Advertisement

ஸ்கேன் ரிப்போர்ட் வைத்துத் தமிழ் அவன் ஒரு வரைபடம் தயாரித்து இருந்தான்.

கொஞ்சம் சிக்கலான அறுவை சிகிச்சை தான். ஆனால் தமிழ் உன்னிப்பாகக் கவனித்துச் செய்வான் என்பதால்… எதையும் தவற விடும் வாய்ப்பு இல்லை. அதனால் தான் அவன் உடன் இருக்க வேண்டும் என்று வம்சி கேட்டுக் கொண்டார். இப்போது அவன் தயாரித்து வைத்திருந்த வரைபடத்தில்… உடலில் எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தான்.

பதினோரு மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்க…. மதியம் இரண்டு மணிக்கு தான் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தான். பிறகு உடைமாற்றி அவனைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன், டீ குடித்தபடி மனைவியை அழைத்தான். அப்போது தருணும் மூர்த்தியும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அண்ணாவும் மாமாவும் சாப்பிடுறாங்க. நீங்க சாப்பிடீங்களா?”

நான்தான் காலையில நல்லா சாப்பிட்டேனே… பசிக்கலை… இப்போ டீ குடிக்கிறேன்.” என்றான்.

இது டீ குடிக்கிற நேரமா? மாமா தான் உங்களுக்குச் சாப்பாடு கொடுத்தார் தானே அதைச் சாப்பிடுவது தான…”

நான் பசிச்சா இங்கயே வாங்கிச் சாப்பிடுவேன்னு தான் சொல்வேன். ஆனா உன் மாமா தான் கேட்க மாட்டார். மூன்னு மணி ஆகட்டும் சாப்பிடுறேன்.” என்றான்.

எப்போ வருவீங்க?” என மனைவி கேட்டது மனதுக்கு இதமாக இருக்க… சீக்கிரம் வந்திடுறேன்.” என்றான். அப்போது அவனைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருப்பதாகச் சொல்ல… பிறகு பேசுவதாகச் சொல்லிவிட்டு வைத்தவன், அவரை வர சொன்னான். அந்தப் பெண்மணியோடு அவர் கணவரும் வந்தார்.

வாங்க ஜெயந்தி.”

டாக்டர் நீங்கதானே கட்டியை எடுத்திட்டா பயம் இல்லைன்னு சொன்னீங்க. இப்போ அது கான்சர் கட்டின்னு சொல்றாங்க. கீமோ பண்ணனும், இன்னும் என்னென்னமோ சொல்றாங்க. நான் எத்தனை நாள் இருப்பேன்? அதைச் சொல்லுங்க.” என ஜெயந்தி அழுகையுடன் கேட்க… பக்கத்தில் அவர் கணவரும் அழுவது போலத்தான் இருந்தார்.

உங்களைக் குணமாக்க நீங்க எங்களுக்கு எவ்வளவு டைம் கொடுப்பீங்க?” என தமிழ் அவரிடம் திருப்பிக் கேட்க… அந்தப் பெண் அழுகையை நிறுத்திவிட்டு, அவனின் முகத்தைப் பார்க்க… அவள் கணவரும் சற்று நம்பிக்கையாகப் பார்த்தார்.

ஏற்கனவே உங்களுக்கு அறுவை சிகிச்சை செஞ்சு கட்டியை எடுத்தாச்சு… இன்னும் கீமோ மட்டும் தான் பாக்கி… நீங்க அதை எடுத்துக்கோங்க. முழுக்கச் சரி ஆகிடுவீங்க. ஏற்கனவே நீங்க பாதிக் கிணறு தாண்டிடீங்க. இன்னும் கொஞ்சம் தான். நீங்க சீக்கிரம் பழையபடி இருக்கப் போறீங்க.” என்றான் தமிழ் புன்னகையுடன்.

நிஜமாவே நான் சரி ஆகிடுவேனா?”

ஆரம்பக் கட்டத்திலேயே பார்த்தாச்சு…. அதனால சரி பண்ணிடலாம். உங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிற டாக்டர் தாமோதரன் ரொம்ப வருஷம் அனுபவம் இருக்கிறவர், நீங்க ட்ரீட்மெண்ட் மட்டும் ஒழுங்கா எடுங்க.” என்றவன், மேலும் அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தான்.

வரும்போது அவ்வளவு பயத்தில் வந்த அந்தப் பெண்மணியும், தான் சரியாகி விடுவோம் என்ற நம்பிக்கையில் சென்றார்.

இன்று அறுவைசிகிச்சை செய்த நோயாளி அறைக்கு வந்ததும், அவரைச் சென்று பார்த்து விட்டு வந்தவன், அப்போதே வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

நான்கு மணிக்கு வந்த மகனின் பையை எடுத்து பார்த்த மூர்த்தி, “சாப்பிடலையா டா?” என்றார்.

பசிக்கலைப்பா… அதுவும் வீட்டுக்கு தான் போறோமே… வீட்ல போய்ச் சாப்பிட்டுபோம்னு நினைச்சேன்.” என்றவன், கீழே இருந்த குளியல் அறையில் சென்று குளித்துவிட்டு வந்தான்.

என்ன சாப்பிடுறீங்க?” என மகிழினி கேட்க…

நீங்க எல்லாம் என்ன சாப்பிட்டீங்க?” என்றான்.

நாங்க மீன் குழம்பும், வருவலும் சாப்பிட்டோம்.” என மகிழினி சொல்ல… அதற்குள் மகன் இந்த நேரம் என்ன உண்பான் எனத் தெரிந்த மூர்த்தி, அவனுக்குத் தோசை வார்த்துக் கொண்டு வர… மீன் குழம்பு தொட்டுக் கொண்டு மூன்று தோசைகள் சாப்பிட்டான்.

உண்டுவிட்டுத் தமிழ் ஹாலில் இருந்த திவானில் சென்று படுத்துவிட… மகிழினி அவர்களுக்கு டீ போட சென்றாள். அப்போது சமையல் அறைக்கு மூர்த்தி வர…

மாமா இப்போதான் உங்க பையன் ஸ்கூல் படிக்கிற மாதிரி கவனிக்கிறீங்களே…” என மகிழினி கிண்டல் செய்ய…

அவன் அம்மா அவனை ஒருவேளை கூடச் சாப்பிடாம இருக்க விடமாட்டா… அவன் ஹாஸ்டல் போன போது கூட, அங்க சாப்பாடு எப்படி இருந்தாலும், வேளைக்குச் சாப்பிட்டு அவங்க அம்மாவுக்குப் போன் பண்ணி சொல்லிடுவான். சாப்பாடு நல்லாவே இல்லை… ஆனாலும் உங்களுக்காகத் சாப்பிட்டேன்னு. இவனும் அவங்க அம்மாவுக்காக அவ்வளவு பார்ப்பான்.”

அப்படி அவனைக் கண்ணுக்குள்ள வச்சு அவங்க அம்மா வளர்த்தா… அப்படிபட்டவளுக்கு எப்படி அவனை விட்டுட்டு போக மனசு வந்ததோ… அவ எங்க இருந்தாலும், அவ மனசு மகனை நினைச்சு தான் துடிக்கும். அதுதான் அவங்க அம்மா இருந்தா… என்ன பண்ணி இருப்பாளோ… அதை நான் பண்ணிடுறேன்.” என்றார் மூர்த்திக் கண்கலங்கியபடி….

சாரி மாமா நான் விளையாட்டுக்குதான் கேட்டேன். இனி நீங்க டென்ஷன் எடுத்துக்காதீங்க. நான் அவரைப் பார்த்துக்கிறேன். நீங்க என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க.” என்றாள். மூர்த்தி லேசான மனதுடன் வெளியே சென்றார்.

மாலை தருண் தேனிக்கு கிளம்பி விட்டான். இவர்களை அழைத்ததற்குத் தமிழ் அடுத்த வாரம் வருவதாகச் சொன்னான்.

நாளைக்கு எங்காவது வெளிய போகலாம்.” என்றான் தமிழ் மகிழினியிடம்.

மாலை உண்டதால்… இரவு தமிழ் உண்ணவில்லை. சிறிது பழங்கள் உண்டவன், படுக்கும் முன் பால் மட்டும் எடுத்துக் கொண்டான்.

ஒழுங்கா மதியம் மாமா கொடுத்து விட்டிருந்ததைச் சாப்பிட்டு இருந்தா… நைட்டும் ஒழுங்கா சாப்பிட்டு இருப்பீங்க. இனிமே மதியம் சாப்பிடாம இருங்க தெரியும்.” என மகிழினி தமிழைத் தங்கள் அறையில் வைத்து மிரட்ட…

ஐயோ பயமா இருக்கே…” என்றவன், “உனக்கு என்ன என்மேல அக்கறை? நீதான் என்னை விட்டு வெளிநாடு போற இல்லை… அப்போ என்னை யார் பார்த்துப்பா?” என்றான் சிரிப்புடன்.

எங்க சுத்தினாலும் இங்க வந்திடுறான் என நினைத்தவள், “நீங்க ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை. நீங்களே உங்களைப் பார்த்துக்கலாம்.” என்றாள்.

கொஞ்ச நேரம் முன்னாடி நீதானே அக்கறையா பேசின… அதுதான் சொன்னேன். எனக்கு எப்போ சாப்பிடணும்னு தெரியும்.” என்றான்.

மகிழினி கணவனை முறைத்தவள் பேசாமல் படுத்துக் கொண்டாள். அவள் வெளிநாடு செல்வதில் உறுதியாக இருக்கிறாள் எனத் தமிழும் புரிந்து கொண்டான்.

மறுநாள் தமிழ் அவளை வெளியே அழைக்க… மாமா என்றாள்.

உனக்குத் தெரியாது இல்ல… அவர் என்னை விடப் பிஸி.” என்றவன், “உன் மாமா ரியல் எஸ்டேட் பண்றார். பெரிய பில்டர்ஸ் கட்டி விற்கிற பில்டிங்க்கு வாடிக்கையாளர் பிடிச்சு கொடுத்து, என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார். அதனால உனக்கு என்ன வேணுமோ… நீ அவர்கிட்ட கேட்டு வாங்கிக்கோ.” என்றான்.

நான் சம்பாதிக்கிறது உங்களுத்தானே டா…” என்றார் மூர்த்தி.

மூர்த்திக் கார் எடுத்து சென்று விட… இவர்கள் இருவரும் பைக்கில் வெளியே சென்றனர்.

மாலுக்குச் சென்று படம் பார்த்துவிட்டு, அப்படியே வெளியவே உண்டுவிட்டு வீடு வந்தனர். மூர்த்தியும் வீட்டுக்கு வந்திருந்தார்.

மூர்த்தித் தேனியில் ஒரு உரக் கம்பனியில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். மனைவியும் இல்லாது. மகனும் படிப்பை முடித்து விட… இங்கே மகனுடன் வந்து இருந்தார்.

பொழுது போக வேண்டும், அதோடு முழு நேரமும் இல்லாத வேலை செய்ய எண்ணி, பெரிய நிறுவனங்கள் கட்டி விற்கும் வீடுகளுக்கு வாடிக்கையாளர்கள் பிடித்துக் கொடுப்பார். அவர் தினமும் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. அவருக்கு மாத சம்பளமும் இல்லை. வாடிக்கையாளர் பிடித்துக் கொடுத்தால்… அதற்குரிய கமிஷன் அவருக்குக் கிடைக்கும்.

பெரிய கட்டுமான நிறுவனங்கள் மட்டுமே சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பார்கள் என்று, அவர் அந்த நிறுவனங்கள் கட்டும் கட்டிடங்களை மட்டும் தான் வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவார். அதனால் விலையும் அதிகம் வருமானமும் அதிகம்.

மதுரை மட்டும் அல்லாது சென்னை கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கும் இது தொடர்பாகச் சென்று வருவார். மறுநாள் அவர் இரண்டு நாட்கள் சென்னைக்கு கிளம்ப… தமிழ் அவருக்கு நூறு பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தான். அவனே சென்று அவரைப் பேருந்து நிலையத்தில் விட்டு வந்தான்.

மகிழினிக்கு அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பதே ஒருமாதிரி இருந்தது. அந்தத் தெரிவில் எல்லாம் இது போலப் பெரிய வீடுகள் தான். இது அவர்களின் சொந்த வீடு இல்லை. வாடகை வீடு தான்.

கணவன் வந்ததும் அவனை ஒட்டிக் கொண்டே சுற்றிக் கொண்டு இருந்தாள். தமிழ் உடைமாற்ற மாடிக்கு வர… அவளும் மேலே வந்துவிட்டாள். பிறகு தமிழ் உடைமாற்றிக் கீழே செல்ல… அவளும் கீழே வந்துவிட்டாள்.

“நான் கதவு எல்லாம் மூடி இருக்கா பார்த்திட்டு, அலாரம் ஆன் பண்ண வந்தேன். நீ ஏன் டி என் பின்னாடி சுத்துற?” என்றவன், “இந்த ஏரியாவுல பயம் இல்லை. இங்க தெருவுக்கு ஒரு வாட்ச்மேன் இருக்காங்க. அவங்க சுத்தி சுத்தி வந்திட்டு இருப்பாங்க. இனி இப்படிப் பயப்படாத.” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்தான்.

தமிழ் இன்னும் அவளுக்குப் பீரியட்ஸ் முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். அறைக்குச் சென்று கதவை சாற்றியதும், அவள் முகம் பற்றி, “நீ இப்படி என்னை உரசிட்டே இருந்தா… நான் எப்படிக் கண்ட்ரோல் பண்ணிக்கிறது? உனக்கு என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” என்றான்.

அவளுக்கு நேற்றே முடிந்து விட்டது. ஆனால் அதை அவளே எப்படிச் சொல்வாள். அதனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழுக்கு அவள் முகத்தில் இருந்து புரிவது போல இருந்தது. அதோடு அப்போது தான் மனைவி நெற்றியில் இருந்த திருநீறு குங்குமம் எல்லாம் கவனித்தான். நேற்றே அவள் இப்படித்தான் இருந்தாள் என்பது அப்போதுதான் நினைவு வந்தது.

என்னை ஏமாத்திட்ட இல்ல…” என்றவன், “இதுக்கும் சேர்த்து இருக்கு.” என்றபடி அவள் முகம் நோக்கி குனிந்தான்.

அவனைத் தள்ளி விட்டு மகிழினி கட்டிலுக்குச் செல்ல… அவளுக்கு விருப்பம் இல்லையோ என தமிழ் பயந்து தான் போனான். ஆனால் அவள் முகச் சிவப்பும், வெட்கமும் வேறு கதை சொல்ல… மனைவியைச் சென்று ஆசையாகத் தழுவி கொண்டான். 

Advertisement