Advertisement

நண்பனின் இரு சக்கர வாகனத்தில் ஏறி யுவன் செல்வதைப் பார்த்தான். இவன் நிஜமாகவே குடித்திருந்தானா அல்லது குடித்தது போல நடித்தானா என்று இன்னும் சந்தேகம் தான்.

அங்கிருந்து மகிழினியை அழைத்தவன், “நான் இங்க தான் இருப்பேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும், நீ உன் பை எடுத்திட்டு வந்திடு. எங்க வீட்டுக்கு போயிடலாம்.” என்றான்.

இங்க மகிழினி இருக்கும் இடத்தில் எதுவும் பிரச்சனை வேண்டாம் என விட்டு விட்டான். தருணுக்கு அழைத்துப் பேசினான்.

நானும் இன்னைக்கே கிளம்பி வரேன் டா… அவன் வீட்டுக்கு நேரா போய் ரெண்டுல ஒன்னு பார்க்கணும்.” என்றான் தருணும்.

மகிழினி அண்ணனுக்கு அழைத்தவள், “அண்ணா அவங்க என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுறாங்க. நான் எப்படி அங்க போவேன். என் பிரண்ட்ஸ் இருக்காங்க, நான் இங்கயே இருந்துக்கிறேன்.” என்றாள்.

சரி நான் காலையில அங்க வரேன். நாம ரெண்டு பேரும் ஊருக்குப் போயிடலாம். நீ கல்யாணம் வரை வீட்ல இருந்து வேலைப் பாரு. நானும் வீட்ல இருந்து தான் வேலை பார்க்கணும்.” என்றான்.

ஹப்பாடா தமிழைப் பார்க்க வேண்டியது இல்லை என மகிழினிக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. யுவன் தான் கண்டதையும் அவனிடம் சொல்லி இருந்தானே… தமிழ் ஒருவேளை நம்பி இருந்தால்… தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று கவலையாக இருந்தது.

தருண் தமிழுக்கு அழைத்து, “கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு வர்றதுக்கு அவ யோசிக்கிறா டா… நான் காலையில வந்திடுவேன். இன்னைக்கு ஒருநாள் தானே… அவ அங்கயே இருக்கட்டும்.” என்றான். உண்மையில் அவன் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

தமிழுக்கும் அதை நம்பி விட ஆசைத்தான். ஆனால் அவனுக்கு வேறு எதுவும் யோசித்து மகிழினி குழப்பிக் கொள்கிறாளோ என நினைத்தவன், அவளுக்கு அழைக்க…. மகிழினி எடுத்தாள்.

அவனுக்கு இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. அதனால அவன் கண்டதையும் பேசுறான் மகிழினி. நீ எதுவும் நினைக்காத. தருண் காலையில வந்திடுவான். எதுக்காகவும் வெளிய வர வேண்டாம். யார்கிட்டையும் பேச்சு வச்சுக்காத.” தமிழ் சொல்ல… மகிழினி சரி என்றாள்.

நீ ஓகே தானே… இல்லைனா என்னோட இப்பவே வந்திடு. மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிச்சிட்டு இருக்காத. காலையில தருண் வந்ததும் கிளம்பிடலாம்.” என தமிழ் சொல்லித் தான் பார்த்தான்.

இல்லை… நான் இங்க இருந்துப்பேன்.” என்றாள். அங்கிருந்தவர்கள் களைந்து சென்றிருந்தனர். மனம் கேட்காமல் அவள் வீட்டுக்குச் சென்றான்.

அவனைப் பார்த்ததும் மகிழினியின் தோழிகள் மகிழ்ச்சியாக உள்ளே அழைக்க… உள்ளே சென்றவன் உட்காரவெல்லாம் இல்லை.

நாளைக்கு அவங்க அண்ணன் வந்திடுவான். அதுவரை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.” என்றான். மகிழினி அறையின் வாயிலேயே நின்றிருந்தாள். அவள் அழுதிருக்கிறாள் என்று பார்த்ததுமே தெரிந்தது. அவனிடம் அவள் வரவே இல்லை.

அருகில் வந்தால் கூட எதாவது அனுசரணையாகப் பேசலாம், ஆனால் இப்படி விலகி நிற்பவளிடம் என்ன பேசுவது. தமிழ் அங்கே இருந்து மனமே இல்லாமல் கிளம்பினான். மகிழினிக்கும் அவன் நிலை புரியவே செய்தது. அவனிடம் நாலு வார்த்தை நன்றாகப் பேச முடியாமல்… இந்த யுவன் செய்து விட்டானே என நினைத்தாள்.

எதோ அவனிடம் காதல் மொழி பேசியது போலத்தானே யுவன் சொல்லி இருந்தான். ரொம்பவும் அவமானமாக இருந்தது. ஒருவரை அடிக்காமல், காயப்படுத்தாமல், உயிரோடு கொல்ல முடியும் என்பதை அவள் அப்போது தான் தெரிந்து கொண்டாள்.

மறுநாள் காலையே தருண் வந்துவிட்டான். அவன் வந்ததும் அப்படியே அவனுடன் ஊருக்கு கிளம்பி விட்டாள். தோழிகள் திருமணத்திற்கு வருவதாகச் சொல்லி அவளை வழி அனுப்பினர்.

மகிழினி வாயிலுக்கு வந்த பிறகு தான் தமிழையும் அவன் அப்பாவையும் பார்த்தாள். திருமணம் ஊரில் தான் என்பதால்… மூர்த்திக்கும் ஊரில் வேலை இருந்தது. அவரும் இவர்களோடு வந்தார்.

தமிழ் தருணை தனியே அழைத்துச் சென்று பேசினான். “நீ அந்த யுவனைப் பார்த்துப்ப இல்ல… நான் திடிர்ன்னு ஹாஸ்பிடலுக்கு லீவ் போட முடியாது. எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செஞ்சவங்க.” என,

நான் பார்த்துக்கிறேன் டா…” என்றான் தருண்.

அவர்களை வாடகை வண்டியில் அனுப்பி விட்டு, தமிழ் தன்னுடைய காரில் மருத்துவமனை சென்றான்.

மூர்த்தியை அவர்கள் வீட்டில் விட்டு இவர்கள் இருவரும் வீட்டுக்கு சென்றனர். திடிரென்று மகனும் மகளும் வந்து நின்றதும் ராகவுக்கும் லலிதாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. திருமணதிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இருவரும் வருவதாக இருந்தது.

அதுவும் மகிழினியின் முகத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு அப்படி ஒரு கலக்கம். தருண் நடந்ததைச் சொன்னான்.

எவ்வளவு திமிர் இருக்கும் அவனுக்கு. இவனே வேண்டாம்னு போவானாம், அப்புறம் இப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்வானாம்.” என ராகவ் கொந்தளிக்க…

சரியான பைத்தியமா இருப்பான் போலிருக்கு. நல்லவேளை இவனுக்குப் பெண்ணைக் கொடுக்கலை.” என்றார் லலிதா.

அவன் தமிழ்கிட்ட என்னைப் பத்தி தப்புத் தப்பா சொன்னான். அவர் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பார். இப்படி எனக்கு ஒரு கல்யாணம் தேவையா?” என மகிழினி சொல்ல…

இவ என்ன இப்படிப் பேசிகிறாள் என எல்லோருக்கும் அதிர்ச்சி.

பாருங்க ஒரு மாப்பிள்ளை ஒழுங்கா பார்க்காம. இப்போ எங்க வந்து நின்னிருக்குன்னு.” எனப் பெற்றோரிடம் சொன்ன தருண், “நீ அவனுக்கு மேல லூசா இருப்ப போலிருக்கு. எவனோ எதோ பேசுறான்னு, நீ கல்யாணத்தை வேண்டாம்னு சொல்வியா?” என்றான் தங்கையிடம்.

ஏற்கனவே ஒரு தடவை கல்யாணம் நின்னது பத்தாதா… நீ வேற எதாவது உளறாத… நம்ம ஆளுங்க இல்லைனாலும் நான் உனக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன். திரும்பக் கல்யாணம் நின்னா… என்னால யாரையும் பார்க்க முடியாது.” என்றார் ராகவன் கோபமாக.

அப்பாவின் கோபத்தைப் பார்த்து மகிழினி வாய் மூடிக் கொண்டாள்.

தருண் தான் யுவனின் வீட்டுக்குச் செல்லப்போவதாகச் சொல்ல… “நானும் உன்னோட வரேன், நானும் சபரிகிட்ட பேசணும்.” என்றார் ராகவ்.

குளித்துக் காலை உணவு உண்டதும், தந்தையும் மகனும் கிளம்பி யுவனின் வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்குள் சென்றதும் தருண், “எங்க யுவன்?” என்று கோபமாகக் கேட்க…

அவன் இங்க இல்லை.” என்றார் சபரி.

என்ன பிள்ளை பெத்து வச்சிருக்க? உன் பையனை நல்லவேளை என் பொண்ணு கல்யாணம் பண்ணலை… இப்படி நிலை இல்லாத புத்தி இருக்கிறவனைக் கட்டி வச்சிருந்தா என்ன ஆகும்? உன் பையனுக்குப் புத்தி சரி இல்லைன்னு நினைக்கிறேன். அவனை எதாவது ஹாஸ்பிடல்ல கொண்டு சேர்த்து விடு. இன்னொரு தடவை அவன் எதாவது கலாட்டா பண்ணா… அவ்வளவு தான்.” ராகவன் கோபத்தில் கத்தி பேச…

மகனை மருத்துவமனையில் சென்று சேருங்கள் என்றதை கேட்டதும் விஜயா அழுது விட்டார்.

நாங்க அவன்கிட்ட சொல்லி வைக்கிறோம். இனி இப்படி நடக்காது.” என சபரி சொன்னதும், ராகவனும் தருணும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். விஜயாவின் கண்ணீரைப் பார்த்ததும், அவர்களுக்கு மேலும் பேசவும் மனம் இல்லை.

யுவனுக்குத் தெரியும் இவர்கள் கையில் மாட்டினால்… அடி வெளுத்து விடுவார்கள் என்று. அதனால் நேராகப் பெங்களூர் சென்று விட்டான்.

அவனை அவன் பெற்றோர் கைபேசியில் அழைத்தனர்.

ஏன் டா இப்படிப் பண்ற? நீ மட்டும் இங்க இருந்திருந்தா…. அவ அண்ணன் உன்னை அடிச்சு கொன்னிருப்பான். அவன் அப்படித்தான் கோபமா இருந்தான்.” சபரி சொல்ல…

உனக்குப் பைத்தியம், உன்னைப் பைத்திக்கார ஆஸ்பத்திரியில சேர்க்க சொல்லி, மகி அப்பா சொல்லிட்டு போறார்”

கேட்ட என் பெத்த வயிறு பத்தி எரியுது. நீதானே அவங்களைக் கண்ட மாதிரி பேச வைக்கிற….” என விஜயா அழுததும்,

சரி விடுங்க இனிமே எதுவும் பண்ணலை.” என்றான் யுவன் எரிச்சலாக.

தான் வேண்டாம் என்று சொன்ன பெண்… தன்னை விடச் சிறப்பான ஒரு மாப்பிள்ளையைத் திருமணம் செய்வதை அவனால் ஏற்க முடியவில்லை. திருமணத்தை நிறுத்த முடியா விட்டாலும், எதோ தன்னால் முடிந்த அளவுக்குத் தமிழ், மகிழினி இருவரின் மன நிம்மதியை கெடுத்த சந்தோஷம் அவனுக்கு.

நிஜமாகவே சைக்கோவாகத்தான் மாறிக் கொண்டு இருந்தான்.

யுவன் சின்னதில் இருந்தே அதிகம் தனியாகவே இருப்பான். இவர்களும் மகன் என்ன செய்கிறான் என்று கண்காணிக்க மாட்டார்கள். மகன் நல்ல மதிப்பெண் வாங்குகிறானா அதே போதும் என்றிருப்பார்கள்.

குடும்பமாகச் சேர்ந்து உணவு அருந்த வேண்டும், மாதத்தில் ஒரு நாளாவது குடும்பமாகக் கோவிலுக்காவது சென்று வர வேண்டும். பிள்ளையோடு மனம் விட்டு பேச வேண்டும் என்பதே இல்லை. சபரி கொஞ்சம் யாரோடும் ஒட்டாத ரகம் தான். அவருக்கு வெளியே செல்வது எல்லாம் பிடிக்காது.

குடும்பமாக ஹோட்டலுக்குக் கூடச் செல்ல மாட்டார்கள். வீட்டிற்கு வரவழைத்து உண்பது தான். வெளியே செல்லும் போது, நாலு பேரோடு பழகும் போது தான் வெளி உலகம் புரியும்.

பள்ளிக்கு சென்று வருபவன், மற்ற நேரம் அவன் அறையில் தனியாகவே இருப்பான். கைபேசி தான் இருக்கிறதே பொழுது போக… அதில் விளையாடுவது படம் பார்ப்பது என்றே இருப்பான்.

சக மனிதர்கள் அவர்களின் சந்தோஷம் எல்லாம் அவனுக்கு முக்கியம் இல்லை. தன்னைப் பற்றித் தான் முதலில் யோசிப்பான். அதுவும் படித்து முடித்ததும் வேலையும் கிடைத்து விட… அவனே சம்பாதிக்க ஆரம்பித்ததும், அவன் பெற்றோரை கூட அதிகம் நினைப்பது இல்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து தலையைக் காட்டி விட்டு செல்வான். அதுவும் இவர்கள் அத்தனை முறை போன் செய்து அழைத்ததும் தான் வருவான்.

சபரி வயதான பிறகுதான், மகன் நம்மோடு ஒட்டுதலாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். நம் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்தால் சரியாகி விடும் என நினைத்தார்.

இவர்கள் ஒழுங்காகப் பிள்ளையை வளர்க்க மாட்டார்கள். ஆனால் மருமகள் வந்ததும் மகன் திருந்தி விடுவானாம். இது என்ன கதை. இப்படித்தான் நிறையப் பெற்றோர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களுக்குக் குடும்பச் சூழ்நிலை தெரியவேண்டும். குடும்பத்திற்குள் ஒரு அன்னியோன்யம் இருக்க வேண்டும். அப்படி வளராத பிள்ளைகளுக்கு எதிலுமே ஒரு பிடிப்பு இருக்காது. தான்தோன்றித்தனமாகத் தான் இருப்பார்கள்.

வார நாட்களில் தமிழுக்கு அவ்வளவு நேரம் இருக்காது. இரவு தான் மகிழினியை அழைப்பான். அவன் கேட்டதற்கு பதில் சொல்வாளே தவிர… அவனிடம் இன்னும் உரிமையாக பேச அவளுக்கு வரவில்லை. எதோ ஒரு தயக்கம்  

தமிழ் திருமணதிற்கு இரண்டு தினங்கள் முன்பு தான் ஊருக்கு வந்தான். அவர்களின் உறவினர்களும் வந்திருக்க…. எத்தனை பேர் இருந்தாலும், அவன் அம்மா போல வருமா… அவன் திருமணத்தை பெரிதாக நடத்த விரும்பாததுக்கு காரணம், அவன் அம்மா இல்லாததும் தான். அவனின் வாடிய முகத்தைப் பார்த்து விட்டு மூர்த்தி மகனை தேற்றினார்.

மகிழினிக்கும் கங்கா அவரின் பிள்ளைகள் எல்லாம் வந்திருக்க… வேறு எதையும் நினைக்கவும் நேரம் இல்லை.

தமிழ் மகிழினி திருமணம் அதிக ஆடம்பரம் இல்லாமல் நடந்து முடிந்தது.

Advertisement