப் பண்ணா…. நோயாளிங்க நிலைமை? ஏற்கனவே நோய் வந்து மன உளைச்சலில் இருக்கவங்களுக்கு, நீங்க மேலும் மன உளைச்சல் கொடுக்கிறீங்க. இது சரி இல்லை.” என்றான் தமிழ். வம்சியும் திலிபனை கண்டித்தவர், இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி சொன்னவர், அந்த நோயாளியை அழைத்து ரெண்டு மருந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்க முன்பு கொடுத்ததையே தொடருங்க எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.

இன்று மருத்துவம் என்பது கார்பரேட் நிறுவனங்களிடம் சென்றுவிட்டது. நிறைய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வந்துவிட… மருத்துவம் தான் இன்றைக்குப் பெரிய வணிகம்.

முன்பெல்லாம் மருத்துவர்கள் அதிகம் அவர்கள் வீட்டிலேயே முன்புறம் ஒரு அறையில் வைத்தியம் பார்ப்பார்கள் தேவைபட்டால் தான் வேறு பரிசோதனைகளுக்கு எழுதி கொடுப்பார்கள். இன்று அப்படி இல்லை. ஒரு மருத்துவனையில் ஒரு மணி நேரம் தான் வேலை நேரம். பிறகு வேறு மருத்துவமனைக்கு மாறிக் கொண்டே இருப்பார்கள். நோயாளிகளும் அந்த மருத்தவமனையின் உறுப்பினர் ஆக வேண்டும். இது எல்லாம் இப்போது கட்டாயம்.

சில மருத்துவர்கள் ஒரு நோயாளியிடம் அதிகபட்சம் பத்து நிமிடங்கள் செலவு செய்தால் அதிகம். நோயாளி சொல்வதைப் பொறுமையாகக் கேட்பதே இல்லை. மருந்து எழுதி கொடுத்து விட்டு, அடுத்த நோயாளியை பார்க்க தயாராகி விடுவார்கள்.

நோய் நாடி நோய் முதல் நாடி அதுதாணிக்கும்

வாய்நாடி வாய்ப்புச் செயல்.” திருவள்ளுவர் சொன்னது எல்லாம் காற்றில் போனது.

நோய் எந்தக் காரணத்திற்காக வந்திருக்கலாம் என ஆராய்வதே இல்லை. அப்போதைக்கு ஒரு மருந்து அவ்வளவு தான்.

மருத்துவம் கண்டிப்பாக முன்னேறி இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் சில மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

திலிபனுக்கு ஏற்கனவே தமிழைப் பிடிக்காது. அவன் இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதாக நினைப்பான்.

தமிழ் இதை நீங்களே என்கிட்டே சொல்லி இருக்கலாம், வம்சி வரை கொண்டு போக அவசியம் இல்லை.” என்றான்.

நம்ம சீப் அவர் தானே… நானா முடிவு எடுக்க முடியாது.” என தமிழ் சொல்லிவிட்டு செல்ல… திலீபன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

தமிழ் இதை வீட்டில் வந்தும் சொல்லிக் கொண்டு இருந்தான். “எது எதையோ கண்டுபிடிச்ச நாம…. இன்னும் சக்கரை நோயிக்கும், கேன்சருக்கும் மருந்து கண்டுபிடிக்கலைன்னு சொல்றது நம்பும்படியாவா இருக்கு. அப்படியே மருந்து கண்டுபிடிச்சாலும், இந்தக் கார்பரேட் முதலாளிகள் அதைச் சந்தைக்கு வரவிடவே மாட்டாங்க. அதுல நூறு சந்தேகம் கிளப்புவாங்க.”

இன்னைக்குச் சக்கரை மற்றும் கேன்சர் நோயாளிகளை வச்சுதான் உலக அளவில் பெரிய வணிகமே நடக்குது.”

சக்கரையைக் குணப்படுத்த முடியாத வியாதின்னு சொன்னாங்க. ஆனா இப்போ மக்களே… ரிவர்ஸ் டியபடிக்ஸ் மூலமா மாத்திரை எடுக்கிறதை குறைச்சுகிட்டாங்க. சிலருக்கு மாத்திரை கூடத் தேவைப்படுறது இல்லை.”

சக்கரை நோய் இல்லை. அது ஒரு குறைபாடு தான். ஆனா அது குணப்படுத்த முடியாத நோயின்னு பயம் காட்டி வச்சிருந்தாங்க.”

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடக் கூடாது, மாமிசம் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னா… அவங்க என்ன தான் சாப்பிடுவாங்க? அவங்க சோறும், சப்பாத்தியும் சாப்பிட்டு இன்னும் சக்கரை கூடித்தான் போனது. ஆனா இன்னைக்கு நிலை அப்படி இல்லை.”

மாவு சத்து உணவை குறைச்சு, மற்ற தானிய வகை உணவுகள், ப்ரோடீன் உள்ள அசைவ உணவுகள், காய்கறிகள், பழங்கள், அதோட சிறிது உடற்பயிற்சி செஞ்சாலே போதும், சக்கரை கண்டிப்பா கட்டுக்குள்ள வரும். அதிகம் சாப்பிடுறது அதுவும் நேரம் தாண்டி சாப்பிடுறது தான் நிறைய நோய்களுக்குக் காரணம். அதைச் சரி செஞ்சாலே போதும். ஆரோக்கியமா வாழலாம்.” என்றான் தமிழ்.

கணவன் ஏன் ஏழு மணிக்கே இரவு உணவை முடிக்கிறான். தந்தையையும் சீக்கிரமே இரவு உணவு உண்ண சொல்பவன், இரவு வேலைக்கு மிகவும் எளிமையான உணவுகளைத் தான் அவர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பான். அதெல்லாம் ஏன் என்று இப்போது மகிழினிக்குப் புரிந்தது.

சில பெற்றோர்கள் பரோட்டா, பிரயாணின்னு பசங்களுக்கு ஹோட்டல்ல வாங்கிக் கொடுக்கிறாங்க. அவன் சுவைக்காக என்னென்ன சேர்ப்பான்னு யோசிக்கிறதே இல்லை. அதனால இப்போ சின்னப் பசங்க நிறையப் பேருக்கு கேன்சர் வந்து கஷ்ட்டப்படுறாங்க. அவங்களுக்காகவாவது மருந்து வரனும்.” என்றான் தமிழ் கவலையாக.

மகிழினியும் மூர்த்தியும் கடவுளைத் தான் வேண்டிக் கொண்டனர். வேறு என்ன செய்வது?”

அன்றிலிருந்து திலீபன் தமிழிடம் என்ன குறை காணலாம் எனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் குற்றம் கண்டுபிடிக்கத் தமிழ் சிறு வாய்ப்பாவது கொடுக்க வேண்டும் அல்லவா? தமிழ் அவன் வேலையில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பான்.

தமிழ் ஒரு மருத்துவமனையில் தான் வேலை பார்த்தான். அங்கே தான் காலை முதல் மாலை வரை இருப்பான். ஒரு நோயாளிக்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடங்களில் இருந்து அரை மணி நேரமாவது ஆகும். அவனிடம் வைத்தியம் செய்தவர்கள் குணம் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்ப… அவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லி என தமிழுக்கு எப்போதுமே நோயாளிகள் வரத்து அதிகம் தான்.

அன்றோடு அந்தப் பிரச்சனை முடிந்து விட்டது என நினைத்ததால் தமிழ் திலிபனை பார்க்கும் நேரம் நன்றாகத்தான் பேசிக் கொண்டு இருந்தான்.

அந்த மாதம் நடந்த மருத்துவச் சேவைக்கு திலிபனும் வந்திருந்தான். தமிழ் மகிழினியையும் அழைத்து வந்திருந்தான்.

கொடைக்காணல் பக்கம் ஒரு மலை கிராமத்திற்குச் சென்றனர்.

காலையில் இருந்து மாலை வரை வேலை பார்த்து விட்டு, கிளம்புவதற்கு முன் எல்லோரும் இயற்கை எழிலை ரசிக்க… தமிழும் மகிழினியும் ஒரு சிறு குன்றின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

தமிழைப் பயப்பட வைக்க எண்ணிய திலீபன், வேண்டுமென்றே தமிழ் எனக் கத்திக்கொண்டு தூரத்தில் இருந்து ஓடி வந்து அவனைத் தள்ளுவது போலப் போக்குக் காட்ட… தமிழ் சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.

விளையாட்டு என்றாலும் தவறி தள்ளி இருந்தால் என நினைத்த மகிழினி நன்றாகத் திலிபனை வைத்து வாங்கி விட்டாள்.

உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா டாக்டர். எதுல விளையாடுறதுன்னு இல்லையா? தெரியாம தள்ளி இருந்தா கூட நிலைமை விபரிதமா முடிஞ்சிருக்கும்.” எனத் தன்னை மீறி கத்தி விட்டாள்.

விடு விளையாட்டுக்குத்தானே… அவர் என் பெயரை சொல்லி கத்திட்டு தானே வந்தார்.” என தமிழ் மகிழினியை சமாதானம் செய்ய…. திலிபனும் மன்னிப்புக் கேட்டான். ஆனாலும் மகிழினியின் மனம் சமாதானமே ஆகவில்லை.

அவன் வேணுமுன்னே பண்றான். நீங்க அன்னைக்குப் பண்ணதை மனசுல வச்சிட்டுப் பண்றான். எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க.” என்றாள் மகிழினி கணவனிடம்.

இங்க இருந்து விழுந்தாலும் ஒன்னும் ஆகாது டி… நீ டென்ஷன் ஆகாத. நான் பார்த்துக்கிறேன்.” என்றான் தமிழ்.

அலுவலகத்தில் அவளது டீம் லீடர் சதீஷ் அவளை அழைத்து, “வெளிநாடு செல்ல வேலையை ஆரம்பிக்கப் போறோம். உனக்குப் போக இஷ்ட்டம் தானே…” என்று கேட்க…

எனக்கு இஷ்ட்டம் இல்லை. என்னால என் குடும்பத்தை விட்டு வர முடியாது.” என்றாள்.

இவள் போகவில்லை என்றால்… போக ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நட்டம் நிறுவனத்துக்கு அல்ல… மகிழினிக்கு தான். ஆனால் அதைப் பற்றி மகிழினி பெரிதாக நினைக்கவில்லை.

சதீஷ் சரி என்றுவிட்டான்.

நான் சுபத்ராகிட்ட சொல்லிடட்டுமா?” என மகிழினி கேட்க…

உனக்குப் பதில் சுபத்ரா போறதா யார் சொன்னா? சென்னை கம்பெனியில் இருந்து வேற ஒருத்தரை தான் அனுப்பனும்.” என்றான் சதீஷ்.

சுபத்ராவுக்கு வெளிநாடு செல்ல எவ்வளவு விருப்பம் என்று மகிழினிக்கு தெரியும். அவள் அவளுக்காக வருத்தப்பட்டாள்.

இப்போ நீ போகலைன்னு ஆபீஸ்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” என்றான் சதீஷ். சரி என்று சொல்லிவிட்டு மகிழினி வீட்டுக்கு வந்தாள். அவள் வெளிநாடு செல்லவில்லை என்று வீட்டிலும் யாரிடமும் சொல்லவில்லை.

இன்னும் ஒருமாசம் தான் இருக்கு. உனக்கு எதாவது ஷாப்பிங் பண்ண வேண்டாமா?” என தமிழ் கேட்டுக் கொண்டே இருந்தான். மகிழினி அசையவே இல்லை.

Advertisement