Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 2

ஒரு வாரம் சென்றிருக்கும், இவ்வளவு பெரிய விஷயம் நடந்து முடிந்திருக்க, எப்படி நாம் எல்லாம் எப்பவும் போல இருக்கிறோம் என அந்த வீட்டில் ஒவ்வொருவருமே நினைத்தனர். இதுவும் கடந்து போகும் என்பது இதுதான் போல…. முதலில் திருமணம் நின்றது பெரிய விஷயமாகத் தோன்றி இருக்க… இந்தத் திருமணம் நடந்திருந்தாலும், மகிழினி சந்தோஷமாக வாழ்ந்திருக்க வாய்ப்புக் குறைவு என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்ததே காரணம்.

மகிழினி தான் எப்போதும் யோசனையிலேயே இருந்தாள். தன்னைக் குறித்தே ஒரு தாழ்மை உணர்ச்சி அவளுக்கு. அவ்வளவு சாதாரணமா நான். என்னை எப்படிச் சுலபமா தூக்கி போட்டுட்டு போயிட்டான் என மனம் அதிலேயே நின்றது.

பெண்ணுக்கு எங்கே திருமணம் நடக்காமலே போய் விடுமோ என்ற கவலை ராகவுக்கும் லலிதாவுக்கும். அதனால் அடுத்து வரன் பார்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்ட….

கல்யாணத்தைத் தவிர வாழ்க்கையில வேற எதுவும் இல்லையா என்ன? எனக்குக் கல்யாணம் எல்லாம் வேண்டாம்.” என்றாள் மகிழினி உறுதியாக.

உன்னை இப்பவே பண்ணிக்கச் சொல்லலை டா…. நீ மெதுவா பண்ணிக்கோ.” என்றார் கங்கா.

அத்தை, நீங்க இப்போ கல்யாணம் பண்ணியும் தனியா தான இருக்கீங்க.” என மகிழினி பதிலுக்குக் கேட்க….

என்னோடது வேற…. நான் கல்யாணம் பண்ணி உங்க மாமாவோட சந்தோஷமா வாழ்ந்து ரெண்டு பசங்களையும் பெத்து, அவங்களை நல்லா படிக்க வச்சிருக்கேன். இப்போ உங்க மாமா இல்லைங்கிறதுக்காக நான் வாழ்ந்தது எல்லாம் இல்லைன்னு ஆகிடாது. அதனால என்னை உன்னோட ஒப்பிட்டு பார்க்காத.” என்றார் கங்கா.

எனக்கு ஒரு சந்தேகம். நீ இன்னும் அந்த யுவனை மனசுல நினைச்சிட்டு இப்படிப் பேசுறியா?” என தருண் தங்கையைப் பார்க்க….

எவனா இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இதுதான் என்னோட முடிவு எனச் சொல்லிவிட்டு.” மகிழினி சென்று விட்டாள்.

வீட்டினர் எல்லோருக்கும் கவலையாகப் போய்விட்டது. கங்கா தன்னை ஒப்பிட்டு பார்த்து மகிழினி பேசியதை யோசித்துக் கொண்டு இருந்தார்.

திருமணம் முடித்த சமயம் வெறும் ஒரு பட்டபடிப்பை மட்டுமே கங்கா முடித்திருந்தார். திருமணம் ஆகி மகிழ்வான மண வாழ்க்கைக்குச் சாட்சியாக இரண்டு பிள்ளைகள் பிறந்து அவர்களும் பள்ளிக்கு சென்ற பிறகு, கணவர் ஒருநாள் அவரிடம், “கங்கா, பசங்க படிப்பு வேலைன்னு அவங்க உலகத்துக்குள்ள போயிடுவாங்க. எனக்கும் என் வேலை இருக்கு. எங்களைக் கவனிக்கிறது மட்டுமேன்னு இல்லாம… உனக்குன்னு எதாவது வேணும். நீ மேற்கொண்டு எதாவது படி. உன்னைப் பிசியா வச்சுக்க எதாவது வேணும்.” எனக் கணவர் சொன்னதும் தான் கங்கா தன்னைப் பற்றி யோசிக்கவே ஆரம்பித்தார்.

திருமணம் ஆகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தான். மேற்படிப்பில் சேர்ந்தவர், அது முடித்து எம். பில்லும் முடித்துக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

கணவர் சொன்னது போல மகன்கள் படிக்க வெளியூர் சென்றனர். மூத்தவன் படித்து முடித்துச் சென்னையில் வேலைக்குச் சென்றவன், அங்கேயே ஒரு பெண்ணை விரும்ப… அவனுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்தனர்.

மகன் திருமணம் முடித்துச் சிறிது நாட்களிலேயே திடீரெண்டு கங்காவின் கணவர் இறந்து போனார். கங்காவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. ஆனால் அதிலேயே தேங்கி நிற்காமல்… அதைக் கடந்து செல்ல கங்காவுக்கு அவர் வேலை துணை நின்றது.

இளையவன் கிரிதரன் இவரோடு தான் இருக்கிறான். மகன் என்ன தான் உடன் இருந்தாலும், கணவரின் இழப்பு பல நேரம் கங்காவுக்கு வெறுமையைக் கொடுக்கும். ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போனீங்க? எனக் கணவருடன் மனதிற்குள் சண்டை போடுவார்.

கங்கா இதையெல்லாம் நினைத்து பார்த்தவர், இவளை என்ன டா பண்றது என்பது போலத் தருணை பார்க்க…. அவனும் யோசிக்க ஆரம்பித்தான்.

தருணுக்கு இப்போது உடனே தங்கைக்குத் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை. அவனுக்கு வேறு யாரிடமாவது பேசினால் தேவலை என்று இருக்க… இரவு ஒன்பது மணி போலத் தன் நண்பனுக்கு அழைத்தான்.

ஹே… தமிழ் பிஸியா இருக்கியா?” என்றதும்,

இல்லை இப்போ ப்ரீ தான் சொல்லு.” என்றான் தருணின் நண்பன் தமிழ் வேந்தன். பொது மருத்துவம் முடித்து விட்டு, அறுவை சிகிச்சை நிபுணராக மேற்படிப்புப் படித்துக் கொண்டே உதவி மருத்துவனாகப் பணி புரிந்து கொண்டிருக்கிறான். இருவரும் பள்ளி காலத் தோழர்கள்.

இன்று வீட்டில் நடந்ததைச் சொல்ல…”

நான்தான் கொஞ்ச நாள் அவ போக்கிலேயே விடச் சொன்னேனே தருண். நீங்க இப்போ அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சாலும், அவ சந்தோஷமா இருக்க மாட்டாங்க.”

வேற எதிலாவது அவங்க கவனத்தைத் திருப்புங்க. என்ன டா வயசாகுது உன் தங்கச்சிக்கு, இருபத்தி ஒன்னு தானே…. இப்போவே கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறீங்க? ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமே.” என்றான். (இது அவனுக்கா அவளுக்கா என்றுதான் தெரியவில்லை.)

படிக்க இல்லை வேலைக்குப் போறது எதுல இஷ்டம்ன்னு கேட்டு…. இப்போதைக்கு அதைச் செய்ய வைங்க. கொஞ்ச நாள் போனா அவக மனசே மாறலாம்.” என தமிழ் விளக்கி சொன்னதும்,

சரி நான் வீட்ல பேசுறேன்.” என்றான் தருண்.

கொஞ்ச நாள் இந்த இடத்துல இருந்து வேற இடம் மாறினாலே சரியாகும் டா…. உள்ளூர் வேண்டாம் எதாவது வெளியூர்ல இருக்க மாதிரி பார்த்துக்கோ.”

ஓகே டா…”

நீ இன்னும் எத்தனை நாள் இங்க இருப்ப…. நான் இன்னும் ரெண்டு வாரம் இருப்பேன்.”

முடிஞ்சா மதுரைக்கு வந்திட்டு போ.”

சரி டா பார்க்கிறேன்.” என்ற தருண் வைத்து விட்டான்.

மறுநாள் தருண் அவன் பெற்றோரிடம், “அவள் மேலே படிக்கட்டும். படிச்சிட்டு இருக்கும் போதே நல்ல வரன் வந்தா கல்யாணத்தை முடிச்சிடலாம்.” என்று சொல்ல… பெற்றோரும் சம்மதித்தனர். மகிழினி அண்ணனை முறைக்க…

சும்மா அவங்களுக்காக என்பது போல ஜாடைக் காட்டியவன், “எதுனாலும் உன் விருப்பபடி தான் டா.” என்றான் தங்கையிடம்.

அவ கொஞ்ச நாள் இந்த ஊரிலேயே இல்லைனா… இங்க இருக்கிறவங்களும் அந்த விஷயத்தையே மறந்திடுவாங்க. மதுரையில காலேஜ் சேரட்டும். மத்தது அப்புறம் பார்க்கலாம்.” என்றான். கங்காவும் நிம்மதியாகக் கிளம்பி கோயம்புத்தூர் சென்றார்.

கங்கா வீட்டுக்குச் சென்றதும் இளைய மகனை கடிந்து கொண்டார். மூத்தவனாவது கிளம்பும் நேரம் வந்து சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால் கிரிதரன் அப்படியே கிளம்பி வந்திருந்தான்.

எனக்கு மாமா கேட்டதே ஒருமாதிரி இருந்ததுமா… அதோட திரும்பி அவங்களை எல்லாம் பார்க்க சங்கடமா இருந்தது.” எனவும்,

அந்த நேரத்தில வழி இல்லாம தான் அண்ணன் கேட்டதும். இது என்ன கதையா… கல்யாணம் நின்னு போனா… கையில தாலியோட அடுத்து ஒருத்தன் நிற்கிறதுக்கு. முதல்ல பார்த்து பண்ணும் கல்யாணத்திலேயே ஆயிரம் குறை… இதுல திடுதிப்புன்னு எல்லாம் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்க முடியுமா? மாமா நீங்கிறதுனால கேட்டாங்க. அப்புறம் அவர் அதைப் பத்தி பேசலை.” என்றார்.

மகி எப்படி இருக்கா மா?”

ம்ம்… நினைச்சு நினைச்சு அழுவா… அப்புறம் அவளே இனிமே கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்வா…. சின்னப் பொண்ணு தானே… வாழ்க்கை இன்னும் நீண்டு கிடக்கு…. பொறுமையா அவளே புரிஞ்சிகிட்டா தான் உண்டு.”

மகிழினி இந்த ஆண்டுத் தான் கல்லூரி முடித்திருந்தாள். ஆனால் உயர்கல்வியில் சேர்வதற்கு இப்போது காலதாமதம் தான். ஆனால் தருண் எப்படியும் சேர்த்து விடுகிறேன் என்றான். அதே போல அவனே அவளை அழைத்துச் சென்று எம். எஸ். சியில் சேர்த்து விட்டு வந்தான். மகிழினி கல்லூரி விடுதியில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு ஆகியது. அவள் கிளம்பும் போது, “கல்யாணம் பண்ணி போவான்னு நினைச்சேன். இப்படிப் படிக்க அனுப்புற மாதிரி ஆகிடுச்சே…. எல்லாம் அந்தக் கடன்காரனால வந்தது.” என லலிதா புலம்ப….

அம்மா தினமும் இந்தப் புலம்பல் தான். நல்லவேளை நான் ஹாஸ்டல் போறேன்.” என்றாள் மகி.

தங்கையைக் கல்லூரியில் விட்டவன், கிளம்பும் நேரம் தமிழின் கைபேசி எண்ணைக் கொடுத்து, “இங்க நமக்குத் தெரிஞ்சவன் அவன்தான். எதாவது அவசரம்னா அவனைக் கூப்பிடு.” என்றான்.

யாரு உன் டாக்டர் ப்ரண்டையா… அவன் அப்பாதான் அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்த போது… அவனுக்கு நேரமே இருக்காது. காலையில போனா நைட் ஆகிடும்னு சொன்னாரே… இதுல நான் இவனை அவசரத்துக்கு வேற கூப்பிடணுமா?” என்றதும்,

உன்னோட ரொம்பப் பெரியவன், அவன் இவன்னு சொல்லாத…. நீ கூப்பிட்டு தான் பாரேன். அவனுக்கு வர முடியலைனாலும் வேற ஏற்பாடு பண்ணுவான். தமிழ் ரொம்பப் பொறுப்பு.”

அண்ணன் சொல்கிறானே என்று மகிழினி கேட்டுக் கொண்டாள். தருண் சென்று நண்பனை பார்த்துவிட்டு, தங்கையின் கைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, “அவளுக்கு எதாவது ஹெல்ப் வேணும்னா உன்னைத்தான் டா கூப்பிட சொல்லி இருக்கேன்.” என்றதும், சரி நான் பார்த்துக்கிறேன் என்றான் தமிழ்.

மகிழினி தமிழை மறந்தும் போனாள். மகிழினிக்கு கல்லூரி வாழ்க்கை ஒன்றும் ஆரம்பத்திலேயே மகிழ்ச்சியாகச் செல்லவில்லை. இவள் வருவதற்குள் ஏற்கனவே நட்பு வட்டம் உருவாகி இருக்க… இவளை அதிகபடியாகத்தான் பார்த்தார்கள்.

அறையில் உடன் தங்கி இருக்கும் பெண்ணும், அவள் தோழிகளின் அறைக்குச் சென்று விடுவாள். மகிக்குத் தனிமையில் அழுகையாக வந்தது. தனக்கு ஏன் இப்படி ஆக வேண்டும் என மிகவும் சோர்வாக உணர்ந்தாள்.

அப்போது அவளது கைபேசிக்குத் தமிழிடம் இருந்து வாட்ஸ் அப் வந்தது.

எல்லாம் ஓகே தானே… ஏதாவதுன்னா எனக்குக் கால் பண்ணி நான் எடுக்கலைனா மெசேஜ் போடுங்க. நர்ஸ் பார்த்திட்டு முக்கியமான விஷயம்னா எனக்குத் தகவல் சொல்லுவாங்க.” என அவன் அனுப்பி இருக்க…

ம்ம்…ஓகே.” என்று அவளிடம் இருந்து பதில் வர… தமிழும் மேற்கொண்டு பேச்சை தொடரவில்லை.

முதல் ஒரு வாரம் சிரமப்பட்டவள், பிறகு அடுத்த வாரம் அவளுக்கென்று தோழிகள் கிடைத்து விட… அவள் தோழிகள் இவள் அறைக்கு வந்து உறங்கும் வரை அரட்டை அடித்து விட்டுச் செல்வார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஊருக்கும் சென்று வந்தாள்.

அவள் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் ராகவும் லலிதாவும் திருமணம் செய்துகொள்ளும்படி சொல்வார்கள். இப்படியே பேசிட்டு இருந்தா… ஊருக்கே வர மாட்டேன் என மகியும் அவர்களை மிரட்டுவாள்.

மகிழினிக்கு கல்லூரி வாழ்க்கை நன்றாகச் சென்று கொண்டிருந்தது. நாட்கள் போனதே தெரியவில்லை. இரண்டாம் ஆண்டின் முடிவில் இருந்தாள். இன்னும் கல்லூரி ஒரு மாதம் தான். அடுத்த வாரம் பரிட்சை தொடங்குகிறது. அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தோழிகளுடன் காலையே கிளம்பி கோவிலுக்குப் போய் விட்டு, அப்படியே மதியம் வெளியே உண்டு விட்டு வருவதாக இருந்தது.

மகிழினி தோழிகளுடன் கலகலவெனப் பேசியபடி கோவிலுக்குள் நுழைய… அங்கே ஏற்கனவே இருந்த தமிழ் யாரோ என்று பார்த்தவன், பிறகு மகிழினி என்றதும், அவளைக் கவனித்துப் பார்த்தான். அவளின் மகிழ்ச்சி நிறைந்த முகம் அவனுக்கும் மகிழ்ச்சியைத் தர… அதற்குள் மகியும் அவனைப் பார்த்து இருந்தாள்.

Advertisement