Advertisement

அப்போ கூட உடனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கலை… அப்புறமும் ஒரு தயக்கம், நீ வேற கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தியா…”

நீ எங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு மனசு ரொம்ப நிறைவா இருந்தது. அம்மா ஆசைப்பட்டது போல… அவங்க வீட்டுக்கு நீயே மருமகளா வரணும்னு ரொம்பத் தோன ஆரம்பிச்சிடுச்சு. அப்பா கேட்டதும் சட்டுன்னு சரின்னு சொல்லிட்டேன். அன்னைக்கே உங்க அண்ணன்கிட்டயும் பேசியாச்சு.”

உன்னை ரொம்பப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன். அதுதான் நீ அப்படிக் கேட்டதும் ரொம்பக் கோபம் வந்திடுச்சு.” என்றான்.

உங்களுக்கு அப்போவே என்னைப் பிடிக்குமா? ஆனா என்கிட்டே பேச கூட மாட்டீங்க.”

அது எனக்குப் பயம்?” எனத் தமிழ் சொன்னதும், என்ன பயம் என்பது போல மகிழினி பார்க்க…

நான் உங்கிட்ட பேசினா… நீ என்னை அண்ணான்னு கூப்பிட்டுடுவியோன்னு பயம். முதலுக்கே மோசம் ஆகிடுமே… அதுதான் உங்க வீட்டுக்கு வந்தா… நான் உள்ளயே வர மாட்டேன்.” தமிழ் சொன்னதும் மகிழினிக்கு அப்படியொரு சிரிப்பு.

ச்ச… இது தெரியாம போச்சே…. தெரிஞ்சிருந்தா அப்பவே அண்ணான்னு சொல்லி இருப்பேனே….” என அவள் சிரித்துக் கொண்டு சொல்ல…

என்ன பேசுற நீ… நமக்குக் கல்யாணம் ஆனது உனக்கு நினைவு இருக்கா…” என்றவன், “நான் உனக்கு அதை ஞாபகப்படுத்தவா…” என்றவன், அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மகிழினி அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள், “கதவு திறந்திருக்கு.” என்றதும், எழுந்து சென்று தந்தையைப் பார்த்து விட்டு வந்தவன், லேசாகக் கதவை சாற்றி விட்டு வந்து, மனைவியைக் கட்டிபிடித்தபடி படுத்திருந்தான். ஆனால் வேறு எதற்கும் முயலவில்லை.

இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் ஒருமுறை தந்தையைச் சென்று பார்த்து விட்டு வந்தான். அதன் பிறகுதான் அவன் உறங்கவே செய்ய… மகிழினிக்கும் அதுவரை சரியான உறக்கம் இல்லை. அவன் உறங்கியதும் தான் அவளும் உறங்கினாள். ஆனாலும் மூர்த்திக்கு உடல்நலமில்லாமல் இருப்பது நினைவில் இருக்க… இருவரும் காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டனர்.

மூர்த்திக்கு காய்ச்சல் விட்டிருந்தது. ஆனால் ஆள் சோர்வாக இருந்தார். திருமண வேலை மற்றும் அலைச்சலே காரணம். நன்றாக ஓய்வெடுத்தால் சரியாகி விடும்.

வீடு சுத்தம் செய்வர் வந்து வாசல் தெளித்துக் கோலமும்  போட்டு விட்டு, அப்படியே வீட்டை சுத்தம் செய்து விட்டு சென்றார்.

மகிழினி காலை உணவுக்கு மாவு இருந்ததால் தோசை ஊற்றிகொள்ளலாம் எனச் சமையல் செய்பவரை புதினா சட்னி மட்டும் செய்துவிட்டு மதிய உணவுக்குத் தயார் செய்யச் சொன்னாள். அவர் காய், குழம்பு, ரசம் எல்லாம் செய்துவிட்டால்…. இவள் சாதம் மட்டும் அந்நேரம் சூடாக வைத்துக் கொள்ளலாம் என நினைத்தாள்.

தருண் காலை எட்டரை மணி போல வந்தவன், டிபனும் கொண்டு வந்திருந்தான். உடம்பு சரி இல்லாதவர் வீட்டில் இருக்கும் போது மகள் என்ன சமைத்து விடப்போகிறாள் என்று லலிதா பூரியும் கறிக்குழம்பும் கொடுத்து விட்டிருந்தார்.

மூர்த்தி வெந்நீரில் குளித்து விட்டு வர… அவருக்கு இட்லியும் புதினா சட்னியும் வைத்துக் கொடுத்து விட்டு, அவர் உண்டு அறைக்குச் சென்றதும், இவர்கள் மூவரும் உண்டனர்.

மருமகன் எதோ பத்து பூரி உண்பது போல… லலிதா நிறையப் பூரிகள் கொடுத்து விட்டிருந்தார். மருமகன் மருத்துவன் என்பதை மறந்து விட்டிருந்தார்.

அவன் இரண்டு பூரிகள் மட்டுமே எடுத்துக் கொண்டவன், அதோடு இரண்டு இட்லியும் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு மட்டுமே கறியும் எடுத்து வைத்துக் கொண்டு உண்டான். தருணும் அவர்களோடு தான் உண்டான்.

அண்ணா, உன் ப்ரண்ட் முன்னாடி நம்ம வீட்டுக்கு வருவார் இல்லை… அப்போ அவரை நான் எங்க அண்ணான்னு சொல்லிடுவேன்னு பயமாம்.” என்றதும், கேட்ட தருண் சிரித்துவிட… தமிழ் மனைவியை முறைக்க முயன்றவனுக்கும் சிரிப்பு தான் வந்தது.

யாரு நீ அண்ணன்னு கூப்பிடுறா ஆளா? இவ உன்னை மட்டும் இல்லைடா… நம்ம பிரண்ட்ஸ் யார் வந்தாலும், தடியனுங்கன்னு தான் சொல்வா…பேர் கூடச் சொல்ல மாட்டா….” என தருண் தங்கையைப் போட்டுக் கொடுக்க…

இவனைச் சொல்லி எனக்கு அப்படியே வரும்.” என்றாள் மகிழினி.

பார்த்தியா நீயே சொல்ற… இவனை அண்ணான்னு கூப்பிட்டு என்னையும் கூப்பிட்டேனா… அதுதான் நான் உஷாரா இருந்தேன்.” என்றான்.

நான் இவனை அண்ணன்னு கூப்பிடதே இல்லையே…. அப்புறம் எப்படி உங்களை மட்டும் கூப்பிடுவேன்.”

சின்னதுல நீங்க ரொம்பச் சண்டை போடுவீங்க இல்ல….” தமிழ் சொல்ல…

இவன் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போற வரை ரெண்டு பேரும் சண்டை தான் போட்டுட்டு இருந்தோம். அப்புறம் அங்க போய்த் தான் பாசக்காரனா ஆகிட்டான்.” என்றாள் மகிழினி.

வெளிநாட்டில பேச கூட ஆள் இல்லையா… அப்போ தான் மகியை ரொம்ப மிஸ் பண்ணேன்.” என்றான் தருணும்.

பேசிக் கொண்டே உணவு உண்டு முடிக்க… மிச்சம் இருந்த பூரிகளை வேலை செய்பவருக்குக் கொடுத்து அனுப்பினாள் மகிழினி.

மூர்த்திக் களைப்பாகத் தெரிந்ததால்… தமிழ் தந்தைக்குச் சாத்துக்குடி ஜூஸ் போட்டு சென்று கொடுத்தான். அவர் குடித்து விட்டு மீண்டும் படுத்து விட்டார்.

அப்போது தமிழுக்குக் கைபேசியில் அழைப்பு வந்தது. அவன் பணிபுரியும் மருத்துவமனையின் மருத்துவர் வம்சி அழைத்திருந்தார்.

ஹலோ தமிழ் தொந்தரவு பண்றதுக்குச் சாரி. ஒரு காம்ப்ளிகேஷன் அப்புறம் அவசரமா செய்ய வேண்டிய ஆபரேஷன் இருக்கு. நீங்க என்கூட இருந்தா நல்லா இருக்கும். நாளை மறுநாள் பண்ணியே ஆகணும். நீங்க வர முடியுமா? இப்பக் கேட்க கூடாது தான். ஆனா எனக்கு வேற வழி இல்லை.”

புரியுது வம்சி. நான் கண்டிப்பா வரேன். நீங்க எனக்கு எல்லா விவரமும் அனுப்பிடுங்க. நான் தயார் படுத்திக்குவேன்.” என தமிழ் சொன்னதும்,

கண்டிப்பா… நாளை மறுநாள் காலை பத்து மணிக்குப் பிக்ஸ் பண்ணிக்கலாம். நீங்க ஒரு ஒன்பது மணிக்கு வந்திடுங்க.”

ஓகே.” என தமிழ் பேசி விட்டு வைத்தான்.

என்ன டா?” என்ற தருணிடம்,

நாளை மறுநாள் ஒரு ஆபரேஷன், அதுக்கு வரேன்னு சொல்லிட்டேன். நாளைக்கு மதுரைக்குக் கிளம்பனும்.” என்றான்.

என்ன டா அதுக்குள்ள கிளம்பனும்னு சொல்ற… எங்க வீட்ல நீங்க அங்க வந்து ரெண்டு நாளாவது இருப்பீங்கன்னு எல்லோரும் எதிர்பார்த்திட்டு இருக்காங்க.”

நானும் தான் டா வேற ப்ளான் எல்லாம் போட்டு வச்சிருந்தேன். இப்போ அப்பாவுக்கும் முடியலை… எங்கையும் போக முடியாது. இந்த வாரம் போயிட்ட, அடுத்த வாரம் வந்து கண்டிப்பா இருக்கோம்.” என்றான் தமிழ்.

தமிழ் மகிழினியை பார்த்து, “நாளைக்கு மதியம் சாப்பிட்டதும் கிளம்பிடலாம். நீ எல்லாம் எடுத்து வச்சுக்கோ.” என்றான்.

தருண் சென்று அவன் வீட்டில் சொல்ல… “கல்யாணம் பண்ணியும் இந்தப் பெண்ணுக்கு சந்தோஷமா இருக்க முடியுதா பாரு.” என லலிதா புலம்ப…

ஊரு சுத்துறதும், வெளியப் போறதும் தான் சந்தோஷமா என்ன? அவ நம்ம வீட்ல இருந்ததை விட… இப்ப சந்தோஷமாவே இருக்கா… அதோட முன்னாடி நின்ன கல்யாணத்துக்குப் பிறகு அவ நல்லா பேசி பார்த்து இருக்கீங்களா… இப்போதான் பழைய மாதிரி பேசி சிரிக்கிறா… நீங்க வேற எதாவது அவகிட்ட சொல்லி குழப்பி விடாதீங்க. அவ நல்லாதான் இருக்கா.” என்றான் தருண்.

தருண் சென்றதும் மடிக்கணினியுடன் உட்கார்ந்த தமிழ், அறுவைசிகிச்சை செய்யப் போகும் நபரின் கேஸ் ஹிஸ்ட்ரி எடுத்து படித்தவன், மேலும் அதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டினான். மகிழினி படுத்து நன்றாக உறங்கி விட்டாள்.

மதியம் மூர்த்தி ரசம் சாதம் தான் உண்டார். தொட்டுக்கொள்ளப் புதினா சட்னி வைத்துக் கொண்டு உண்டு முடித்தார். அவர் உண்ட பிறகுதான் தமிழ் எழுந்து வந்தான். மகிழினி அவனுக்குப் பரிமாறிவிட்டு அவளும் உண்ண… அப்போது தான் தமிழ் அவன் அப்பாவிடம், மறுநாள் மதியம் கிளம்ப வேண்டும் என விவரம் சொன்னான்.

நீ அங்க போனா… அப்படியே தினமும் ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சிடுவ… உன்னை அப்புறம் பிடிக்கவே முடியாது. நாளைக்கு நீ மட்டும் போயிட்டு வா… அப்புறம் இங்க வந்து மகியை கூட்டிட்டு எங்காவது ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.” என மூர்த்திச் சொல்ல…

உங்களை இங்க விட்டுட்டு போய் அங்க என்னால நிம்மதியா இருக்க முடியாது. நீங்க என்னோட வர்றீங்க.” என தமிழ் முடித்துக் கொண்டான்.

சாதாரணக் காய்ச்சலுக்கு ஏன் டா இவ்வளவு கலாட்டா பண்ற?”

என்னவா வேணா இருந்திட்டு போகுதுப்பா… நாம எல்லாம் சேர்ந்து போவோம். அடுத்த வாரம் திரும்ப நாம எல்லாம் சேர்ந்து இங்க வரலாம்.”

மூர்த்தி எதோ மறுத்து சொல்ல வர…

அவர் சொல்ற மாதிரியே பண்ணலாம் மாமா…” என்றாள் மகிழினி. அதற்கு மேல் மூர்த்தியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

மாலையில் மூர்த்தியை பார்க்க வந்த ராகவும், லலிதாவும், மறுநாள் காலை மற்றும் மதிய உணவுக்கு அங்கே வந்துவிடும்படி அழைக்க… மகனையும் மருமகளையும் அனுப்பி வைப்பதாக மூர்த்திச் சொன்னார்.

மறுநாள் கிளம்ப வேண்டும் என்பதால் தமிழ் வீட்டை ஒதுங்க வைத்து, அலமாரியில் வைக்க வேண்டியதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.

மூர்த்தி நன்றாகத்தான் இருந்தார். அவரை நேரமே படுக்க அனுப்பிவிட்டு தமிழும் அறைக்கு வந்தால்… அங்கே மகிழினி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

என்ன டா இவ இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தா… இப்போ என்ன?” எனத் தமிழ் சென்று விசாரிக்க…

எனக்கு எப்பவும் வர்ற வயித்து வலி தான். ஆனா இந்தத் தடவை சீக்கிரமே வந்திடுச்சு.” என்றாள். தமிழுக்குப் புரிந்து விட…

இந்த மாதிரி நேரத்துல மாத்திரை எதுவும் போடுவியா?” எனக் கேட்டான்.

இல்லை மாத்திரை போட்டது இல்லை.” என்றவள் படுத்துக் கொண்டாலும் வலியில் புரண்டு கொண்டே இருந்தாள்.

அவளின் வலியை பார்த்ததும் தமிழுக்கு அவனின் அசை எல்லாம் பின்னுக்குச் சென்று விட்டது. அவன் அவளை அனைத்து, அவளின் முதுகை இதமாகத் தேய்த்து விட… சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள். தமிழும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்.

Advertisement