Advertisement

தமிழும் தருணும் சென்று யுவனை அவன் வீட்டில் விட்டு விஷயத்தைச் சொல்ல… இவன் ஏன் இப்படி ஆகிட்டான்? என விஜயா கண்ணீர் சிந்த… சபரியுமே துவண்டு போனார். யுவன் ஹால் சோபாவிலேயே தட்டுத் தடுமாறி படுத்து விட்டான்.

ரொம்பக் குடிக்கு அடிமை ஆகிறதுகுள்ள எங்காவது ட்ரீட்மெண்ட் எடுங்க. சரியாகிடுவான். இல்லைனா கவுன்செல்லிங்காவது கூட்டிட்டு போங்க. அதோட இனிமே இவனைத் தனியாவும் விடாதீங்க.” என தமிழ் சொல்ல…

ஆமாம் நாங்களும் இனி இவனோட பெங்களூரே போயிடலாம்னு இருக்கோம். இவன் எந்த நேரத்தில என்ன பண்ணுவானே தெரியலை.” என்றார் சபரி. மறுநாள் வந்து யுவனிடம் பேசுவதாகச் சொல்லி தமிழும் தருணும் கிளம்பினர்.

சாரி பா, இன்னைக்குத் தான் உனக்குக் கல்யாணம் ஆச்சு… இப்படி இவனோட மல்லுகட்டுற நிலை உனக்கு. எங்களால உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு ஆகிடுச்சு.” என்றார் சபரி மன்னிப்பு வேண்டி.

இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் போதும்.” எனச் சொல்லிவிட்டு தமிழும் தருணும் சென்றனர்.

செல்லும் வழியில், “அவனை ரெண்டு காட்டு காட்டணும்னு நினைச்சேன். நீதான் தடுத்திட்ட…” தருண் சொல்ல…

அவன் என்ன குடிச்சான்? எவ்வளவு குடிச்சான்னு நமக்குத் தெரியாது. நீ அடிச்சு அவனுக்கு எதாவதுனா… நீதான் போலீஸ் ஸ்டேஷன் போகணும். உனக்கு இது தேவையா?” என்றான்.

தமிழும் தருணும் வர… வீட்டினர் அவர்களிடம் விசாரிக்க.. தன்னால் தானே என்ற எண்ணம் மகிழினிக்கு, அவளுக்குக் கணவனைப் பார்க்க முடியவில்லை. எழுந்து அவள் அறைக்குச் சென்று விட்டாள்.

தமிழும் தருணும் சென்று மீண்டும் படுத்து விட்டனர்.

நல்லவேளை டா… உடனே எந்திருச்சுப் போய்ப் பார்த்தோம். இல்லைனா ஊர் கூடி இருக்கும்.” தருண் சொல்ல..

இன்னொரு தடவை நடக்காதுன்னு தெரியுமா? நாளைக்கு அவன்கிட்ட போய்ப் பேசணும்.” என்றான் தமிழ்.

மறுநாள் காலை எழுந்ததும், தமிழுக்கு மகிழினி தான் அனைத்தும் செய்தாள். அவனுக்குக் காபி கொடுப்பது, பிறகு அவன் தேவையை அறிந்து அவனுக்கு எல்லாம் செய்தாள். ஆனால் முன்தினம் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது இல்லை. தமிழுக்கு அவள் மீது அனுதாபத்தை விடக் கோபம் தான் வந்தது.

காலை உணவு முடித்து, மதிய விருந்துக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்க… தமிழும் தருணும் மட்டும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லி, யுவன் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.

அவர்களுக்குத் தெரியும் யுவனை இப்போது விட்டால்… மீண்டும் பிடிக்க முடியாது என்று. அவன் இதே போல மீண்டும் செய்ய மாட்டான் என நிச்சயமும் இல்லை.

இருவரும் சென்ற போது, யுவன் அப்போது தான் எழுந்து காபி குடித்துக் கொண்டிருந்தான். அவன் பெற்றோர் முன்தினம் அவன் அடித்த கூத்தை சொல்லிக் கொண்டு இருந்தனர்.

போன முறை மகிழினியிடம் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே குடித்தான். இந்தமுறை பிரச்சனை செய்ய நினைக்கவில்லை. ஆனால் அதிகம் குடித்ததும், அவனை அறியாமலே… அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தான். அவன் அதைச் சொல்ல… அவனை நம்ப யாரும் தயாராக இல்லை.

தமிழும் தருணும் தங்கள் மகனை அடிக்க வந்திருப்பதாக யுவனின் பெற்றோர் நினைக்க… ஆனால் இருவரும் பேசத்தான் வந்திருந்தனர்.

இங்க பாரு நீ என்ன பிரச்சனை பண்ணாலும் மகிக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அவ வாழ்க்கையில முன்னாடி என்ன நடந்திருந்தாலும் அது எனக்கு ஒன்னும் இல்லை. புரியுதா உனக்கு? அதனால இனி உன்னால ஒன்னும் பண்ண முடியாது. அவ லைப் செட்டில் ஆகிடுச்சு. ஆனா நீ உன் பேரை வீணா கெடுத்துக்கப் போற….”

நேத்து மட்டும் நாங்க அப்படியே விட்டிருந்தா… உன்னைப் பத்தி இந்த ஊருக்கு தெரிஞ்சிருக்கும்.”

இப்பவும் ஏன் இவ்வளவு பொறுமையா பேசுறோம்னா… உன் அப்பா அம்மாவுக்காகத் தான். நீ அவங்களுக்காவது ஒழுங்கான மகனா இரு.” என்றான் தமிழ்.

உன்னை அடிக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனா உன்னை அடிச்சு எங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. நீ திரும்பப் பிரச்சனை பண்ணா… உன்னை உள்ள தான் வைக்கணும். உனக்கு அதுதான் இஷ்டம்னா பண்ணு.” என்ற தருண், நண்பனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

நீ ஏன் டா இப்படி இறங்கிட்ட… பாரு உனக்கு வந்து அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க. சின்னதுல இருந்து நீ யாரையும் கேட்டு எதுவும் பண்ண மாட்டா… ஆனா நல்லா தானடா இருந்த… நல்லா படிச்ச… நல்ல வேலையில சேர்ந்த… இப்போ மட்டும் ஏன் இப்படி ஆகிட்ட? உன் இஷ்ட்டத்துக்கு விட்டது தான் எங்க தப்பா?”

எங்க பையன் தப்பா எல்லாம் போக மாட்டான்னு நம்பிக்கையில தான… உன்னை அப்படி விட்டோம். இனி அப்படியே இருக்க முடியாது. நாங்களும் பெங்களூர் வரோம்.” என்றார் விஜயா. யுவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

தமிழும் தருணும் வீட்டுக்கு வந்ததும், தமிழ் அறைக்குச் சென்றுவிட… ராகவனிடம் தருண் யுவன் வீட்டில் சென்று பேசிவிட்டு வந்ததைச் சொன்னான்.

தமிழ் வந்தது தெரிந்து, லலிதா மகளிடம் டீ கொடுத்து அவனுக்குக் கொடுக்கச் சொன்னார்.

அவள் சென்று டீயை தமிழிடம் கொடுக்க…

கொஞ்சம் அந்தக் கதவை சாத்திட்டு வரியா?” என்றதும், என்னது என்பது போல மகிழினி பார்க்க…

உன்னை எதுவும் பண்றதுக்கு இல்லை. உன்னோட கொஞ்சம் பேசணும், அதுக்குத்தான் .” என்றான்.

அவள் சென்று கதவை சாற்றி விட்டு வந்து கணவனுக்கு எதிரே கட்டிலில் உட்கார்ந்தாள்.

நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு எனக்குப் புரியலை… உனக்கும் யுவனுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?” என தமிழ் கேட்டதும்,

என்ன இவன் இப்படிக் கேட்கிறான் என்று நினைத்தவள், இல்லை எனத் தலையசைக்க… “அப்புறம் ஏன் அவன் பண்றதுக்கு எல்லாம் நீ சோகமாகிற?”

அவன் பணறதுக்கு எல்லாம் நீ பொறுப்பு இல்லை. உங்களுக்குள்ள இருந்த சம்பந்தம் முடிஞ்சு மூன்னு வருஷம் ஆகப் போகுது. அவன் பண்றதுக்கு எல்லாம் நீ ரியாக்ட் பண்ணா… அவன் இன்னும் அதிகம் தான் பண்ணுவான்.”

“அவன்கிட்ட நீ எல்லாம் ஒரு ஆளு இல்லைன்னு இருந்து பாரு. அவன் உன் பக்கமே வர மாட்டான்.”

நேத்து எல்லாம் நல்லா தான இருந்த… எங்க வீட்ல கூட எல்லாரோடவும் பேசிட்டு நல்லத்தான் இருந்த… இப்போ என்ன ஆச்சு?”

நீ இப்படி இருந்தா… எனக்கு எதோ இஷ்ட்டம் இல்லாத பெண்ணைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி தோணாதா…எப்பவோ உன் வாழ்க்கையில நடந்து முடிஞ்சு போன விஷயத்துக்காக, நீ இன்னும் வருத்தபட்டுட்டே இருப்பியா?”

நீ சந்தோஷமா இருந்தா தான் நானும் இருக்க முடியும்.” தமிழ் எடுத்துச் சொன்னதும், மகிழினிக்குப் புரியத்தான் செய்தது.

என்ன புரிஞ்சுதா?” தமிழ் கேட்க… அவள் மண்டையை உருட்டி வைக்க…

சரி உனக்குப் புரிஞ்சது தான… அப்போ என் பக்கத்தில் வந்து உட்காரு.” என்றவன், கட்டிலில் தள்ளி உட்கார… மகிழினி திரும்பி கதவைப் பார்க்க…

அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க வா…” என்றான்.

மகிழினி எழுந்து சென்று தமிழின் அருகே உட்கார… அவள் கையை எடுத்துப் பிடித்துக் கொண்டவன், “நேத்து கல்யாண மண்டபத்தில அக்னியை சுத்தி வரும்போது பிடிச்சது. அதோட இப்பத்தான் உன்னைத் தொடவே முடிஞ்சிருக்கு. இன்னும் ஒருநாள் எப்படிப் போகப் போகுதோ.” என்றான் கவலையாக.

அவனின் கவலையைப் பார்த்து மகிழினுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

தருணின் அறையைத் தான் தமிழுக்குக் கொடுத்திருந்தனர். அவன் மகி உள்ளே இருப்பாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் கதவு மூடி இருந்ததால்… அவன் தட்டி விட்டு உள்ளே வர… மகிழினி பதறி அடித்து எழுந்து நின்றாள்.

இருவரையும் பார்த்ததும் தருண் தலையில் தட்டிக் கொண்டான்.

நீ இங்கதான் இருக்கியா.” என்றான் தங்கையிடம்.

மகிழினி பதில் சொல்லாமல் அறையில் இருந்து வெளியே சென்று விட்டாள்.

கஷ்ட்டப்பட்டுப் பேசி உஷார் செய்தது எல்லாம் வீணாகப் போய் விட்டதே என தமிழ் நினைக்க…

சாரி டா…” என்றான் தருண். தமிழ் பதில் சொல்லவில்லை.

தருணுக்கு அவனின் நிலைமை புரிந்தது. திருமணம் செய்து வைத்து விட்டு, தள்ளி இருங்கள் என்றால் கஷ்ட்டமாகத்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

மதியம் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட.. விருந்து ஆரம்பித்தது. மகிழினி எல்லோரோடும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.

இரண்டு பக்க உறவினர்களும் அவரவர் உண்டு கிளம்பி விட்டனர். மாலை தமிழும் மகிழினியையும் அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டினர் கிளம்ப… நாளை கோவிலுக்குச் சென்று வந்த பிறகு தான், முதலிரவு வைக்க வேண்டும் என சுபாவிடம் லலிதா சொல்ல…

அவங்களுக்கு இது தெரியும் தானே… அவங்களே பார்த்து இருந்துப்பங்க. அதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரியும்.” என்றார் சுபா. லலிதா மகளிடமும் சொல்லித்தான் அனுப்பினார்.

தமிழ் சித்தப்பா குடும்பமும் இவர்களை வீட்டில் வந்து விட்டு அவர்களும் கிளம்பி விட்டனர். தமிழின் தாத்தா பாட்டி மட்டும் இருந்தனர். தமிழ் தான் அவர்கள் எல்லோரையும் பொறுப்பாகக் கவனித்தான். அவர்களை உண்ண வைத்து நேரத்துடன் படுக்க அனுப்பினான். மூர்த்தி ஹாலில் மெத்தை விரித்துப் படுத்துக் கொண்டார்.

மணி அப்போது ஒன்பது தான். அறையின் கதவை சாற்றிவிட்டுத் தமிழ் உள்ளே வர… லலிதா வேறு சொல்லி அனுப்பி இருந்தாரே…. மகிழினி அவனைப் பயத்துடன் பார்க்க… அதை தமிழும் உணர்ந்து தான் இருந்தான். ஆனாலும் ஆசை கொண்ட மனம் கேட்குமா என்ன?

கட்டிலின் அருகே சென்று, உட்கார்ந்திருந்தவளை கைபிடித்து எழுப்பியவன், அவளை இறுக அனைத்தும் இருந்தான். அதோடு மட்டும் நின்றானா என்ன? அவளை முத்தமிடவும் ஆரம்பித்து இருந்தான்.

ஐயையோ அம்மா வேறு சொல்லி அனுப்பினாரே… இவன் வேறு இப்படிச் செய்கிறான்… தெய்வ குத்தம் ஆகிவிடுமோ என்று மகிழினிக்குப் பயம் வந்துவிட்டது.

பேசிக் கொண்டிருக்கலாமே என நினைத்தவள், “நான் அன்னைக்குக் கல்யாணம் நின்னதும் அழுதேனே… அதனால என்னைக் கல்யாணம் பண்ணிங்களா? இல்லைனா எங்க அண்ணனுக்காகவா?” என அவள் மெதுவாகக் கேட்டு வைக்க…

தமிழின் மொத்த அசையும் வடிந்துவிட…. அவளிடம் இருந்து விலகியவன், அவளைக் கட்டிலில் படித்துத் தள்ளி விட்டு, கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

எதாவது பேசி அவனைத் திசை திருப்பலாம் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் இப்படிக் கோபித்துக் கொண்டு செல்வான் என்று நினைக்கவில்லை.

உண்மையில் அவன் எதற்காக அவளை திருமணம் செய்ய நினைத்தான் என்று கேட்க வேண்டியது இருந்தது. ஏனென்றால் முன்பு அவளுக்கு தெரிந்த  தமிழ், அவளை காதலாக எல்லாம் பார்த்தது இல்லை. 

கேட்க தெரியாமல் கேட்டு…. அவனை டென்ஷன் ஆக்கி விட்டிருந்தாள்.

தமிழ் மொட்டை மாடியில் சென்று நின்றிருந்தான்.

Advertisement