Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 4

தமிழ் அவனின் அப்பா மற்றும் தமிழின் சித்தப்பா குடும்பத்தினர் மட்டுமே சாஸ்த்திரத்துக்கு மகிழினியை பெண் பார்க்க வந்திருந்தனர். கிட்டத்தட்ட திருமணம் நிச்சயம் ஆனது தான் என்பதால்… வரும் போதே பெண்ணுக்கு புடவை, மோதிரம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தனர்.

இங்கேயும் வீட்டினர், கங்கா மற்றும் அவரின் மூத்த மகனும் மருமகளும் தான் இருந்தனர்.

ராகவ் கொஞ்சம் யோசித்துத் தான் பேசினார். ஆனால் தருண் அவர்களோடு நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தான். லலிதாவுக்கும் தமிழ் மருத்துவன் என்பதால் மிகவும் திருப்தி தான்.

மகிழினியை அழைத்து அவளுக்குப் புடவையைக் கொடுத்து கட்டி வர சொன்னவர்கள், அவள் கட்டி வந்ததும், தமிழின் சித்தியும் அவர் மகளும் மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைத்து விட்டனர். பிறகு லலிதாவும் மகளுக்கு பூ வைத்தார். 

பிறகு தமிழ் அவன் வாங்கி இருந்த வைர மோதிரத்தை மகிழினிக்கு போட்டு விட… தருணும் அவர்கள் மாப்பிள்ளைக்கு மோதிரம் வாங்கி இருக்க… அதை மகிழினி தமிழுக்குப் போட்டு விட்டாள்.

தமிழுக்கு எளிமையாகத் திருமணம் செய்யத்தான் விருப்பம் என்பதால்… இதுவே கிட்டத்தட்ட நிச்சயம் போல ஆகிவிட… நேராகத் திருமணத்தையே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். அவர்கள் ஊர் மண்டபத்தில் திருமணத்தை வைக்க, அடுத்த இரண்டு மாதத்தில் திருமணத் தேதியும் குறித்தனர்.

மதியம் உண்டுவிட்டு தமிழின் வீட்டினர் கிளம்பி விட்டனர். இன்னும் தான் செய்த முடிவு சரியா என்ற குழப்பத்தில் மகிழினி இருந்தாள். தருண் தான் எல்லோரையும் விட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.

ராகவனுக்கு இந்தத் திருமணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை என்று மூர்த்திக்கு புரிந்ததால்…. திருமணம் வேலையாக எது சொல்வதாக இருந்தாலும், அவர் தருணுக்கு அழைப்பார். இல்லையென்றால் மருமகளுக்கு அழைத்துப் பேசுவார்.

தமிழ் மகிழினியிடம் அளவாகத்தான் வைத்துக் கொள்வான். போன்னில் பேசினாலும் அதிக நேரம் எல்லாம் பேச மாட்டான். அவனுக்குத் தெரியும், அவள் இந்தத் திருமணத்தை ஆவலாக எல்லாம் எதிர்பார்க்கவில்லை. எது என்றாலும் திருமணதிற்குப் பிறகு புரிய வைத்துக் கொள்ளலாம் என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

பத்திரிகை வைக்கும் போதுதான் வெளி ஆட்களுக்கு மகிழினிக்குத் திருமணம் நிச்சயம் ஆனதே தெரியும்.

கல்யாணம் நின்னு போன பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையே கிடைத்தது எல்லோருக்கும் ஆச்சர்யமே… அப்போதுதான் சபரி வீட்டினருக்கும் மகிழினி திருமணம் குறித்துத் தெரியும். அவர்கள் மகனிடம் சொல்லாமலே வைத்து இருந்தனர்.

யுவன் பெங்களூரில் இருந்ததால் அவனுக்குத் திருமணம் முடிவானது தெரியவில்லை. அவன் சிறிது நாட்கள் சென்று வந்து மகிழினியிடம் பேசுவோம் என்று இருந்தான்.

திருமணதிற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, யுவன் ஊருக்கு வர… அப்போது வீட்டில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்து தான் அவனுக்குத் தமிழ் மகிழினி திருமணம் குறித்துத் தெரியும்.

ஏன் என்கிட்டே சொல்லலை?” என வீட்டினரிடம் சண்டை பிடித்தான்.

தெரிஞ்சு என்ன டா பண்ணப் போற?” என்றார் அவனின் அப்பா. அப்போதே கிளம்பி மதுரை சென்றான்.

தமிழ் வேறு ஆட்கள் என்பதால் மகிழினி வீட்டில் அவனுக்குத் திருமணம் செய்ய மாட்டார்கள் என நினைத்திருந்தான்.

சனிக்கிழமை மதியம் திடிரென்று வந்து நின்றவனைப் பார்த்து மகிழினிக்கு ஒன்றும் புரியவில்லை.

மகி, நான் எதோ அப்போ தப்பா முடிவேடுத்திட்டேன். ஆனா இப்போ உன்னைத்தான் விரும்புறேன். நமக்குத் தான் முதல்ல கல்யாணம் முடிவாச்சு… நாமே கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றான்.

இவன் என்ன லூசா என்பது போலப் பார்த்த மகிழினி, “அந்தக் கல்யாணம் தான் நின்னு போச்சு இல்ல… அதுவும் உங்களால தான். அப்போவே முடிவு பண்ணிட்டேன், நீங்க என் வாழ்க்கையில இனி இல்லைன்னு. எந்த மூஞ்சியை வச்சிட்டு வந்து என்னோட பேசுறீங்க. தயவு செஞ்சு இங்க இருந்து போங்க… நான் என் அண்ணன்கிட்ட சொன்னேனா அவ்வளவு தான்.” என்றவள், அங்கே நிற்காமல் சென்று விட்டாள்.

சற்று நேரம் கழித்து அவள் பால்கனியில் இருந்து பார்க்கும்போது யுவன் சென்றிருந்தான். முதலில் அண்ணனுக்கு அழைத்துச் சொல்வோமா என்று நினைத்திருந்தவள், அவன் தான் சென்று விட்டானே, எதற்கு அண்ணனை வேறு டென்ஷன் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டாள்.

ஆனால் இரவு யுவன் குடித்து விட்டு வீட்டின் முன்பு வந்து ஒரே கலாட்டா செய்தான்.

உன்னை நம்பினேனே என்னை இப்படி ஏமாத்திட்டியே…” என்றான்.

அவன் பேசுவதை வைத்து பார்த்தால்… எதோ இவள்தான் காதலித்துவிட்டு பிறகு கழட்டி விட்டது போல ஆகிவிட்டது. அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் அப்படித்தான் பார்த்தனர். மகிழினிக்கு முகத்தை எங்கே சென்று வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

மகிழினி சென்று அண்ணனுக்கு அழைத்தவள், யுவன் வந்து கலாட்டா செய்வதைப் பற்றிச் சொல்ல… சென்னையில் இருந்து பறந்தா வருவான். அவன் தமிழுக்குத் தான் அழைத்துச் சொன்னான். தமிழ் அப்போது வீட்டில் தான் இருந்தான். தருண் சொன்னதும் உடனே கிளம்பி விட்டான்.

தமிழ் வந்த போது அந்த அபார்ட்மெண்ட் முன்பு அவ்வளவு கூட்டம். ஆனால் மகிழினி அங்கே இல்லை. தருண் சொல்லி இருந்தான் எக்காரணம் கொண்டும், அவள் தமிழ் வரும் வரை வீட்டை விட்டு வரக் கூடாது என்று. அதுவும் தமிழ் அழைத்தால் தான் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தான்.

பால்கனி இருட்டில் நின்று மகியும் தமிழ் வந்ததைக் கவனித்து இருந்தாள். உடன் அவள் தோழிகள் இருந்தனர்.

என்ன டி அவரே கல்யாணத்தை நிறுத்திட்டு இப்ப இப்படிப் பேசுறார்.” என அவள் தோழி கேட்க… எனக்கும் அதுதான் புரியலை என்றாள் மகிழினி.

யுவன் தமிழைப் பார்த்ததும் அதே போலப் புலம்ப…

இப்போ உனக்கு என்ன வேணும்? நீதானே அந்தக் கல்யாணத்தை நிறுத்தின… இப்போ ஏன் வந்து சம்பந்தமே இல்லாம கலாட்டா பண்ற?” எனத் தமிழ் கேட்க… பிறகு தான் அங்கிருந்தவர்களுக்கு, ஓ தவறு இவன் மேல் தான் எனப் புரிந்தது.

யுவன் அதைச் சமாளிக்க…. “அப்போ எதோ லூசு மாதிரி பண்ணீட்டேன். ஆனா மகிக்கு என்னைத் தான் பிடிக்கும். எத்தனை தடவை போன் பண்ணி இருக்கா தெரியுமா?”

நான் அவகிட்டயே இந்தக் கல்யணம் பிடிக்கலைன்னு சொன்னேன். அப்பவும் அவ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உறுதியா இருந்தா…”

இப்பவும் நீ குறுக்க வந்ததுனால தான், இல்லைனா அவ சரின்னு தான் சொல்லி இருப்பா…” என்றான் யுவன்.

ஒரே ஒருமுறை தான் மகிழினி அவனை அழைத்திருக்கிறாள். பெற்றோருக்குக்காகத் திருமணம் செய்வது போலச் சொன்னான் தான். ஆனால் உன்னைப் பிடிக்கவில்லை என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அப்போதே அவனை வேண்டாம் எனச் சொல்லி இருக்க வேண்டும். அப்போது அவள் செய்த மடத்தனத்துக்கு, இப்போது வருந்தினாள். அதுவும் தமிழிடமே யுவன் இப்படிச் சொல்லி வைத்தால்… அவனை எப்படிப் பார்ப்பாள்.

அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் இஷ்ட்டம்.” என்றெல்லாம் யுவன் பேசிக் கொண்டே செல்ல….

யுவன், எனக்குப் பொறுமை எல்லாம் கிடையாது. நான் போலிசை தான் கூப்பிடப் போறேன். கல்யாணம் பேசினது உங்க வீட்ல… கல்யாணத்தை நிறுத்தினது நீ. இப்போ மகிழினியை குத்தம் சொல்றியா?” என்றவன்,

இங்க இருந்து போறியா…. இல்லைனா வா போலீஸ் ஸ்டேஷன் போவோம்.” என்றவன், அவனின் சட்டையை எட்டிப் பிடிக்க… அதற்குள் தருண் சொல்லி சபரி மகனை அழைத்து விட்டார்.

தந்தை அழைத்ததும் அவரிடம் பேசுவது போல… தமிழிடம் இருந்து நழுவி சென்று விட்டான்.

இன்னொரு தடவை இவன் இங்க வந்தா… நீங்க உடனே போலிசுக்கு கால் பண்ணுங்க.” என யுவனின் காதில் விழுவது போலக் காவலாளியிடம் சொல்லிவிட்டு, தமிழ் யுவனின் பின்னே சென்றான்.

Advertisement