Advertisement

அவனைப் பார்த்ததும் சட்டென்று என்ன செய்வது என்று ஒரு நொடி புரியவில்லை. அதனால் அமைதியாக நின்றாள்.

ஹாய் எப்படி இருக்க?” என யுவன் கேட்க…

இவனிடம் தன் கோபத்தைக் காட்டினால்… தான் தோற்றது போலத்தான்.” என நினைத்தவள், அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என அவள் விசாரிக்க…

அவள் சாதாரணமாகப் பேசியதும் யுவனுக்குச் சற்று நம்பிக்கை வந்தது.

நல்லா இருக்கேன் மகி. மதுரைக்கு ஒரு வேலையா வந்தேன். நீ இங்க இருக்கேன்னு சொன்னாங்க அதுதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான்.

ஓ… அப்படியா சாரி வீட்ல இன்னும் ரெண்டு பிரண்ட்ஸ் இருக்காங்க. அதனால வீட்டுக்கு கூப்பிட முடியலை…” என்றாள்.

பரவாயில்லை… இங்க தான் இவ்வளவு இடம் இருக்கே… இங்கயே பேசலாம்.” என்றவன்,

சாரி மகிழினி, நிஜமா நான் அப்படி நடந்துகிட்டதை நினைச்சு நான் இப்போ வெட்கப்படுறேன். எனக்கு அப்போ உன்னைன்னு இல்லை… கல்யாணத்திலேயே விருப்பம் இல்லாம இருந்துச்சு அதுதான்.” என்றதும்,

எனக்குமே அப்போ புரியலை… ஆனா எல்லாம் நல்லதுக்குதான்னு எனக்கு இப்போ புரியுது. நான் எம் எஸ் சி முடிச்சு… வேலைக்குப் போவேன்னு எல்லாம் நானே நினைச்சது இல்லை.”

இப்போ படிச்சு வேலைக்குப் போறேன். என்னால சுயமா நிற்க முடியுது. இது சந்தோஷம் தானே… அதனால நீங்க கவலைப்பட வேண்டாம்.” என்றான்.

அவள் திருமணம் நின்றதை பற்றி வருத்தப்பட்டிருந்தாளோ அல்லது கோபப்பட்டிருந்தாலோ கூட… தான் அவளை எதோ ஒரு விதத்தில் பாதிக்கிறோம் எனச் சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் நல்லதுக்குதான் என்றது யுவனுக்கு அப்படி ஒரு ஆத்திரத்தைக் கிளப்பியது.

ஆமாம் அப்போ எனக்குமே பக்குவம் இல்லை… இல்லேன்னா உன்னைப் போய் வேண்டாம்னு சொல்லி இருப்பேனா…” என்றான்.

மகிழினியுமே அவன் உண்மையில் வருத்துகிறான் என நம்பி விட்டாள்.

பரவாயில்லை விடுங்க. யாருக்கு என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும்.” என்றாள்.

இருவருமே காரில் வந்து இறங்கி நின்ற தமிழைக் கவனிக்கவில்லை. அவன் அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.

மகிழினி எதோ தோன்ற சட்டென்று நிமிர்ந்து பார்க்க… அப்போதுதான் தமிழைக் கவனித்தாள். அவன் காரில் சாய்ந்து நின்று இவர்களைதான் பார்த்துக் கொண்டு இருந்தான். தமிழைப் பார்த்ததும் யுவனை மறந்து அவனிடம் சென்று விட்டாள்.

ஹாய் வாங்க எப்போ வந்தீங்க?” என

நான் வர்றது உனக்குத் தெரியாதா? தனியா இருக்கப் பொண்ணுங்க வீட்டுக்கு சொல்லாம வருவேனா?”

அவன்கிட்ட உனக்கு என்ன பேச்சு? நான் உனக்குக் கொஞ்சமாவது சுயமரியாதை இருக்கும்னு நினைச்சேன் மகிழினி.” என்றவன், அவளை முறைத்தபடி காரில் ஏறி சென்று விட்டான்.

மகி தலையில் தட்டிக்கொள்ள… அதற்குள் அவள் அறை தோழி மாடியில் இருந்து, “மகி உன் போன் அடிச்சிட்டே இருக்கு.” என்றதும், இதோ வரேன் என்றவள், “யுவன், நான் போகணும். உங்க மேல எனக்கு எந்தக் கோபமோ வருத்தமோ இல்லை. நீங்க பீல் பண்ணாதீங்க.” எனச் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

ஏனோ அவன் அவளிடம் நடந்ததுக்கு வருத்தம் தெரிவிக்க வந்தது போல…. நினைத்துக் கொண்டாள்.

தமிழ் யுவன் எல்லாம் ஒரே பள்ளியில் படித்தவர்கள் தான். யாரோ டாக்டர் சம்பந்தம்ன்னு சொன்னாங்களே… அது தமிழ் தானோ என்ற சந்தேகம் இப்போது யுவனுக்குத் தோன்றியது.

அதுவும் அவனைப் பார்த்ததும் அவள் தன்னை விட்டு அவனிடம் சென்றது அவனுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

தருண் தான் அழைத்திருந்தான். “ஹலோ அண்ணா?”

போன்னை எடுக்க மாட்டியா நீ. எத்தனை மெசேஜ் போட்டிருப்பேன் ஒண்ணுக்கும் பதில் இல்லை.”

சாரி, செல்லை சார்ஜ்ல போட்டுட்டுக் குளிக்கப் போயிட்டேன்.”

தமிழ் உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லி இருந்தான். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

அவர்தான் வந்திட்டுக் கோபமா போயிட்டாரே.”

ஏன் என்ன ஆச்சு?”

அவர்கிட்டயே கேளு… அவர்தான் தப்பா புரிஞ்சிகிட்டார்.”

அவன் தப்பா எல்லாம் புரிஞ்சிருக்க மாட்டான். நீ சொல்லு என்ன நடந்துச்சுன்னு… அப்புறம் நான் சொல்றேன், யார் தப்பா புரிஞ்சிகிட்டாங்கன்னு.” தருண் சொல்ல… யுவன் அவளைப் பார்க்க வந்ததைச் சொன்னவள்,

அவன் நடந்ததுக்கு வருத்தம் தெரிவிக்கத்தான் வந்தான். இவர்தான் தப்பா புரிஞ்சிகிட்டார்.” என்றாள்.

உன் மண்டை… நீதான் தப்பா புரிஞ்சிட்டு இருக்க…. அவங்க வீட்ல உன்னை யுவனுக்குத் திரும்பப் பொண்ணு கேட்டாங்களாம்.”

நீ கோபமா பேசி இருந்தா கூட யுவன் விலகி போயிருப்பான். இனி பாரு உன்னைச் சும்மா தொந்தரவு செய்யப் போறான்.”

அப்படி எல்லாம் இருக்காது அண்ணா… சரி விடு, அடுத்தத் தடவை வந்தா… என்னால உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடுறேன்.”

இவனுக்குப் பதில் சொல்லனும்னு எல்லாம் தேவையே இல்லை. நீ அவன்கிட்ட பேசவும் வேண்டாம். இனி அவன் வந்தா எங்க அண்ணாகிட்ட பேசிக்கோன்னு சொல்லு.” என்றவன்,

ஆனா இவனுக்கு எல்லாம் நீதான் இடம் கொடுக்கிற… ஒழுங்கா நீ தமிழைக் கல்யாணம் பண்ணிகிட்டா… இவன் எல்லாம் உங்கிட்ட பேச முடியுமா?”

என்னை விடத் தமிழுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்ணா…”

அது அவனுக்குத் தெரியாது பாரு. அவனுக்கு உன்னைத் தான பிடிச்சிருக்கு.”

யுவனைப் போல ஆளை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க நினைச்சவ… ஏன் தமிழை வேண்டாம்னு சொல்றேன்னு எனக்குப் புரியவே இல்லை.” என்றான்.

அண்ணன் சொல்வது உண்மைதான். அந்தக் காரணத்திற்காகத் தான் அவளும் வேண்டாம் என்று சொல்கிறாள். தான் செய்ததற்குத் தண்டனையாகத்தான், அவள் இன்னொரு திருமணம் முடிக்கவும் நினைக்கவில்லை.

தங்கையிடம் பேசிவிட்டுத் தருண் நண்பனை அழைத்தவன், அவனிடம் நடந்ததைச் சொல்ல…

ஆனா யுவன் அப்படி நினைக்க மாட்டான்.” என்றான்.

தெரியும் அதைதான் அவகிட்ட சொன்னேன். இனி பேசலைன்னு சொல்லி இருக்கா….”

தமிழ், மகி மட்டும் தான் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லணும். அவ சொல்லிட்டா… எங்க வீட்ல மறுக்க மாட்டங்க. எனக்கு டைம் கொடு.” என்றான் தருண்.

என்னை விட அவளுக்கு நல்ல வரன் வந்தா… நான் இப்ப கூட விலக்கிகிறேன்.” தமிழ் சொல்ல…

இப்போ உனக்கு மகி வேண்டாம்னு தோணுதா?” எனத் தருண் நேரடியாகக் கேட்க…

டேய் அப்படி எல்லாம் இல்லை டா… எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் இஷ்ட்டம்.” என்றான் தமிழ்.

கங்கா மகிழினியிடமே பேசி விடுவோம் என நேரிலேயே வந்து விட்டார்.

மகி, பாட்டி உனக்கும் கிரிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாங்க. ஆனா நான் நீ கிரியை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லலை… ஆனா யோசி… இப்படியே தனியா எல்லாம் இருந்திட முடியாது.”

அப்படி இருக்கிறவங்க இல்லையா அத்தை.” மகிழினி கேட்க…

இருக்காங்க தான். ஆனா இயல்பிலேயே ஒரு ஒட்டாத தன்மை அவங்ககிட்ட இருக்கும். ரொம்பச் சுயமா இருப்பாங்க. ஆனா நீ அப்படி இல்லை. உனக்கு ஒருநாள் உங்க வீட்ல பேசாம இருக்க முடியாது. ரெண்டு வாரத்துக்கு மேல உன்னால உன் அப்பா அம்மாவை பார்க்காம இருக்க முடியாது. உன் இயல்பு, உன் குணம் வேற….”

உங்க அப்பா அம்மா எத்தனை நாள் இருப்பாங்க. உன் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகிட்டா… அவனால உனக்கு நேரம் செலவழிக்க முடியுமா?”

இப்போ ஈஸியா இருக்கும். ஆனா கொஞ்சம் வயசான பிறகு கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு தோணும்.”

தனிமை எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும். உங்க மாமா இருந்திருந்தா… நான் அவருக்குன்னு எதாவது பண்ணுவேன். அவர் என்கிட்ட பேசிட்டு இருப்பார். பசங்க அவங்க வேலையில தான் பிஸியா இருக்காங்க. அவங்களால என்னோட நேரம் செலவழிக்க முடியுதா?”

நான் நீ கிரியை கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்லலை… உங்க அண்ணன் பார்த்திருக்கப் பையனுக்கே நீ ஓகே சொன்னா… நான் சதோஷப்படுவேன். யோசிச்சு நல்ல முடிவா எடு.” என்றார் கங்கா.

அந்த வாரம் தங்கை ஊருக்கு வந்திருப்பதால்… ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டும் என தருண் வந்திருந்தான்.

என்னப்பா சொல்றீங்க?” என தருண் கேட்க…

கிரியும் ஓகே சொல்லி இருக்கான். வேற நல்ல இடம் கூட வந்திருக்கு. உன் தங்கச்சி தான் முடிவு சொல்ல வேண்டும்.” என்றான்.

அவ சொல்ற முடிவுக்கு நீங்க ஒத்துப்பீங்க தான….”

அவளுக்கு யாரை இஷ்ட்டமோ கல்யாணம் பண்ணிக்கட்டும். கல்யாணம் பண்ணா சரி…” என்றுவிட்டார் ராகவன். அவருக்குப் பெண் திருமணம் முடிக்காமலே இருந்து விடுவாளோ என்ற பயம் வந்திருந்தது. கங்காவும் நிறைய எடுத்து சொல்லி இருந்தார். என் பையன் வேற ஜாதியில தான் கல்யாணம் பண்ணி இருக்கான் என்றார். அதனால் ராகவனும் கொஞ்சம் இறங்கி வந்திருந்தார். 

தங்கையைப் பைக்கில் அழைத்துக் கொண்டு தருண் வெளியில் சென்றான்.

எங்க அண்ணா போறோம்?”

உன்கிட்ட தமிழ் எதோ கேட்கனுமாம். நீ அவன்கிட்டயே பேசிக்கோ.” என்றான்.

ஊருக்கு வெளியே பொட்டல் வெளியாக இருந்த ஒரு இடத்தில் தமிழ் பைக்கில் நின்றிருந்தான். அவன் அருகில் சென்று வண்டியை நிறுத்திய தருண், இப்போ சொல்லு… உன் முடிவு என்ன? தமிழுக்கும் தெரியட்டும்.” என்றதும், மகிழினி அமைதியாக இருக்க….

ரொம்ப யோசிக்கிறதைப் பார்த்தா… உன் தங்கச்சிக்கு அந்த யுவனைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் இஷ்ட்டமா இருக்குமோ?” என தமிழ் சொல்ல…

எனக்கும் அதுதான் சந்தேகமா இருக்கு.” என்றான் தருண். மகிழினி இருவரையும் முறைத்தாள்.

அப்போ ப்ரூப் பண்ணு.” என்றான் தமிழ்.

மகிழினி யோசிக்க… “உனக்கு எப்படியும் அப்பா அம்மா கல்யாணம் பண்ணாம விடமாட்டாங்க. நீ கல்யாணம் பண்ண பிறகுதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.”

அந்த நேரத்தில யாரையோ பண்ணிக்கிறதுக்கு, இப்போ தமிழ் மாதிரி ஒரு மாப்பிள்ளையை விடணுமா?” என தருண் கேட்க… அவள் அண்ணன், நீ கல்யாணம் பண்ணாம… நான் பண்ண மாட்டேன் என்றதிலேயே மகிழினி தொய்ந்து போனாள். வேறு என்ன செய்வது?

சரி நான் இவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றாள். தருண் தான் மிகவும் மகிழ்ந்து போனான். தங்கையை அனைத்துக் கொண்டவன், நண்பனையும் மறு கையால் அனைத்துக் கொண்டான்.

தமிழுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. அவளைக் கார்னர் செய்து ஒத்துகொள்ள வைத்தது போல இருந்தது.

என்னைவிட வேற யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு…. அந்த யுவனைக் கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கிறியா? எதுனாலும் சொல்லு, உன் விருப்பம் தான்.” என தமிழ் கேட்டே விட….

நீங்கங்கிறதுனால தான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிறேன்.” மகிழினி சொல்ல… அதன் பிறகுதான் தமிழுக்கு நிம்மதியாக இருந்தது.

தமிழைத் திருமணம் செய்யத்தான் மகிழினிக்கு விருப்பம் என்றதால்… அதற்கு மேல் வீட்டினரால் என்ன செய்ய முடியும்? அவர்கள் தமிழ் வீட்டினரை வந்து முறையாகத் திருமணம் பேச சொன்னார்கள்.

Advertisement