Advertisement

என்ன காட்ட சொல்றீங்க? நாம கல்யாணத்துக்குப் பிறகு இப்படி இருப்போம்னு நானே நினைச்சுப் பார்த்தது இல்லை. எனக்குக் கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.”

கல்யாணம் பண்ணிகிட்டோம் வேற வழி இல்லைன்னு ஒருவேளை மாறிட்டியோ…”

என்னைப் பார்த்தா இஷ்ட்டம் இல்லாம வலுகட்டாயமா குடும்பம் நடத்துற மாதிரியா இருக்கு. எனக்கே தெரியலை… நான் எப்படி இப்படி மாறிட்டேன்னு… டாக்டர் சாருக்கு தான் எதோ மந்திரம் தெரியும் போல…

ஒ… உன்னை அந்த அளவுக்கு வசியம் செஞ்சிட்டேனா நான்.” என்றவன், மனைவியின் முகம் பார்த்து புன்னகைக்க…

கேள்வியா கேட்டது போதும். எனக்கே பதில் தெரியலை… நாம சந்தோஷமா இருக்கோம் தான… அதே போதும், ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் பண்ணாதீங்க.” என்றவள், கணவனை அனைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொள்ள….

ஹே…. அதுக்குள்ள என்ன தூக்கம்?” என்றவன், மனைவியின் மூடி இருந்த இமையில் முத்தமிட்டான்.

தமிழ் தினமுமே மாலை ஆறரை மணி போல வீட்டுக்கு வந்து விடுவான். இரவு சமையல் மகிழினி தான் செய்வாள். தமிழும் அவளுக்கு உதவுவான். மூர்த்தியையும் அவர்களின் பேச்சில் இழுத்துக் கொண்டு என நேரம் இனிமையாகச் செல்லும்.

தமிழ் மாதம் ஒருமுறை சக மருத்துவர்களோடு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு இலவச மருத்துவம் பார்க்க செல்வான். அப்படிச் செல்லும் சமயங்களில், மனைவியையும் உடன் அழைத்துச் செல்வான். அந்த ஒருநாள் கூட மனைவியை விட்டு இருக்க மாட்டான். அதனால் மகிழினிக்கு புது ஊர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

பொண்டாட்டியை இப்படிக் கூட்டிட்டே அலையுறானே… இவன் எப்படி அவளை வெளிநாடு அனுப்பிவிட்டு இருப்பான் என மூர்த்தி மனதிற்குள் கவலைப்பட்டுக் கொண்டார்.

தருணுக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததுமே… நல்ல வரன் அமைந்து விட… அதுவும் பெண் வீடு சென்னையில் தான். பெண்ணும் படித்து வேலை பார்க்கிறாள். தருணும் வேலை பார்ப்பது அங்கே தானே… அந்த இடத்தையே தருணுக்கு முடிவு செய்தனர்.

திருமண நிச்சயம் பெண் வீட்டில் நடக்க அதற்கு எல்லோரும் சென்று வந்திருந்தனர். அடுத்த மூன்று மாதத்தில் இருந்த முஹுர்த்த தேதிக்குப் பெண் வீட்டின் அருகே இருந்த மண்டபங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் ஐந்து மாதங்கள் கழித்துத் திருமணத்தை வைக்கலாம் என்றனர். ஆனால் நண்பனின் முகத்தைப் பார்த்த தமிழ், “சென்னையிலேயே கொஞ்சம் தள்ளி இருந்தா கூடப் பரவாயில்லை பாருங்க.” என்றான்.

பூந்தமல்லியில் ஒரு மண்டபத்தில் அந்தத் தேதியில் கிடைக்க… அங்கேயே திருமணத்தை வைத்தனர்.

உங்க ப்ரண்டை நீங்க ரொம்பத் தான் காப்பாத்துறீங்களே…” மகிழினி சொல்ல…

ஆமாம் நான் காப்பாத்தாம யார் காப்பாத்துவா?” என்றான் தமிழ்.

தருண் மூர்த்தி மூலமாகச் சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தான். அதுவும் முடியும் தருவாயில் இருக்க… திருமண வேலையாக மகிழினியின் பெற்றோர் அடிக்கடி சென்னைக்குச் சென்று வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் போல…. மகிழினி கோதுமை மாவில் பரோட்டா செய்து கொண்டிருந்தாள். தமிழ் வெளியே இருந்து எல்லாம் பரோட்டா வாங்க ஒத்துக்கொள்ள மாட்டான். அதனால் மகிழினி அவளே செய்ய… மூர்த்தி அவளுக்கு உதவி கொண்டு இருந்தார்.

தமிழ் ஹாலில் சத்தமாகப் பாட்டு வைத்துத் திவானில் படுத்து கேட்டுக் கொண்டிருந்தான்.

பார்த்தீங்களா மாமா உங்க பையன் என்ஜாய் பண்றதை?” மகிழினி மாவு பிசைந்தபடி கேட்க…

அவன் அம்மா இருந்த வரை இப்படித்தான் இருந்தான். இப்போ நீ வந்ததும் தான் திரும்ப இப்படி இருக்கான். ஆனா நீ வெளிநாட்டுக்கு வேற போகணும்னு சொல்ற… நீ போனதுக்குப் பிறகு எப்படி இருப்பானோ.” என்றார் கவலையாக. மகிழினி அப்போது எதுவும் சொல்லவில்லை.

தருணின் திருமணம் நெருங்கிக் கொண்டிருக்க… லலிதா மகளை வந்து தங்களுடன் சில நாட்கள் தங்கி இருந்து திருமண வேலைகள் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். தமிழும் போய் விட்டு வா என்று அனுப்பி வைத்தான்.

திருமணதிற்கு இரண்டு வாரங்கள் முன்பே மகிழினி பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

முதல் இரண்டு நாட்கள் அம்மா வீட்டின் சீராடலில் சென்றுவிட… அதற்குப் பிறகு இருந்து, எங்கும் கணவன் தான் முன் நின்றான். இந்த நேரம் இது செய்து கொண்டிருப்பான். இப்போது வீட்டுக்கு வந்திருப்பான் என மனது கணவனையே நினைத்தது. அதுவும் பகல் பொழுதைக் கூட ஓட்டி விடுவாள். மாலை பொழுது போவது தான் கஷ்ட்டமாக இருந்தது.

மகிழினி மெதுவாகத் தமிழிடம் கேட்டுப் பார்த்தாள். அவனுக்கு எப்படி இருக்கிறது என்று.

எனக்கும் தான் நீ இல்லாம பொழுதே போகலை… ஆனா உன் அண்ணன் கல்யாணத்துக்கு நீயும் உன் பங்குக்கு வேலை பார்க்கணும் தான… நீ பார்க்காம யார் பார்ப்பா.” என்றான்.

மகிழினி கணவனை ரொம்பவும் நச்சரித்து வார இறுதி அவனைத் தேனிக்கு வர வைத்து இருந்தாள். தனக்கு அவனை இவ்வளவு பிடிக்கும் என்பதே அவளுக்கு இப்போது தான் தெரிந்திருந்தது.

தமிழ் கூட அவளை விட்டுவிட்டு இருந்து விட்டான். அவளால் தான் அவனை விட்டு இருக்க முடியவில்லை.

நான் கல்யாணத்துக்காக நாலு நாள் லீவ் போட்டிருக்கேன். இந்த வாரம் வேற என்னை வர வச்சுட்ட… நாளைக்குக் காலையில நான் சீக்கிரம் எழுந்து போகணும்.” என்றான்.

அன்று முழுவதும் மனைவியோடு இருந்தவன், மறுநாள் காலை ஏழு மணிக்கே தேனியில் இருந்து கிளம்பி விட்டான். அவன் சென்றதும் மகிழினி சோர்வாக இருக்க…

இவதான் புருஷனை விட்டு வெளிநாடு போறவளா?” எனத் திருமணதிற்கு வந்திருந்த கங்கா கேட்க… “எனக்கும் அதுதான் தெரியலை. ஒருவேளை அவரையும் கூட்டிட்டு போவாளோ என்னவோ…” என்றார் லலிதா கிண்டலாக.

திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும் போது தருண் வந்து விட்டான். திருமணதிற்கு இரண்டு நாட்கள் முன்பு தமிழும் மூர்த்தியும் தேனீ வந்து விட்டனர். வீட்டில் சாமி கும்பிட்டு எல்லோரும் திருமணதிற்கு சென்னை கிளம்பி சென்றனர்.

மாப்பிள்ளையின் ஒரே தங்கச்சி என்பதால்… மாப்பிள்ளை வீட்டினர் மகிழினியை நன்றாக உபசரிக்க… தலையில் கீரிடம் வைத்தது போலத்தான் சுற்றிக் கொண்டு இருந்தாள்.

திருமணத்தன்று மகிழினி பிரத்யேகமாக அலங்காரம் செய்திருக்க… தமிழ் மனைவியைத் தான் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

ஏன் இப்படிப் பண்றீங்க என மற்றவர்களுக்காகப் பொய்யாகத் தான் மகிழினி கோபம் கொண்டாள். உண்மையில் அவன் செய்வதை ரசிக்கவே செய்தாள்.

தருணின் மற்ற நண்பர்களும் வந்து விட… திருமணத்தில் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது.

தங்கள் திருமணத்தில் கூட மகிழினி இவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

தருண் ஸ்ரீலேகா திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

திருமணத்தன்று மதியமே விருந்து உண்டு, புதுமணத் தம்பதிகளை அழைத்துக் கொண்டு இரவு தேனீ வந்து விட்டனர். இவர்களுக்கும் அதே கதை தான். தமிழும் தருணும் ஒன்றாகப் படுத்துகொள்ள… மகிழினியும் ஸ்ரீலேகாவும் ஒன்றாகப் படுத்துக் கொண்டனர்.

டேய்… நீ உன் பொண்டாட்டியை பிரிஞ்சிருக்க நியாயம். நான் ஏன் டா பிரிஞ்சிருக்கணும்? எனக்குக் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகுது.” என தமிழ் சொல்ல…

எங்க வீட்ல பொண்ணு எடுத்தா அப்படித்தான்.” என்றான் தருண்.

தமிழ் மறுநாளே கோவிலுக்குச் சென்று விட்டு வந்து விடலாம். தனக்கும் அதற்கு மேல் இருக்க முடியாது என்று சொல்லிவிட… மறுநாளே கோவிலுக்குக் கிளம்பினர்.

காலை கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்து அன்று மாலையே தமிழ் மதுரைக்குக் கிளம்ப… அவனுடன் மகிழினியும் கிளம்ப…

என்ன இவளும் போறா என்பது போல் அவள் பெற்றோர் பார்க்க…

அம்மா நாங்களும் ஹனிமூன் போயிடுவோம், அவ இருந்து என்ன செய்யப் போறா? அவ இப்போ போயிட்டு ஞாயிற்றுக்கிழமை தமிழோட வரட்டும்.” என்றான் தருண். மகிழினி மகிழ்ச்சியாகக் கணவனுடன் கிளம்பி சென்றாள்.

உண்மையில் கணவனின் மேல் தான் கொண்டிருந்த அன்பை, அவனைப் பிரிந்து இருக்கும் போது தான் மகிழினி உணர்ந்தாள். தான் மட்டும் சந்தோஷமாக இல்லாமல் கணவனையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டாள்.

அந்த வாரத்தில் ஒரு எதிர்பாராத அவசர அறுவை சிகிச்சை செய்யும்படி வந்து விட… தமிழ் அதில் கொஞ்சம் வேலையாக இருந்தான். வார இறுதியில் தேனிக்கு சென்றனர். தருணும் ஸ்ரீலேகாவும் தேன்நிலவில் இருந்து திரும்பி வந்திருந்தனர்.

அன்றுதான் பெண் வீட்டினருக்கு மாப்பிள்ளை வீட்டின் சார்பில் விருந்து வைத்திருக்க… அதற்கு வந்துவிட்டு ஸ்ரீலேகாவின் வீட்டினரோடு தருணும் ஸ்ரீலேகாவும் கிளம்பி செல்ல… தமிழும் மகிழினியும் மறுநாள் அதிகாலையே அங்கிருந்து கிளம்பி மதுரை வந்தனர்.

Advertisement