Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 9

வீட்டிற்கு வந்ததும் தமிழும் மகிழினியும் அலுவலகம் கிளம்பி சென்றனர். மகிழினி அவளது வண்டியில் சென்று கொண்டிருக்க… அப்போது அவளை உரசியபடி ஒரு பைக் கடந்து செல்ல… பயத்தில் மகிழினி வண்டியை கீழே போட்டுவிட்டு அவளும் விழுந்திருந்தாள். பைக்கில் சென்றவன் அவளைத் திரும்பப் பார்த்துவிட்டுச் சென்றான். ஆனால் அவன் ஹெல்மெட் அணிந்திருந்ததால்… அவளுக்கு யார் என்று தெரியவில்லை.

அப்போது சாலையில் போக்குவரத்தும் அதிகமாக இருக்க… அவன் வேண்டுமென்றே செய்தது போலவும் இல்லை. அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவி செய்ய… அலுவலகம் செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டாள்.

மருமகள் திரும்ப வந்ததும் மூர்த்தி என்னவென்று விசாரிக்க…. “வண்டியில இருந்து விழுந்துட்டேன் மாமா.” என்றாள்.

அவள் பயந்து போய் இருப்பது அவளது உடலின் நடுக்கத்தில் தெரிய…. மூர்த்தி அவளுக்குக் குடிக்க ஜூஸ் போட்டுக் கொண்டு வர… ஹாலில் இருந்த திவானில் மகிழினி படுத்திருந்தாள்.

இந்தா மா இந்த ஜூஸ் குடி.” என்றவர், அவரும் அங்கேயே உட்கார்ந்து கொண்டார். அவள் ஜூஸ் குடித்து முடித்ததும், இப்போ எப்படி இருக்குமா?” என அவர் விசாரிக்க…

இப்போ ஒன்னும் இல்லை நல்லாத்தான் இருக்கேன்.” என்றவள், மீண்டும் படுத்துக் கொண்டாள்.

மூர்த்தி மகனுக்கு ஓய்வு நேரத்தில் அழைக்கும்படி மெசேஜ் மட்டும் போட்டு விட்டார்.

தமிழ் சிறிது நேரத்திலேயே அழைத்து விட்டான். மூர்த்தி விஷயத்தைச் சொல்ல…

எப்பவும் ஆபீஸ் போயிட்டு மெசேஜ் போடுவா, இன்னைக்குப் போடலைன்னு நினைச்சேன்.” என்றவன், மனைவி எப்படி இருக்கிறாள் என விசாரித்தான்.

வண்டி ட்ராபிக்ல மெதுவா போனதுனால அடி எதுவும் இல்லை. ஆனா கொஞ்சம் பயந்திடுச்சு போல…” என்றார்.

தான் மதியம் வருவதாகச் சொல்லி தமிழ் வைத்தான்.

தான் எப்போதும் எடுக்கும் அரைமணி நேர ஓய்வை, அன்று ஒரு மணி நேரமாக எடுத்துக் கொண்டு மதியம் வீட்டிற்கு வந்தான். மகிழினி அப்போது வரை நன்றாக உறங்கி எழுந்திருந்தாள்.

என்ன டி ஆச்சு?” என்றவன், மனைவியைக் கீழே இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று ஆராய்ந்தான். அடி எதுவும் இல்லை.

எங்கையும் வலிக்குதா?” என அவன் விசாரிக்க… இல்லை என்றாள்.

இருவரும் அறையில் இருந்து வெளியே வந்தனர்.

வண்டி ஓட்டிட்டு ஒழுங்கா ஆபீஸ் போகத் தெரியாதா…” என்றவன், “உன்னை நம்பி இனிமே எப்படி வண்டியில அனுப்புறது?” என்று கேட்க…

நான் ஒழுங்கா தான் ஓட்டிட்டு போனேன். ஒருத்தன் வேணுமுன்னே உரசுற மாதிரி வந்தான். பயத்துல வண்டியை கீழ போட்டுட்டேன்.” என்றாள்.

“அவனை அங்கயே பிடித்து ரெண்டு சாத்து சாத்தியிருக்க வேண்டியது தானே… அதை விட்டு இப்படிப் பயந்து போவியா?” என்றான்.

நாம ஒழுங்கா வண்டி ஓட்டினாலும், ரோட்ல வர்றவங்களும் ஒழுங்கா வரணும் தானே… அதுவும் இப்போ எங்கப் பாரு சாப்பாடு கொண்டு போற வண்டிங்க தான். நேரத்துக்குப் போகணும்னு கண்டபடி வண்டி ஓட்றாங்க. எனக்கு முன்னமே மகிழினியை வண்டியில அனுப்ப யோசனை தான்.” என்றார் மூர்த்தி.

இனிமேல் தந்தை அவளை வண்டியில் அனுப்ப ஒத்துகொள்ள மாட்டார் என்பதைத் தமிழ் அறிவான். “நானே உன்னை உன் ஆபீஸ்ல விடுறேன் சாயங்காலம் அப்பாவோட வந்திடு. அவருக்கு வர முடியலைனா…. டாக்ஸியில் வந்திடு.” என்றான். மகிழினியும் சரி என்றாள்.

நீ வீட்ல இருந்தா அதையே யோசிச்சிட்டு இருப்ப… கிளம்பு உன்னை ஆபீஸ்ல விட்டுட்டு நானும் ஹாஸ்பிடல் போறேன். சாயங்கலாம் நானே உன்னைக் கூப்பிட வரேன்.” என்றான். இருவரும் மதிய உணவு உண்டுவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றனர். மூர்த்திக்கு வெளியே செல்லும் வேலை இல்லாததால்… தமிழ் காரில் தான் அவளை அழைத்துச் சென்றான். மூர்த்தி அப்போதே இன்னொரு கார் வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

அன்று மாலை ஏழு மணிப்போல இருவரும் சேர்ந்தே வீட்டுக்கு வந்தனர். இரவு உணவு உண்டதும், மூர்த்தி என்ன கார் வாங்கலாம் என்று கேட்க…

அப்பா, இப்போ எதுக்குப்பா இன்னொரு கார்? நாம இப்படியே கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணலாம்.” தமிழ் சொல்ல…

நான் மகிழினிக்கு வாங்கிக் கொடுக்கிறேன். நீ என்ன காருன்னு மட்டும் சொல்லு போதும்.” என்றார்.

பார்த்தியா உன் மாமனாரை… எனக்கு எல்லாம் இப்படி நினைச்சதும் கார் வாங்க முடியாது. நான் சொன்னேன் இல்ல… உன் மாமனார் நல்லா சம்பாதிக்கிறான்னு.” என்றவன்,

அப்பா அவதான் வெளிநாடு போறேன்னு சொல்லிட்டு இருக்காளே…. இருக்கப் போற கொஞ்ச நாளைக்கு… நான் அவளை விட்டுட்டு கூட்டிட்டு வரேன். அவ திரும்ப வந்ததும் வாங்கிக்கலாம்.” என்றான். மூர்த்தியும் யோசித்துப் பார்த்தவர், மகன் சொல்வது சரிதான் என்பதால்… அமைதியாக இருந்து கொண்டார். தமிழுக்குத் தெரியும், அவருக்கு மகிழினி வெளிநாடு செல்வதில் விருப்பம் இல்லை என்று.

மகிழினி இதைத் தன் வீட்டில் சொல்லி பெருமை பேசினாள். “மாமா எனக்காகக் கார் வாங்கவே கிளம்பிட்டாங்க. அப்புறம் நான் வெளிநாடு போறதுனால தான் இப்போ வாங்கலை.”

ஒரு வண்டியை கீழ போட்டதுகே பயந்திட்டு வீட்டுக்கு வந்திட்ட… நீ போய் எப்படி வெளிநாட்டில இருக்கப் போற?” என லலிதா கவலைப்பட…

நான் என்ன தனியாவா போறேன். என்னோட தான் இன்னும் கொஞ்சம் பேர் வர்றாங்களே…. தங்கிற இடத்துல இருந்து ஆபீஸ்க்கு பஸ்ல போயிட்டு வரப் போறேன். அங்க எல்லாம் இங்க மாதிரி கூட்டம் இருக்காது.” என்றாள்.

மறுவீடு சீராடல் எல்லாம் முடித்து, தருணும் ஸ்ரீலேகாவும் தனிக்குடித்தனம் செல்ல… அவர்களைக் குடித்தனம் வைக்க மகிழினியின் பெற்றோர் சென்றவர்கள், மகளையும் அழைக்க… அவள் தமிழை அழைக்க… அவன் கடுப்பாகி விட்டான்.

ஹே என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? எனக்கு வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கியா? நான் என்ன உன்னை மாதிரி ஆபீஸ்லையா வேலை பார்க்கிறேன், நினைச்சதும் லீவ் எடுக்க. சும்மா அங்க வா இங்க வான்னு.” என்றான்.

கூப்பிட தான் செஞ்சேன். வர முடியாதுன்னா அதை மெதுவா சொல்ல வேண்டியது தான… எதுக்குக் கத்துறீங்க?” என்றாள்.

உனக்கு என மேல ரொம்பப் பாசம் தான். அப்படி இருக்கிறவ எதுக்கு விட்டுட்டு வெளிநாடு போறதுல மட்டும் குறியா இருக்க…” என்றான்.

இப்போ நான் வெளிநாடு போறது உங்களுக்கு இஷ்ட்டமா இல்லையா? அதை முதல்ல சொல்லுங்க?”

நீ போயிட்டு வா… நான் உன் முன்னேற்றத்துக்குத் தடையா இருக்க மாட்டேன். அப்புறம் ஒருநாள் உங்களால தான் நான் போகலைன்னு நீ சொல்லிக் காட்ட மாட்டன்னு என்ன நிச்சயம்? நீ போயிட்டு வா தாயே…” என்றான்.

திருமணம் முடித்து இருவருக்கும் வந்த பெரிய வாக்கு வாதம் இதுதான். அதன் பிறகு தமிழ் இறங்கி வந்தாலும், மகிழினி இறங்கி வருவதாக இல்லை.

நான் ஆசையா தான கூப்பிட்டேன். அதுக்கு இவ்வளவு பேசணுமா என்று நினைத்தவள், கணவன் மீது கோபத்தில் இருந்தாள். கோபத்தில் பெற்றோருடன் சென்னைக்கும் சென்று விட்டாள். தமிழ் கைபேசியில் அழைத்தும் அவள் எடுக்கவில்லை.

தமிழ் தருணை அழைத்து அவனிடம் புலம்பினான்.

விடு அவளே பேசுவா… நல்லாத்தான் இருக்கா… நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.

இங்கே அவள் உடல்தான் இருக்க… மனம் எல்லாம் கணவனிடம் தான். இவரையே தான் நினைச்சிட்டு இருப்போம். அதுக்குதான் அவரையும் கூப்பிட்டேன், வந்தாரா மனுஷன் என மனதிற்குள் நொந்தவள், இரண்டு நாட்களைக் கஷ்ட்டப்பட்டுக் கடத்திவிட்டுக் கணவனிடம் வந்து சேர்ந்தாள்.

போகிறவ ஒழுங்கா போக வேண்டியது தான… இப்படிச் சண்டை எல்லாம் போட்டுட்டு போகாத… எனக்கு இங்க வேலையே ஓட மாட்டேங்குது.” தமிழ் சொல்ல… “எனக்கும் அப்படித்தான் இருந்தது. அதுக்குதான் கூடக் கூப்பிட்டேன். வந்தீங்களா… ரெண்டு நாள் வர்றதுக்கு, அந்தப் பகுமானம் பண்ணீங்க.” என மகிழினி சொல்ல…

என் காரணம் உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.” என்றான் தமிழ்.

தமிழ் அன்று மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்க… அப்போது வெளியே வரண்டாவில் யாரோ கத்தி பேசுவது போல இருக்க… தமிழ் எழுந்து வெளியே சென்றான்.

Advertisement