Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 6

ஒரு மணி நேரம் சென்று தமிழ் திரும்ப வந்த போது, மகிழினி விழித்துத் தான் கிடந்தாள். ஆனால் அவன் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும், உறங்குவது போலக் கண்ணை மூடிக் கொண்டாள். தமிழும் அவள் உறங்குகிறாளா அல்லது விழித்திருக்கிறாளா என்றெல்லாம் ஆராயவில்லை. பேசாமல் அவள் அருகில் நன்றாக இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான்.

ஐந்து நிமிடங்கள் வரை விரைப்பாகவே படுத்திருந்தவள், பிறகே சற்று உடல் தளர்ந்தாள்.

திடிரென்று எதோ நினைத்தவள், பதறிப் போய் எழுந்து உட்கார… அவள் அசைவில் தமிழ் திரும்பி பார்த்தான்.

என்ன ஆச்சு மகி?”

நேத்து போல இன்னைக்கும் யுவன் இங்க வந்து சத்தம் போட்டா… உங்க அப்பா, தாத்தா, பாட்டி எல்லாம் இருக்காங்களே…” என்றாள் பயத்துடன்.

அவன் வரமாட்டன். திரும்ப இப்படி நடந்தா… போலீஸ் கம்ப்ளைண்ட் தான் கொடுப்போம்னு தெளிவா சொல்லிட்டு தான் வந்தோம். அப்படியே வந்தாலும் நான்தான் இருக்கேனே… நான் பார்த்துக்கிறேன். நீ படு.” என்றான்.

மகி கொஞ்சம் அச்சத்துடனே இருக்க… அவள் அருகில் நெருங்கி படுத்தான்.

அதற்கு மேல் இருவரும் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் எழுந்து கோவிலுக்குச் செல்லக் கிளம்பினர்.

நாம இன்னைக்குப் போய் அர்ச்சனை மட்டும் பண்ணிட்டு வந்திடுவோம். இன்னொரு நாள் நிதானமா போய்ப் பொங்கல் எல்லாம் வச்சுக்கலாம்.” மூர்த்திச் சொல்ல… தமிழ் சரி என்றான்.

சமையல் செய்பவரை காலையில் சீக்கிரமே வர சொல்லி இருந்தனர். அவரோடு சேர்ந்து மகிழினியும் செய்தாள். மகிழினியின் வீட்டினரை இன்று காலை உணவுக்கு இங்கே வர சொல்லி இருந்தனர். கேசரி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பார் எனக் காலை உணவு அமர்க்களமாகத் தயார் ஆகியது.

சமையல் முடிந்ததும் மகிழினி அறைக்குப் புடவை மாற்ற செல்ல… தமிழ் அப்போதுதான் குளித்து விட்டு வந்து உடைமாற்றிக் கொண்டிருந்தான். மகிழினி எந்தப் புடவை கட்டலாம் என்று ஆராய…. தமிழ் கதவை நோக்கி சென்றான்.

அவன் வெளியே தான் செல்கிறான் என இவள் நினைத்து இருக்க…. கதவை சாற்றி விட்டு வந்தவன், அவளைப் பின்னால் இருந்து இறுக அனைத்து, “நேத்து நான் அப்படிப் பண்ணி இருக்கக் கூடாது சாரி.” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்ட பிறகே விலகினான்.

சாரி, நானும் வேணும்னே அப்படிக் கேட்கலை…. தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன்.” மகிழினி சொல்ல…

எனக்குத் தெரியும், நேத்தே பேசலாம்னு தான் நினைச்சேன். ஆனா வெறும் பேசிட்டு மட்டும் இருக்க மாட்டோம்னு தோனுச்சு…. அதுதான் நேத்து பேசாம தூங்கிட்டேன். நீயும் அதுக்குப் பயந்திட்டு தான இருந்த…” எனத் தமிழ் கேட்க… மகிழினி முகம் சிவக்க… அதை ரசனையாகப் பார்த்தவன்,

இன்னைக்கு நிறையப் பேசலாம். அப்புறம் பேசிட்டு மட்டும் இருக்க முடியாது. அதையும் நியாபகம் வச்சுக்கோ.” என்றவன், சிரித்தபடி அறையை விட்டு வெளியே சென்றான்.

மகிழினியின் பெற்றோர், தருண், கங்கா மற்றும் காஞ்சனா வந்திருந்தனர்.

மகிழினியோடு சேர்த்து கங்காவும் பரிமாறினார். காலை உணவு முடிந்ததும், இரு வீட்டினரும் ஆளுக்கு ஒரு காரில் முதலில் மூர்த்தியின் குலதெய்வ கோவிலுக்குச் சென்றனர். அங்கே வழிபட்டு விட்டு அடுத்து ராகவனின் குலதெய்வ கோவிலுக்குச் சென்று அங்கேயும் வழிபட்டு விட்டு, மதிய உணவை வெளியேவே உண்டுவிட்டு வீட்டிற்கு வரும்போது கிட்டதட்ட மூன்று மணி ஆகிவிட்டது. மகிழினி வீட்டினர் அப்படியே அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

தமிழின் தாத்தா பாட்டி, அப்போதே அவர்கள் ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்ல… தமிழ் மகிழினியை அவர்களுக்கு டீ போட சொன்னவன், அவர்கள் ஊர் இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் துளைவுதான் என்பதால்… கார் ஏற்பாடு செய்து கொடுத்தான். அவர்களை வழி அனுப்பி விட்டு, தமிழும் மகிழினியும் உள்ளே வர… மூர்த்திச் சென்று அறையில் படுத்திருந்தார்.

உடைமாற்ற எண்ணி மகிழினி அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொள்ள… தமிழ் சோபாவில் படுத்துக் கொண்டான்.

மகிழினி சுடிதாருக்கு மாறி, அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு முகம் கழுவி கொண்டு வந்தவள், பிறகே கதவை திறந்தாள். அதற்குள் தமிழ் சோபாவில் படுத்தபடியே உறங்கிப் போய் இருந்தான். மகிழினியும் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

மாலை ஐந்தரை மணிக்கு சமையல் செய்பவர் வரும்வரை எல்லோரும் நன்றாக உறங்கி இருந்தனர். அவர் வந்ததும் தமிழ் எழுந்து அவருக்குக் கதவு திறந்து விட்டான்.

அறைக்குச் சென்றவன் மகிழினியை எழுப்பி விட்டு, இவன் மீண்டும் கட்டிலில் படுத்து உறங்க… மகிழினி வெளியே சென்றாள்.

சமையல் செய்பவரை இரவுக்குச் சமைக்கச் சொல்லிவிட்டு, இவளே பாலைக் காய்ச்சி காபி போட்டாள்.

சமையல் செய்யும் பெண்மணிக்கும் ஒரு டம்ளர் காபி கொடுத்தவள், தனக்குக் கணவனுக்கு, மாமனாருக்கு எனக் காபியை எடுத்துக் கொண்டு வந்தவள், மாமனார் படுத்திருந்த அறையை எட்டிப் பார்க்க… அவர் இன்னும் உறங்கிக் கொண்டு இருந்தார்.

கணவனிடம் சென்றவள், அவனைத் தட்டி எழுப்ப…. கண்ணைத் திறந்தவன், “என்ன டி கல்யாணம் ஆன மூணாவது நாளே அடிக்கிற?” எனக் கேட்டபடி எழுந்துகொள்ள….

ஓ… உங்க ஊர்ல இது பேரு அடிக்கிறதா?” என மகிழினியும் விளையாட்டாகப் பேச…

பின்ன இல்லையா?” என்றவன், நானும் அடிக்கவா என அவளின் பின்புறத்தில் தட்ட வர… அதிர்ச்சியில் மகிழினி கையில் வைத்திருந்த தட்டை கீழே போட்டிருப்பாள். அதற்குள் தமிழே அவள் கையில் இருந்த தட்டை வாங்கி வைத்தான்.

போங்க நான் போறேன்.” என மகிழினி கோபித்துக்கொள்ள….

ஹே… சாரி.” என்றவன், தட்டை வைத்து விட்டு ஓய்வறைக்குள் சென்று விட்டான். அவன் முகம் கழுவி கொண்டு வர…

மாமாவுக்குக் காபி கொடுக்கப் போனேன், நல்லா தூங்கிறாங்க. காபி ஆறிடும். அவர் எழுந்ததும் வேற போட்டுக்கலாம்.” என்றாள்.

கையில் எடுத்த காபியை மீண்டும் வைத்த தமிழ், “அப்பா இவ்வளவு நேரம் எல்லாம் தூங்க மாட்டாங்க.” எனப் பக்கத்து அறைக்கு விரைந்தான். மகிழினியும் அவன் பின்னே செல்ல…

அப்பா அப்பா என்ற தமிழின் குரல் கேட்டு, மூர்த்திக் கஷ்ட்டப்பட்டுக் கண்விழிக்க… சந்தேகம் வந்த தமிழ், அவரைத் தொட்டுப் பார்க்க… அவருக்குக் காய்ச்சல் அடித்தது.

காய்ச்சல் வந்தா சொல்ல மாட்டீங்களா…. எப்போ இருந்துப்பா ஜுரம்?” என்றவன், அவனின் மெடிக்கல் கிட்டை எடுத்து வந்தான்.

காலையிலேயே ஒருமாதிரி இருந்தது, காய்ச்சல் மாத்திரை போட்டேன். அப்புறம் நல்லாதான் இருந்தது. இன்னைக்கு வெளிய போயிட்டு வந்ததும், திரும்ப ஒருமாதிரி இருந்தது. அதுதான் வந்ததும் படுத்திட்டேன்.” என்றார்.

முன்னாடியே சொல்லி இருந்தா… இன்னொரு நாள் கூடக் கோவிலுக்குப் போய் இருக்கலாம். இப்போ அலைஞ்சு இன்னும் அதிகம் தான் ஆகி இருக்கும்.”

மகிழினி வீட்டில் வேறு கோவிலுக்குச் செல்லாமல்… நல்ல நாள் வைக்கக் கூடாது என்கிறார்கள்… திருமணம் முடித்து எத்தனை நாள் தம்பதிகள் பிரிந்திருப்பார்கள். அதோடு தான் கோவிலுக்கு வரவில்லை என்றால்… தமிழும் செல்ல ஒத்துக்கொள்ள மாட்டான். அதுதான் மூர்த்தி உடல்நலமில்லாததைக் கூடச் சொல்லாமல் இருந்தார்.

அவர் காரணத்தைச் சொல்லவில்லை என்றாலும், இவர்களால் யூகிக்க முடிந்தது.

இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்குக் கூடப் போய் இருந்திருக்கலாம்.” என்றான் தமிழ்.

தமிழ் பரிசோதித்துப் பார்த்து விட்டு, “காய்ச்சல் அதிகம் தான் இருக்கு.” என்றவன், ரத்தகொதிப்பு சரி பார்க்க… அதுவும் சற்றே அதிகம் இருந்தது. ஆனால் பயப்படும்படி இல்லை.

மகிழினி சென்று மூவரின் காபியை மீண்டும் சுட வைத்துக் கொண்டு வர… அதோடு மூர்த்திக்கு நான்கு பிஸ்கட் கொடுத்து, அதை அவர் உண்டு முத்ததும், தமிழ் அவருக்கு மாத்திரை கொடுத்தான்.

சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த மூர்த்திப் பிறகு படுத்துகொள்ள…. தமிழும் மகிழினியும் அறையில் இருந்து வந்தனர்.

தமிழ் தந்தையைக் கண்காணிக்க வசதியாக ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டான். மகிழினி சமையல் அறைக்குச் சென்றாள்.

இரவு உணவு சமைத்துவிட்டு சமையல் செய்பவர் சென்றதும், மகிழினியும் வந்து அவனோடு ஹாலில் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் சத்தம் குறைவாக வைத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவுக்கு இவர்களுக்குச் சப்பாத்தி இருக்க… மகிழினி மாமனாருக்கு சூடாக அரிசி கஞ்சி செய்தாள். அவள் அம்மாவிடம் கேட்டு கஞ்சி செய்யும் போது தான், அவள் வீட்டினருக்கு சம்பந்திக்கு உடம்பு முடியாதது தெரியும்.

தருண் உடனே கிளம்பி இங்கே வந்துவிட்டான். மூர்த்திக்கு காய்ச்சல் இன்னும் குறையவில்லை. வைரல் காய்ச்சலாக இருந்தால்…. கண்டிப்பாக மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும்.

மூர்த்தி உண்டு முடித்ததும், தமிழ் அவரைக் கைத்தாங்கலாகப் பாத்ரூம் அழைத்துச் சென்று வந்தான். அவர் வந்து மீண்டும் படுத்துக்கொள்ள… தமிழ் அறையில் இருந்து வந்தான்.

மகிழினி அண்ணனையும் இங்கேயே உண்ண சொன்னாள். இரவு உணவு மூவரும் சேர்ந்து உண்டனர்.

தமிழ் உண்டு முடித்ததும் தந்தைக்குச் சென்று மாத்திரை கொடுத்தவன், “எதுனாலும் என்கிட்டே சொல்லணும். நீங்களா எங்களுக்குக் கஷ்டம்னு நினைச்சுக்கக் கூடாது. எனக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்க ஞாபகம் வச்சுக்கோங்க.” எனக் கொஞ்சம் கடுமையாகத்தான் சொன்னான்.

ஏன் இப்படிப் பேசுறீங்க? நாம இங்கதான இருக்கோம் பார்த்துக்கலாம்.” என்றாள் மகிழினி.

தருண் கேட்டுக் கொண்டிருந்தாலும் எதிலும் தலையிடவில்லை. சற்று நேரம் சென்று காலை வருவதாகச் சொல்லி தருண் கிளம்ப… மகிழினி அவனை வழியனுப்ப சென்றாள்.

அவங்க அம்மா உடம்பு சரியில்லாததை வெளிய சொல்லாம அலட்சியமா இருந்துட்டாங்க. அதனால தமிழ் அவருக்குச் சரியாகிற வரை கொஞ்சம் டென்ஷனா தான் இருப்பான். கொஞ்சம் பார்த்துக்கோ.” எனத் தங்கையிடம் சொல்லிவிட்டுத் தருண் சென்றான்.

மகிழினி சமையல் அறையை ஒதுங்க வைத்துவிட்டு அறைக்குச் சென்று விட்டாள். தமிழ் படுப்பதற்கு முன் தந்தையைச் சென்று பார்க்க… அவருக்குக் காய்ச்சல் குறைந்து, பிரஷரும் நார்மலுக்கு வந்திருந்தது. பிறகே அவன் அறைக்கு வந்தான்.

இப்போ எப்படி இருக்கு?” மகிழினி கேட்க…

இப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கு. ஆனா இன்னும் விடலை.” என்றான்.

தந்தை கூப்பிட்டால் கேட்க வேண்டும் எனக் கதவை திறந்து வைத்துக்கொண்டு தான் படுத்தான்.

மதியம் நன்றாக உறங்கி எழுந்திருந்ததால்… இருவருக்கும் உறக்கம் வரவில்லை. தமிழ் இறுக்கமாகவே இருக்க.. அவனைத் திசை திருப்ப எண்ணி, “நீங்க எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணீங்க? உங்களுக்கு முன்னாடியே என்னைப் பிடிச்ச மாதிரி எல்லாம் நீங்க காட்டிக்கிட்டதே இல்லையே….” என மகிழினி, இந்தமுறை தான் கேட்க வந்ததை ஒழுங்காகக் கேட்டு இருந்தாள்.

அவளைப் பார்க்கும்படி திரும்பி படுத்த தமிழ் “எப்படிக் காட்டி இருக்கணும். நீ போற இடத்துக்கு எல்லாம் உன் பின்னாடி சுத்துறதா?” என்ற தமிழுக்கும் லேசாகப் புன்னகை எட்டிப் பார்க்க…

எனக்கும் தெரியலை… அதுதானே கேட்கிறேன்.” என்றாள்.

எனக்கு உன்னைப் பிடிக்கக் காரணம் எங்க அம்மா தான்.”

எங்க அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். நீ எதையும் யோசிக்காம படபடன்னு பேசுவேன்னு சொல்வாங்க. நான் வேற அவங்களுக்கு ஒரே பையனா… அவங்களுக்கு உன்னை மாதிரி பெண் வீட்ல இருந்தா வீடு கலகலப்பா இருக்கும்னு சொல்லிட்டே இருப்பாங்க.”

உங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் எங்க அம்மா சொன்னது தான் நினைவு வரும். அப்போவே எனக்கு உன்னைப் பிடிக்க ஆரம்பிச்சது தான்.”

எங்க அம்மா ஆசைக்காகத் தான் நான் டாக்டருக்கே படிச்சேன். ஆனா அவங்க நான் படிச்சிட்டு இருக்கும் போதே இறந்துட்டாங்க. ஆனாலும் எங்க அம்மா ஆசைப்பட்டது, அதனால நான் கஷ்ட்டப்பட்டுப் படிச்சு முடிச்சிட்டேன். அதனால எனக்கு வேற எந்த எண்ணமும் இல்லை.”

உனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனது தெரிஞ்சதும், என்ன பண்றதுனே புரியலை. உனக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் நிச்சயம் பண்ணுவாங்கன்னு நான் எதிர்ப்பார்க்கலை. நீ மேல படிப்பேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நமக்கு இல்லை போலன்னு மனசை தேத்திகிட்டேன். ஆனா உன் கல்யாணம் எதிர்பாராம நின்னுடுச்சு.”

Advertisement