Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 8

அடுத்த இரண்டு நாட்கள் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் நேரம் இனிமையாகச் சென்று விட… அன்றைய இரவில் மனைவியை அணைத்தபடி கிடந்த தமிழ், “வெளிநாடு போறேன்னு சொல்றியே…. இப்போ நாம பண்ணதுக்குப் பாப்பா வந்திட்டா என்ன பண்ணுவ?” என்றதும், மகிழினி பதறி போய் எழுந்து உட்கார… அவள் முகத்தைப் பார்த்து தமிழுக்குச் சிரிப்பு தான்.

ஹே… பதறாத… சும்மா உன்னை டென்ஷன் பண்ண சொன்னேன். உனக்கு இப்போ குழந்தை உருவாகிற நாள் இல்லை.” என்றதும், அவனைப் பார்த்து மகிழினி முறைக்க…

அப்போ நீ வெளிநாடு போறதுல உறுதியா இருக்க… சரி இனிமே குழந்தை வராம பார்த்துக்கலாம்.” என்றவன்,

எனக்கு இருபத்தியொன்பது வயசாகுது. நீ வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த பிறகுன்னா… கொஞ்சம் லேட் தான். பரவாயில்லை நீதான் போகணும்னு ஆசைப்படுறியே.” என்றான்.

உங்களுக்கு நான் போறது இஷ்ட்டமா இல்லையா?”

எனக்கு உன்னை விட்டு இருக்க கஷ்ட்டமா இருக்கும் தான். ஆனா நான் கஷ்ட்டப்பட்டுப் படிச்சு…. இன்னைக்கு இந்த நிலையில இருக்கிற மாதிரி தான நீயும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்க… உனக்குக் கிடைச்ச வாய்ப்பை எனக்காக விடச் சொல்றதுல எனக்கு விருப்பம் இல்லை. நீ எதையும் நினைச்சு குழப்பிக்காம போயிட்டு வா.” என்றான் தமிழ்.

மறுநாள் மூர்த்திச் சென்னையில் இருந்து வந்துவிட… அவர் தனக்கு மதுரையில் வேலை இருப்பதாகச் சொல்லி, இவர்கள் இருவரையும் மட்டும் தேனீ அனுப்பி வைத்தார்.

மாலை மதுரையில் இருந்து கிளம்பியவர்கள் நேராக மகிழினியின் வீட்டிற்குத் தான் சென்றனர். திருமணதிற்கு வந்திருந்த கங்காவும் சென்றிருந்தார்.

இரவு உணவு உண்ணும் சமயம். “நீ என்ன வெளிநாடு போறேன்னு சொல்லிட்டு இருக்கியாம். உன் அண்ணனுக்கு நாங்க கல்யாணம் வைக்க வேண்டாமா? ஏற்கனவே உன்னால அவனுக்கும் கல்யாணம் தள்ளி போயிருக்கு. இனி அவனுக்குப் பார்க்க ஆரம்பிக்கணும்.” என லலிதா சொன்னதற்கு,

“அதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்குள்ள கல்யாணத்தை வைங்க.” என்றாள் மகிழினி.

மறுநாள் காலை தமிழ் மனைவியை அழைத்துக் கொண்டு மூன்று நாட்கள் மூனார் சென்று வந்தான். மீண்டும் மகிழினி வீட்டில் ஒருநாள் வந்து தங்கிவிட்டு மதுரைக்குக் கிளம்பினர். இந்தமுறை அவள் பெற்றோர் தருண் என எல்லோரும் உடன் வந்தனர்.

காலை உணவை உணடுவிட்டு நேரமே கிளம்பி இருந்தனர். மூர்த்திச் சமையல் ஆளை வைத்துப் பாதிச் சமையல் முடித்திருக்க… மீதியை மகிழினியும் அவள் அம்மாவும் சேர்ந்து செய்தனர்.

அவள் அம்மாவை அழைத்துச் சென்று தங்கள் அறையைக் காட்டிவிட்டு வந்தாள் மகிழினி.

மதிய உணவு உண்ணும் சமயம் மூர்த்தி அவர்களிடம், “இன்னும் ஆறு மாதத்தில் புது வீடு தயாராகி விடும்.” என்றார். உணவு உண்டு முடித்து, அவர்கள் வாங்கி இருக்கும் புது வீட்டிற்கு எல்லோரையும் பார்க்க மூர்த்தி அழைத்துச் சென்றார்.

இப்போது இருக்கும் வீட்டிற்கு அருகே தான். ஒரு பக்கம் பெரிய அபார்ட்மெண்ட் இருக்க… இன்னொரு பக்கம் தனித் தனி வீடுகள் வரிசையாக இருக்க… அதில் ஒரு வீட்டின் முன்பு சென்று காரை நிறுத்தி இறங்கினார்கள். கட்டிட வேலை முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருந்தது. உள்ளேயே பார்க், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் எனச் சகல வசதிகளையும் கொண்டது.

மூர்த்தித் தான் இந்தக் கட்டுமான நிறுவனத்துக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் பிடித்துக் கொடுத்திருக்கிறார். அவரிடம் இருந்த பணத்தை வைத்து அவரே பாதிக்கு மேல் பணம் செலுத்தி இருக்க… தமிழ் அவன் பங்குக்கு வங்கியில் லோன் எடுத்திருந்தான்.

பெரிய ஹால், சமையல் அறை, பூஜை அறை அதோடு கீழேயே இரண்டு அறைகள் இருக்க… அது தவிர மாடியில் இரண்டு அறைகள் எனப் பெரிய வீடு.

உன் மாமனார் எப்படி மகனுக்குப் பார்த்து வீடு வாங்கி இருக்கார் பாரு. இதுல இருந்து ஆட்சி செய்யாம வெளிநாடு போறாளாம். அதெல்லாம் எங்கையும் போகக் கூடாது.” என்றார் லலிதா மகளிடம்.

அவரே ஒன்னும் சொல்லலை… நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க? நான் போவேன்.” என்றாள் மகிழினி.

மாலை வரை மகள் வீட்டில் இருந்துவிட்டு மகிழினியின் வீட்டினர் கிளம்ப… தருண் இங்கிருந்தே சென்னைக்குக் கிளம்பி சென்றான்.

மறுவாரம் இயல்பு வாழ்க்கை தொடங்கியது. மகிழினியும் அலுவலகம் செல்ல கிளம்பினாள்.

அவள் காலை இட்லி உண்ண… தமிழ் முழுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

காலையில எப்படி இவ்வளவு சாப்பிடுறீங்க?” என்றாள்.

காலையில தான் நல்ல சாப்பிடணும். என் வேலையில அடுத்து எப்போ சாப்பாடுன்னு எல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியாது. பசியில இருந்தா மூளையும் ஒழுங்கா வேலை செய்யாது.” என்றான்.

தமிழ் அவன் பைக்கிலும், மகிழினி அவளது ஸ்கூட்டியிலும் கிளம்பி அலுவலகம் சென்றனர்.

வாரத்தில் இரண்டு நாட்கள் தான் அறுவை சிகிச்சை செய்யும் நாட்கள். மற்ற நாட்கள், நோயாளிகளைப் பார்ப்பதிலேயே சென்று விடும். காலை பத்தரை மணிக்கு ஆரம்பித்தால்…மாலை ஐந்து மணி வரை தொடந்து வேலை பார்ப்பான் தமிழ்… அதுவே சில நேரம் ஆறு ஆறரை வரை சென்று விடும். நடுவில் ஒரு அரை மணி நேரம் ஓய்வு.

அன்று தமிழ் ஆறரை மணிக்கே வீடு திரும்பி இருந்தான். மகிழினியும் வீடு வந்திருக்க… குளித்து விட்டு வந்ததும் அவன் பசிக்குது என்றதால்… அவனுக்குத் தோசை ஊற்றிக் கொடுத்தாள். பிறகு மூர்த்தி உண்டு மகிழினியும் உண்டு முடிக்க எட்டு மணி ஆகி இருக்க… சற்று நேரம் மூர்த்தியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த தமிழ், பிறகு நேரத்துடனே மாடிக்கு சென்று விட்டான்.

மகிழினி சமையல் அறையை ஒதுங்க வைத்துவிட்டு மாடிக்குச் சென்ற போது ஒன்பது மணி ஆகி இருக்க… அங்கிருந்த ஹாலில் உட்கார்ந்து தமிழ் அவனது மடிக்கணினியில் வேலை சம்பந்தமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மகிழினி உடைமாற்றிக் கட்டிலில் படுத்துக்கொள்ள… தமிழ் சிறிது நேரத்தில் வந்துவிட்டான்.

கட்டிலில் படுத்து மனைவியை அணைத்தவன், “களைப்பா இருக்கியா? ரொம்ப வேலையா?” எனக் கேட்க….

அதெல்லாம் எதுவும் இல்லை. நானே எல்லா வேலையும் பார்க்கிறேனா என்ன? இல்லையே….” என்றாள்.

அப்புறம் இன்னைக்கு ஆபீஸ்ல எப்படிப் போச்சு?”

ம்ம்… வேலை எல்லாம் எப்பவும் போலத் தான்.” என்றவள் எதையோ நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

மகிழினியின் அலுவலகத்தில் அவள் டீம்ல எல்லோருக்கும் வெளிநாடு போகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவளுக்கும் அதோடு சேர்த்து இன்னும் இருவருக்குத் தான். அதனால் அவள் போக முடியாது என்று சொல்லி விட்டால்… அவள் டீமில் இருக்கும் சுபத்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடிந்து விட்டதால்… அதுவும் கணவர் இங்கே மருத்துவர் என்பதால்…. மகிழினி செல்ல மாட்டாள் எனச் சுபத்ரா நம்பிக் கொண்டிருந்தாள் போல…. இன்று அலுவலகம் வந்த மகிழினியை அவள் ஆவலாக எதிர்கொண்டாள்.

எப்படி இருக்கு கல்யாண வாழ்க்கை மகி?”

ம்ம்… சூப்பரா இருக்கு.”

அப்புறம் எப்படி உன் வீட்டுக்காரரை விட்டு ஆபீஸ் வந்த… வரவே மனசு இருந்திருக்காதே….”

ஆமாம் என்றும் சொல்லாமல்… இல்லை என்றும் சொல்லாமல் மகிழினி புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள்.

உன் வீட்டுக்காரரை விட்டு வெளிநாடு போற ஐடியா இருக்கா இல்லையா?” சுபத்ரா கேட்டுப் பார்க்க…

போகாம என்ன போகத்தான் போறேன்.” என்றாள்.

உன்னைவிட்டு அவர் இருப்பாரா?” விடாமல் சுபத்ரா கேட்க…

அதெல்லாம் அவரே போயிட்டு வர சொல்லிட்டார். ஒரு வருஷம் தானே வேகமா போயிடும்.” என்றாள் மகிழினி புன்னகையுடன். சுபத்ராவுக்கு முகம் இருண்டு விட்டது.

அதை நினைத்து பார்த்தவள், அதைக் கணவனிடமும் சொன்னாள். “என் மேல எவ்வளவு பேருக்கு அக்கறை பார்த்தியா… ஆனா உனக்குத் தான் இல்லை.” என்றான் தமிழ்.

நான் போகலைனா அவ போவா.. அந்த ஆசையில் வந்து கேட்கிறா… உங்க மேல இருக்க அக்கறையில இல்லை.” மகிழினி முறைத்துக் கொண்டு சொல்ல…

சரி இப்போ நீதான் என் மேல உனக்கு எவ்வளவு அக்கறை இருக்குன்னு காட்டேன்.” என்றான்.

Advertisement