Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 7

மறுநாள் மதுரைக்குக் கிளம்புவதால் வீடு பரபரப்பாக இருந்தது. காலையிலேயே வேலை ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்து, சமையலையும் முடித்த பின்னர், வேலை ஆட்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

மூர்த்தி வீட்டில் ஓய்வெடுக்க… காலை உணவுக்கே தமிழ் மனைவியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குக் கிளம்பினான். இருவரும் பைக்கில் தான் சென்றனர்.

செல்லும் வழியில் மகிழினி யுவனைப் பார்க்க… அவனைக் கண்டுகொள்ளாமல் தமிழோடு நெருங்கி உட்கார்ந்து, அவன் தோளை பிடித்துக் கொண்டாள். யுவன் அவர்களைப் பார்த்தபடி சற்று நேரம் நின்று விட்டவன், பிறகே அங்கிருந்து சென்றான்.

காலை உணவு முடிந்து தமிழும் தருணும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க… லலிதா மகளைத் தனியாக அழைத்துச் சென்று பேசினார்.

மகள் முகத்தில் இருந்து அவள் சந்தோஷமாக இருக்கிறாள் எனப் புரிந்தது.

உனக்கு அங்க பிடிச்சிருக்கா? மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பேசுறாரா?” என அவர் மெதுவாகக் கேட்டுப் பார்க்க…

அதெல்லாம் நல்லா பேசுறார். என்னை நல்லா பார்த்துக்கிறார். இப்போ கூட எனக்குப் பீரியட்ஸ்ன்னு என்னை ஒருவேலையும் செய்ய விடலை… அவரே தான் செஞ்சார்.”

என்னது அதுக்குள்ள குளிச்சிட்டியா? கல்யாணத்துக்கு நாள் பார்க்கும் போது ஒரு வாரம் இருக்குன்னு சொன்னியே…”

அதுதான் எனக்கும் தெரியலைமா…”

அவர் எதுவும் கோவிச்சுக்கலையா?”

இல்லை…”

இந்த நேரத்தில மதுரைக்குப் போகணும்னு சொல்றீங்க. இன்னும் ஒருவாரம் இருந்திட்டுப் போகக் கூடாதா?”

அவருக்கு வேலை மா… அடுத்த வாரம் கண்டிப்பா வரோம்.” என்றாள் மகிழினி. மதியம் வரை அவள் வீட்டினரிடம் வாய் அடித்துக் கொண்டு இருந்தாள் மகிழினி.

சில நேரம் தமிழே, என்னடா இவ ரொம்பப் பேசுறா என ஆச்சர்யப்படும் அளவுக்குப் பேசினாள். தமிழ் நடுவே சென்று மூர்த்தியை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தான்.

மதிய உணவு உண்டு வீட்டினரிடம் விடைபெற்று தமிழும் மகிழினியும் கிளம்ப… அவர்களோடு தருணும் சென்றான்.

கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமா இருந்தாளே… இந்தப் பொண்ணு எப்படி இருக்குமோன்னு நான் பயந்திட்டு இருந்தேன்.” என லலிதா சொல்ல…

அவளுக்குக் கல்யாணம் பிடிக்காம இல்லை அண்ணி. அவளுக்குக் கல்யாணம் நின்னு போனதுனால…சூடு கண்ட பூனை போல… கல்யாணம்னாலே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா…”

இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க. புருஷனை விட்டு வரவே மாட்டா.” என்றார் கங்கா.

உன் வார்த்தை பலிக்கட்டும் கங்கா.” என்றார் லலிதா.

தமிழின் வீட்டிற்கு வந்தவர்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, நான்கு மணி போல மதுரைக்குக் கிளம்பினர். அண்ணன் உடன் வந்ததால் மகிழினியும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

தருண் காரை ஓட்ட… அவன் அருகில் மூர்த்தி இருக்க… பின் இருக்கையில் தமிழும் மகிழினியும் இருந்தனர்.

செல்லும் வழியில் பேசிக்கொண்டே செல்ல… மூர்த்திச் சீட்டில் சாய்ந்து உறங்கி விட்டார்.

நீ எதுவும் திரும்ப வெளிநாடு போவியா மச்சான்?” என தமிழ் தருணிடம் கேட்க… அவன் இப்போதைக்கு இல்லை என்றான்.

நான் இன்னும் ஆறு மாசத்தில போவேன்.” என்றாள் மகிழினி.

எங்க ஹனிமூனா…” என தருண் கிண்டல் செய்ய…

ஏன் நீ மட்டும் தான் போவியா? என்னை என் கம்பெனியில ஒரு வருஷத்துக்கு அனுப்புவாங்க.” என்றாள்.

இனி எப்படிப் போவ? அதுதான் கல்யாணம் ஆகிடுச்சே…” தருண் சொல்ல…

அதெல்லாம் நான் போவேன். எனக்கு வந்த வாய்ப்பை நான் ஏன் விடனும்? நான் போவேன்.” என மகிழினி முறுக்கிக்கொள்ள… தருண் முன்பக்க கண்ணாடி வழியாகத் தமிழைப் பார்க்க… அவன் முகம் மாறவே செய்தது.

உனக்குக் கண்டிப்பா போகணும்னா போ மகிழினி. ஆனா நான் எப்படி உன்னை விட்டு இருக்கிறது?” என தமிழ் புன்னகையுடன் கேட்க…

நீங்களும் என்னோட வாங்க.” என்றாள்.

என்னால வர முடியுமா தெரியலை… உன்னை விடவோ இல்லை கூப்பிடவோ வரேன். அப்பாவை வேணா துணைக்குக் கூட்டிட்டு போய் வச்சுக்கோ. அவரும் வெளிநாடு எல்லாம் பார்த்த மாதிரி இருக்கும்.” என்றான். மகிழினியும் சந்தோஷமாகச் சரி என்றாள்.

தங்கையின் விருப்பத்திற்காகவே தமிழ் சரி என்று சொல்கிறான் என தருணுக்குப் புரிந்தது.

என்ன இவ புதுசா ஒன்னு ஆரம்பிக்கிறா என அவன் நினைத்துகொள்ள… தமிழும் பிறகு அமைதியாகி விட்டான். அவனுக்கு மனைவியின் விருப்பத்திற்கும் தடை சொல்ல விருப்பம் இல்லை… அதே நேரம் அவளைப் பிரிந்து இருக்க வேண்டுமே என அது வேறு கவலையாகத் தான் இருந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மதுரைக்கு வந்து விட்டனர். தமிழ் மூர்த்தியிடம் மகிழினிக்கு உடம்பு முடியவில்லை என ஜாடையாகச் சொல்லி இருந்தான். பெண்கள் விஷயம் என மூர்த்திக்கு புரிய… அவர் அவளை விளகேற்று என்றெல்லாம் சொல்லவில்லை.

மகிழினி வீட்டை சுற்றிப் பார்த்தவள், ஆவலாக மாடிக்கு செல்ல… அவள் பின்னே தமிழும் சென்றான்.

மாடியில் ஒரு சின்ன ஹாலும் ஒரு அறையும் இருந்தது.

இங்க என்ன இருக்குன்னு உனக்கு அன்னைக்கே தெரிஞ்சுக்கணும்னு ஆசை தானே.” தமிழ் கேட்க…மகிழினி ஆமாம் என்றாள்.

அறை மிகவும் பெரிதாக இருக்க… ஹாலில் இருந்து பால்கனிக்கு ஒரு கதவு இருக்க.. அதைத் தமிழ் திறக்க… அங்கே பூ செடிகள், உட்கார்ந்து கொள்ள நாற்காலிகள் எல்லாம் இருந்தது. அங்கே சென்று இருவரும் சிறிது நேரம் நின்றனர்.

உனக்கு வீடு பிடிச்சிருக்கா?” தமிழ் கேட்க… நல்லா இருக்கு என்றாள். இருவரும் பேசியபடி கீழே இறங்கி வந்தனர்.

லலிதா மாவு எல்லாம் அரைத்து கொடுத்துத் தான் அனுப்பி இருந்தார். இரவுக்குத் தோசை செய்து சாப்பிட்டனர்.

தருண் அன்று அங்கேயே தான் தங்கினான். அவனுக்குக் கீழே இருந்த அறையைக் கொடுத்து விட்டு, மூர்த்தி ஹாலில் திவானில் படுத்துக் கொண்டார். அவர்கள் படுத்ததும் தமிழும் மகிழினியும் மாடிக்கு வந்தனர்.

இப்போ எப்படி இருக்கு? உனக்கு இன்னும் வலி இருக்கா?”

இல்லை வலி முதல்நாள் தான் இருக்கும். இப்போ இல்லை.”

நாளைக்கு நான் காலையிலேயே கிளம்பிடுவேன். அப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோ. அவர் எதாவது செஞ்சிட்டே இருப்பார். இன்னும் ரெண்டு நாள் அவர் ரெஸ்ட் எடுத்தா பரவாயில்லை.” என்றான்.

சரி நான் பார்த்துக்கிறேன் என்றாள்.

அன்று தமிழ் சீக்கிரமே படுத்து உறங்கி விட்டான். காலை ஆறு மணிக்கு எழுந்தவன், மாடி பால்கனியில் சென்று யோகா செய்து கொண்டிருந்தான்.

மகிழினி கணவனைக் காணோமே கீழே சென்றிருப்பானோ என நினைத்தவள், குளித்து விட்டு வெளியே வர.. பிறகு தான் அவன் பால்கனியில் இருக்கிறான் என்று தெரியும்.

அவளைப் பார்த்ததும் தமிழ் புன்னகைத்தவன், “இங்க இருந்து காபி குடிச்சா நல்லா இருக்கும். நான் போய் எடுத்திட்டு வரேன்.” என்றவன் கீழே சென்றான்.

மூர்த்திப் பால் காய்ச்சி வைத்திருக்க… அவருக்கும் சேர்த்து காபி கலந்தவன், மனைவிக்கு எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். தருண் இன்னும் எழுந்து கொள்ளவில்லை.

தமிழும் மகிழினியும் மாடி பால்கனியில் உட்கார்ந்து காபி குடித்தனர்.

உன்னை விட்டு இன்னைக்குக் கிளம்பவே மனசு இல்லைதான். ஆனா என்ன பண்றது போகணுமே…” என்றவன், குளிக்கச் சென்றான். மகிழினி கீழே இறங்கி சென்றாள்.

இங்கேயும் காலை நேரம் மட்டும் வந்து ஒருவர் வந்து சமைத்துவிட்டு செல்வார். மற்ற நேரம் மூர்த்தியே செய்து கொள்வார்.

இங்கே சமைப்பவர் ஆண் என்பதால்… மகிழினி அவர் இருக்கும் போது சமையல் அறை செல்லவில்லை. நடுத்தர வயதில் இருந்தார்.

ஒரு மணி நேரத்தில் குழம்பு, காய், சப்பாத்தி, சாதம் எல்லாம் செய்து விட்டார். அதோடு பழங்களும் நறுக்கி வைத்துவிட்டு சென்றார். அவர் சென்றதும் மகிழினி சமையல் அறைக்குச் சென்று பார்த்தாள். தருண் அப்போது தான் எழுந்து பல் துலக்கி விட்டு வந்திருந்தான். அண்ணனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

தமிழ் ஷாம்பூ போட்டு அலசிய சிகை பளபளக்க… நீலநிற டீ ஷர்ட் அணிந்து, அவனின் தோல் பையோடு இறங்கி வந்தான். மகிழினி அவனுக்குச் சப்பாத்தி வைக்கச் செல்ல…

அவன் இப்போ முழுச் சாப்பாடு சாப்பிடுவான் மா… இப்போ சாப்பிட்டா அடுத்து எப்ப சாப்பிட நேரம் கிடைக்கும்னு தெரியாது. அதனால காலையில சாப்பாடே சாப்பிடுவான்.” என்றார் மூர்த்தி.

மகிழினி அவனுக்குச் சாதம் வைத்து, குழம்பு ஊற்றி பொரியல் வைக்க… அதை உண்டு பிறகு ரசம் ஊற்றி சாப்பிட்டவன், கடைசியாகத் தயிருக்கும் சிறிது சாதம் வைத்து உண்டான். அவன் சாப்பிடும் போதே மூர்த்தி அவனுக்கு இரண்டு சப்பாத்தியை கையோடு ஒரு டப்பாவில் போட்டு வைத்தவர், இரண்டு பாட்டில் தண்ணீரும் எடுத்து வந்து, எல்லாவற்றையும் ஒரு பையில் வைத்து, அவன் காரில் சென்று வைத்துவிட்டு வந்தார்.

எட்டரை மணிக்குத் தமிழ் வீட்டில் இருந்து கிளம்பி விட்டான். கிளம்பும்போது, “டேய் போயிடாத இரு. நான் சீக்கிரம் வந்திடுறேன்.” என்றான் நண்பனிடம்.

தருண் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டவன் பிறகு மாடி ஹாலில் சென்று அவன் மடிக் கணினியுடன் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அதன் பிறகு தான் வீடு சுத்தம் செய்பவர் வந்தார். அவர் வந்து பாத்திரம் விளக்கி, வீட்டை சுத்தம் செய்துவிட்டு செல்ல… மூர்த்தியும் மகிழினியும் உண்டனர். அவர்கள் இருவரும் சப்பாத்தி உண்டனர்.

இவர் வந்து குழம்பு காய் எல்லாம் பண்ணிட்டா… அப்புறம் ஒன்னும் வேலை இல்லை. நான் நைட்டுக்கு இட்லியோ தோசையோ ஊத்திப்பேன் மா… நேரம் இருந்தா தமிழே சில நேரம் சமைப்பான்.”

உனக்குச் சமையல்காரர் சமையல் பிடிக்கலைனா… உனக்கு என்ன வேணுமோ செஞ்சு சாப்பிட்டுக்கோ….” என்றார் மூர்த்தி.

தருண் இருக்கிறதுனால மதியத்துக்கு இதோட சேர்த்து வேற என்ன பண்ணலாம் சொல்லு.” என்றதும், அண்ணனுக்கு மீன் பிடிக்கும் என்றாள். மூர்த்திச் சென்று மீன் வாங்கி வந்து கொடுத்தார். மகிழினி மீன் குழம்பும் வறுவலும் செய்து வைத்தாள். மகிழினி ஓரளவுக்குச் சமைப்பாள்.

தமிழ் மருத்துவமனை சென்றவன், அங்கிருந்த இன்னொரு மருத்துவருடன் இன்று செய்யப் போகும் அறுவை சிகிச்சை பற்றிக் கலந்து ஆலோசித்தான்.

Advertisement