Advertisement

எப்படி இருக்கீங்க டாக்டர்?” என மகிழினியே கேட்க…

நல்லா இருக்கேன்.” என்றவன் அவளையும் நலம் விசாரித்தான். உடன் அவன் அப்பாவும் வந்திருக்க… அவரும் அவளிடம் பேசினார்.

வீட்டுக்கு வா மா…” என்றார் மூர்த்தி. தமிழும் அவளை வீட்டுக்கு அழைக்க….

தருணும் அவளைச் சென்றுவிட்டு வரும்படி சொல்லி இருக்க… “நாங்க இன்னைக்கு வெளிய போறோம். சாயங்காலம் வரட்டுமா?” என்றாள்.

சரி வா…” என்றார் மூர்த்தி.

தமிழ் தந்தையை வீட்டில் விட்டு வேலையாக வெளியே சென்றவன், மாலை மூன்று மணிக்கே வீடு திரும்பி இருந்தான். வரும் போது பழங்கள் இனிப்புகள் என நிறைய வாங்கி வந்திருந்தான்.

மகன் அதியசயமாக நேரத்துடன் வீடு திரும்பியது மூர்த்திக்கு ஆச்சர்யமே… குளித்து வேறு உடை உடுத்தி ஹாலில் வந்து உட்கார்ந்தவன்,  “காபி குடிக்கிறயா?” என்றதற்கு, “இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்.” என்றான்.

நான்கு மணி போல மகிழினி அவள் தோழியுடன் வர… அவர்களை வரவேற்றனர். தமிழ் அவர்கள் உண்ண பழங்கள், இனிப்புகள் எல்லாம் எடுத்து வைத்தான்.

உண்டபடி மகிழினி வீட்டை ஆராய்ந்தாள். நகரை விட்டு சற்று தள்ளி… அதிக மக்கள் சந்தடி இல்லத இடம். அதனால் பெரிய வீடாக இருந்தது. பெரிய ஹால்… அதோடு சேர்த்து உணவு அருந்தும் அறை… அடுத்து சமையல் அறை…. இன்னொரு பக்கம் படுக்கை அறையும் இருக்க… ஹாலில் இருந்து மாடிக்கு படி சென்றது. மாடியில் எத்தனை அறைகளோ தெரியவில்லை.

அவள் பார்வையைத் தொடர்ந்து கொண்டிருந்த தமிழ், “மாடிக்கு வேணா போய் பார்த்திட்டு வா.” என்றான்.

இல்லை வேண்டாம் என்று மறுத்த மகிழினிக்கு, இவனுக்கு எப்படித் தெரியும் என நினைத்தாள். தமிழுக்கு அவளைப் பார்த்துச் சிரிப்பு தான். மகனையே கவனித்துக் கொண்டிருந்த மூர்த்திக்கு, “ஓ… மகிழினிக்காகத் தான் இன்று மகன் காத்திருந்தானோ…” என நினைத்தவர், “எல்லோருக்கும் காபி ஓகே வா…” எனக் கேட்டுவிட்டு உள்ளே செல்ல…. அவர் பின்னே மகிழினியும் சமையல் அறைக்குச் சென்றாள்.

சின்ன வயதில் இருந்தே தமிழைத் தெரியும். வீட்டுக்கு வந்தால் வாசலோடு கிளம்பி விடுவான். ஆனால் அவன் அம்மா இருக்கும்போது அவர் அதிகம் இவர்கள் வீட்டுக்கு வருவார்.

நான் காபி போடுறேன்.” என மகிழினி சொல்ல…. மூர்த்திச் சந்தோஷமாகவே விட்டுக் கொடுத்தார்.

வீட்டில் இருப்பது இருவருமே ஆண்கள். அதிலும் வயதானவர் காபி போட போகிறார் என்றதும், மகிழினி தானாகவே உதவ முன் வந்தாள்.

மூர்த்தி எல்லாம் எடுத்து கொடுக்க… மகிழினி காபி போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

தமிழ் மகிழினியின் உடன் வந்த தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவன் பார்வை எல்லாம் சமையல் அறையில் தான் இருந்தது.

மகிழினி காபியை அவனிடம் கொடுக்க…. “தேங்க்ஸ்… நான் போடலாம்னு தான் நினைச்சேன்.” என்றான்.

மகிழினி லேசாகப் புன்னகைத்தவள், மற்றவர்களுக்கும் காபி கொடுக்க…. பேசிக் கொண்டே காபி குடித்து முடித்தனர்.

தமிழ் அவளிடம் அவள் எப்போது ஊருக்கு சென்றாள்… படிப்பதை தவிர வேறு என்ன செய்கிறாள் என எல்லாம் கேட்டவன், தருண் எப்போது வருகிறான் என நண்பனை பற்றியும் கேட்டான்.

வாசலில் பூ வர… மூர்த்திச் சென்று நிறைய மல்லிகை பூ வாங்கி வந்தவர், “மகி மா, சாமிக்கு பூ போட்டுட்டு…. அப்படியே நீங்களும் தலைக்கு வச்சுக்கோங்க டா…” என்றார்.

மகிழினி பூஜை அலமாரியில் இருந்த படங்களுக்குப் பூ போட்டுவிட்டு, ஹாலில் இருந்த தமிழின் அம்மாவின் படத்திற்கும் பூ வைக்க… அவள் சொல்லாமலே செய்தது, தமிழ் மூர்த்தி இருவரின் முகங்களையும் மலர் செய்தது.

தோழிக்கு பூ எடுத்து வந்து கொடுத்தவள், அவளும் வைத்துக் கொண்டாள்.

அவர்கள் கிளம்புவதாகச் சொல்ல… “இன்னைக்குத்தான் வீடு கலகலன்னு இருந்துச்சு. நைட் சாப்பிட்டு போகலாமே…” என்றார் மூர்த்தி. ஆறரைக்குள் விடுதிக்கு செல்ல வேண்டும் என்றதும், அவர்கள் நேரத்துடன் கிளம்பட்டும் என்று சரி என்றார். தமிழே அவர்களை விட்டுவிட்டு வர சென்றான். அவனுடன் காரிலேயே சென்றனர்.

மகன் வீட்டிற்கு வந்ததும் மூர்த்தி அவனை வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டார்.

வெளிய போனா அப்படிச் சாமானியமா வீடு வர மாட்டியே… இன்னைக்கு எப்படி வந்த?” என்றதும்,

இன்னைக்கு ஒன்னும் பெரிசா வேலை இல்லை. அதோட மகியை நாமதான் வீட்டுக்கு கூப்பிட்டோம். நீங்க மட்டும் என்ன பேசுவீங்க? அதுதான் வந்தேன்.” என்றான் தமிழ் பிடி கொடுக்காமல்.

டேய் உங்க அம்மா இதையே கேட்டிருந்தா சொல்லி இருப்பியா?” என்றார்.

அப்பா, இப்போ என்னப்பா வேணும்? நான் மகியை லவ் பண்றேன்னு நினைக்கிறீங்களா? எனக்கு அவ என் ப்ரண்டோட தங்கச்சி…. அதனால அக்கறை இருக்கு. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.” என்றான். மூர்த்திக்கு சொத்தென்று ஆகிவிட்டது.

அப்போ ஒண்ணுமே இல்லையா?” என்றவர், “இந்த மாதிரி ஒரு பொண்ணு மருமகளா வந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.” என்றார் சலிப்பாக.

அப்பா நான் லவ் பண்ணலைன்னு தான் சொன்னேன். ஆனா மகியை நீங்க எனக்குப் பேசி முடிச்சா… கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றான் எதோ அவருக்காகப் பார்ப்பது போல….

டேய்… இந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு என்ன டா? முன்னாடியில இருந்தே அவளை விரும்புறியா நீ?” என அவர் கேட்க…

இல்லை… ஆனா இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டா எனக்குச் சம்மதம் தான்.” என்றான்.

இவன் என்ன இப்படிக் குழப்புறான் என்று நினைத்தவர், “நீ டாக்டர் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சேன்.” என்றதற்கு,

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.” என்றான்.

சரி டா நான் உன் வழிக்கே வரேன். நீ தருணோட நம்பர் கொடு… நானே அவன்கிட்ட பேசுறேன்.” என, அப்போதே தருணுக்கு அழைத்தான். தருணுக்கு அப்போது காலை நேரம் தான்.

எப்படி இருக்க?” என தருண் கேட்டதற்கு, காலையில் மகியை கோவிலில் பார்த்ததாகவும், மாலையில் அவள் வீட்டுக்கு வந்து சென்றதையும் சொன்னான்.

அவ எப்படி டா இருக்கா? உனக்கு எப்படித் தெரியுது.” என்று கேட்க…

அவ நல்லா இருக்கா டா…” என்றான். அப்போது தான் தருணுக்கு நிம்மதியாக இருந்தது.

அப்பா உன்கிட்ட பேசணுமாம்.” என்றவன், கைபேசியைத் தந்தையிடம் கொடுக்க….

நலம் விசாரித்து முடித்ததும், உன் தங்கச்சியைத் தமிழுக்குக் கொடுப்பியா தருண் என மூர்த்திக் கேட்டே இருந்தார்.

நிஜமா நான் இதை எதிர்பார்க்கலை. தமிழ் ஒரு டாக்டர் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான்னு நினைச்சேன்.” என்றதற்கு,

நானும் அப்படித்தான் நினைச்சேன். இன்னைக்கு உன் தங்கச்சி வந்தது வீடே நிறைஞ்சு போச்சு… அப்போ நான்தான் இந்தப் பெண் மருமகளா வந்தா நல்லா இருக்குமேன்னு சொன்னேன். தமிழ் உடனே சரின்னு சொல்லிட்டான்.” என மூர்த்திச் சொல்ல…

நான் வீட்லயும் மகிட்டயும் பேசிட்டு சொல்றேன். நானே அடுத்த மாசம் வரேன். வந்து நேர்ல பேசுறேன்.” என்றான்.

சரி என்ற மூர்த்தி மகனிடம் கைபேசியைக் கொடுக்க…

உங்க அப்பா கேட்டது நிஜம் தான…” என அவன் கேட்க…

ஆமாம் டா உனக்கு என்ன சந்தேகம்? நான் எப்படியும் கல்யாணம் பண்ணிக்கணும். அப்பாவுக்கு மகியை பிடிச்சது, அதனால எனக்கும் பிடிச்சது.” என்றான்.

முன்பே இவனுக்கு மகியை பிடிக்குமோ என்ற சந்தேகம் தருணுக்கும் இருந்தது. ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியாமல் இருந்தான்.

நானே நேர்ல வந்து பேசுறேன்.” எனச் சொல்லிவிட்டுத் தருண் வைத்தான்.

தருண் தங்கைக்கு அழைத்து அவள் என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என்று பேசிப் பார்க்க…

தமிழின் வீட்டிற்குச் சென்றதை சொன்னவள், “அவங்க அப்பா நல்லா பேசுறாங்க. அந்த ஆண்டி இல்லாதது அங்கிளுக்குத் தான் பாவம். அவரைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. அவரே எல்லாம் பண்றார்.” என,

ஆமாம் அவங்க அம்மா இல்லாதது அவங்களுக்குப் பெரிய இழப்புதான். தமிழுக்காக அவன் அப்பாவும் மதுரை வந்து இருக்கார். இங்க எதோ வேலையும் பார்க்கிறார் போல….”

உன் ப்ரண்ட் அந்தத் தடி மாடு. கல்யாணம் பண்ணா என்ன? பாவம் அவரைப் போய் வேலை வாங்கிறான்.” என்றாள்.

அவங்க அப்பா கஷ்ட்டபடுறது போலத்தானே, நம்ம வீட்லயும் அப்பா அம்மா கஷ்ட்டப்படுறாங்க. உனக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது. நீயும் கல்யாணம் பண்ணிக்கோ… உன் படிப்பும் முடியப் போகுது.” என அண்ணன் சொல்ல…

அண்ணா அதைப் பத்தி மட்டும் பேசாத… உன் ப்ரண்டும் நானும் ஒன்னு இல்லை. எனக்கு நடந்தது அவனுக்கு நடக்கலை….. எனக்குக் கல்யாணம்னு கேட்டாலே வெறுப்பு தான் வருது. எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” என்றாள்.

என்ன நீயும் என் ப்ரண்டும் ஒன்னு இல்லை. அவங்க ஒன்னாகத்தான் நினைக்கிறாங்க. இன்னைக்கு அவங்க அப்பா உன்னை என்கிட்டே பெண் கேட்டார்.” என தருண் தங்கையிடம் சொல்லியே விட்டான்.

அவங்க கூப்பிடாங்கலேன்னு போனேன். நீ வேற சொல்லிட்டே இருந்த…. இப்போ எதுக்குப் போனோம்னு இருக்கு. நான் இன்னும் மேல படிச்சிட்டு வேலைக்குப் போகணும்.” என்றவள், “எனக்குத் தூங்கணும்.” எனப் போன்னை வைத்து விட்டாள்.

இவளை எப்படிச் சரிகட்டுவது என தருணுக்கு புரியவில்லை. அவன் கங்காவை அழைத்து அவரிடம் புலம்பி விட்டு வைத்தான்.

 

Advertisement