Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 3

தருண் இன்னும் ஒரு மாதத்தில் மொத்தமாக ஊர் திரும்புகிறான். தற்காலிகமாகத் தான் வெளிநாடு சென்றிருந்தான். இரண்டு ஆண்டுகள் என்பது நான்கு ஆண்டுகளாகி இருந்தது. அவனின் அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது.

இங்கே வந்த பிறகு நேரில் தங்கையிடம் பேசி புரிய வைத்துகொள்வோம், அப்போதே பெற்றோரிடமும் பேசிக்கொள்ளலாம் என நினைத்து இருந்தான். அவன் கிளம்புவதற்குள் முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளும் இருக்க… அதோடு பெட்டி கட்ட வேண்டுமே.

அவன் தங்கை தான் பிரச்சனை என்று நினைத்திருந்தான். ஆனால் வேறு பிரச்சனைகள் எல்லாம் வரும் என அவனுக்குத் தெரியவில்லை.

மகிழினி முடித்தது எம். எஸ். சி கம்ப்யூட்டர் சயின்ஸ். அவள் கல்லூரி காம்பஸ் மூலம் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மதுரை கிளையிலேயே வேலையும் கிடைத்திருந்தது.

வேலை கிடைத்தது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. பரிட்சை முடித்து வேலையுடன் தான், அவள் ஊர் திரும்பினாள். இன்னும் ரெண்டு மாதங்கள் சென்று வேலையில் சேர்ந்தால் போதும்.

அதற்கு அடுத்த வாரம் தருணும் வந்துவிட்டான். அண்ணனும் தங்கையும் பேசி பேசியே பொழுதை கழித்தனர்.

தருண் தங்கையை அவர்கள் இருவரும் மட்டும் இருக்கும் போது, டாக்டர் அம்மா எனக் கேலியாகக் கூப்பிட ஆரம்பித்து இருந்தான். மகிழினி அண்ணனை முறைப்பாள்.

திருமணம் என்ன காரணத்திற்காக நின்றிருந்த போதிலும், அதன் பிறகு மகிழினிக்கு அப்படி ஒன்றும் நல்ல வரன்கள் வரவில்லை. அப்படியே வந்தாலும் மகிழினி ஒத்துக்கொள்ளவில்லை. 

அதைச் சொல்லி அவள் பெற்றோர் கவலைப்பட… தருண் இதுதான் நேரம் என்று தமிழைப் பற்றிச் சொல்லிவிட நினைத்தான். அவன் இத்தனை நாள் யோசித்துத் தள்ளி போட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழ் அவர்கள் ஆள் இல்லை. அதனால் அவன் பெற்றோர் யோசிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைத்து தான் பேச்சை தொடங்கினான்.

பையன் டாக்டர் எல்லாம் ஓகே தான். ஆனா நம்ம ஆளுங்க இல்லையே…. ஊருக்குள்ள பேச்சு கிளம்பும். எதுக்கு நம்ம ஆளுங்களையே பார்ப்போம்.” என ராகவன் சொல்ல, லலிதாவுக்கு தமிழை விடவும் மனம் இல்லை. ஆனால் கணவர் சொல்வதும் சரி என்று தோன்ற… அவர் கணவருக்கே பேசினார்.

நீங்க எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்க. தமிழை விட எல்லாம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கப் போறதே இல்லை.” என்றவன் கோபத்தில் சென்னைக்குக் கிளம்பி சென்று விட்டான்.

தருணிடம் இருந்து இந்நேரம் தகவல் வந்திருக்க வேண்டும். வரவில்லை என்றதுமே… தமிழுக்கும் அவன் தந்தைக்கும் புரியத்தான் செய்தது. எதுவாக இருந்தாலும் அவர்களே சொல்லட்டும் என இருந்தனர். தமிழும் தருணை அழைத்துக் கேட்கவில்லை.

மகிழினி வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தது. அவள் வேலைப் பார்க்கும் நிறுவனம் ஊருக்கு வெளியே, தமிழின் வீட்டிற்குச் செல்லும் வழியில் தான் இருந்தது.

மகிழினிக்கு அவள் அலுவலகத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும் போல இருந்தது. அவளும் வெளிநாடு செல்லும் முடிவில் இருந்தாள். தருண் இன்னும் கோபத்தில் இருந்தான். ஊர் பக்கமே வருவது இல்லை.

லலிதா மகனுக்கு அழைத்துப் பேச…. “வெளிநாடு எல்லாம் போயிட்டா… அவளைப் பிடிச்சுக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. உங்களோட வெட்டி பிடிவாதத்துனால தான் அவ கல்யாணமே நடக்காம போகப் போகுது.”

முன்னாடியும் ஒழுங்கான இடம் பார்க்காம கெடுத்தீங்க. இப்போ நல்ல மாப்பிள்ளை வந்தும் கெடுக்கிறீங்க.”

தமிழுக்கு ஒன்னும் நட்டம் இல்லை. அவனுக்கு டாக்டர் பெண்ணே கிடைக்கும். அவனுக்கும் கல்யாணம் ஆகிடும். நீங்க மகியை கல்யாணம் பண்ணாமலே வச்சிட்டு இருங்க.” என்றான்.

உன் தங்கச்சி கல்யாணமே வேண்டாம்னு தானே சொல்றா… தமிழைக் கட்டிக்க மட்டும் ஒத்துப்பாளா?” அவன் அம்மா கேட்க,

நீங்க சரின்னு சொல்லுங்க போதும். மகியை தமிழே வழிக்குக் கொண்டு வருவான். அது அவன் பாடு.” என்றான் தருண். மகன் சொன்னதை ராகவனிடம் லலிதா பகிர்ந்து கொண்டார். ராகவன் அப்போதும் யோசித்துக் கொண்டு தான் இருந்தார். அவருக்குப் பெண்ணின் வாழ்க்கையை விட… ஜாதியே முக்கியமாகப்பட்டது.

யுவனின் அம்மாவை லலிதா கோவிலில் வைத்து பார்த்தார்.

மகிழினி எப்படி இருக்கா?” என விஜயா விசாரிக்க…

அவளுக்கு என்ன நல்லா இருக்கா… படிச்சா, இப்போ வேலைக்குப் போறா… அடுத்து வெளிநாடும் போகப் போறா…”

கல்யாணம் பண்ணி இருந்தா என்ன எல்லோரையும் போலக் குழந்தை பெத்திருப்பாளா… இப்போ அப்படி இல்லை. என் பொண்ணு ராணியாட்டம் இருக்கா.” என்றவர்,

அதோட இப்போ அவளுக்கு டாக்டர் வரன் எல்லாம் வருது.” என்றார் லலிதா பெருமையாக.

உன் பையன் வேண்டாம்னு போனா… என் பொண்ணு நல்லா இருக்க மாட்டாளா… அவள் இப்போது இன்னும் நன்றாக இருக்கிறாள் எனத் தெரிந்துகொள்ளட்டும் என்று வேண்டுமென்றே தான் லலிதா பேசினார்.

ஓ… நல்லா இருந்தா சரி.” எனச் சொல்லிவிட்டு யுவனின் அம்மா சென்றுவிட்டார்.

யுவன் முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்திருந்தான். ஊர்க்காரர்கள் பார்த்தால் எதாவது பேசுவார்கள் என்று இப்படி ராத்திரி நேரம் தான் வருவதும் போவதும். வந்தால் வீட்டிற்குள்ளயே இருந்துவிட்டு சென்று விடுவான்.

தவறே செய்திருந்தாலும் மகனை விட்டுக் கொடுக்க முடியவில்லை பெற்றோரால்.

இரவு உணவு நேரத்தில், கணவனுக்கும் மகனுக்கும் பரிமாறியபடி கோவிலில் லலிதாவை பார்த்ததைச் சொன்ன விஜயா, “மகிழினி பற்றியும் சொல்ல…”

எதோ நம்மால கெட்டதுன்னு இல்லாம… நல்லா இருந்தா சரிதான்.” என்ற சபரி உண்பதில் கவனம் செலுத்த… யுவனுக்குத் தான் ஒரே யோசனை.

வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு சென்று விடுவாள் என்று நினைத்திருந்தான்.

இப்போது படித்து, நல்ல கம்பெனியில் வேலையும் பார்க்க… அதோடு வெளிநாடு வேறு செல்லப் போகிறாள் என்றதும், அவனுக்கு உள்ளே ஒரு குறுகுறுப்பு. அவனும் வெளிநாடு செல்லத்தான் முயன்று கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு அங்கே போக வாய்ப்பு கிடைக்கவில்லை.

தான் வேண்டாம் என்ற பெண் படித்து, நல்ல வேலையிலும் சேர்ந்து வெளிநாடும் போகப் போகிறாள் என்றால்… அவனுக்கு அது ஒப்புதலாக இல்லை. யுவனுக்கு அவன் ஈகோ எங்கோ அடி வாங்கியது.

இன்னொறு விஷயமும் உண்டு. அவளைத் திருமணம் செய்து கொண்டால்… அவளோடு வெளிநாடு செல்லலாம்… அங்கேயே தனக்கும் வேலை தேடிக் கொள்ளலாம் என்றும் தோன்றியது.

மறுநாள் யுவன் அவன் பெற்றோரிடம் தனக்கு மகிழினியை திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் என்றான்.

நீ நினைச்சு நினைச்சு பேசுறதுக்கு எல்லாம் என்னால ஆட முடியாது.” என்றார் சபரி.

இல்லைப்பா… முன்னாடி மகி எனக்குப் பொருத்தம் இல்லையோன்னு ஒரு எண்ணம். ஆனா இப்ப அவளும் தான் நல்லா படிச்சு வேலையில இருக்காளே…” என்றான்.”

உன்னை நம்பி நான் ஒருமுறை பட்டது போதாதா… நீ இன்னொரு தடவையும் அப்படிப் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்.”

அவன்தான் சொல்றான் இல்ல… நீங்க அவங்க வீட்ல பேசித்தான் பாருங்களேன். எதோ அப்போ நேரம் சரியில்லை போல… இப்போ எல்லாம் கூடி வந்தா நல்லது தான.” என்றார் விஜயா.

மனைவியும் மகனும் வற்புறுத்த சபரி அன்றே நண்பனுக்கு அழைத்துக் கேட்டார்.

உன் பையனை இனி யாரு நம்புவா? முதல்ல என் பையனும், பெண்ணும் இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க. இந்தப் பேச்சே வேண்டாம்.” எனச் சொல்லிவிட்டு ராகவன் வைத்து விட்டார்.

இவர்கள் கேட்டதும் எல்லாவற்றையும் மறந்து ஒத்துகொள்ள வேண்டுமா என்ன? சபரியும் விஜயாவும் இது நடக்காது என்ற முடிவுக்கு வந்துவிட… என்னை வேண்டாம்னு எப்படிச் சொல்வாங்க என யுவனுக்கு இந்தத் திருமணத்தில் இன்னும் தீவிரம் ஏற்பட்டது.

அவன் பெற்றோர் வேறு இடம் பார்க்கலாம் என்று சொல்ல… மகிழினி இல்லைனா எனக்கு வேற யாரும் வேண்டாம் என்றான்.

என்ன டா உன்னோட பெரிய தொல்லையா இருக்கு. இஷ்ட்டம் இல்லைன்னு சொல்றவங்களை என்ன பண்ண சொல்ற? வேணா நீ மகிழினி கிட்ட கேட்டுப் பாரு. அவ சரின்னு சொல்லிட்டா… அப்புறம் யாரும் எதுவும் செய்ய முடியாது.” என சபரி யோசனை சொல்ல…

நான் அவளைச் சொல்ல வைக்கிறேன்.” என்றான் யுவன்.

இவன் அவளிடம் போய் நன்றாகத் திட்டு வாங்கி வரட்டும், அப்போதுதான் புத்தி வரும் என சபரி நினைத்தார்.

காஞ்சனா மகளிடம், “ஏன் இன்னும் கிரிதரனுக்குக் கல்யாணம் வைக்காம இருக்க.” என்று கேட்க…

அவன் லவ் பண்ண பெண்ணுக்கும் அவனுக்கும் ஒத்து வரலைமா… அதனால ரெண்டு பேரும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க.” என்றார் கங்கா.

இதைச் சொல்றது இல்லையா… உங்க அண்ணன் மகிக்கு எங்கெங்கயோ மாப்பிள்ளை தேடுறான். பேசாம நம்ம கிரிக்கு செய்யலாமே…” என்றதும்,

அம்மா அவசரப்படாதீங்க. தருண் மகிக்கு வேற மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கான். அதோட கிரியோட விருப்பமும் நமக்குத் தெரியாது.” என்றார் கங்கா.

அத்தை பையனும் மாமா பெண்ணும் கல்யாணம் பண்றதுக்கு என்ன? அதெல்லாம் நாம பேசிக்கலாம். நான் உங்க அண்ணன்கிட்ட சொல்றேன்.” எனக் கஞ்சானா போன்னை வைத்து விட்டார்.

கங்கா இதைக் கிரிதரனிடம் சொல்ல… “மகிக்கு ஓகேன்னா எனக்கு ஓகே.” என்றுவிட்டான். கங்கா இதைக் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவில்லை. அவருக்குச் சந்தோஷப்படவும் முடியவில்லை.

இல்லை கிரி, தருண் அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கான்.” என மகன் வேறு எதுவும் எண்ணம் வளர்த்துகொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

காஞ்சனா மகனிடம் தன் பேரனை பற்றிச் சொல்லியவர், பேசாம இவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணிடலாம் என்றார்.

ராகவுக்கும் லலிதாவுக்கும் விருப்பம் தான். ஆனால் மகனும் மகளும் என்ன சொல்வார்களோ என யோசித்தனர்.

தமிழுக்குப் பொறுமை குறைந்து கொண்டே வந்தது. மகியிடம் அவனே பேசி விடலாம் என நினைத்தான். அவள் இங்கே தான் இருக்கிறாள் என்று தெரியும். அதனால் நேரில் சென்று பேசி விடலாம் என்று நினைத்தவன், அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கே சென்றான்.

மதுரையில் ஒரு அபார்ட்மெண்டில் மூன்று தோழிகளுடன் தனியாக வீடு எடுத்து மகிழினி தங்கி இருந்தாள். மூவருமே ஒரே அலுவலகம் தான்.

ஞாயிற்றுக் கிழமை காலை பதினோரு மணிப்போல… வாயிற் காவலாளி இண்டர்காமில் அழைத்து, அவளை யாரோ பார்க்க வந்திருபப்தாகச் சொல்ல… வீட்டில் மற்ற தோழிகள் இருந்ததால்… “நானே கீழே வரேன்.” என்றாள்.

அவள் தமிழ் தான் இருக்கும் என நினைத்து சென்றாள். ஆனால் யுவனை அவள் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.

Advertisement